Friday, May 29, 2009

'பதிவு' பற்றி..

பதிவெழுதுவது ஏன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டிருந்தகாலம் போய், இப்போது பதிவெழுதவென்றே யோசிக்கும் காலமும் வந்துவிட்டது. முந்தைய பதிவில் என் தனிப்பட்ட உணர்ச்சிப்பெருக்கினையே எழுத ஆரம்பித்து, என் தட்டச்சுப்பயிற்சியின்மையால் குறுக்கிப் பின் (இப்போதெல்லாம் அதிகமாய் விலை போகக்கூடிய சமூக உந்துதலில்) ஈழத்தையும் இணைத்துப் பதிவிட்டேன்!
ஒரு நாள் முழுவதும் பதிவை எங்கும் இணைக்காமல், சும்மா விட்டுப்பார்த்தேன்! ஓரிருவர் பார்த்தார்கள், இருவர் கருத்துக்களை வெளியிட்டார்கள்... மறுநாள், தமிலிஷ் தளத்தில் இணைத்தேன்.. நான்கு மணி நேரத்தில் அது பிரபல இடுகை ஆனது!

இனி என்ன செய்யப்போகிறேன்?
ஈழம் பற்றி இன்னும் கொஞ்சநாள் ஓடும், பிறகு கருணாநிதி கரு கொடுக்கத்தயங்காத வள்ளலாகப்போகிறார்..சீக்கிரம் ஒரு தேர்தல் வரும்..ஓ பற்றி எழுதுவோம்..எதுவுமே கிடைக்காவிட்டால் நமீதா, த்ரிஷா என்றெல்லாம் எழுதலாம்..
பதிவு எழுதுவது ஒரு செளகரியம், ஒரு சந்தோஷம்...
அதில் ஒரு அந்நியத்தன்மையோடு கூடிய அன்னியோன்யம் உள்ளது, அதில் பொய்கள் எளிது, அதில் போலித்தனம் சுலபம், மேம்போக்கான புத்திசாலித்தனம் விலைபோகும்... புதுப்புது உறவுகள் ஏற்படும், அவை பல்வேறு விதங்களில் லாபகரமாகவும் ஆகலாம்..
பதிவு என்பது என்ன?
அந்தரங்கத்தின் பகிரங்கமா? பகிரங்கமாக்கப்படுவதற்கென்றே உருவாக்கப்படும் அந்தரங்கத்தின் ஒப்பனையா?
காலம் எனக்கு விடை சொல்லத்தான் போகிறது..அதுவரை எது விடை என்று யோசிக்கலாமா

29 comments:

ராஜ்குமார் குவைத் said...

பதிவு என்பது சில நேரங்களில் ஒரு வேட்கை போன்றாதாக அமைகிறது.அந்தரங்கத்தின் வெளிப்பாடா ? என்ற உங்களின் வினாவிற்கு முழு சம்மதாமன பதில் இல்லை.ஆனால் அதனை மறுக்கவும் இயலாத ஒரு இடைவெளி உண்டு என்றே கருதுகிறேன்.மனிதன் தன்னை நிலை படுத்தவும்,வெளிப்படுத்தவும் பதிவு ஒரு களம் வெளிப்பாடு என்பது எனது தாழ்மையான கருத்து

Dr.Rudhran said...

ப்ரூனோ சொல்லிக்கொடுக்கமுயற்சித்தும், நான் கற்றுக்கொள்ளாமல் தமிழ்மணம் போன்ற பதிவுகளின் தொகுப்புகளில் இணைக்கமுடியாமல் தான் எளிதாக்க முடிந்தவற்றில் பதிவுகளை இணைக்கிறேன்..
நாளும் கற்றுக்கொள்ளவேண்டியவைகளில் ஒன்றாகவே பதிவு, தளம், என்றெல்லாம் ஓய்வெடுக்கவேண்டிய நேரத்தில் ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கிறேன்

செந்தில்குமார் said...

//அந்தரங்கத்தின் பகிரங்கமா? பகிரங்கமாக்கப்படுவதற்கென்றே உருவாக்கப்படும் அந்தரங்கத்தின் ஒப்பனையா?//

டாக்டர்,

பதிவுலகுக்கு புதியவன் என்ற முறையில, 'பதிவு'ங்கறது இப்போ வரைக்கும் என்னோட எண்ணங்கள், கருத்துக்கள், குமுறல்கள் (மொக்கைகள் !!) இதையெல்லாம் வெளிப்படுத்தறதுக்கான ஒரு தளம்... அவ்வளவு தான் !!

Anonymous said...

டாக்டர்,

உங்களுடைய இந்த பதிவை முதல் வேலையாக தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்.

வலையுலகம் கண்டதையும் எழுதி குவிக்கிறார்கள். உருப்படியாக எழுதுபவர்கள் தொடர்ச்சியாக எழுத வேண்டும்.

ஓவியன் said...

//பதிவு என்பது என்ன?//

1. அரித்தால் சொரிந்துகொள்வது
2. நானும் இருக்கிறேன்
3. வடிகால் (சிலநேரங்களில்)
4. பகிர்தல் (அபூர்வமாய்)
5. அணிசேர்த்தல் - தன்னை ஒரு அணியில் சேர்த்தல் (வழக்கமாய்)

வால்பையன் said...

எல்லாவற்றையும் ஒப்புக்கிறேன்!

விடை என்னான்னு யோசிக்கலாம்!
ஆனால் பதில் காலம் தானே சொல்லனும்!

Deepa said...

//உருப்படியாக எழுதுபவர்கள் தொடர்ச்சியாக எழுத வேண்டும்.//

ஆமோதிக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் டாக்டர்.

புருனோ Bruno said...

//அந்தரங்கத்தின் பகிரங்கமா? பகிரங்கமாக்கப்படுவதற்கென்றே உருவாக்கப்படும் அந்தரங்கத்தின் ஒப்பனையா?//

நாட்குறிப்பு (டைரி) போல் என்று எடுத்துக்கொள்ளலாமா சார்

ராஜ நடராஜன் said...

பதிவும் பின்னூட்டமும் ஒரு பொருளின் பல கோணப் பார்வை.

BIGLE ! பிகில் said...

டாக்டர் இத்துனை நாளாய் நான்தான் உங்களை தமிழ்மணத்தில் இணைத்துக்கொண்டிருந்தேன், இன்று நீங்களே இணைத்தமைக்கு மகிழ்ச்சி

Anonymous said...

பதிவு என்பது 'டைரி'யாக இருக்க வாய்ப்பில்லை. எத்தனை பேர் தங்கள் டைரியை பகிரங்கப்படுத்த முன்வருவர்?

நாம் சம்மந்தப்படுத்திக்கொள்ளும் சமூகம், நம்மாலேயே வடிகட்டப்பட்ட நமது எண்ணம், நமக்குள் இருக்கும் எழுத்தாற்றல், நமது இருப்பு, நம் தனிமையை நாமே போக்கிக் கொள்ளும் விருப்பம், இயன்றவரை நல்லவனாக௦௦க் காட்டிக் கொள்ளும் முனைப்பு, நம்மை ஒத்த உணர்வை பிறரும் அனுபவிக்க வேண்டும் என்ற விழைவு, நானும் சிந்தனையாளன் என்ற நினைப்பு முதலியவற்றைப் பகிர்ந்துகொள்வதே பதிவாக இருக்கக் கூடும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பழமைபேசி said...

//புதுப்புது உறவுகள் ஏற்படும்//

அதுவே குழுவாகும்
குழுவும் குழுவும் மோதல்
கொஞ்சம் ஓய்வு
குழு குழுக்கள் ஆகும்
வாழ்க்கையின் நாட்கள்
தின்றுவிட்டது தெரியாமல்!

Guru said...

டாக்டர் ருத்ரனுக்கு வணக்கம்,
தங்கள் கருத்தின் படி பதிவு என்பது அந்தரங்கத்தின் பகிரங்கமா? இல்லை பகிரங்கமாவதெர்கேன்றே உருவாக்கப்படும் ஒப்பனையா?

பதிவுகள் ஒரு வகையில் நம் எண்ண சிதறல்கள், சமூக நடப்புகளின் விமர்சனம்,நமது கோபத்தை நேரில் காட்ட முடியாத போது அந்த உணர்வுகளை பதிவாக்கி வெளியிடும்போது அது அதன் வெளிப்பாடு ஆகிறது. ஓஷோ குறிப்பிடும் " உங்கள் எண்ணங்களை எதுவாகினும் வெளிபடுத்துங்கள், அதை உள்ளே அமுக்கி அதை பெரிதாக்கி ஒரு நாள் வெடிக்கும் சூழ்நிலைக்கு கொண்டு செல்லாதீர்கள்" இந்த எண்ணங்கள் வெளியிட ஒரு வடிகாலாகவே பதிவுகளை உணர்கிறேன். இதை அந்தரங்கம் என்பது நாம் தான்,நம் எண்ணங்கள் தான் அல்லது நம் மனது தான் என்று எடுத்து கொள்ளும் போது பதிவுகள் நம் அந்தரங்கத்தின் பகிரங்கமாகவே படுகிறது.

மேலும், பதிவுகள் நிச்சய நல்ல பல அறிஞர்களை ஒன்றினைப்பதாகவே நான் எண்ணுகிறேன். தங்கள் புத்தகங்களை படித்து,உங்கள் சில டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே பார்த்து உங்களை அறிந்த நான் இன்று உங்களின் எண்ணங்களை, சில நிகழ்வுகளின் நிதர்சனங்களை நிச்சயமாக அறிவுப்பூர்வமாகவும்,உணர்வுப்பூர்வமாகும் உணர்ந்து செயல்பட முடிகிறது.

jothi said...

சமூகத்தின் நேரடித்தொடர்பில் இருக்கிறவர்கள் நீங்கள்.அன்பு,துக்கம்,கோபம்,ஆற்றாமை,பிடிவாதம்,ஈகோ, காதல்,காமம்,பரிவு, விசுவாசம், துரோகம், என மனிதர்களின் ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் உங்களுக்கு நெடிய அனுபவமும் மருந்தில்லா பதிலும் உண்டு. கருணாநிதியைப் பற்றி.ஈழத்தைப்பற்றி, நமிதாவைப்பற்றி நிறைய பேர் எழுதலாம். உணர்ச்சிகளின் மூலத்தையும், அதனை கட்டுப்படுத்துவதைப்பற்றியும் உங்களின் பார்வை எழுத்தாய் வெளிவந்தால்
அது சமூகத்தில் ஒரு 100 பேரையாவது சுத்தம் செய்யும்.

நான் படிக்கும் போது ஐந்தாம் வகுப்பு வரை நீதிபோதனை என்ற வகுப்பு உண்டு. இப்பொது அதெல்லாம் கிடையாது.அதற்கு பதில் கணிப்பொறி வந்துவிட்டது. லஞ்சம் கொடுததாலும் தப்பில்லை, வாங்கினாலும் என்ற மனப்பக்குவம் வந்து, எது தப்பு எது சரி என்றே தெரியாத நிலையை நோக்கி போய்கொண்டிருக்கிறோம். என்னசெய்ய??

மனிதர்களின் எல்லா குணங்களுக்கும் பதிலை கொண்ட உங்களுக்கு எழுதுவதற்கு தலைப்பா இல்லை? வேண்டுமென்றால் இதற்குகென்று நேரம் வெண்டுமென்றால் ஒதுக்கமுடியாத நிலை உங்களுக்கு இருக்கலாம். ஆனால் பிரச்சனையை நீங்கள் பார்க்கும் கோணம் மற்றவர்களிடமிருந்து மாறுபடுகிறது. அதற்காகவே உங்கள் பக்கத்திற்கு வந்து போகிறேன்.

"அகநாழிகை" said...

அன்பின் ருத்ரன் அவர்களுக்கு,
பதிவர்களின் மனசாட்சியாக அவர்களின் குரலாகவே உங்கள் பதிவு இருக்கிறது. பதிவெழுதும் எல்லோருமே அனேகமாக இதை யோசித்திருக்கக்கூடும். அப்படியில்லையென்றாலும் உங்களது பதிவை வாசித்த பிறகு அப்படியொரு எண்ணம் தோன்றும். பதிவெழுதுவதன் வாயிலாக ஏதோவொரு இடத்தில் மனதில் தோன்றியவற்றை கொட்டிவைத்து விட்டதாக உணர முடிகிறது. யாரோ படிக்கிறார்கள் என்ற சந்தோஷமும் அதை திரட்டிகளில் இணைப்பதால் கிடைக்கிறது. ஒரு மனத்திருப்திதானே தவிர வேறில்லை. முன்பு எதற்காக எழுதுகிறேன் என்று முன்பு எழுத்தாளர்கள் சிலர் தனித்தனியே எழுதியிருந்தார்கள்.அதுதான் நினைவுக்கு வருகிறது. மறுபடியும் படித்துவிட்டு என்ன புத்தகம் என்று எழுதுகிறேன்.

பகிர்விற்கு மிக்க நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

குப்பன்_யாஹூ said...

பதிவு உலகம், சாட் உலகம், ஆர்குட் உலகம் எல்லாம் ஒரு வித வடிகால்கள். நிஜ வாழ்வில் நாம் ஆசை பட்டு செய்ய முடியாதவற்றை இங்கு சுதந்திரமாக செய்யலாம், எழுதலாம், பேசலாம்.

நமது ஆசைகளை, கற்பனைகளை, கனவுகளை இங்கு நனவாக்கலாம்.

முன்பு சினிமாக்காரர்கள், பத்திரிக்கையில் எழுதுபவர்களுக்கு மட்டும் இந்த வசதி இருந்தது.

இணையம் என்ற நண்பி எங்களை போன்ற எளியவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்க செய்து உள்ளார்.

இணையத்திற்கு வாழ்நாள் முழுதும் கடன் பட்டுள்ளோம்.

குப்பன்_யாஹூ

லதானந்த் said...

அன்பு நண்பரே!
நேரம் கிடைக்குபோது
www.lathananthpakkam.blogspot.com
என்னும் எனது வலைப் பூவைப் பாருங்களேன்?

Dr.Rudhran said...

THANKS TO ALL

Dr.Rudhran said...

நன்றி என்பதே அநாகரிகமாய் இருப்பதால்தான் thanks.. என் ஆசான் thanks என்பதைவிட thank you என்பதே சரி என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்

Dr.Rudhran said...

ஆமாம் எதற்காக நன்றி..நிச்சயமாய் இன்னும் சில பின்னூட்டங்களுக்காக இல்லை

J said...

டாக்டர்,
பதிவுகளில் மற்றவர்களுக்காக இல்லாமல் எண்ணங்களை பகிரங்க படுத்துவதாலேயே மற்றவர்களின் எண்ணங்களை புரிந்துக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது அல்லது என்னுடைய எண்ணங்களை விரிவாக்கிக்கொள்ள வாய்ப்பாக இருக்கிறது என்றே நினைக்கிறேன்

velji said...

/அன்னியத்தன்மையோடு கூடிய அன்யோன்யம்- சரியாகச் சொன்னீர்கள்..செளகரியம்.,சந்தோசம்..-எல்லாம் சரி.பொய்கள்,போலித்தனம் எங்கும் இருக்கின்றன.இங்கும் இருக்கலாம்.தீவிரமான எழுத்தாழர்களும்,நல்ல குழுக்களும் கூட இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்./

ஸ்ரீதர் said...

டாக்டர்,
என்னைப் பொறுத்த வரையில் பதிவுகள் என்பது முதலில் என்னுடைய தன்முனைப்பைத் திருப்திப் படுத்துகிறது,நான் மற்றவர்களில் இருந்து சற்றே வேறுபட்டவன் என்கிற திருப்தி, இரண்டாவதாக என் கருத்துக்களை ஏற்றுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள் என்பது.

Anonymous said...

மருத்துவர் ஐயா (இப்படி விழித்தால் ராமதாஸை குறிக்குமோ)
கலப்பில்லாத‌ ஒன்றை அறுதியிடுவது சற்றே கடினம். எல்லாவற்றிலும் கலப்பிருக்கிறது. எதிர்மறைகளின் முரண்பாடே முன்னேற்றம் என்பது இயங்கியல். கரியிலும், வைரத்திலும் அடங்கியிருப்பது கார்பன் தான். எது முன்னிலைப்படுத்தப்படுகிறது என்பதே அதை தீர்மானிக்கிறது. அதன்படி பதிவை நாம் எந்த நோக்கில் பயன்படுத்துகிறோமோ அதுதான் அதன் உள்ளீடு உருவம் எல்லாம். ஈழத்தில் அங்கங்கள் சிதைக்கப்பட்டு மக்கள் கொல்லப்படுவதையும் அதற்கடுத்தே நமீதாவின் ஆடைவிலகலையும் மனத்தை மறைக்காமல் வெளிப்படுத்துகிறேன்
என்ற பெயரில் பதிவித்தால் அது போலித்தனமாகவே அமையும். இரண்டையும் த‌க்கவைக்க முடியாது. இரண்டில் ஒன்றுதான். எது நீங்கள்?

"அந்தரங்கத்தின் பகிரங்கமா? பகிரங்கமாக்கப்படுவதற்கென்றே உருவாக்கப்படும் அந்தரங்கத்தின் ஒப்பனையா?"

என்பன போன்ற அலங்காரங்களெல்லாம் த்க்கவைக்கும் வீரியத்தினின்று வெளிப்படுபவையே. (தவறெனக்கொள்ளவேண்டா)

தோழமையுடன்
செங்கொடி

Anonymous said...

புகுத்துதல்

Dhanasakthi said...

ennaiyum intha kelvi thurathugirathu, veenaaga nam sontha vishayangalai veliccham pottu kaatturoam endra unarvudan..

velan said...

நன்று .....

காவிரி நாடன் said...

பதிவு என்பது வாசிப்பவனுக்கும் எழுதுபவனுக்கும் இடையே நிகழும் அர்த்தமுள்ள புரிந்து கொள்ளுதல் அப்படி நிகழாவிடில் பதிவும் அதை இடுகை செய்பவரும் பயனற்று போகிறார்கள் .

இங்கே உங்கள் பதிவு நான் செலவிட்ட நிமிடங்களைக் காட்டிலும் பயனுள்ளதே .

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

உங்களுக்கு ஒரு வலைதளம் இருக்கிறது என்பதே இன்றைய தினத்தில் நான் உணர்ந்த நல்ல நிகழ்வு.

உண்மை தான்.

அவலத்தை இழந்த வாழ்க்கையை ஈழத்தைப்பற்றி தொடர் இடுகையாக 3000 ஆண்டுதமிழன் வரலாற்றை வாய்ப்பு இருந்தால் வந்து படித்துப்பாருங்கள்.

இடுகை என்பது ஆத்ம திருப்தியை விட சமூகத்திற்கான நம்மால் முடிந்த எளிய பங்களிப்பு.

Post a Comment