Thursday, December 17, 2009

குரு பெயர்ச்சி

குருபெயர்ச்சி எனும் ஜோஸ்ய ஜாலம் பற்றி எனக்குத்தெரியாது.



எனக்கு குரு எனும் தேடலில் கிடைத்த ஒவ்வொரு பிம்பமும் பெயர்ந்தது பற்றித்தான் தெரியும். என் முதல் குரு என்று பார்த்தால், ஆசிரியர்களையும், பூஜையறையில் மாட்டியிருந்த படங்களிலிருந்த தெய்வங்களையும் தவிர்த்தால், நானே மயங்கி விரும்பி ஏற்றுக்கொண்டது முதலில் விவேகானந்தரைத்தான்.


அவரது ஆன்மஞானம் பற்றியோ அறிவியல் சார்பு பற்றியோ ஏதும் தெரியாத வயதில், வீட்டிற்கு வரும் கல்கி பத்திரிகையில், ரா.கணபதி எழுதிய அறிவுக்கனலே அருட்புனலே படித்தும், அதற்கு ஓவியர் வினு வரைந்த படங்கள் பார்த்தும் தான் பிரமிப்பு, ஈர்ப்பு, பக்தி எல்லாம்.அவர் முகம் பிடித்ததால் தான் அவர் என் குரு என்று நினைத்துக்கொண்டேன். "சகோதர சகோதரிகளே", "எல்லா நதிகளும் கடலில் கலப்பதுபோல் எல்லா மதங்களும்" எனும் இரு வாசகங்கள் தவிர அவரது படத்தின் கீழ் வழக்கமாக எழுதப்படும், "எழுமின்'விழுமின்" மட்டுமே நான் அவரைப் பற்றி அப்போது அறிந்தது, படித்தது.

அந்த ஆரம்ப மோகம், பத்து வயதில் ஆரம்பித்து பல பத்தாண்டுகள் நீடித்தது. இன்று அவர் என் குருவாக மனதுக்குத் தோன்றவில்லை.மரியாதை குறையவில்லை, பக்தி குறைந்து விட்டது.

பதின்வயதுகளின் ஆரம்பத்தில் ஒரு பெரியவர் உபதேசம் செய்கிறேன் என்று வள்ளலாரின் வாக்கியத்தைச் சொன்னார்.நாடி, மூச்சு ஆகியவைபற்றியும் சொல்லிக்கொடுத்தார்.அந்த பாதிப்பில், பயிற்சியில் கொஞ்சகாலம் வள்ளலார் என் குரு என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.


பள்ளி முடிந்ததும் டாகூர் என்னை வசியம் செய்தார். அவரை குருதேவ் என்று அழைப்பார்கள் என்பதால் அவர் என் குரு என்று கொஞ்சகாலம் ஓடியது.
பிறகு, படிப்பதனாலும் பிறர் புகழக்கேட்டதனாலும் Henry Miller, Sartre, Marx என்று ஒரு குரு பிம்பம் தேடியது நிகழ்ந்தது.

என்றுமே நாத்திகனாக இருந்ததில்லை என்றாலும் உருவவழிபாடு குறித்தும், கோவில் செல்வதன் அவசியம் குறித்தும் கேள்விகள் என்னை கிட்டத்தட்ட ஒரு agnostic நிலைக்குக்கொண்டு போனபின்.. வறட்டுத்தனமும் பிடிவாதமும் குறைந்தபின், எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அறிமுகப்படுத்திக் கொள்ளவாவது வேண்டும் என்ற நிலையில் தான் மதம் சார்ந்த நூல்களையும் மத‌வழி வெளிப்படுத்தப்பட்ட சித்தாந்தங்களையும் படித்துப் பரிச்சயம் செய்து கொள்ள நேர்ந்தது.

அந்த இடத்தில்தான் ஞானம் அடைய ஒரு குரு தேவை என்ற கருத்து, மனத்துள் ஊட்டப்பட்டு வள‌ர்ந்தது. அந்த குருவாக ரமணர் இருப்பாரா, சாய்பாபா (original) இருப்பாரா என்றெல்லாம் மனம் விசாரித்துக் கொண்டிருந்தது. அதே நேரம் புட்டபர்த்தி சாய்பாபாவும் கண்ணுக்கு கேலியாக தென்பட்டதால், உண்மையான குரு கிடைக்கும் வரை தேடலாம் என்றே தொடர்ந்து மனம் அலைந்து கொண்டிருந்தது.

குரு என்று சொல்லிக்கொண்ட எவர்மீதும் நம்பிக்கை வரவில்லை. குரு என்று சிலர் குறிப்பிட்டச் சிலர்மீதும் ஈர்ப்பு ஏற்படவில்லை. அந்த காலகட்டத்தில் இரு பெரும் மேதைகள் வாழ்ந்திருந்தார்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ ரஜ்னீஷ் இருவருமே பார்க்க மிகவும் வசீகரமாகத் தோன்றினார்கள், அறிவுபூர்வமாகவும் அவர்களை குரு என்று சொல்வது நாகரிகமாகத்தான் தெரிந்தது. அவர்களது எழுத்துக்களும் மனதுக்கு இதமாகவே இருந்தது. ஆனாலும் குரு என்று சொல்லிவிட முடியவில்லை.


குரு யார்? எனும் கேள்விக்கு அவ்வப்போது மனம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவரைச் சொல்லிக்கொண்டது. ஓவியத்தில் நீர்க்கலவைச் சித்திரம் வரையக்கற்றுக்கொடுத்த ஜோசஃப், தமிழின் இலக்கணத்தை எனக்குக் கற்றுகொடுக்க ஆரம்பித்த பண்டித நடேசனார் மட்டுமல்லாமல், அச்சகத்தில் எழுத்துக்கோக்கவும் ட்ரெடில்மெஷின் ஓட்டவும் கற்றுத்தந்த ஆறுமுகம்,மருத்துவக்கல்லூரியில் ஆசிரியராக இருந்த எல்லாரும், அதில் குறிப்பாக டாக்டர் வீரபத்ரன், மனநல மருத்துவத்தின் ஆரம்பப் பாடங்களைச் சொல்லிக்கொடுத்த டாக்டர் தேவர், டாக்டர் மாத்ருபூதம்.. என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது.

இவர்களையெல்லாம்கூட நான் குரு என்று குறிப்பிட்டிருக்கிறேன், ஆனால் குரு என்பது இன்னும் வேறு எதோ என்பது மட்டும் நெஞ்சில் நெருடிக்கொண்டே இருந்தது. இவர்கள் வடிவிலெல்லாம் குரு வந்திருக்கக்கூடும் என்று ஒரு திருப்புகழை மனம் சமாதானத்திற்காக அவ்வப்போது கூறிக்கொள்ளும்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்,மருவாய் மலராய் மணியாய் ஒளியாய், கருவாய் உயிராய் கதியாய் விதியாய், குரு வருவாராம். வரட்டும் என்று காத்திருந்தேன். எங்கோ படித்த 'உனக்கு தகுதி வரும்போது குரு உன்முன் தோன்றுவார்' என்பதை மட்டும் என் சுயாபிமானம் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்குத் தகுதி இருப்பதாய் நினைத்துக்கொண்டுதானே தேடல்!

மனம் நேர்நிலையில் இருக்கும்போது கவனமாகத் தேடிய குருவை மயக்கநிலையில் இருட்டிலெல்லாம் பார்த்ததாக நினைத்துக்கொள்ளும் என்பதையும் அனுபவித்திருக்கிறேன்.
அப்படியொரு மாலை நேரத்தில், மயங்கியநிலையில் ஜெயகாந்தனிடம் நீங்கள்தான் என் குரு என்று கூறிவிட்டேன். "உயிரோடிருப்பவனை எல்லாம் குரு என்று சொல்லிவிடாதே, அவன் சாகுமுன் என்னவெல்லாம் அசிங்கம் செய்து உன்னை அவமானப்படுத்துவான் என்று தெரியாது..செத்துப்போன யாரையாவது குரு என்று சொல்லிக்கொள் அது தான் நல்லது" என்றார். மயக்கம் தெளிந்தது, ஆசை தெளியவில்லை.


குருவுக்குக் கூட ஒரு குரு இருக்கவேண்டுமே அந்த ஆதி குரு யார் என்று யோசித்தால், அது கடவுள் என்ற விடையைத் தருகிறது.கடவுள் என்பது மனிதன் தன் கற்பனையில் உருவாக்கிய அதிசக்திவாய்ந்த பிம்பமாக அல்ல, அறிவின் உச்சமாக, உணர்தலின் முழுமையாக இருக்கும் ஒரு தத்துவத்திற்கு வசதியான ஒரு பெயராக.

அந்தக்கடவுளை எங்கே தேடினால் கிடைக்கும் என்று வெளியே தேடும் வீணான முயற்சியின் முடிவில்,
தானே தன்னை தரிசிப்பதே ஞானம்; தன்னைய‌றிய முற்படுதலே தவம், அதற்கு வழிகாட்டும் குருவும் அந்த‌ உள்ளிருக்கும் மனோசக்திதான் என்பதெல்லாம் வார்த்தைகளாகப் புரிகிறது, இன்னும் அனுபவமாக மாறவில்லை.
அதுவரை, குரு என்ற மாயப்பிம்பம் தன்னைத்தானே பெயர்த்துக்கொண்டே இருக்கும்.

28 comments:

  1. ரைட்..எனக்கும் ஒரு விதத்தில் நீங்கள் சொல்வதில் உடன்பாடு உண்டு.

    குரு என்று ஒருவரை நான்(ம்) ஏற்றுக் கொண்டாலும்,அவரின் குரு அவரின் குரு என்று படிக்கட்டுகளில் பயணம் செய்யும் போது கடவுள் ஏதாவது ஒரு படிக்கட்டில் இருக்கக் கூடும்.

    அப்போது யாராவது ஒரு எக்ஸ் அல்லது ஒய்'ஐ குருவாக ஏற்றுக் கொள்வதை விட கடவுளே குருவாக ஏற்றுக் கொள்வது நல்லதுதானே..

    எனவே கடவுளே குருவாக இருக்கட்டும்;அவர் எப்போதாவது அதை எனக்கு உணர்த்த வேண்டும் என்று தோன்றும் போது உணர்த்தட்டும்.நான் பிரஞ்ஞையுடன் இருக்கிறேன்..

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தைங்கறது இது தான் டாக்டர் !

    ReplyDelete
  4. ஒரு குரு அவர் குருவை தேடுகிறார்... டாக்டர் இது உங்கள் தேடலின் உச்சம்.

    ReplyDelete
  5. கண்ணை மூடிக்கொண்டு குரு கைபிடித்து நடக்க எனக்கும் ஒரு ஆசை. ஆனால் குரு என்று என் வாழ்க்கை பயணத்தில் எவரையும் நம்பி கண்மூடி பயணம் செய்யவே முடியாது மட்டுமல்ல கூடவும் கூடாது.
    கடவுளை போன்றே குருவும் வழிநடத்துவார் என்ற ஆசையும் நம்பிக்கை அல்ல உண்டு.

    ReplyDelete
  6. தலைப்பைப் பார்த்ததும், குரு பெயர்ச்சி சம்பந்தமாக எழுதியிருப்பீர்கள் என ஒரு நடை வந்தேன்.

    உள்ளடக்கத்தின் சரியான தலைப்பு தான்.

    டாக்டர்,

    உங்க பதிவை படிச்சதும்... நிறையா யோசிக்க வைக்கிறீங்க!

    என்னுடைய பழைய குருக்களும் வரிசையா மனதில் வந்து போகிறார்கள்.

    தொடர்ச்சியாக தமிழில் எழுதுகிறீர்கள். பல தளங்களிலும் எழுதுகிறீர்கள். எழுதுங்கள்.

    பின்னூட்ட பெட்டி பாப்-அப்-ல் வேலை செய்கிறது. மற்ற தளங்களை போல திறக்க வழி செய்யுங்களேன்.

    ReplyDelete
  7. அறிவார்ந்த தேடல்....ஆனால்,தர்க்க ரீதியாகப் பார்த்தால் முடிவில்லாத இந்தத் தேடலின் எல்லைதான் எது என்று தெரியவில்லை....

    ஆனால், தேடலின் சுகமும், தேடும் பொருள் மாறி வேறு ஒன்றை கிடைப்பதும் இனிமையானவைதான்.

    ReplyDelete
  8. உங்கள் பதிவு நன்றாக உள்ளது. நிறைய சிந்திக்க தூண்டுகிறது. யார் என்னுடைய குரு என்று இதுவரை சிந்தித்ததில்லை . ஆனால் கடவுள் நம்பிக்கை உண்டு. ஏன் என்றால் அந்த கடவுள் நல்ல ஒரு கணவரிடம் என்னை ஒப்படைத்துள்ளார் , அன்பான இரண்டு மகன்களை கொடுத்துள்ளார் . அதற்கு நான் நன்றி தெரிவிக்க தான் கடவுளை வழிபடுகிறேன். ஆகவே அந்த கடவுள் தானே என் குரு. உங்கள் அளவிற்கு எனக்கு கோர்வையாக எழுத வரவில்லை . ஆனால் உங்கள் பதிவு என்னை எழுத தூண்டியது . தியானம் , யோகா என்று இது வரை எதுவும் முயற்சி பண்ணியதில்லை. ஆனால் கடவுள் சன்னிதானத்தில் நின்று சில நிமிடங்கள் மனதை ஒரு முகபடுத்தி அனைத்துக்கும் நன்றி என்று கூறும்பொழுது மனம் மிகவும் லேசாகிவிடும்.

    ReplyDelete
  9. Dr.Rudhran,
    Where to? Don't you think everyone whom you held as guru at one point of time moved you farther in probably the discernible path? Well,if not,Gnana as you discuss shall not take anywhere....... may be it will make more noise.Though Gnana is considered as higher path,but not easy based on knowledge.Keep trying.....in this no one is a Guru.One who attained need not necessarily be the Guru to another.It is not highway with name boards and direction boards.Well anyway your presentation is neat and lucid which normally is not so, when explained by the so called Swamijis, and self proclaimed Gurus.Incarnations may be helpful....but how to find is a question.Again we have to believe the concept of incarnation.....our mind haughty as it is not allowing to believe anything.May be we have to empty our mind and keep a receptacle pure and ready.Let me not talk further.You are the writer , I am the reader.

    ReplyDelete
  10. குரு என்பதில் இன்னோரு உளவியல் சிக்கலுண்டு, அது நாம் எப்போது அடுத்த குரு என்பது!

    நாம் ஒன்றை கற்று கொண்டாலே அதை எங்கேயாவது கொட்டியாக வேண்டும் என்ற உந்துதலுக்கு ஆளாகிறோம்!

    நீங்கள் குறிபிட்ட விவேக்,ரஜினிஷ்,பாபா எல்லோரும் அப்படித்தான்!

    தத்துவங்களில் தான் வித்தியாசப்படுகிறார்கள்!

    ReplyDelete
  11. But do u agree that planet's movement in the sky, will have an impact on human being's life (atleast in health aspects) or no.

    ReplyDelete
  12. ுருவுக்குக் கூட ஒரு குரு இருக்கவேண்டுமே அந்த ஆதி குரு யார் என்று யோசித்தால், அது கடவுள் என்ற விடையைத் தருகிறது.கடவுள் என்பது மனிதன் தன் கற்பனையில் உருவாக்கிய அதிசக்திவாய்ந்த பிம்பமாக அல்ல, அறிவின் உச்சமாக, உணர்தலின் முழுமையாக இருக்கும் ஒரு தத்துவத்திற்கு வசதியான ஒரு பெயராக........................யோசிக்க வைக்குறீங்க. Acknowledging gurus humbles one's mind to show that one has a long way to go.

    ReplyDelete
  13. சாக்ரடிஸ் ஒரு அடிமை சிறுவனிடம் geometry பற்றி சில கேள்விகளை கேட்டார் , கிடைத்த பதில்களின் தவற்றினை சுட்டிக்காட்ட , மீண்டும் சில பதில்கள், தவறுகளோடு .. மீண்டும் சில கேள்விகள் .. மீண்டும் சுட்டிக்காட்ட .. கிடைத்தன விடைகள் .. சரியான பதில் .. பெரிய உண்மை என புரிந்து கொண்ட சாக்ரடிஸ் சொன்னது .. he could only have reached the truth by recollecting what he had already known but forgotten' .. உண்மைகள் ஆன்மாவில் புதைந்து கொண்டிருக்கின்றது .. பிறப்பின் வாதையில் மறைந்து கொண்டிருக்கின்றது .. தாதியின் / குருவின் வேலையே உண்மைகளை பிரசிவப்பதுதான் என்று ... இதை 'அனம்நேசிஸ்' 'anamnesis' என பறைசாற்றினார் ..

    சாக்ரடிஸ் போன்ற குருக்கள், 'குரு ஒரு தாதியைபோல' தான் ,
    தாதி செய்வதெல்லாம், குருக்கள் போல உண்மைகளை பிரசவிப்பதுதான்
    தாதிகள் சிசுக்களை லாவகமாய் கையாள்வதும் , குருக்கள் எண்ணங்களை / உண்மைகளை பிரசிவக்க வைப்பதும்
    சிசுக்களின் கொடி அறுத்து .... உயிரம்சை பொருந்தியவற்றை அகற்றுவதும், ... ஜீவனுள்ளவையை போற்றுவதும் கடன் ..
    என் குரு உள்ளது உள்ள படி உன் குரு .... யார் என்பது உனக்கு வெளிச்சம் /////////////////

    ReplyDelete
  14. குரு ஒரு தாதி போலத்தான்; ஆனால் முதல் குரு தன்னையே தெய்வம் என்று சொல்லிக்கொண்டாரா இல்லை சொல்லவைத்தாரா என்பதில்தான் அவரது தகுதியும் யோக்யதையும் தெரியவரும்.
    அப்படி அவசரப்படு உணர்ஸ்சிவசப்பட்டு ஒரு சீடன் சொன்னால் கூட திருத்துபவர்தான் குரு, ஆமோதித்து பெருமிதத்தில் ஆழ்ந்துவிடுபவன் போலி.

    ReplyDelete
  15. குரு என்பவன் சிஷ்யன் கடவுள் இருவருக்கும் paalamaaha இருக்கிறான் உதஆரனமாஹ் ராம கிருஷ்ணா பரம ஹம்சர் But its really wonderful writing and its very important in everyone life, Thank you Dr.Rudhran Sir

    ReplyDelete
  16. குரு பின்னாடி போய் ஏமாறுவதை விட நமக்கு நாமேதான் குரு என்ற தெளிவு இருந்தால் போதும்

    ReplyDelete
  17. அடர்த்தியான பதிவு

    நீங்கள் படித்த இவைகளை அறிமுகம் செய்வதென்றால்
    தலைக்கு ஒரு புத்தகம் சொல்லுங்கள் எங்களுக்கும் பயன்படும்

    ReplyDelete
  18. //அறிவின் உச்சமாக, உணர்தலின் முழுமையாக இருக்கும் ஒரு தத்துவத்திற்கு வசதியான ஒரு பெயராக.

    தானே தன்னை தரிசிப்பதே ஞானம்; தன்னைய‌றிய முற்படுதலே தவம், அதற்கு வழிகாட்டும் குருவும் அந்த‌ உள்ளிருக்கும் மனோசக்திதான் என்பதெல்லாம் வார்த்தைகளாகப் புரிகிறது, இன்னும் அனுபவமாக மாறவில்லை.//

    மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே..

    ReplyDelete
  19. அருமை ருத்ரன் எனக்குள்ளூம் இப்படி ஒரு தேடல் இருக்கிறது
    ஆனால் குரு வழியாகத்தான் ஞானம் சித்திக்கும் என கூறப்படுகிறது
    மனோசக்திதான் அந்த குரு என உணர்கிறேன்
    என் வாழ்விலும் இது போல் குரு என பலரை நினைத்த சம்பவங்கள் உண்டு
    ஆனால் பகுத்தறிவின் காரணமாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை முழுமனதுடன்

    ReplyDelete
  20. சுவாரசியமாக இருந்தது. முதலில் தலைப்பைப் பார்த்து சோதிட சம்பந்தமோ என்று வாசிக்காமல் விட்டுவிட்டேன்! :-)

    ReplyDelete
  21. டாக்டர், அவசியமான பதிவு. உங்களின் எண்ணங்கள் அவசியம் பதியப் பட வேண்டிய ஒன்று.

    அந்த கடைசிப் பத்தி, excellent...

    ReplyDelete
  22. //அந்தக்கடவுளை எங்கே தேடினால் கிடைக்கும் என்று வெளியே தேடும் வீணான முயற்சியின் முடிவில்,
    தானே தன்னை தரிசிப்பதே ஞானம்; தன்னைய‌றிய முற்படுதலே தவம், //

    http://readwritemore.blogspot.com/2009_08_01_archive.html

    ReplyDelete
  23. நீங்கள் முன்பே கூட படித்திருக்கலாம், பாகவத புராணத்தில் உத்தவ கீதை என்று ஒரு பகுதி,உலகில் இருக்கும் 24 விஷயங்கள் தனக்கு எப்படி குருவாக ஒருவர் உருவகபடுத்துகிறார் என்று. குருவை தேடுவது கூட ஒரு வகையில் Escapism தானே(என் கருத்து)? யாரோ ஒருவர் நம்மை வழி நடத்துவார் என்று. நன்கு சிந்திக்க கூடிய ஒருவருக்கு குரு அவசியமா? இங்கே குரு என குறிப்பிடுவது மனித வடிவில் போதனை செய்பவர்களை. தவறுகள் இருந்தால் மண்ணிக்கவும். நட்புடன்.

    ReplyDelete
  24. உன் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும்போது அது எங்கிருந்தோ வந்ததென்று நினையாதே .. அது உனக்குள்ளிருந்தே வந்ததே
    -Swamy Vivekananda

    கற்க தேவை குருவல்லன். கற்கும் சங்கல்பம். அது இருப்பின் சிலையும் குருவாகும் . இது இல்லாவிடில் குருவும் சிலையாவான்.

    எனக்கு தோன்றுவது என்னவென்றால்

    //தானே தன்னை தரிசிப்பதே ஞானம்; தன்னைய‌றிய முற்படுதலே தவம், அதற்கு வழிகாட்டும் குருவும் அந்த‌ உள்ளிருக்கும் மனோசக்திதான் //

    இவை வெறும் வார்த்தைகளாய் தோன்றவில்லை. அனுபவித்தறியாத ஒன்றை ( ஆனாலும் செம காண்ட்ராவர்ஷியலாகப்போவுதுங்க. அப்போ சங்கராச்சாரியெல்லாம் ஒப்புக்கு சப்பாதானேனு அய்யருங்க காயப்போறாங்க‌ )
    இப்படி போட்டு உடைக்க முடியாது.


    அவையடக்கம் கருதியே //" இன்னும் அனுபவமாக மாறவில்லை." // என்று கூறியுள்ளதாய் படுகிறது.

    //"உயிரோடிருப்பவனை எல்லாம் குரு என்று சொல்லிவிடாதே, அவன் சாகுமுன் என்னவெல்லாம் அசிங்கம் செய்து உன்னை அவமானப்படுத்துவான் என்று தெரியாது..//

    அதாங்க ஜெயகாந்தன்!

    ReplyDelete
  25. Dr,

    Why don you change the background color from Black? I feel very hard to read...

    ReplyDelete
  26. நொசுர் வெங்கட்ராமன் ரமணருக்கு திரு அண்ணா மலையே குருவாக இருந்ததாக சொல்லுவார். குரு என்பது மனிதனாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. வைரமுத்துவின் வரிகள் - வானம் எனக்கொரு போதி மரம்

    ReplyDelete