Thursday, December 17, 2009

வெட்கமின்றி வேதனையுடன்

அந்தப்படத்தை முன்பே பார்த்திருந்தால் முந்தைய பதிவே வந்திருக்காது. அந்தப் படத்தில் அவள் கிடக்கிறாள்.உயிரற்ற கண்கள் மூடிக்கொள்ளூமுன் பட்டிருக்கக்கூடிய வேதனைகள் அந்த விழிமூடிச் சாய்ந்துகிடக்கும் முகத்தில் தெரியவில்லை. அவள் வேறொருவனின் மகள். எனக்கொரு மகள் பற்றிய கற்பனையில் அவளது முகம் பொருந்தும். தலைவனின் மக‌ளாகவோ எதிரியின் மகளாகவோ அவளை அணுகியவர்களுக்கு அவள‌து வயதில் ஒரு மகள் இல்லாமல் இருந்திருக்கலாம் எனக்கு அப்படியொரு மகள் இருந்திருக்கக்கூடும்; என் மக‌ளாகத்தான் பிற‌ந்திருக்கவேண்டுமென்றில்லை. அடிபட்டு ரத்தம்காய்ந்து, அழுக்கில் கிடக்கிறது அந்த உடல். இந்தப் படம் எடுக்கப்பட்ட போது அவளுக்கு வலித்திருக்காது. வலிகள் ரத்தமாய்க் காய்ந்து கிடக்கின்றன‌. உள்ளே நெருடுகிறது, உறக்கத்தை ஊடுருவப்போகிறது. எவ்வளவு நாட்களுக்கு? ரகுராய் எடுத்த புதைக்கப்படும் குழந்தை கூட இப்படி நெருடியது.. எதிரியின் மகளையல்ல எதிரியைக்கூட இப்ப‌டி ஆக்கியிருப்பேனா என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் அந்த மிருகவெறி அவனவனை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்று தீர்மானமாகச் சொல்ல முடியாதுதான், ஆனாலும் உள்ளே கொஞ்சமாவது சகமனித உயிர்மீது அக்கறை தேவையில்லை அங்கீகாரமாவது இருந்தால் இப்படிச் செய்ய முடியுமென்று தோன்றவில்லை. கோபம் வெறி ஆகியவை குறித்து சுயபரிசீலனை தேவைப்படுகிறது, கையாலாகாத்தனம் கைவழியே எழுத்தாகிக்கொண்டிருக்கிறது என்ற நெருடலுடன்.

10 comments:

  1. வலிக்குது
    எனக்கு ஆனா அழத்தெரியல

    ReplyDelete
  2. வலிகள் ரத்தமாய்க் காய்ந்து கிடக்கின்றன‌. ....................அந்த மிருகவெறி அவனவனை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்று தீர்மானமாகச் சொல்ல முடியாதுதான், ஆனாலும் உள்ளே கொஞ்சமாவது சகமனித உயிர்மீது அக்கறை தேவையில்லை அங்கீகாரமாவது இருந்தால் இப்படிச் செய்ய முடியுமென்று தோன்றவில்லை. .............இந்த வரிகளில் உள்ள உணர்வுகள் .......... அப்பப்பா!

    ReplyDelete
  3. வலியின் வேதனை வரிகளை வலிக்கவைத்திருக்கிறது. மிகவும் அருமையான தொகுப்பு ..

    நேரம்கிடைக்கும்போது வந்து செல்லவும் என் வலைபூவிற்க்கு..

    http://niroodai.blogspot.com

    ReplyDelete
  4. Hmmmmm ........sad and feel the pain.As rightly said I feel the anguish and helplessness.

    ReplyDelete
  5. /கோபம் வெறி ஆகியவை குறித்து சுயபரிசீலனை தேவைப்படுகிறது, கையாலாகாத்தனம் கைவழியே எழுத்தாகிக்கொண்டிருக்கிறது என்ற நெருடலுடன்.//

    நிதர்சனம் .. இந்த மாதிரி பாத்து பாத்து மனசு மரத்து போச்சு .. இதை தான் இந்த உலகம் விரும்புகிறதோ என்னவோ ... முடிந்தவரை சக மனிதர்களை நேசிப்போம் . முடியவில்லை என்றாலும் வெறுப்பை தவிர்ப்போம்
    அன்புடன்
    மீன்துள்ளி செந்தில்

    ReplyDelete
  6. உங்கள் கோபத்திலும் ஆற்றாமையிலும் நானும் பங்கேற்கிறேன்...

    ReplyDelete
  7. /முடிந்தவரை சக மனிதர்களை நேசிப்போம் . முடியவில்லை என்றாலும் வெறுப்பை தவிர்ப்போம்/
    என் எண்ணமும் இதே!

    ReplyDelete
  8. ஐம்பதாயிரம் தமிழன் உள்ள ஊரிலே ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியவில்லை மகிந்தவுக்கு.....
    உங்கள் ஆறரைக்கோடிப் பேர் உள்ள நாட்டில் எதனை ஐயா செய்தீர்கள்???
    CHANNEL 4 காட்டித்தானா உங்களுக்குப் புரிய வேண்டும்????
    அதுசரி எங்கள் உதிரம் தோய்ந்த வரலாற்றில் அரசியல் லாபம் தேடுபவர்கள் தானே நீங்கள்???
    உங்கள் கலர் TV கனவுகளுக்காக ஜனநாயகத்தை விக்கும் உங்களுடன் பேசிப்பயன் என்ன????
    அடுத்த எந்திரன் படம் வரும் வரையாவது கொஞ்சம் எங்களையும் நினைத்துப் பாருங்கள்.....
    இப்படிக்கு
    இந்தியனுக்கு
    தமிழன்.

    ReplyDelete