Monday, December 21, 2009

மாதாவின் நினைவுகள்




இந்தப் படம் கொஞ்சம் நெருடியது. நகைச்சுவை உணர்வு எனக்குக் குறைந்துவிட்டதா என்று தெரியவில்லை.
 கடவுள் என்பதே மனிதனின் கற்பனாசக்தியின் வீச்சாகப் பார்த்துப்பழகிவிட்ட எனக்கு இது ஏனோ உறுத்துகிறது.. ஏன்? மேரி எனக்கு ஒரு கடவுள் பிம்பம்தான். ஆனால் நான் உருகியுருகி  மயங்கிக்கிடக்கும் காமாக்ஷி போல் அல்ல; இன்னுமொரு தெய்வம் எனும் ஒப்புதலில்.
மேரி பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். Michelangelo சிலையின் கவிந்த கண்களில் கவிதையாய் ஒரு சோகம் தளும்புவதிலிருந்து, renaissance ஓவியங்களின் ஊடாக   அவள் ஒரு அடர்த்தியான பிம்பம்.  அவளைப்பற்றி நிறைய தோன்றும்.

மிகச்சின்ன வயதிலிருந்துஅவள் எனக்கு மிகவும் பரிச்சயம். வீட்டின் பூஜையறையில் வேளாங்கண்ணி மாதாவாக, குட்ஷெபேர்ட் கான்வெண்ட் chapelல் படமாக, பிறகு என் பள்ளியின் பக்கத்திலிருந்த புகழ்மிக்க அந்தோனியார் ஆலயத்தில் ஒரு படமாக, ஒரு சிலையாக. 
பரீட்சைக்குப்போகுமுன்னால், உடம்பு சரியில்லாது போனால், வீட்டிலோ பள்ளியிலோ யாராவது திட்டியிருந்தால்.. என்று பல்வேறு மனநிலைகளில் அவளோடு மானசீகமாக பல ஆண்டுகாலம் உரையாடிவந்திருக்கிறேன். அவளோடு எனக்கு ஒரு விவரிக்கமுடியாத நெருக்கம்!
இன்றும்கூட அவள் படத்தையோ சிலையையோ பார்த்தால் அனிச்சையாக என் கை சிலுவைக்குறியீடு செய்யும், மனம் Hail Mary முணுணுத்துக்கொள்ளும். அவளிடம் மெலிதான சோகம் கலந்த தெய்வீகம் தொனிக்கும். அது தான் அவளிடமும், ஒரு சோகக்காவியம் உள்ளூடும் அவள் கதையிலும் எனக்கு இன்னும் உள்ள ஈர்ப்பு.
ஏழை. என்னென்ன நிர்ப்பந்தங்களுக்காகவோ  ஏழை தச்சுத்தொழிலாளியை மணக்கிறாள். காதல் இல்லாத கல்யாணம். கருவுறுகிறாள். கடவுளின் அருள் என்று பலர் சொன்னாலும் சிலராவது அவளது கன்னித்தன்மையை, கற்பைப்பற்றிப் புறம்பேசியிருப்பார்கள். அவள் மனம் வருந்தக் கிண்டலாகச் சிரித்திருப்பார்கள். அரசியல் சமூக அவசரங்களால் கர்ப்பத்துடன் நாட்டைவிட்டே ஓடவேண்டியிருக்கிறது..மகன் பிறக்கும்போது எல்லா தாய்களையும்போல் மகிழ்ந்திருப்பாள், அவன் தேவகுமாரன் என்றழைக்கப்பட்டபோது உள் சிலிர்த்திருப்பாள். அவன் வளர்ந்து வேலை ஒழுங்காகச் செய்யாமல் இருந்தபோது எல்லா தாய்களையும்போல் சலித்திருப்பாள். வீட்டையும் நாட்டையும் விட்டு அவன் பல வருடங்கள் காணாமல் போனபோது தவித்திருப்பாள். திரும்பிவந்தவன் கோவிலில் கலாட்டா செய்கிறான், புரட்சி செய்கிறான், பலரைக்கூட்டி ஒரு புதிய மதம் உருவாக்க முயல்கிறான்..என்றெல்லாம் அவனைப்பற்றி சமூகம் குறை  சொன்னபோதெல்லாம் மௌனமாக மனத்துள் கவலைகளை அழுத்திவைத்து தான் தினசரி வாழ்க்கையைத் தொடர்ந்திருப்பாள்.

அவன் சிறைபடும் வரை, அவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றுப்படும் வரை. அவனது ஆணியடிக்கப்பட்டு ஈட்டிகளால் குத்தப்பட்டு, சாட்டைகளால் பிய்த்தெடுக்கப்பட்ட பிணத்தை மடியில் கிடத்தி மூச்சே நிற்குமளவு சோகம் மனத்துள் முட்டும் வரையில் மட்டுமல்ல..அதன்பின் அதிகம் பேசப்படாத அவளது மீதிவாழ்விலும் சோகமே அவளது ஆதாரசுருதியாக வெளிவாராத கதறலாகவே அவளது சித்தரிப்பு.  இது என்னுள் எப்போதுமே நெருடும் ஒரு பெண்ணின் துயரகாவியம்.  
அவளைப்பற்றித்தான் சமீபத்தில் ஒரு சர்ச்சைக்குரிய விளம்பரம் வந்தது. அதில் அவள் கணவன் ஜோசப்புடன் படுத்திருப்பதாகவும் அவன் எப்படி கடவுளோடு நான் போட்டியிடமுடியும் என்று வெதும்புவதாகவும் ஒரு சித்தரிப்பு. 
யாரை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் படம் வரையலாம் என்பதே என் கருத்து, என்றாலும் ஏனோ உள்ளே ஒரு நெருடல்! எனக்கு வேண்டியவர்களை சிலர் விமர்சிக்கும்போது வருவதுபோன்ற நெருடல்.என் நண்பர்கள் கேலிக்குள்ளாக்கும்போது வரும் ஒரு நெருடல். அப்படியென்ன எனக்கு மேரி?



நான் காமாக்ஷியைத்தவிர எந்த தேவிரூபத்தையும் வணங்காதவன். அந்த தேவி பராசக்தியும் பரமசிவனும் கலந்திருப்பதாய்ச் சித்தரிக்கும் படங்களையும் சிலைகளையும் ரசிப்பவன். நான் காதலிப்பதாய் நினைத்துக்கொண்டிருந்த ஸரஸ்வதியைக்கூட ஆடையின்றி வடிவமைக்கத் தயங்காதவன்! கலாச்சாரத்தின் பின்னணியோ கடவுள் நம்பிக்கையெனும் எண்ணக்குறுகலோ என் இந்த நெருடலுக்குக் காரணமாக முடியாது.
என் வீட்டில் என் அம்மாவை நான் அவதூறாகப்பேசுவதும் அவமரியாதை  செய்வதும் வாடிக்கையானாலும், பக்கத்து வீட்டுக்காரன் அவன் அம்மாவை திட்டினால் எனக்கு நெருடும். இப்படித்தான் இதுவும். My cultural chauvinism! 
காலம் மாற்றுமா பார்ப்போம்.  
எனக்கு அவளும் ஸ்ரீமாதா தான்.

12 comments:

  1. Ave Maria..! சாக்தம் புரிகிறது.

    ReplyDelete
  2. எத்தனையோ வியாகுலங்களை தாங்கியவள், இதையும் தாங்கி ஜெபித்து கொள்வாள். அவள் அசிங்கபடவில்லை. இந்த படத்தை வரைந்தவனின் உள்ளத்தில் உள்ள அசிங்கங்களை இந்த படத்தின் மூலம் அரங்கேற்றி இருக்கிறான்.
    நீங்கள், "Nativitiy" படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விதமாக, மாதாவின் மன நிலையை நன்கு காட்டி இருப்பார்கள்.

    ReplyDelete
  3. பெண் தெய்வமாகச் சித்திரிக்கப்படும் மேரி என்ற புராண பாத்திரத்தை இவ்வளவு மனிதாபிமானத்துடன் எவரும் விவரித்து அறிந்ததில்லை.
    உங்கள் உணர்வுகள் புரிகின்றன.

    ReplyDelete
  4. //ஒரு பெண்ணின் துயரகாவியம்.//........... மிகவும் அழகாக எழுதியிருக்கீங்க!

    ReplyDelete
  5. முதல் முறையாக வருகிறேன் !!
    கனமான பதிவுகள் - நன்றி ,

    //பக்கத்து வீட்டுக்காரன் அவன் அம்மாவை திட்டினால் எனக்கு நெருடும்.//

    உண்மை , இது அனைவர்க்கும் நிகழ்கிறதா ? எனில் வேடிக்கைதான் !!

    ReplyDelete
  6. எனக்குமே மேரி மீது தனி ஈர்ப்பு உண்டு .பிள்ளையாய் யேசு தன் தாயிடம் நடந்திருப்பாரா அடிப்படை விதிகள் எல்லாம் யுகபுருஷர்களுக்கு கிடையாது போலும்.பாரதி,காந்தி...........

    ReplyDelete
  7. நாம் எப்போதுமே இப்படித்தானே!

    ReplyDelete
  8. எனக்கு என்னவோ..கர்ணனின் மாதா குந்தியின்
    ஞாபகம் வருகிறது...இதைப் படிக்கும்போது...

    ReplyDelete
  9. You are a bloody hypocrite ignorant of religious history, art history and a shallow understanding of psychology. You are not just an abomination and curse on the society but you personify everything that is utterly disgusting and hateful in society today.

    ReplyDelete
  10. அரவிந்தன் நீலகண்டன் has left a new comment on your post "மாதாவின் நினைவுகள்":

    You are a bloody hypocrite ignorant of religious history, art history and a shallow understanding of psychology. You are not just an abomination and curse on the society but you personify everything that is utterly disgusting and hateful in society today.

    Publish this comment.
    பெயருடன் எது எழுதப்பட்டாலும், முகவரி தெரிந்து கொள்ள முடிந்தால் அது இங்கே வெளியிடப்படும் என்பதற்கு இது உதாரணம்.
    அரவிந்த் நீலகண்டன் , நேரில் சந்தித்து விவாதிக்கவும் தக்க பதில் பெறவும் தயாரா?
    மின்னஞ்சல் தர வேண்டியதுதானே?

    ReplyDelete