Monday, December 28, 2009

பெண் பதிவர்களுக்கு, அன்புடன்.



பெண்களின் பதிவுகள் பெண்மையின் பதிவுகளா?
பெண்மை என்பது குறித்தும் யோசிப்போம். எனக்கு பெண்மை ஒரு சக்தி. என் தெய்வமாக நான் வழிபடுவது ஒரு பெண் பிம்பம்தான். ஒரு நகைச்சுவைப்பாடலாக இருந்தாலும், “அவளுக்கென்ன அழகிய முகம் ” என்று டி.எம்.எஸ். குரல் ஒலிக்கும்போதெல்லாம் எனக்கு காஞ்சி காமாக்ஷியின் முகம் தான் நினைவில் மோதும். ஆனால் நான் இப்போது சொல்ல விரும்புவது அவளைப்பற்றியல்ல.
இங்கே நிறைய பெண்கள் பதிவெழுதுகிறார்கள், படித்துக்கொண்டிருக்கிறேன். ரசம் செய்வதிலிருந்து, குழந்தை பராமரிப்பிலிருந்து, காதலிலிருந்து கவிதைகளிலிருந்து, கதைகளை மீள்பரிசீலனை செய்வதிலிருந்து, பெண்களின் பதிவுலகப் பங்களிப்பு என்னுள் ஓர் ஆச்சரியத்தையும், சிலநேரங்களில் வியப்பு கலந்த மதிப்பையும் மீட்டுகிறது. 
இந்தப் பெண்கள் டைரி எழுதி தைரியமாக வீட்டில் வைத்துவிட்டு வேலை செய்யமுடியாத பெண்களின் கனவுகளாக இருக்கிறார்கள். இவர்கள் புதிய தலைமுறை சார்ந்தவர்கள். இவர்கள் என்னவெல்லாம் செய்ய முடியும்? என்ன செய்கிறார்கள்?
ஒரு பெண் பத்தாண்டுகளுக்குமுன் இருந்த இக்கட்டான நிலையில் இல்லை. இன்று கல்லோ புல்லோ வேறுவழியில்லாமல் கட்டிக்கொண்டு அழ வேண்டிய நிலையில் இல்லை.இன்று அவள் தனியாய் ஓர் இடத்தில் வசித்து, தான் தேவைகளுக்காக உழைத்து ஊதியம் பெற்று, தன் மனதுக்கு விருப்பமான நபர்களுடன் வெளியே சென்று தன்னிச்சையாகவும் தீர்மானமாகவும் இருக்க முடியும். கல்வித்தகுதியைப் பொறுத்தே வேலை அமையும் என்றாலும், கௌரவமாகத் தான் சுயகட்டுப்பாட்டிற்கும் சுயநெறிக்கும் ஏற்ப வாழமுடியும். இவர்களில் எழுத்தும் கொஞ்சம் தொழில்நுட்ப அறிமுகமும் இருப்பவர்கள் பதிவிடுகிறார்கள். இவர்களிடம் தான் என் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது, அதில் பலரிடம் ஏமாற்றமும் வருகிறது.
சற்றே வித்தியாசமாகச் சிந்தித்துப் பதிவிடும் பெண்கள் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பான்மை வழக்கமாக நம் சமுதாயத்தின் வரையறுக்கப்பட்ட பிம்பங்களாகவே எழுதுவது தான் வருத்தம். இட்லி சுடுவது ஆயாவுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பிரத்யேக நுணுக்கம் இல்லைதான், அது தெரியாதவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்தான், ஆனாலும், பத்து இட்லி பத்து வடை சுட்டாலும் இடையில் ஒரு பத்து நிமிடம் சமுதாயத்தையும் பார்க்கலாமே, அது பற்றிப் பேசலாமே.
நான் எவ்வளவு சிறந்த எழுத்தானாக இருந்தாலும், ஒரு பெண்ணின் உணர்வுகளை அவளைவிட நுட்பமாக எழுதமுடிந்தாலும், ஒரு பெண் ஒரு பிரச்சினையை அணுகுவது குறித்து மேலோட்டமாகவும் ஓர் ஆண்பார்வையோடும்தான் பேச முடியும். அவளது வலிகளை நான் எழுதலாம், அவளது கண்ணீர் என் கண்வழியோடி கைவழிவடிந்து படிப்பவர் கண்களையும் நனைக்கலாம், ஆனாலும்...
இன்று பேசிக்கொண்டிருந்தபோது என் நண்பர் கூறினார், ஒரு பெண் சற்றே வித்தியாசமாகவும் வெறுப்புடனும் சமூக அவலங்களை எழுதியபோது சில ஆண்கள் அவரை மிரட்டியதாக! அப்படித்தானே நடக்கும்! இதில் என்ன ஆச்சரியம்? அப்படிப்பட்ட கோழைகளையும் கேவலமானவர்களையும் யார் சுட்டிக்காட்டுவது? என்னை ஒருவன் அடித்தான் என்றால் நான்தானே எவ்வளவு நீர்த்துப்போய் இருந்தாலும் அந்தக் காவல்துறையிடம் புகார் கொடுக்கவேண்டும்? எவ்வளவு பழுதுபட்டிருந்தாலும் ஊடகங்கள்தானே மக்களிடம் செய்தி சேர்க்கின்றன..தனக்கு நடப்பதை வேறு யார் சொல்ல முடியும்?


ஆண்மையும் பெண்மையும் வெறும் பாலினத்தால் மாறுபடுவதில்லை. இரு மனங்களும் வேறுமாதிரிதான் ஒரு விஷயத்தை அணுகும்.இதை venus-mars என்று மலினப்படுத்தாமல் பார்க்கவேண்டும். பெண்மை என்பது வெறும் நளின அழகு மட்டுமல்ல, அதிலும் ஒரு கம்பீரநேர்மை உண்டு.ஆண்மை என்பதும் வெறும் ஆதிக்காடம்பரம் அல்ல அதிலும் கோழைத்தனமான கயமை உண்டு. காலங்க்காலமாய் வரையறுக்கப்பட்ட விதிகளை வசதிகளுக்கேற்ப நாம் தளர்த்திக்கொள்ளும்போது, குறுகிய லாபங்களுக்காக இன்னமும் இது தான் பொம்பளைங்க சமாச்சாரம் என்று ஆண்கள் ஒதுக்குவதும் பெண்கள் கட்டிக்கொண்டு அங்கலாய்ப்பதும் மாற வேண்டும்.
ஆயிரம் மொக்கைகளுக்கு நடுவில் ஐந்து ஆண்களாவது சமுதாயம் குறித்த பதிவுகள் இடுவதில்லையா, அது போலத்தான் பெண்களிலும் வரவேண்டும். அப்போதுதான் ஆதிக்கமனோபாவத்துடன் கேலிசெய்யும் மூடர்கள் அடங்குவார்கள். இந்தபப்பதிவே பெண்களில் பலர் அழகாகவும் தெளிவாகவும் மொழிநேர்த்தியுடன் பாசாங்குகளற்றும் எழுதுவதால் வரும் ஆதங்கம்தான்.
பதிவு என்பது ஒரு ரகசிய டைரியல்ல, ஒரு சிறுபத்திரிகை போல. அதுவும் சொந்தமான சிறு பத்திரிகை. எழுதுவது உரிமையுடன் மட்டுமல்ல உரிமைக்காகவும். கருத்துக்கள் கைதட்டல்களுக்காக மட்டுமல்ல சில பொய்யுறக்கங்களைப் போதும் என்று சொல்வதற்காக.
பெண்ணியம் என்பது வீறாப்பல்ல, வீரம்.
உங்கள் எழுத்துக்கள் சமையலறையையும் வீட்டின் முன்னறையையும் விட்டு வெளியே வரட்டும், உங்களுக்கு எதிர்ப்பு வரும். வேடிக்கை பார்க்கும் லட்சக்கணக்கானவர்களில் கூட நின்று கோபப்பட ஒரு சிலராவது இருப்பார்கள், அவர்கள் உங்களை அடையாளம் காணவும் நீங்கள் அவர்களை அடையாளம்  காணவும், உங்கள்  அடையாளங்களை நீங்களே தெளிவுபட உணரவும் எழுதுங்கள், சுற்றிப்பார்த்து..

31 comments:

  1. //பெண்மை என்பது வெறும் நளின அழகு மட்டுமல்ல, அதிலும் ஒரு கம்பீரநேர்மை உண்டு.ஆண்மை என்பதும் வெறும் ஆதிக்காடம்பரம் அல்ல அதிலும் கோழைத்தனமான கயமை உண்டு//

    excellen Ruthan sir

    roma nalla sonninga

    ill try to follow this

    ReplyDelete
  2. சார்... அதவிடுங்க இந்த ஆண்கள் போய் பாராட்டுவாங்க பாருங்க.. ஆஹா ஓஹோன்னு.. அதுதான் சார் ரொம்ப காமடி :)))))

    நல்லா ஒருத்தன் கவிதை எழுதியிருப்பான்.. அவனுக்கு 10 கமெண்டு போடறதே பெரிய விஷயம்.. ஆனா மொக்கையா சாரி படுமொக்கையா ஒரு பெண் கவிதை!!! எழுதியிருக்கும் ..அதுக்கு நம்ம ஆளுங்க ஓடிபோய் வரிக்கு வரிக்கு பாராட்டி கமெண்டு போடுவாங்க பாருங்க... சொன்னா நம்ப மாட்டீங்க.. 40 - 80 commenttu போடுவாங்க.

    எல்லாத்தையும் விட உங்க பதிவு பெண் பதிவர்களுக்கு ஒரு ப்ராஸதம். பார்ப்போம் எப்படி அவங்க சிறக்கறாங்கன்னு, best of luck ladies :)

    ReplyDelete
  3. நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    //ஒரு சிறுபத்திரிகை போல. அதுவும் சொந்தமான சிறு பத்திரிகை.//

    அப்படியேதான்:)! நன்றி தொடர்வோம்.

    ReplyDelete
  4. ப்ரஸாதம் = சுருங்க சொல்லுதல், சுவையாக சொல்லுதல், சொல்லித்தருதல் இப்படியாக பொருள் கொள்க (இதனால் சகலமானவர்களுக்கும்)

    ReplyDelete
  5. பதிவு என்பது ஒரு ரகசிய டைரியல்ல, ஒரு சிறுபத்திரிகை போல. அதுவும் சொந்தமான சிறு பத்திரிகை. எழுதுவது உரிமையுடன் மட்டுமல்ல உரிமைக்காகவும். கருத்துக்கள் கைதட்டல்களுக்காக மட்டுமல்ல சில பொய்யுறக்கங்களைப் போதும் என்று சொல்வதற்காக.
    பெண்ணியம் என்பது வீறாப்பல்ல, வீரம்....................
    Dr.Rudhran,

    It is a very good advice. I don't know where I stand, yet. But I will try my best. யாரோ செய்வார்கள் என்று நினைப்பதை விட, நாம் செய்தால் என்ன என்று நினைக்க தோன்றுகிறது.

    ReplyDelete
  6. எனக்கென்னவோ பெண்கள் சமூகத்தைப் பற்றியும் எழுதுகிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

    //ஆயிரம் மொக்கைகளுக்கு நடுவில் ஐந்து ஆண்களாவது சமுதாயம் குறித்த பதிவுகள் இடுவதில்லையா//

    என்ன சார்,திடீர்னு....

    //அது போலத்தான் பெண்களிலும் வரவேண்டும். அப்போதுதான் ஆதிக்கமனோபாவத்துடன் கேலிசெய்யும் மூடர்கள் அடங்குவார்கள்.//

    உண்மைதான்.

    ReplyDelete
  7. முதல் தலைமுறை பெண்பதிவர்கள் சமையலறை, குழந்தை வளர்ப்பு போன்ற வழமையான உலகிலிருந்து வெளியேறி பெண்ணை அழகுபார்க்கும் சமூகவெளிகளை உடைத்து வெளியேறி அந்த போராட்டத்தைப்பற்றி எழுதவேண்டும். எழுதினால் அடுத்து வரும் பெண்பதிவர்களுக்கு வலியுடன் கட்டச்சமைத்த பாதையை விட்டுவிட்டுச் செல்ல்லாம்.

    ReplyDelete
  8. A truly refreshing post, doctor. I do hope this generation of women bloggers understand the responsibility they have for the coming generations and learn to think beyond recipes and child care. It would be so much better even if they simply start talking about the usual difficulties they face because of being a woman, even if it is totally apolitical; we will at least make a start somewhere...

    ReplyDelete
  9. டாக்டர் சார். வரிக்கு வரி பெண்களுக்கான வழிகாட்டும் தெளிவான வார்த்தைப் பிரயோகம். சிந்திக்கத்தூண்டும் எழுத்துக்கள். நன்றி. சார்.

    ReplyDelete
  10. \\ஆயிரம் மொக்கைகளுக்கு நடுவில் ஐந்து ஆண்களாவது சமுதாயம் குறித்த பதிவுகள் இடுவதில்லையா, அது போலத்தான் பெண்களிலும் வரவேண்டும்\\

    நீங்கள் சொல்வது சரிதான் சகோதரரே..பார்ப்போம்!

    ReplyDelete
  11. ருத்ரன் , நம் தமிழ் பதிவுலகில் பல பெண் பதிவர்கள் சமூகம், இலக்கியம் குறித்து எழுதி கொண்டு இருக்கின்றனர்.

    எனக்கு தெரிந்த உதாரணமாக சில பெண் பதிவர்கள் பெயர் குறிப்பிடுகிறேன்: லேகா (யாழிசை ஒரு இலக்கிய பயணம்), பாலைத் திணை, கல்பனா சேக்கிழார், கீதா சாம்பசிவம்- ஆன்மீக பயணம், தமயந்தி, துளசி கோபால், மாமி, தமிழ்நதி, English bloggers NRI Maami, Blogeswari, Qatar Queen.

    என் பார்வையில் ஆண் Bloggers தான் அதிகம் சினிமா விமர்சனம் மட்டுமே எழுதி பதிவுகளின் எண்ணிக்கையை கூட்டுகின்றனர்.

    ReplyDelete
  12. நீங்கள் சொல்லும் மாதிரி எழுத முயற்சி செய்கிறேன் சார்.. பெண் பிரச்சனைகளை பெண்களால் தான் நன்கு உணர்ந்து சொல்ல முடியும்.

    ReplyDelete
  13. உங்க கருத்து சிந்தனையை தூண்டும் விதமாக உள்ளது... தொடரவும்.. :-)

    ReplyDelete
  14. மருத்துவர் ஐயா,

    உங்களிடம் மருத்துவத்திற்கு வருகிறவர்கள் சரியாகிச் செல்லும்போது ஏற்படும் நிறைவு - இங்குக் காணும் சில பின்னூட்டங்களைப் படிக்கும்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்!

    உங்கள் எழுத்துக்களின் வழி நாங்கள் அதையே எதிர்பார்க்கிறோம்.
    நன்றி.
    தொடருங்கள்.

    ReplyDelete
  15. //இன்று பேசிக்கொண்டிருந்தபோது என் நண்பர் கூறினார், ஒரு பெண் சற்றே வித்தியாசமாகவும் வெறுப்புடனும் சமூக அவலங்களை எழுதியபோது சில ஆண்கள் அவரை மிரட்டியதாக!//

    முதலில் அம்மாதிரி எழுத வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும்! சமூகத்தில் பெண்களும் ஒரு அங்கம் என நினைக்கும் மனிதர்களை தான் ஓரங்கட்ட வேண்டும்!

    ReplyDelete
  16. //ஆயிரம் மொக்கைகளுக்கு நடுவில் ஐந்து ஆண்களாவது சமுதாயம் குறித்த பதிவுகள் இடுவதில்லையா//
    சரியாக சொன்னீர்கள். இதற்காக தான் நொந்து போய் வலைத்தளமே துவங்கினேன்.

    பெண்களில் பெரும்பான்மையோர் சமையலறையில் சிக்கி கொண்டு இருக்கிறார்கள். பதிவுலகில் வந்த பிறகாவது சமூகம் பத்தி சிந்திக்க வேண்டும். எழுத வேண்டும்.

    ReplyDelete
  17. பதிவு என்பது ஒரு ரகசிய டைரியல்ல, ஒரு சிறுபத்திரிகை போல. அதுவும் சொந்தமான சிறு பத்திரிகை.//

    இது என் எண்ணமும் கூட.

    //ஆனா மொக்கையா சாரி படுமொக்கையா ஒரு பெண் கவிதை!!! எழுதியிருக்கும் //

    இங்கு என் எண்ணத்தை பதிய விரும்புகிறேன். எங்கும் ஆணிண் ஆதிக்கமே அதிகம். அதில் கவிதை/கதை உலகமும் சரி. தன்னை வெளிப்படுத்திக்கொண்டு எழுத முனையும் பெண்ணை பாராட்டாமல் மொக்கை கவிதை என அலட்சியப்படுத்த வேண்டாமே.

    சுடர் விளக்காயினுமே தூண்டுகோள் வேண்டும்.
    சுடர நினைப்பவுளுக்கு!!!!

    நன்றி
    அன்புடன்
    புதுகைத் தென்றல்

    ReplyDelete
  18. //சமூகத்தில் பெண்களும் ஒரு அங்கம் என நினைக்கும் மனிதர்களை தான் ஓரங்கட்ட வேண்டும்!//

    இதில் நினைக்காத மனிதர்களை என வர வேண்டும்!
    சுட்டிகாட்டிய நண்பருக்கு நன்றி!

    ReplyDelete
  19. //இன்று பேசிக்கொண்டிருந்தபோது என் நண்பர் கூறினார், ஒரு பெண் சற்றே வித்தியாசமாகவும் வெறுப்புடனும் சமூக அவலங்களை எழுதியபோது சில ஆண்கள் அவரை மிரட்டியதாக!//

    உங்கள் நண்பர் ரிப்வான் விங்கிள் ஜாதி. அவரை சீக்கிரம் விழித்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  20. It really encourage us to write more better!
    Thank you !!!

    ReplyDelete
  21. http://nadhiyinosai.blogspot.com/

    ருத்ரன் ஐயா , இந்தப் பதிவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ReplyDelete
  22. thanks a lot doctor...withstanding social stigmas has always been women's problem. appreciating a woman's talent and acknowledging it has always been little too difficult for men at all levels and at all times. there may be exceptions. and true to my heart ,itz these exceptions that add colour to HER endeavours.THANK UUUUU

    ReplyDelete
  23. //தன்னை வெளிப்படுத்திக்கொண்டு எழுத முனையும் பெண்ணை பாராட்டாமல் மொக்கை கவிதை என அலட்சியப்படுத்த வேண்டாமே//
    பெண் பெயரில் என்ன வேணும்னாலும் எழுதினாலும் இங்க சூப்பர் டுப்பர்ன்னு சொல்றவன் 100 பேரு இருக்கான். அப்ப அந்த பெண் மொக்கையாவே இருந்திடனமோ? அப்படி பாராட்றத நம்பி அந்த பெண் அப்படியே மொக்கயாகிவிடக்கூடாது என்பதற்குதான் என் பின்னூட்டம். nice example: Last saturday.

    ReplyDelete
  24. Hats off!
    உங்களுக்கு!

    அலுவல் நெருக்கடியில் இந்தப் பதிவை மிஸ் பண்ணி இருக்கிற எனக்கு ஒரு குட்டு!

    ReplyDelete
  25. இங்கே பல ஆண் பதிவர்கள் அவர்கள் பதிவையே இந்த மொக்க போதும் , மொக்கை பதிவுன்னு அவங்க பதிவுல பாதி மொக்கை வார்த்தைதான் இருக்கும் . அந்த பதிவுக்கு அவ்ளோ hits, votes,popular list .

    ////ஆனா மொக்கையா சாரி படுமொக்கையா ஒரு பெண் கவிதை!!! எழுதியிருக்கும் //

    என்ன சொல்ல வரீங்க ? ஒரு பெண் கவிதை எழுதினா மொக்கை கவிதையா? சும்மா வரிக்கு 2 வார்த்தை போட்டு நானும் கவிதை எழுதுறேன்னு இங்க பல ஆண் கவிகள் இருக்காங்க . அந்த கவிதைகளுக்கு நடுவுல நாங்க எழுதுற கவிதைகள் படு மொக்கைதான் .

    என்னோட மீன்குழம்பு பதிவு வோட்ஸ் வாங்கி பாபுலர் லிஸ்ட்க்கு போச்சு . என் துறை சார்ந்த பலருக்கும் பயன்படக்கூடிய சொந்த வீடு வாங்கும் முன் / கட்ட முன் கவனிக்க வேண்டிய பதிவுகள் வோட் வாங்கல. அதுக்காக நான் சோர்ந்து போக போவதுமில்ல . 4 பேருக்கு தெரிஞ்ச விஷயம் பல பேருக்கு போய் சேர்ந்திருக்குமே என்ற ஆதங்கம்தான் .



    பெண் தன் வலிகளை பற்றி எழுதும்பொழுது அதை ஆத்மார்த்தமாய் உணராமல் பெண்ணியம் என்ற பெயரில் அவளை மேற்கொண்டு பயணிக்க விடாமல் தடுக்கும் கூட்டமே இங்கு நிறைய உண்டு .



    மற்றவர்களைப் பற்றி குறை கூறும்முன் இங்கு பல பேர் தங்களைத் தாங்களே கேட்டு பார்க்க வேண்டும் .(நான் நல்லவனா ? உன்னை குறை கூற )

    டாக்டர் நான் பதிவுலகத்திற்கு புதியவளே , இதில் ஏதும் குறையிருந்தால் சுட்டிகாட்டுங்கள் , உங்கள் மகள் போல் ஏற்றுக் கொள்வேன் .


    நன்றி .

    ReplyDelete
  26. சிந்திக்க வைக்கும் நல்ல பதிவுங்க.... மிளிரும் பெண்மை... இனி மேன்மையடையும்.

    ReplyDelete
  27. தெளிவான, அழகான பார்வை. நன்றி.
    உங்களது புத்தகங்கள் வாங்கி வாசிக்க நேரமில்லாமல் அலமாரியிலேயே வைத்திருக்கிறேன். இன்று முதல் வேலையாய் எடுத்து வாசிக்கிறேன் சார்.

    ReplyDelete
  28. அருமையான் கட்டுரைகள் அய்யா

    .பதிவுலகத்திலும் பெண்களுக்கான கொடுமைகள் நடக்கப்படுகிறது..விமர்சனம் செய்வது நக்கலாய் பேசுவது என்பது இயல்பான ஒன்றுதான் .ஆனால் அதையும் மீறி சில ஆண்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் பழகாத பெண்களை மட்டம் தட்டி பேசியும் அசிங்கபடுத்தி பேசியும்ஆத்ம திருப்தி அடைபவர்கள் ..ஆனாலும் வழக்கம் போலே பெண் இனம் கண்ணீரை துடைத்தெறிந்துவிட்டு முன்னோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.
    ஒரு ஆணை தாழ்வாக விமர்சனம் செய்யும் பொழுதும் ஒரு பெண்ணை விமர்சனம் செய்யும் பொழுதும் ஒருசில ஆண்கள் உபயோகபடுத்தும் வார்த்தைகளை கவனித்தால் உண்மை புரியும்

    ReplyDelete
  29. பயனுள்ள புத்திமதிகள். நாங்கள் எல்லாவறறையும் எழுத உங்கள் போன்றோரின் இது போன்ற ஊக்க மொழிகள் கண்டிப்பாகப் பயன் தரும். பயனுள்ள பதிவுக்கு நன்றி டாக்டர்.

    ReplyDelete