Thursday, September 16, 2010

ஏசுவும் கிறிஸ்துவும்...

நான் சின்ன வயதிலிருந்து, அதாவது அரை நூற்றாண்டுக்கு மேலாய் நம்பிய கதை!

இதுவும் புனைவு தான், ஆனாலும் எதற்காக, எப்படி, என்பதில் தான் நயம், நாகரிகம். தமிழ்ப் பதிவுலகில் புனைவுகள் எல்லாமே வன்மம், வக்கிரம் என்றான பின்... இன்னும் புனைவு என்பதன் அற்புதத்தின்மீது நம்பிக்கையோடு இந்தப் பதிவு.

இது புதிய கதை அல்ல, பழைய கதையின் புதிய கோணம். என்னைப் பொறுத்தவரை இதில் அனர்த்தம்-ஆபாசம் இல்லை, ஆனாலும் சிலருக்கு அப்படித் தோன்றலாம்.

புராணங்கள் எல்லாமே புனைவுதான், ஓர் அரசியல் ஆதாயத்திற்காக அவற்றை சரித்திரப் பதிவுகளாகச் சிலர் சொன்னாலும். ராமன் பாலம் கட்டியதும், யேசு உயிர்த்தெழுந்ததும், திரும்பத்திரும்பச் சொல்லி நம்பவைக்கப்பட்ட கதைகள் என்றாலும் அவை அந்தந்த காலத்தின் பதிவுகளல்ல, பின்னாளில் கொஞ்சம் கற்பனையும் இன்னும் கொஞ்சம் பக்தியும் மிகுந்த மனங்களின் வியப்பின், மரியாதையின் வெளிப்பாடுகள்தான். மரியாதையுடனும் மரியாதை வரவழைக்கவும் சொல்லப்பட்டவையே புராணப் புனைவுகள். ஒரு காலத்தில் கிரேக்க கடவுள்களின் கதைகள் கூடத்தான் நம்பப்பட்டன, நம்புவதற்காகச் சொல்லப்பட்டன.

இப்பதிவு கடவுள் நம்பிக்கை குறித்து அல்ல, ஒரு புனைவின் வீச்சு குறித்து.

இடையில் பல மாதங்கள் விட்டுப் போயிருந்த வாசிப்பு, மீண்டும் ஆரம்பித்தது இந்த புத்தகத்துடன்தான். வெகுநாள் கழித்து நண்பருடன் நேரம் செலவிடும்போது வரும் கூடுதல் மகிழ்ச்சியில் தான் இந்த நூலை ரசித்தேனா என்று பரிசீலிக்க ஒரு மாதம் இடைவெளி கொடுத்து மீண்டும் பக்கங்களைப் புரட்டினால் இன்னும் அதே நல்ல நூல் படித்தவுடன் வரும் இதமான மனநிலை வந்ததால் இங்கே இந்தப் பகிர்வு.


Phillip Pullman எழுதிய The good man Jesus and the scoundrel Christ என்பதே நான் ரசித்த புனைவு. பாவம் Pullman, புத்தகத்தின் பின்னட்டை முழுக்க இது ஒரு கதை என்று பெரிய எழுத்துக்களில் போட வேண்டியிருக்கிறது. ஏசுவின் கதை தான், ஆனால் கிருத்துவம் கூறும் கதையல்ல.
இந்த நூலில், மேரிக்குப் பிறப்பது இரட்டைக் குழந்தைகள்- ஒன்று ஏசு இன்னொன்று கிறிஸ்து. ஏசு அறிவாளி, மக்கள் மத்தியில் பிரபலம், கிறிஸ்து ஏசுவை எட்ட நின்று அன்பும் வியப்புமாய் பார்க்கின்ற சகோதரன்.
இன்னும் வளர்ந்து ஏசு மக்கள் மத்தியில் பேசி இன்னும் பிரபலமாகும் போது, ஒருவன் கிறிஸ்துவிடம் வந்து ஏசுவின் கதையை எழுதச் சொல்கிறான். ஆரம்பத்தில் ஏசு செய்வதையும் பேசுவதையும் அப்படியே எழுதி வரும் கிறிஸ்து நாட்பட நாட்பட தன் கற்பனையும் சேர்த்துக் கொள்கிறான். எங்கேயும் ஏசுவை அவன் விட்டுக்கொடுக்கவும் இல்லை.

பசியோடிருக்கும் ஒருவனுக்கு ஏசு தன்னிடம் இருந்த ரொட்டியைப் பிய்த்துக் கொடுத்ததும் கூடியிருந்தவர்கள் எல்லாரும் தங்களிடம் இருந்த ரொட்டியை அடுத்தவருக்குப் பிய்த்துக் கொடுக்க, ஒரு பெருங்கூட்டமே பசியாறுகிறது. இதை கிறிஸ்து எழுதும் போது, ஒரு ரொட்டித் துண்டைப் பிய்த்துக் கொடுத்து எல்லார் பசியையும் ஏசு போக்கியதாக எழுதுவான். உண்மை இல்லை பொய் உரையிலாமையால்!

இறுதியில் ஏசுவின் சடலம் இருக்கும் குகையிலிருந்து வெளிவந்து ஏசு உயிர்த்தெழுந்ததாக ஒரு சிறிய நாடகம் ஆடுவான். செய்தி கதையாகி, கதை புராணமாகிறது. ஏசு கிறிஸ்துவாக ஒரு மதம் தோன்றி அது நிறுவனம் ஆகிறது.

இவ்வளவுதான் கதை.

இதற்கு உண்மையாகவோ காசுக்காகவோ அரசியல் ஆதாயத்திற்காகவோ உலகில் எந்தக் கிளர்ச்சியும் நடந்து விடவில்லை. ஓவியம் கேலிச்சித்திரம் ஆகியற்றிற்கெல்லாம் துள்ளியெழுந்து போர்க்குரல் எழுப்பும் கூட்டம் போல எதுவும் திரண்டுவிடவில்லை. Pullman உயிருக்கு மிரட்டல் இல்லை. கிருத்துவர்கள் நல்லவர்கள், யாரையும் சகித்துக் கொள்வார்கள், ஒரு கன்னத்து அடிக்கு அடுத்த கன்னத்தைக் காட்டுவார்கள் என்று இல்லை. சமீபத்தில் ஜோன்ஸ் எனும் மூர்க்க மூட விளம்பர மோகி இதைக் காட்டி விட்டான்.

இங்கே எதிர்ப்பு வருமாறு அவதூறு மிகுந்து எழுதப்படவில்லை. வெறுப்புக்குப் பதில் ரசிப்பும், சிந்திக்க மிதமான ஒரு தூண்டுதலுமே இந்நூல் ஏற்படுத்துகிறது. நாகரிகம், நயம், நேர்மையான சிந்தனை கற்பனையோடு கலந்தால் வரக்கூடிய ஓர் அற்புதமான புனைவு இது.

ஆரம்பத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்நூலின் கடைசி நாற்பது பக்கங்கள் அற்புதம். ஆன்ம விசாரணை, ஆத்திக நிறுவனமாதல் குறித்த கேள்விகளோடு புத்தகம் மூடிய பின்னும் மனம் யோசிப்பதே இந்நூலின் வெற்றி.


ஏசு செய்யும் சுய பரிசீலனையும், கடவுளிடம் கேட்கும் கேள்விகளும் வியக்குமளவு நயமாகவும் செறிவாகவும் எழுதப்பட்டுள்ளன. இதில் உள்ளவை குறித்து விரிவாகப் பின்னொருநாள் பார்க்கலாம். இப்போதைக்கு இது ஒரு நூல் அறிமுகம் மட்டுமே. அத்துடன் புனைவின் மேன்மை குறித்த ஒரு பெருமூச்சு மட்டுமே.

சில விமர்சனங்கள்-

Pro Jesus
http://www.gospeloutreach.net/jesus.html

Pro Book
http://bit.ly/cteiSh

Good Reviews
http://bit.ly/9w9THO
http://bit.ly/9b4xCE

பிலிப் புல்மன்

Tuesday, September 7, 2010

எங்கிருந்து வருகிறது இந்த ஆணவம்?


அடகு வைக்கப்பட்டு விட்டதா என் நாடு- என் அனுமதியில்லாமல்? என் சக மனிதனுக்கு உணவு தர முடியாது என்று எவன் சொல்வான், அதை எவன் விடுவான்? இதோ இங்கே என் தாய்த்திருநாட்டின் மூத்த குடிமகன், முதன்மை அரசியல் தலைவன் சொல்கிறான்- வீணாகட்டும் உணவு அதை ஏழைகளுக்குத் தர முடியாது என்று. பசிக்கு உணவில்லை என்றால் அதை வைத்துக் கொண்டு என்ன புடுங்கப்போகிறார்கள்? எப்படி வீணாக்காது அழிப்பது என்று யோசிப்பார்களாம்! தூ.
இன்று நேற்றல்ல இந்தத்திமிர். இதே பிரதமர் நிதியமைச்சராக இருக்கும் போதே ஆரம்பமாகியது இது. அப்போது குரல்கள் ஒலிக்காமல் இல்லை, ஆனால் செவிகள் தான் தயாராகவில்லை. முடிந்தால் இந்தப் பாடலையும் கேட்டுப்பாருங்கள்.
நேரமில்லாமல் பட்டினி இருப்பவர்கள் இன்று உண்டு, இணைய வாசகர்களும் அதில் உண்டு, ஆனால் நான் பணமில்லாததால் பட்டினி என்னவென்று பார்த்தவன்; போராடி   அந்த நிலையை வென்று விட்டதால் வலியை மறந்து விடவில்லை. உணவு இருக்கிறது கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறான், நாம் சும்மா இருக்கிறோம்.
யாருக்காக இந்தச் சவடால்? எதற்காக இந்த நாடகம்? யார் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இந்த வசனம்?
காலையில் பத்திரிக்கை படித்த உடனே என் காஃபி கசந்தது. ஆனால் நான் என் வேலை பார்க்கப் போய் விட்டேன். வேலை முடித்து வந்தவுடன் மாதவராஜ் எழுதியதைப் படித்தேன். வயிறு மீண்டும் எரிந்தது, எழுத ஆரம்பித்தேன். வசதியாக சௌகரியமாகச் சத்தமிடுவது அல்ல புரட்சி; அப்படி மெத்தனத்தோடு வருவதல்ல கோபம். 
என்ன செய்வது நான் ஒரு நடுத்தரம் என் நாளைக்காக என் இன்றைச் செலவிடும் சாதாரணம். நம் நாளைக்காக இன்று வெகுண்டெழுவோருடன் சேர்ந்து விட்டால் இன்றைய என் அற்ப சந்தோஷங்கள் என்னாவது? அதனால் இணையவெளியில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, தாமிரபரணியை மறந்து விட்டு, கோக் குடிக்கலாமா என்று யோசிக்கிறேன், வெட்கமில்லாமல்.

கேட்க இதுவும்

படிக்க இதுவும்

Friday, September 3, 2010

திருப்பதி சென்று திரும்பி வந்தேன்!

சில நேரங்களில் சில விதங்களில் நாம் மாட்டிக்கொள்வதுண்டு. அப்புறம் நினைத்துப் பார்த்தால் ஒரு வறண்ட நகைச்சுவை உணர்வோடு நாமே அதை நம்முள் பகிர்ந்து கொள்வோம், ஆனால் அந்தந்த நேரம் என்னென்ன உணர்வுகள்!

எனக்கு உண்மையில் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனாலும் நான் நாத்திகனாக நினைக்கப்படலாம். சமீபத்தில் ஒரு நண்பர் என்னிடம் சொன்னது - பண்டைய இந்து/சனாதன தர்மத்தில் கடவுள் குறித்து கேள்வி எழுப்புபவன் நாத்திகன் அல்ல, ஆனால் வேதங்களை விமர்சிப்பவனும் எள்ளி ஒதுக்குபவனும் தான் நாத்திகனாம். நான் நாத்திகனாகவே இருக்கட்டுமே, நான் கோவிலுக்குப் போகக்கூடாதா? இது தத்துவ விசாரணை குறித்த பதிவு அல்ல, ஓர் அனுபவத்தின் பகிர்வு.

நான் சும்மா இருக்கும்போது என்னிடம் வந்து “ சார் திருப்பதி வாங்க, எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்” என்று சொல்பவர்கள் நிறைய பேர். நிஜமாகவே நான் நேற்று போன போது சொன்னவன்/ள் யாரையும் காணோம். கடவுள் வீட்டுக்கு (கோயில்) போக என்ன சிபாரிசு கடிதம் என்று இறுமாப்புடன் நான் கிளம்பி விட்டேன், அம்மாவுடன்! அம்மாவுக்கு 83 வயது!

என் வீட்டில் என் அம்மா மாடிக்கும் கீழுக்கும் நடந்து செல்வதைப் பார்த்து அவர்களால் நடக்க முடியும் என்று நினைத்து விட்டேன். வீட்டை விட்டு வெளியே போய் பல மாதங்களான என் அம்மாவிற்கும் நடப்பது சிரமம் என்று தெரியாது! திருப்பதி சென்றால் மொட்டை போடாவிட்டாலும் நிறைய நடக்க வேண்டும்! தத்தித்தத்தி அம்மா நடக்க, ஆறுதலாய் என் மனைவி அவரது கைப்பிடித்துக்கொள்ள மூவரும் பயணமானோம்.

பேருந்து காலைச் சிற்றுண்டிக்காக நிறுத்தப்பட நாங்கள் உள்ளே நுழையும்போது சக பயணிகள் பொங்கலும் பாதி வடையும் முடித்திருந்தார்கள். எல்லாரும் எங்களைப் பாவம் என்று பார்த்தார்கள். இதே கதை தொடர்ந்தபோது எங்களை இம்சை என்று பார்க்க ஆரம்பித்தார்கள்.

திருப்பதியில் பேருந்து மாறி திருமலை ஏறும்போதுதான் இது ஒத்துவருமா என்று எனக்குள் சந்தேகம் வந்தது. பக்கத்தில் என் மனைவி முகத்தில் எந்த பாவமும் இல்லை. என் அம்மா தூங்குவதாக நான் நினைத்துக் கொண்டேன்.
திருமலையில் தான் சக பயணிகள் “ப்ச்” என்று சொல்ல ஆரம்பித்தார்கள், எங்களுடன் பயணித்தவர்கள் பலர் மலையாளிகள். அவர்கள் சம்ஸாரிக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு சந்தேகத் தாழ்வு மனப்பான்மை. எல்லாம் தாண்டி, ஒரு வழியாய் ஒரு கூண்டில் காத்திருக்கும் போது என் மனைவி முகத்தில் குழப்பம், அம்மா முகத்தில் வெறுப்பு. சுற்றி கூட்டம் கோவிந்தா என்று கத்திக்கொண்டிருந்தது, அவர்கள் பக்தி என்னை வெட்கப்பட வைப்பதற்குப் பதிலாக வெறுப்படையவே வைத்தது.

ஒவ்வொரு கூண்டாக முன்னேறி ( ஒவ்வொரு கூண்டிலும் பின்தங்கி ) ஒரு நெரிசலான காற்றில்லாத பகுதியில் நாங்கள் சேர்ந்தபோது, முன்னே யாரும் நகரவில்லை. பின்னால் எல்லாரும் முந்தியடிக்க முற்பட்டார்கள். வெளியேறவும் வழியின்றி தொடரவும் விருப்பின்றி அங்கே சிறையானோம்- இரண்டு மணி நேரங்கள் வியர்வை, வெறுப்பு, சுற்றிலும் பக்திகோஷம்! எவனோ எவளோ வந்து விட்டார்கள் போலிருக்கிறது நாங்கள் இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டோம்.

பிறகு அதேபோல் தத்தித் தடுமாறி ஒருவழியாய் கடவுளின் வாசலை அடைந்தால்.. சுஜாதா டிமலாவில் எழுதியது போல திகைக்கும் சிலிர்ப்பு வரவில்லை ஆனாலும் மனதுக்குள் காட்சி இதமாகவே இருந்தது. வழக்கமான படங்களின் ஜொலிப்பு இல்லாமல் எந்த நகையும் பூவும் இல்லாமல் ஒரு பழுப்புத்தனத்தோடு மூலவர் தெரிய, அதை மனம் உள்வாங்கிக்கொள்ளக்கூட அவகாசம் இல்லாமல் நாங்கள் இழுத்து அப்பால் தள்ளப்பட, திடீரென்று யாருக்கோ கருணை! பாவம் இந் தம்மாவைப் பார்க்க விடுங்கள் என்று என் அம்மாவை மீண்டும் கூட்டிப்போய் சாமி வாசலில் இரண்டு நிமிடங்கள் நிற்க வைத்தார்கள். அனுமதியில்லாமல் நானும் என் மனைவியும் அம்மாவுக்கு என்ன ஆயிற்றோ என்று திகைத்து நிற்க, அம்மா வந்தார்கள். “நீங்க ரெண்டுபேரும்?” என்ற கேள்வியோடு.

அம்மாவுக்காக நாங்களும் எங்களுக்காக அம்மாவுமாய் செய்த இந்த தீர்த்த யாத்திரையின் விளைவு உடல் முழுக்க வலி.

பக்திக்காகவும் அல்லாமல், fashionக்காகவும் அல்லாமல், கலைத்தேடலும் இல்லாமல் கடமைக்காக நான் கோவிலுக்குச் சென்றது இதுதான் முதல் முறை.

திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேருமாம், காத்திருக்கிறேன். முன்பொருமுறை பல ஆண்டுகளுக்கு முன் அங்கே சென்று திரும்பி வந்தவுடன் எனக்கு வேலை கிடைத்தது. அங்கே போகாமலேயே எனக்கு சொந்தமாய் ஒரு மருத்துவமனையும் கிடைத்தது. சலிப்பும் வெறுப்புமாய் போனாலும் பலன் கிடைக்குமா? தெளிவு கிடைக்குமா?

திரும்பி வந்தவுடன் எழுதத்தோன்றியதே திருப்பம்தான் என்றால் பட்ட கஷ்டத்திற்கு அது போதாது.