இரண்டுமே நல்ல வார்த்தைகள். இரண்டுமே நல்லன. ஆனால் இவ்விரண்டுமே ஏமாற்றக்கூடியவையும் ஆகும்.
அன்பு ஏமாற்றுமா? ஏற்பவர் முட்டாளாக இருந்தால்.
அன்பையும் நம்பிக்கையையும் ஏற்பவர் முட்டாளாக இருந்தால் இரண்டுமே ஏமாற்றும். இதில் தருபவர் ஒரு பொருட்டே அல்ல, பெறுபவர் குறித்தே இப்பதிவு.
இதோ, கீழே ஒரு படம். நான் வரைந்தது. இதை வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு நல்லது நடக்கிறது. இப்படி நான் சொல்லவில்லை, வைத்திருப்பவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இதை நான் இலவசமாகத்தான் தருகிறேன். பிரதியை திரையிலோ காகிதத்திலோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், நல்லது நடக்கும் என்கிறார்களே, நடக்கட்டுமே!
தரவிறக்கம் செய்துவிட்டீர்களா? இனி சில கேள்விகள்!
முதலில் நான் சொன்னதை நம்புகிறீர்களா? அடுத்து நான் சொன்னது போல நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இல்லை இது பொய் என்று நிரூபிக்க நாசம் தேடுவீர்களா?
எல்லாருக்குமே ஆசை உண்டு, தேவை உண்டு, இவற்றால் எதிர்பார்ப்பும் உண்டு. தன்னம்பிக்கை உள்ளவனுக்கு நப்பாசை குறைவு அவ்வளவுதான், இல்லை என்று ஆகி விடுவதில்லை. இலவச இணைப்பாக ஒரு விஷயம் கிடைத்தால் அதை ஏற்பதே பொதுபுத்தி.
இப்போது இந்தப் படம் நீங்கள் வைத்துக்கொள்ளும்போது உங்களுக்கு நல்லது என்று ஏதாவது நடந்தால் அதற்கு காரணம் இந்தப் படம்தான் என்று சொல்வீர்களா? இதை உங்களுக்குத் தெரிந்த எல்லாருக்கும் கொடுப்பீர்களா? பகிர்வதே உயர்நிலை என்று வாய் ஓதினாலும் மனம் அதனைச் செயல்படுத்த முயலுமா?
உங்களிடமே இதே கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள், நிறைய விடைகள் கிடைக்கும்.
இப்போது இன்னொரு படம்.
இது ஒரு நூலுக்கு முகப்பு வரைந்து தருமாறு கேட்டதற்காக வரைந்தது. இன்னும் எனக்கு என் படம் அச்சிட்ட பிரதி கிடைக்கவில்லை. இதை ஏன் இங்கே எழுதுகிறேன்? இப்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் தானே எல்லாம் நடக்கின்றன, தமிழ் வளர்க்க நடந்த செம்மொழி மாநாடு போல!
இது ஒரு மயில் என்று நான் நினைத்து வரைந்தேன்,
பார்ப்பவருக்கேற்ப என்னவாக வேண்டுமானாலும் தெரியலாம்.