Thursday, May 27, 2010

முகம் மூடி..




சின்ன வயதில் முகமூடி அணிந்த நாயகனாய் ஆங்கிலத்தில் அறிமுகமாகி பின்னர் குமுதத்தில் வேதாளமாக(?)’ என்னைக் கவர்ந்த ஒரு சித்திரக்கதையின் பாத்திரம் பற்றியல்ல இது.
யதார்த்த வாழ்வில் எல்லாருமே அவ்வப்போது முகத்தைக் காட்டாமல் பற்பல ஒப்பனைகளோடு வாழ்ந்து வருகிறோம். அப்படி அவ்வப்போது முகம் மூடி, உணர்வுகளை ஒப்பனையில் மறைக்கும் பலர் பற்றியும் அல்ல இது.
மெய்நிகர் உலகில் முகத்தை மூடிக்கொண்டு வருவோர் பற்றியே இப்போது இந்த எண்ண ஓட்டம்.. 
இங்கே நேருக்கு நேர் நின்று யாரும் சிரித்துக் கொள்வதுமில்லை, அடித்துக் கொள்வதுமில்லை. இரண்டையும் செய்யும் துணிவுள்ளவர்கள்கூட இங்கே முகம் காட்ட விரும்புவதில்லை.
மெய்நிகர் உலகில் நட்பும் அன்பும், எதிர்ப்பும் வெறுப்பும் கூட மெய்நிகர்தான். என்னை வேண்டுமென்றே சீண்டியும் அவமதித்தும் எழுதுபவர்களில் சிலரைத்தெரியும் என்பதால் சொல்கிறேன். இங்கேயும் வெளியே மெய்யான உலகிலும் பலர் ஒன்றாக இருப்பதில்லை. இங்கே வீரம் போல முழங்குவோரின் முகம் என்னை நேரில் பார்க்கும்போது எவ்வளவு மாறுகிறது, (பம்முகிறது!) என்பதை அனுபவத்தில் பார்ப்பவன் நான். அப்படி அவர்களைச் சந்திக்கும்போது, இவர்களின் மெய்நிகர் அவதாரத்தைப் பற்றி எதுவும் பேசாமலேயே வேடிக்கை பார்ப்பது எனக்கு சுவையான பொழுதுபோக்காகவும் ஆகிவிட்டது! அவதாரங்களில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. எந்தெந்த நேரத்தில் என்னென்ன பொய்களும் நிஜங்களும் விலை போகின்றனவோ அவற்றையே ஒரு பண்டமாற்றாக விளையாடுபவர்களைப் பற்றியல்ல இது. இது முகங்களுக்கு மூடி தேவைப்படுவது பற்றிய ஒரு சிந்தனை.
பொய்க்காக அல்ல ஒரு புனைபெயர் என்பது எனக்குப் புரிகிறது. கல்கி, சாண்டில்யன், சுஜாதா போல புனைப்பெயரால் நிஜப்பெயரை மக்கள் மறக்கும் அளவு சாதித்தவர்களும் உண்டுதான். ஆனால் பொய் கூறவும், புறம்பேசவும் மட்டுமே புனைப்பெயர்களைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் இங்கே நம் பதிவுலகில்தான் அதிகம் பார்க்கிறேன். முதலில் தன் பெயர் எனும் தன் அடையாளத்தை மறுக்கவும் மறைக்கவும் அவசியம் என்ன? சில இயக்கங்களைச் சார்ந்து செயல்படுவோருக்கு இத்தகைய தற்காலிக முகம்-காட்டாதிருத்தல் அவர்களின் கொள்கைகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் அவசியம் தான் என்று உணர்ந்தே இதை எழுதுகிறேன்.
வீரத்தின் விளைவுக்காகவோ, விளையாடிப் பார்க்கவோ இங்கே சிலர் முகம் எனும் பெயர் காட்டாது எழுதுகிறார்கள்.அதே நேரம் வக்கிரத்துடன் பிதற்றவும், வெறியைத் தணித்துக்கொள்ளவும் சிலர் பெயரிலாதும், பொய்ப்பெயருடனும் திரிவது நாம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.  இவ்விரண்டு வகையும் அவரவரது தனிப்பட்ட அவசியத்தின் அடிப்படையிலான செயல்பாடு என்று ஒப்புக்கொண்டாலும், நான் இது தான், என் நிலைப்பாடு இதுதான் என்று சொல்லாமல் கொள்கை போல ஒன்றிற்காக வெட்டியாய் ஊளையிடும் சிலரை நாம் கவனிப்போம்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு வாக்கியத்தைக் கூட ஒழுங்காய் எழுத முடியாதவர்களை எனக்குத் தெரியும், ஆனால் அவர்கள் பதிவு எழுதுவதில்லை. இங்கே எல்லாருக்கும் மொழி லகுவாக அமைந்துள்ளது. மொழி நாம் நம்மைக் காட்டிக்கொள்ளும் ஒரு கருவி. அது ஒரு கண்ணாடி, அதில் நாம் நம் பிம்பத்தையும் பார்க்கலாம் எனும்போதே பிறரும் நம்முள் பார்க்கலாம் என்பதும் நிஜம். மொழி காற்றில் மிதக்கும் ஓர் அடையாள அட்டை.
நாட்டிய சாஸ்திரத்தில் மௌனம் கூட பேசும் என்பதை பல்விதங்களில் பரதமுனி விளக்கியிருப்பார். மௌனம் ஒரு மொழிச் சுரபி. அது பேசும். அது புரிந்துகொள்ளப்படும். மௌனம் சம்மதம் மட்டுமல்ல எதிர்ப்பும் ஆகும். மௌனத்தில் முகம் மூடுவது அச்சத்தினால், ஆசையைக் காட்டத் தயங்கும் நாணத்தினால், அருவெறுப்பினால், பிறகு விளையாட்டினால் என்று எளிதாய் மேலோட்டமாய்க் கணிக்கலாம். மௌனம் தாக்குதலிலிருந்து ஒரு தற்காப்பு. தாக்குவது உயிரக் குறி வைத்தாலும் உணர்ச்சியைக் குறி வைத்தாலும். பதிவுலகில் மௌனம் ஒரு தற்காப்பாக இருந்தாலும், முகம் மூடி வருவது இல்லாத வீரத்தை இருப்பதாய்க் காட்டிக்கொள்வதாகவே அமைகிறது.
முகம் எப்போதெல்லாம் மூடப்படும்? உயிர்போனால் பிணத்தின் முகம் மூடப்படும். மானம் போகும்போது உயிருள்ளவரின் முகம் மூடப்படும். ஒரு நாடகத்துக்கு அவசியமாகும்போது மூடப்படும். சில சம்பிரதாயங்களுக்காகவும் சில விதிகளுக்காகவும் மூடப்படும். இப்படியெல்லாம் மூடப்படுவோரின் முகத்தின் மூடியை மீறி அவர்களின் நிஜ முகமும் நமக்குத்தெரியும். இங்கே இப்படி எதுவுமே இல்லாமல் முகத்தை மூடிக் கொண்டு வருவதாய் நினைத்து எழுதுபவர்கள் முகம் தெரிகிறது என்பதை உணராதவர்கள். இவர்களை விட்டு விடலாமா? கோழைகள் என்று ஒதுக்கி விடலாமா? முடியாது, கூடாது.
அவரவர் தம் முகத்தைக் காட்டுவதும் மூடிக்கொள்வதும் அவர்களது விருப்பம்தான்; முகத்தை மட்டுமே மறைத்து வாய் ஓயாமல் பிதற்றுவோரைத்தான் நாம் கவனிக்க வேண்டும். முகமல்ல இங்கே முக்கியம். மொழியும் அதன் உள்ளர்த்தமும், தொனியும் அதன் பின்புலமும் அவர்களது மாயையான இல்லாத தைரியத்தையும், உருப்படாத வீர்யத்தையும் காட்டிவிடும்.
கவனியுங்கள். யார் தமக்கு வந்த அரிப்பைச் சொறிந்து கொள்ள எழுதுகிறார்கள், யார் சமூகத்தின் சிரங்குக்கு மருந்து தரப் பார்க்கிறார்கள் என்பது எளிதாய் சுலபமாய் புலப்படும். புதர்களை அப்புறப்படுத்தினால்தான் புதைந்துள்ள பொக்கிஷம் கிடைக்கும், இல்லையென்றால் நம் அலட்சியம் சில லட்சியங்களை அடையாளம் காண விடாமல் இருட்டடிக்கும்.



எங்கிருந்தோ எங்கள் வீட்டுக்கு வந்தஆந்தை!
இதன் பெயர் masked owl!   jan.2009.

19 comments:

  1. இந்த இடுகை மிகவும் பிடித்திருக்கிறது!

    அதற்குள் ஒரு மைன்ஸ் ஓட்டா?!

    ReplyDelete
  2. முக மூடி, சில சமயங்களில் தேவை, சில சமயங்களில் சௌகர்யம். போர் களத்தில் அணியும் முக மூடி மட்டுமே வீரத்தின் வெளிப்பாடு. தன் கருத்து தனக்கே ஒப்பில்லாத போது, தன்னை தன்னிடமிருந்தே மறைக்க அணியும் முக மூடி கோழைத்தனம். பொதுவில் முக மூடி என்பது பல சமயங்களில் பண்பாடு மற்றும் நாகரிகமாகவும் உள்ளது. இது சரியா, தவறா? ஊருடன் ஒத்து வாழ் என்பது முக மூடி தானே!

    ReplyDelete
  3. நான் நியோ ...
    முக மூடிப் பெயர் தாம் ...
    உங்கள் வார்த்தைகள் என்னுள் சில பதிலை கோருகின்றன ...
    நன்றி தோழர் !

    ReplyDelete
  4. சொல்லுகிற கருத்து-எளிமையாக -புது கவிதை மாதிரி இருந்தால்-எல்லா தரப்பு மக்களுக்கும் புரியும்.
    கருத்தை எளிய -மொழியில் சொல்லவும்

    த சேகர்

    ReplyDelete
  5. //முதலில் தன் பெயர் எனும் தன் அடையாளத்தை மறுக்கவும் மறைக்கவும் அவசியம் என்ன? சில இயக்கங்களைச் சார்ந்து செயல்படுவோருக்கு இத்தகைய தற்காலிக முகம்-காட்டாதிருத்தல் அவர்களின் கொள்கைகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் அவசியம் தான் என்று உணர்ந்தே இதை எழுதுகிறேன். //


    எழுத்தோடு கூடவே நேரடியான முகபாவங்களையும் பிரதிபலிக்கும் தொழில் நுட்பத்திற்காக காத்திருக்கிறேன்:)

    நீங்கள் சொன்னது போல் சமூக மாற்றங்களுக்காகவும்,அரசியல் சித்து விளையாட்டுக்களில் தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் புனைபெயர்கள் தேவையே.

    ஆனால் இதற்கான காரணங்கள் பின் தள்ளப்பட்டு பின்னூட்டங்களில் தனி மனித தாக்குதலுக்கு முகமிலிகளாய் வருபவர்களுக்கே இந்த ஆயுதம் அதிகம் பயன்படுகிறது.

    பெண்கள் தங்கள் பெயர்களை அடையாளப்படுத்திக் கொண்டே வருகிறார்கள் என நினைக்கிறேன்.

    நம்மூரு அம்புலிமாமாவுக்கு போட்டியா இந்த முகமூடிதான் ஜேம்ஸ்பாண்ட் மாதிரி சாகசக்காரன்:)
    சிலந்திக்காரன்,வவ்வால் மனிதன் எல்லாம் LKG,UKG பசங்க:)

    ReplyDelete
  6. //சொல்லுகிற கருத்து-எளிமையாக -புது கவிதை மாதிரி இருந்தால்-எல்லா தரப்பு மக்களுக்கும் புரியும்.
    கருத்தை எளிய -மொழியில் சொல்லவும்//

    ஜெயகாந்தன் கதைகளின் கதாபாத்திரங்கள் பேசுவது யதார்த்தமாக இருந்தாலும்,அவரது கதைகளின் முகவுரை ஆழ்ந்த வாசிப்புக்கானவை.அந்த மாதிரியான எழுத்துக்கள் இவை என நினக்கிறேன்.

    புதுக்கவிதை உங்களுக்கு எளிதாக இருக்கிறது சேகர்.எனக்கு கடினமாக இருக்கிறது:)

    ReplyDelete
  7. நீங்க எவ்வளவோ நாசூக்கா சொல்லிட்டு இருக்கீங்க ! நான்லாம் செருப்புல சாணி தடவி அடிச்சும் பாத்துட்டேன் திருந்தறா மாதிரி தெரியல டாக்டர்! விட்டுத் தள்ளுங்க அப்பறம் எங்களுக்கும் கொஞ்சம் டைம் பாஸ் இவுங்க தான்!

    ReplyDelete
  8. நல்ல விளாசல்... ஆனா இந்த முகமூடிகள் மாறுவாங்கன்னு நினைக்கறீங்க... இது ஒருவிதமான நோய்தான்....

    ReplyDelete
  9. அவரவர் தம் முகத்தைக் காட்டுவதும் மூடிக்கொள்வதும் அவர்களது விருப்பம்தான்; முகத்தை மட்டுமே மறைத்து வாய் ஓயாமல் பிதற்றுவோரைத்தான் நாம் கவனிக்க வேண்டும். முகமல்ல இங்கே முக்கியம். மொழியும் அதன் உள்ளர்த்தமும், தொனியும் அதன் பின்புலமும் அவர்களது மாயையான இல்லாத தைரியத்தையும், உருப்படாத வீர்யத்தையும் காட்டிவிடும்.
    கவனியுங்கள். யார் தமக்கு வந்த அரிப்பைச் சொறிந்து கொள்ள எழுதுகிறார்கள், யார் சமூகத்தின் சிரங்குக்கு மருந்து தரப் பார்க்கிறார்கள் என்பது எளிதாய் சுலபமாய் புலப்படும். புதர்களை அப்புறப்படுத்தினால்தான் புதைந்துள்ள பொக்கிஷம் கிடைக்கும், இல்லையென்றால் நம் அலட்சியம் சில லட்சியங்களை அடையாளம் காண விடாமல் இருட்டடிக்கும்.


    ...... உங்கள் பார்வையில், நிறைய யோசிக்க வைக்கிறீங்க..... அவர்களது கருத்து/எழுத்து உரிமை என்பதா இல்லை, அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்பதா என்ற குழப்பம் உண்டு... ம்ம்ம்ம்.....

    ReplyDelete
  10. கவனியுங்கள். யார் தமக்கு வந்த அரிப்பைச் சொறிந்து கொள்ள எழுதுகிறார்கள், யார் சமூகத்தின் சிரங்குக்கு மருந்து தரப் பார்க்கிறார்கள் என்பது எளிதாய் சுலபமாய் புலப்படும். புதர்களை அப்புறப்படுத்தினால்தான் புதைந்துள்ள பொக்கிஷம் கிடைக்கும், இல்லையென்றால் நம் அலட்சியம் சில லட்சியங்களை அடையாளம் காண விடாமல் இருட்டடிக்கும்.

    சில நொடிகளுக்கு முன் நண்பரிடம் கூறிய வார்த்தைகள் உங்கள் எழுத்தில்
    நன்றி.

    ReplyDelete
  11. //‘வேதாளமாக(?)’//

    அந்த பாத்திரம் குமுதத்தில் வேதாளர் என்றழைக்கப்பட்டது. முத்து காமிக்சிலும், இந்திரஜால் காமிக்சிலும் அவ்வாறே அழைக்கப்பட்டது.

    ராணி காமிக்ஸில் மட்டும் மாயாவி என்று மாற்றப்பட்டது.

    //என்னைக் கவர்ந்த ஒரு சித்திரக்கதையின் பாத்திரம் பற்றியல்ல இது//

    காமிக்ஸ் ரசிகன் என்ற முறையில் அந்த பாதிரம் பற்றிய அதிவாக இருக்க ஆசைப்பட்டேன்.

    முடிவில், சிறந்த ஒரு பதிவு என்று கூறி விடை பெறுகிறேன்.

    ReplyDelete
  12. முகமூடிகள் திருவிழா கூட்டத்தினுள் காணமல் போனவர்கள்...

    எனது புனைப்பெயருக்குப் பின்னால் ஒரு பெரிய கதையே வைச்சிருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கேன். ஆனால், அப்படி வைச்சிட்டு இருக்கிறதையே அசிங்கம் பண்ணி காமிக்கிறாய்ங்க ‘காணமல் போனவய்ங்க.’

    ReplyDelete
  13. அழகான வார்த்தைகளால் ஆழமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  14. முகமூடி கொள்ளையர்களைப் போல முகமூடியணிந்த விமர்சகர், புதர்களை அப்புறப்படுத்தினால் பொக்கிஷத்திற்கு பதில் ஒளிந்துகொண்டிருக்கும் விஷ ஜந்துக்கள் நம்மை தீண்டிவிடவும் கூடும் அல்லவா.

    ReplyDelete
  15. வேடிக்கை பார்க்கும் பக்குவம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை...நல்ல பதிவு சார்.

    ReplyDelete
  16. i believe that u know frankness don't help in preserving relations...people don't like truth...they never like to see their own faces... masks r needed...

    ReplyDelete
  17. போலி பெயர்களில் எழுதுவதும் ஒரு உஷார் முயற்சியே .
    இப்படியும் கூட இருக்கலாம் தாழ்வு மனப்பான்மை ...தனது தகுத்திக்கு அதிகமான எழுத்துக்களை பார்த்து அதற்கு பின்னோட்டம் இடும் ஆர்வம் ..,...மாணவன் ஆசிரியரிடம் நேரடியாவும் டவுட் கேக்கலாம் ,அவரது குறை நிறைகளை சொல்லலாம் .அவர் புரிந்து கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் இவன் மேல் சிரிதாகினும் மனக்கசப்பு எற்படப்போது உறுதி .அதுக்குதான் உஷாரா யாரும் இல்லாத நேரத்துள் கரும் பலகைகளிலும் சுவற்றிலும் அவரை பற்றி எழுதுறான் ..இப்பையும் ஆசிரியர் உணரமாட்டார் ...ஆனா மாணவனின் மனக்கழிவுகள் வெழியே வந்திடும்.....நிம்மதி தான் . அந்த மாணவன் தனக்காக செய்யும் பொழுது அரிப்பை சொரிபவன் ..அனைத்து மாணவர்களுக்காகவும் செய்யும் பொழுது ஹீரோ (மாணவர்களிடத்து மட்டும் ) .மாணவர்களுக்கும் ஹீரோவா இருக்கணும் ஆசிரயருக்கும் ஹீரோவா இருக்கணும்னா ....."போலிப்பெயர் ஐடியா"நல்லதுதான்

    ReplyDelete