Thursday, July 16, 2009

ஆட்டம் முடிவதில்லை


ஆட்டம் முடிவதில்லை தில்லையில்.

இன்னும் எத்தனை காலம்? நடராஜன் ஆடட்டும், அந்த நாட்டியம் ஒரு ககனக்கலைக்கூத்தாகவே இருக்கட்டும்..

அவன் பெயர் சொல்லி கலைஞர்கள் ஆடலாம், கயவர்கள் ஆடலாமா?

அந்தணர் என்போர் அறவோர் என்பதா நிதர்சனம்?

பகுத்தறிவுப்பகலவனிடம் இரவல் வாங்கிய ஒளியில் போலியாய் மினுக்கிக்கொண்டிருக்கும் சாமான்யசாண‌க்கியனுக்கு இதெல்லாம் தெரியாதா, இல்லை இது குடும்ப விஷயமில்லை என்பதால் முக்கியமில்லையா?

சிதம்பரத்தில் ஆறுமுகசாமி என்னும் முதியவர் பக்திக்கும் முதுமைக்கும் உரித்தான முரட்டுப்பிடிவாதத்தில், கோவிலில் தேவாரம் பாட ஆசைப்பட்டார், மறுக்கப்பட்டதும் அடம் பிடித்தார். பொதுவாக கோவில்களில் இப்படி பக்தியோடு உரக்கப்பாடுவது குறித்து எனக்கு உடன்பாடில்லை. பலநேரம் சுருதி இல்லாமல் தாளம் இல்லாமல் சிலர் பாடுவதைக் கேட்கச்சகிக்காமல் மனத்துக்குள் 'கெட்ட' வார்த்தைகள் பொங்கிவருமே தவிர பக்தி பொங்காது. ஒருமுறை ஒரு சிறந்த பாடகி சன்னதியில் பாடிக்கொண்டிருந்த போது, என் மனம் கடவுளையும் அதன் பிம்பத்தையும் விட பாடகியின் மீதும் பாட்டின் மீதுமே லயித்திருந்தது. இங்கே பாட்டின் தரமல்ல ப்ரச்சினை. பாடுபவரும் (?ஜாதியால்) பாட்டும் (?மொழியால்) தான் ப்ரச்சினை. இதனாலேயே ம.க.இ.க போராடி நீதிமன்றம்வரை நின்று அவருக்கு அங்கே பாடும் உரிமை வாங்கித்தந்தது.

அவர் என்ன "வேர் இஸ் தி பார்டி டுநைட்" பாடவா ஆசைப்பட்டார்? தேவாரம் தானே (திருவாசகம் கூட இல்லையே)! இதில் தான் ஆதிக்கவெறியும் ஆணவமும் வெளிப்படுகிறது. இதுமேலோட்டமாகப் பார்த்தால் வெறும் ஜாதிக்கொழுப்பாகத்தோன்றும்;(இப்படி நினைத்துக்கொண்டு சுசாமி வேறு இதில் ஆடி முட்டைவாங்கியதையும் நினைவில்கொள்ள வேண்டும்) உண்மையில் இது பணப்பிரச்சினை. வருமானத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்னும் பதைபதைப்பும் தான் இங்கே பின்னணி.

அரசு அலுவலர் நீதிமன்ற உத்தரவுடன் மக்கள் பக்தியில் தரும் பணம் நேரடியாக நடரஜனுக்குத்தான் போகவேண்டும் என்று பொது உண்டியல் வைத்ததைக்கூட அவர்கள் எதிர்த்ததிலேயே இது புரியும்.

இந்நிலையில், இப்போது-

வினவு

Posted on July 15, 2009 at 2:52 pm

FLASH NEWS

நேற்று இரவு (14.07.09 ) சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமி அங்கே வந்த பக்தர்களிடம் பணம் கேட்ட தீட்திதர்களை எதிர்த்துக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தீட்திதப் பார்ப்பனர்கள் அந்த முதியவரை வயதானவர் என்றும் பாராமல் தாக்கியிருக்கின்றனர். காயமுற்ற சிவனடியார் தற்போது அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார். ம.க.இ.க வின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிவனடியாரின் கனவான தமிழில் பாடுவதும், கோவிலை அரசு கையிலெடுப்பதும் நிறைவேறிய நிலையில் சிதம்பரம் தீட்சிதர்கள் அவர் மீது கொலைவெறியில் இருப்பதும் இப்போது அதை வெளிப்படையாக காட்டியிருப்பதும் அரசு அவாள்களைக் கண்டு பயப்படுவதன் விளைவே.

ஆட்டம் முடியவில்லை! நடராஜன் ருத்திரனாக இருந்திருந்தால்...?

Tuesday, July 14, 2009

பேச்சின் பொருள்மீறி

பேச்சின் பொருள்மீறி பொய்கள் முன்னிற்க‌

கூச்சம் சிலநேரம் தடைபோடும்-

நீச்சம்

அடையாத வார்த்தைகளை மட்டும்தான் சில நேரம்

அடையாளம் காணும் மனம்.




அடையாளம் தெரிந்தாலும் பகிரங்கமாக்கிவிட‌

முடியாத உணர்வுகளை வார்த்தைகள்-

அடிமனத்தில்

புதைக்கின்ற வழக்கத்தால் கனவுகளில் மட்டும் தான்

பதிவாகும் கோபக்குறை.




கோபம் குறைவாக வெளியேறக் காரணமேன்

ஞாபகங்கள் பயமூட்டி வைக்கும்

சாபத்தின்

விளைவாக வாழ்க்கை தடுமாறும் என்கின்ற‌

பிழையான கற்பித்தல்தான்.




கற்பித்தவை கிடக்கட்டும்

கற்போமே..



சும்மாவும் எழுதுவது உண்டு

Thursday, July 9, 2009

ஒரே ஒரு மயிர்..

377 பற்றியெல்லாம் கருத்துசொல்ல நான் சட்டநிபுணன் அல்ல, ஆனால், இது ஒரு சட்டம் குறித்த விவாதம் மட்டும் இல்லையே!

ஒத்த பாலினர் பாலுறவில் ஈடுபடுவது ஏற்புடையதா என்பதல்ல கேள்வி, அது ஒரு தண்டனைக்குரிய குற்றமா என்பதே கேள்வி, ஆனால், கேள்வி பற்றிய அக்கறையோ புரிதலோ ஒருவன் பதில் சொல்ல அவசியமான அடிப்படை என்பதே இல்லாமல், இது குறித்து பலர் பேசிவருவதாலேயே நானும் பேசத்துணிகிறேன்.

ஓரினச்சேர்க்கை மனநோய் அல்ல; அதற்காக அது இயற்கையுமல்ல. உள் ஏற்படும் ஒருசில மரபணுமாற்றங்ளும், இயல்பாகிவிட்ட ஒருசில இளமையின் கற்றல்களுமே காரணம் என்று அறிவியல் ஆய்வுகள் கூறும்போது, அதை நோய் என்றும், குற்றம் என்றும் கூறுவதோடு நிற்காமல், இதனைச் சரி செய்யத்தன்னால் முடியும் என்றும், அதைத் தான் கற்றுத்தரப்போகும் (பகிரங்கமாக இன்னும் கட்டணம் அறிவிக்காத‌ ) யோகப்பயிற்சிகளின் மூலம் 'குணப்படுத்த' (இல்லாத நோய்க்கான சிகிச்சை!)இயலும் என்றும் ராம்தேவ் எனும் ஒரு இந்து சாமியார் (கிருத்துவ,இஸ்லாமிய மற்றும் பிற மதத்தினைச்சார்ந்தவைர்களும்)விளம்பரத்துக்காகக் கூறித்திரிவதுதான் ஆபாசமாக உள்ளது.

இப்படி அறிவிக்கும்போதே குறுகித் துடிதுடித்துக்கொண்டிருக்கும் தன் இடது கண்ணையே சரிசெய்து கொள்ள முடியாத ஒரு போலி, ஆழமனத்துள் பதிந்துவிட்டதால் உருவான பாதிப்பை எப்படி சரி செய்ய முடியும்?

ஆனால் நாம் கேள்வி கேட்கத்தான் மறந்துவிட்டோமே, அதுவும் சாமியார்களைத்தான் நாம் கேட்க 'நினைப்பது' கூட இல்லையே.

தன் கண்ணில் வெளிப்படும் tics என்னும் பாதிப்பை கூட யோகாவால் சரிசெய்துகொள்ள முடியாத இந்த சாமியார்......!!!

மொழுமொழுவென்ற முகத்தோடு இருக்கும் சாமியார்களும் மனித தெய்வங்களும் முகத்தின் முடியை மழித்தோ, வழித்தோ பிடுங்கியோ எடுக்காமல் ரோமம் மறையப்போவதில்லை. எந்த பக்தனாவது சாய்பாபா சவரம் செய்துகொள்வதில்லை என்று சொல்லமுடியுமா?

ஒரு மயிரைக் கூட வளரவிடாமல் தடுக்க இவர்களின் ஆன்மிக/தெய்வீக வித்தைகளால் முடியாது...

இவர்களை நம் மக்கள் வணங்கி...நம்பி ...

வெட்கமாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருக்கிறது.