Friday, April 24, 2009

ரிஷி மூலம், ஒரு ரிஷி பற்றி

இன்று ஜெயகாந்தனின் பிறந்தநாள். 75 முடிந்து, அடுத்தது ஆரம்பமாகிறது.
அவர் எனக்கு ஆசான். என் இள‌மையில் அவர் எனக்கொரு ஆதர்ச நாயகன். அவருடன் பேசுவோம், பழகுவோம் என்று ஒரு கனவு எனக்கு இருந்ததில்லை.
லாசரா, அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி ஆகியோரின் எழுத்துக்களை நாடகமாக்கிக் கொண்டிருந்த காலத்திலும், ஆசையும் ஆர்வமும் இருந்தாலும் அச்சமும் இருந்தததால், அவரை நெருங்கவில்லை.
அவரே காட்சிகளை அமைத்து வசனமும் எழுதக்கூடியவர் என்பதால், கேட்கவே மிகுந்த தயக்கம் இருந்தது.
ஒரு யதேச்சையான நிகழ்வாக எனக்கொரு விருது அவர்கையால் கிடைக்கப்பெற்ற நேரம், உங்களை நேரில் சந்திக்க இயலுமா என்று கேட்டுவிட்டேன், அவரும்," வாரும் "என்று சொல்லிவிட்டார்.
அவர் வீட்டிற்கு முதன்முறை போனபோதே இன்னொரு வாய்ப்பு கிடைக்காதோ என்று அஞ்சி உங்கள் கதையை படமாக்க விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டேன். "தாராளமாக" என்று அவரும் உடனே இசைந்துவிட
அப்போது ஆரம்பமானது ரிஷிமூலம் என்னும் கனவு.
திரைக்கதை எழுதி, அவர் ஒப்புதலோடு அதை NFDC யில் சமர்ப்பித்து, ஒப்புதலும் பெற்றுவிட்டேன். மகேந்திரன் படம் முடிந்த உடன் உன் படம் தான் என்றார்கள். படத்துக்காக நான் பேசிவைத்திருந்த ஸ்ரீவித்யாவும், எல்.வைத்யநாதனும் இறந்துவிட்டார்கள். ஒரு மழையில் என் கையெழுத்துப்பிரதி கூட‌ நனைந்து விட்டது. எத்தனையோமுறை அலைந்து அலுத்து கனவை மனப்பரணின் மூலையில் போட்டுவிட்டேன். அனால், ரிஷிமுலம் மூலம் ஏற்பட்ட ஒரு ரிஷியின் உறவாகவே ஜெகே எனக்குவிளங்குகிறார்.
எனக்கு அவர் மார்க்சியம் மட்டுமல்ல கம்பனையும் வள்ளுவனையும் கற்பித்தார்.
உரிமையோடு என் வாழ்வின் குழ்ப்பங்களுக்கும் விடை கூறியிருக்கிறார் .
பாசமும் நேசமும் என்ன என்பதை காட்டியிருக்கிறார். நான்தான் அவ்வப்போது அவரை விட்டு ஓடியிருக்கிறேன் ஆனால் அவர் என்றும் என்னிடம் அன்பு காட்டத்தயங்கியதே இல்லை.
எட்டு மாதங்கள் அவரைப்பார்க்காமலேயே ஒட்டி விட்டேன்.
பார்க்காமல் மட்டுமே, நினைக்காமல் இல்லை.
இன்று அவரின் புது வீட்டிற்கு போகிறேன். அவர் பழைய மாதிரி தான் இருப்பார் என்று தெரியும்.
செல்லமாக, கோபமாக, நெகிழ்வுடன், நட்புடன், இலக்கிய தத்துவ பரிமாறல்களுடன் அதே ஜெயகாந்தனை இன்னும் பல வருடங்கள் பார்க்கவேண்டும் என்ற பிராத்தனையுடன்,
இதுவரை அடித்ததிலேயே நீளமான பதிவை முடித்துக்கொள்கிறேன்.

Wednesday, April 1, 2009

ஆர்வமா, அவசியமா? கால நிர்ப்பந்தமா?

நண்பர்களும் தோழர்களும் அன்புடன் என்னை எழுத வைப்பதன் ஒரு பகுதி இது. இங்கே இதைச்சுட்டுவது, வினவு தளத்தில் இருக்கும் பிற கட்டுரைகளையும் நீங்கள் படிக்கலாமே என்பதற்குத்தான்.
இன்னமும் பேனாவால் எழுதுமளவிற்கு தட்டச்சு வரவில்லை.
என் language பாஷையாகி இப்போதுதான் மொழியாகிக்கொண்டிருக்கிறது.இந்த நேரத்தில், இப்படி ஆங்கிலவழி தமிழ் (அதுவும் தேடித்தேடி) அடித்துக்கொண்டிருப்பதில் ஒரு சிக்கல்! இப்படி அடிப்பதையாவது பயிற்சி மூலம் வேகப்படுத்திக்கொள்ளும் ஆர்வக்கோளறின் அதீதத்தில், rudhran என்பதை ruthran என்று அடித்துவிட்டு என் மின்னஞ்சல் வேலை செய்யவில்லை என்றெல்லாம் கவலைப்பட நேர்ந்தது! இது ஆங்கிலம் தட்டும் போது தவறுகளாக வெளிப்படுமோ என்றும் ஓர் அச்சம் ஆரம்பமாக
என்ன தான் எழுதித் தொலைப்பது?
கவிதைகள் போல் சில பாசாங்குகள் செய்யலாமா?
உள் புகுமுன் மனக்குகைக்குள்ளேயே பதுங்கிக்கொள்ளலாம்
கண்களை மூடிக்கொள்ளலாம்
சூரியன் வந்தாலென்ன? விடியல் விரும்பினால்தானே