எப்போதும் தனிமைதான் நிரந்தரம், நிஜம். கூட்டம், கூட்டு என்பதெல்லாம் அந்தந்த நேரத்து விருப்பத்திற்கும் வசதிக்கும் மனம் ஏற்றுக்கொண்டவை மட்டுமே. எல்லா மனிதர்களையும் போல்தான் நானும், தனி! எல்லா மனிதர்களையும்போல்தான் நானும் நான் தனி என்பதைச் சிறப்பு எனும் அர்த்தத்தில் புரிந்துகொள்ளப் பழகிவிட்டேன். உண்மை என்று நம்பிவிட்டேன், பொய் என்பதை நம்ப மறுத்துவிட்டேன்.
உறவுகளைப்பற்றி எல்லாருக்கும் எப்போதும் கவலையோ அக்கறையோ
நிச்சயம் உண்டு.
எது உறவு? நம் சூழலில்
தென்படுவதா, நம் மனத்தில் நினைத்துக்கொள்வதா, நாம் ஏமாறியதா
ஏமாற்றியதா, நம்மை ஈர்த்ததா நிராகரித்ததா, நாம் தேடியதா
அடைந்ததா, அடைந்ததாய் நினைத்ததா, விரும்பியதா
வெறுத்ததா, தற்செயலா தலையெழுத்து எனும் தப்பித்தலா, உறவு எதுவானால்
என்ன, அது உண்மையா? உண்மையில் நாம்
என்று நான் சொல்வது நாம்தானா இல்லை நான் மட்டுமா? நான்தான் என்றால்
ஏன் நாம் என்று சொல்கிறேன்? பயமா?
எதுகுறித்து பயம்? நான் என்று
திரிந்தால் நாம் என்று எதிர்கொள்ளும் சமூகம் நிராகரித்துவிடும் என்ற பயமா? நான் தனியாய் எது
செய்யவும் சமூகம் தேவை என்னும் மனதோரத்தின் சத்தியச்சிணுங்கலா?
சமூகம் எவ்வளவு தேவை? எனக்குத் தேவையான உணவு என்னால் உற்பத்திசெய்ய முடியாதபோது அதை விலைக்கேனும்
தர ஒரு சமூகம் தேவை. உடையும் அப்படித்தான். விலைதந்து வேண்டியதைப்பெற உத்தியோகம்
என்பதற்கும் சமூகம் தேவைதான். ஊதியத்திற்கு அர்த்தம் கூட்டவும் சமூகம் தேவைதான். சமூகம் என்னும் வழக்கில் கணக்கெடுத்த அந்த நான்குபேர் பற்றி
எனக்குக் கவலையில்லை. நான் தனித்திருப்பேன், என் தனித்தன்மையை
நிலைநாட்டிக் கொண்டிருப்பேன் என்றெல்லாம் என் நிர்வாணக்கனவுகளிலும் பொய்
சொல்லக் கற்றுக்கொடுத்தது யார்?
அந்த நான்குபேரா? அவர்கள் உள்ளேயா வெளியேயா? அவர்கள் எவ்வளவு காலம் எனக்கு முன்னாலேயே
இருந்தார்கள், எவ்வளவு தூரம் என்னால் உருவாக்கி
வளர்க்கப்பட்டார்கள்? இப்போது நான் எழுதுவதும் எனக்காகவா அவர்களுக்காகவா? அவர்களையும்
சேர்த்துத்தான் நான் என்றால், நான் என்பதென்ன?
அவ்வப்போது இந்தக்கேள்வி வந்தாலும் மனம் தன் சமூகநாடகத்தின்
பாத்திரத்திற்கேற்ற ஒப்பனையில் இது இப்போது தேவையில்லாத வசனம் என்று
ஒதுக்கிவிடும். ஒரு நாடகத்திற்கும் மறுநாடகத்திற்கும் உள்ள
இடைவேளையில்தான் இந்தப்பரிசீலனை. இது மந்தமான மத்தியானத்தின் ஓய்வுநேரப்
பொழுதுபோக்காக, வழக்கம்போல் வாழ்வின் நெருக்கடிகளில் மறைந்துவிடாதிருக்கவே
இப்போது எழுத்துகளில் இப்பதிவு. வார்த்தைகள் நிமிடங்களில் மறைந்து மறந்து போகலாம், ஆனால் எழுத்துகள்
குப்பைக்கூடைகளிலாவது இருக்கும் என்பதாலேயே இந்தப்பகல் நேரது மன அலைச்சல்.
என் பெயர் என்று குழந்தைப்பருவத்தில் அடையாளம் கண்டு
திரும்பிப்பார்த்ததும், என் முகம் என்று
அடுத்த கட்டத்தில் கண்ணாடியில் அடையாளம் கண்டு கொண்டதும்,நிழற்படமாக
கையெழுத்தாக, பணிபுரியும்
பட்டமாக, உறவுகளால்
வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட பிம்பமாக, பல்விதங்களில் எனக்கே அறிமுகமான நான்.. யார் தான்?
நான் யார் என்று தெரிந்தால் என் வரம்புகள் என்னால் வரையறுத்துக்கொள்ளப்படும், அப்போது சமுதாய
வீதியில் போடப்பட்டிருக்கும் கலாச்சாரக் கோடுகளினூடே என் பயணம் கண்டனங்களின்றிச்
சுலபமாகும்.நிர்ப்பந்த்தங்கள் கூட நிமித்தங்களாகிவிடும்; மனம் சுணங்காது.
ஒவ்வொரு நாளையும் இரவுநோக்கி இழுத்துச்செல்லும். இரவின்
கனவுகளில் மனவீட்டில் இன்றைய வருத்தக்குப்பைகளை மூடிவைத்து, நாளைய
விருப்பப்பூக்களால் அலங்கரித்துக்கொண்டு, விடைதெரியாத கேள்விகளையெல்லாம் ஓரத்தில் வீசியெறிந்துவிட்டு, தன்னைத்தானே
தற்காலிகமாக ஏமாற்றிக்கொள்ளும்.அல்பெருனியின் அல்ஹிந்த் படித்தாலும் தான் ஹிண்டு
என்ற அடையாளத்திற்காக மறந்துகொள்ள முயலும்.
இதையெல்லாம் மீறி ஒருநாள் எனக்கு நான் யார் என்பது
புலப்படும். அதுவரை அரிப்பை நானே சொறிந்து கொண்டு
ஆஹா பார் எவ்வளவு அழகாகச் சொறிந்துவிட்டிருக்கிறேன் என்று முதுகை இன்னும் சிலர் சொறிவார்களா என்று காட்ட,என்னில் அடங்காத என் மனம் முயன்றுகொண்டேயிருக்கும்
ஆஹா பார் எவ்வளவு அழகாகச் சொறிந்துவிட்டிருக்கிறேன் என்று முதுகை இன்னும் சிலர் சொறிவார்களா என்று காட்ட,என்னில் அடங்காத என் மனம் முயன்றுகொண்டேயிருக்கும்
இன்னும் புலம்புவதோ புரிந்துகொள்வதோ பின்னாளுக்காக..
//நான் என்பதென்ன?
ReplyDeleteஅவ்வப்போது இந்தக்கேள்வி வந்தாலும் மனம் தன் சமூகநாடகத்தின் பாத்திரத்திற்கேற்ற ஒப்பனையில் இது இப்போது தேவையில்லாத வசனம் என்று ஒதுக்கிவிடும். //
பல நேரங்களில் எனக்கும்!
Thank you for sharing dr.,regards
ReplyDeleteநீ உன்னையறிந்தால் என்று கண்ணதாசனின் பாடலை மேற்கோளை காட்டி உங்களுடைய ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது.
ReplyDeleteதொடருங்கள்.
Hello Doctor,
ReplyDeletePerfect landing at last!!!!!!!!!!
I think you have arrived long back.Then why you try to say you are in waiting........is it for those trying to arrive?
சுயம் சார்ந்த மனிதன் சமூக கோட்பாடுகளால் வரையருக்க படுவதில்லை என்றே நினைக்கின்றேன். இங்கே கற்பிதங்கள் அதிகம். உள்ளுணர்வால் செயல் படுவதை விட, சமுதாய வரைமுறைகளுக்குட்பட்டு செயல்படுவதே அதிகம்.
ReplyDeleteமுகமூடி அணியாமல் நான், நானாய்,ஒரு நாளேனும் வாழ ஆசைதான்.
என்ன செய்வது டாக்டர்..... வேளைக்கொரு வேடம், மணிக்கொரு முகமூடி..........
JK, சங்கிலித் தொடர் மாதிரி பிரிச்சு பிரிச்சு உறவுகளை பெறுவது/வெறுப்பது/நினைத்துக் கொள்வது என உங்களின் எழுத்தை படிக்கும் பொழுதே ஒரு கிறக்கத்தை வழங்குகிறது, நிசர்சனங்களை அள்ளித் தெளித்தவாரே, டாக்டர். என்றுமே தனி தான்!
ReplyDelete//என் வரம்புகள் என்னால் வரையறுத்துக்கொள்ளப்படும், அப்போது சமுதாய வீதியில் போடப்பட்டிருக்கும் கலாச்சாரக் கோடுகளினூடே என் பயணம் கண்டனங்களின்றிச் சுலபமாகும்.நிர்ப்பந்த்தங்கள் கூட நிமித்தங்களாகிவிடும்; மனம் சுணங்காது. //
இது புரிஞ்சு போச்சுன்னா, நாளக்கி செத்தாக் கூட regret இருக்காது தனிமனித நிலையிலேன்னு நினைக்கிறேன், இல்லையா?
எது உறவு? நம் சூழலில் தென்படுவதா, நம் மனத்தில் நினைத்துக்கொள்வதா, நாம் ஏமாறியதா ஏமாற்றியதா, நம்மை ஈர்த்ததா நிராகரித்ததா, நாம் தேடியதா அடைந்ததா,அடைந்ததாய் நினைத்ததா,விரும்பியதா வெறுத்ததா,தற்செயலா தலையெழுத்து எனும் தப்பித்தலா, உறவு எதுவானால் என்ன, அது உண்மையா?//.......... உறவுகளை பற்றி நான் இவ்வளவு யோசித்து பார்த்ததில்லை. இப்பொழுது ஆள் கடலில் முத்து எடுத்தது போல் புதிய பார்வையில் பார்க்க தோன்றுகிறது.
ReplyDeletenice post doctor, thanks for sharing.
ReplyDeleteAre these self appraisals help us to go further (increase our wealth or knowledge or happiness) or do they lead to complacent level.
"நாம்" என்று சொல்ல நான்கு பேர் இருக்கும்பதனால்தான், "நான்" என்ற தனிமை கிடைக்கிறது. மனிதன் 'தனியாகவும்' வாழ நிர்பந்திக்கப்படும் ஒரு சமூக விலங்கு.
ReplyDeleteஉறவு என்ற அற்புதம் எப்போதுமே சமூகத்தால் சிதைக்கப்படுகிறது. சில நேரங்களில் "நான்" என்று தோன்றுவது கூட 'நமக்காகத்தானோ' என்ற கேள்வி எழுகிறது.
ம்ம்ம்ம்......குழப்பம்தான் மிஞ்சுகிறது.
இதை வைத்து தான் பலர் கயிறு திரிக்கின்றனர். இன்னமும் இது தெளிவாகனும் யோசிக்க வைத்த கோணம் மிரளவும் வைக்கிறது.
ReplyDelete