Sunday, November 22, 2009

க்ருஷ்ணனும் அழுக்கும்

கலஸோ எழுதிய கா என்ற புத்தகம், இந்திய புராணக்கதைகளை அடிப்படையாகக்கொண்டு எழுதியது. அதில் க்ருஷ்ணன் கதாபாத்திரம் சுவையானது. 
ஒரு சம்பவம்.

ராதை மற்றும் பல பெண்களுடன் மோகத்தை காதலாகக்காட்டும் வித்தையைக்கொண்டு விளையாடி இளமையைக் கழித்த க்ருஷ்ணன், அரசியலில் புகுந்து, ஒரு சின்ன அரசனாகவே வாழ்கிறான். அப்போது அழகான அந்த்ப்புரத்து அரசிகளிடம் ஒரு சலிப்பு வருகிறது. தன் நண்பன் அர்ஜூனனுடன் ஒரு மாலை ஆற்றோரம் சாய்ந்து படுத்து அங்கே நதியில் நீராடிக்கொண்டிருக்கும் பெண்களின் அழகுகளை ரசித்துக்கொண்டிருக்கிறான்..
"இத்தனை அழகும் என்னுள் சுகநெருப்பூட்டவில்லையே! மோகநிலை மோனநிலையாகும் மெய்சிலிர்ப்பு தோன்றவில்லையே.." என்று நண்பனிடம் புலம்புகிறான். அப்போது அவனுக்கு ஒரு தேவசேதி வருகிறது...`காதல் மிகுந்த பெண்ணின் கால் தூசியைக் கொண்டு உன் விரகவிரக்தியை நிவர்த்திசெய்யலாம்'.....
தேடுகிறான். அந்தப்புரத்தில் ஆசை மனைவியர், அவர்களைதவிரவும் அழகுமங்கையர் பலரிடமும் தேடுகிறான்.
அன்பும் அழகும் கொஞ்சமும் குறைவில்லாத அந்தப்பெண்களின் கால்களில் தூசியில்லை. எப்படி இருக்கும்? கூந்தல் முதல் கால்பாதம் வரை அவ்வளவு சிரத்தையாக சிங்காரம் செய்துகொண்டு வரும் அவர்களிடம் காலில் தூசியில்லை...சுரண்டிச்சுரண்டிப் பார்த்தாலும் அழுக்கு உருளவில்லை!
க்ருஷ்ணன் மனம் நினைவுகளை எல்லாம் குவித்துச்சல்லடை செய்கிறது..அப்போது கோபிகைகளின் கால்கள் அவன் மனத்திரையில் தோன்ற இன்னும் கூர்ந்து உள்பார்க்கிறான்..காதலில் காமத்தைக்காவியமாக்கிய ராதையின் உடல் மன‌த்திரையில் தெரிகிறது..
மோகத்தில் அவளது அங்கங்களின் அத்தனை  அங்குல‌ங்களையும் அறிந்துவைத்திருந்த அவனுக்கு, காதல் சாகசத்தால் அவளது ஒவ்வொரு மூச்சுக்கும் முனகலுக்கும் அர்த்தங்கள் புரிந்துவைத்திருந்த அவனுக்கு..அவள் காலில் தூசி இருந்ததா என்று நினைவில்லை..
தனக்கு நம்பகமான ஒருவனை அனுப்பிப் பார்க்கிறான். ராதை நடந்து போகும்பொது, அவள் கால் பாதங்கள் சற்றே தெரிகின்றன.அவை தூசி மிகுந்து, அழுக்காய் இருக்கின்றன, அழகாய் இருக்கின்றன...  ..அழகின் அழுக்கில் புனிதம் புலப்படுகிறது... அழுக்கு மட்டுமே அழகாகியும் இருக்காது!
……………………………………….
ஒரு பத்திரிக்கையில் படித்த செய்தி:
வங்காளத்தில் துர்கா பூஜைக்கு களிமண் கொண்டு விக்கிரகங்கள் செய்வது வழக்கம். அந்த பொம்மைகளைச்செய்ய பிசையும் மண்ணின் முதல் மண் ஒரு வேசியின் காலடியிலிருந்து தான் எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது அவர்களது கலாச்சார நம்பிக்கை, ஐதீகம்.
(இப்போது அப்படி மண்ணெடுப்பது, மீதிநாட்களெல்லாம் அவமானப்படுத்துவதற்கு மாற்றாக  மன்னிப்பாக ஈடாக அமையாது என்று அந்தப்பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் திருட்டுத்தனமாக எந்த பூஜாரியும் வந்து மண் எடுத்துப்போககூடாது என்று போராட அரம்பித்துள்ளனர்)
-------------------------------------------
தேவைப்படும்பொது இனம் குலம் பார்ப்பதில்லை, சுத்தம் சுகாதாரம் பார்ப்பதில்லை, மீதி நேரமெல்லாம் துஷ்டன் யார், தீட்டு எது, எந்த சாஸ்திரம் இன்றைய தேவைகளப்பூர்த்தி  செய்யப்பயன்படும்...எப்போதெல்லாம் தனக்கு வசதியாக பரந்த மனத்தையும் பெருந்தன்மையையும் வேண்டிய அளவு காட்டலாம் என்று பார்ப்பான்!!! மனிதன்?
ஒரு பத்திரிக்கையில் படித்த செய்தி:
குளக்கரையில் அவதாரம்  காமயாகம் நடத்தினால் , கருவறையில் ராஸலீலை அர்ச்சகர் நடத்துகிறான்..
............... ........................


கதைகளைக்கூட சுயசௌகரியத்திற்கென புனைந்து கொண்ட கூட்டம் சொல்லும் கதைகளை நாம் எப்போது புரிந்து கொள்ளப்போகிறோம்?

6 comments:

  1. அழுக்கு என்பது இன்று அரசியல் விவாதமாக இருக்கிறது. முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு சமூக நல ஆர்வலர்கள் சேரிகளுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளை குளிப்பாட்டுவார்களாம். (இன்னும் கூட லல்லு பிரசாத் யாதவ் அதை செய்கிறார்.) தலித் மக்களை பலர் இந்த வகையில் புனிதப்படுத்த தொடங்கிய காலகட்டத்தில் தான் இந்த அழுக்கு என்பது பொருளாதார நிலையால் விளைந்தது, ஆனால் அதனை அழுக்கு vs புனிதம் ரீதியில் வகைப்படுத்தி சாதி கட்டுமானத்தை இன்னும் இறுக்கமாக்குகிறார்கள் என மக்கள் கண்டு கொண்டார்கள்.

    அச்சூழலில் அழுக்கினை புகழும் கதைகள் இருப்பது ஆச்சரியம் தாம்

    ReplyDelete
  2. குளத்தில் எறிந்த கல் போல பல அதிர்வுகளை, எண்ணத் தொடர்களை இந்தப் பதிவு ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  3. அதிசயிக்க வைக்கிறீர்கள். மறக்க முடியாத இடுகை.

    ReplyDelete
  4. அழகின் அழுக்கில் புனிதம் புலப்படுகிறது... அழுக்கு மட்டுமே அழகாகியும் இருக்காது!



    அற்புதமான வாக்கியம்.

    சீரான பழுவற்ற முகத்தில் ஒரு கருப்பு மச்சம் அழகினையும், காமத்தையும் கூட்டிக் கொடுப்பது போலத்தான் இந்தக் கதையும்.

    சமூகத்தின் செயல்பாடுகள் என்றுமே ஒரு கேள்விக்குறி!

    Historically, incidents happened as a matter of convienence, always!!

    ReplyDelete
  5. 'அழுக்கின்' அச்சத்தை வைத்தே முகப்பூச்சு நிறுவனங்கள் அழகின் பிரமையை ஊதிப்பெருக்குகின்றன. எது அழகு, முகமா, அகமா என்று ஒரு பதிவு எழுதலாமே டாக்டர்? மீண்டும் தங்கள் விரல்கள் உற்சாகத்துடன் எழுத வந்தமைக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete