Saturday, May 23, 2009

வாய்ச்சொல்

வருத்தமாக இருக்கிறது என்பதற்காக நிஜம் பொய்யாகிவிடுவதில்லை
பிரபாகரன் இறப்பு பற்றியல்ல என் கவலை... பின்னாளில் பிரபாகரன்போல் வரத்துடிப்பவர்கள் பற்றியே என் சிந்தனை. சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்பது பற்றிய மிதப்பை மீறி, அதே பாட்டில் வளர்ச்சி நோக்கிப்பாடப்பட்ட ஆலைகள் கல்விச்சாலைகள் குறித்து யோசிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது.
ஆலைகள் உருவாக்க முதலாளிகள் நிறையபேர் இந்தியாவிலிருந்தே துடிப்பாகக்காத்திருக்கிறார்கள்,
கல்விச்சாலைகள்?
முப்பது ஆண்டுகள் போரிட்டுப்படிக்காத தலைமுறை, அடுத்த முப்பது ஆண்டுகளிலாவது பாடம் பயில வேண்டாமா..
படிக்காதவன் என்ன செய்யமுடியும்...படித்தவர்களே வாக்களிப்பதால் வாழ்க்கை மாறும் என்று நம்பும்போது.. ஈழம், புலி, பீற்றல், பொய்...எல்லாமும் செளகரியமான, பாதுகாப்பான அந்நிய அன்னியோன்னியத்தின் வெளிப்பாடுகளாகிவிட்ட வேதனையான நிஜத்தில், பொய்களாகிப்போவதென்றாலும், கனவுகளை மீட்டுப்பார்ப்போம்..
அங்கே குழந்தைகள் காத்திருக்கிறார்கள்
உங்கள் பதிவுகளுக்காக அல்ல, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உணவுப்பொட்டலங்களுக்காக அல்ல, உங்கள் முதலாளிகள் போடப்போகும் சாலைகளுக்காகவும் அவற்றின் ஓரம் உருவாகப்போகும் ஆலைகளுக்காகவும் அல்ல, நீங்கள் தருவதாகப்பாவனை காட்டும் மருத்துவ உதவிக்காகவும் அல்ல...
அந்தக்குழந்தைகளின் கண்களில் ஒரு புரியாத வருங்காலம் வெறுமையாய் மின்னுகிறது..
என்ன செய்யலாம்?
பதிவெழுதி,
பார்ப்போர் எண்ணிக்கை எண்ணி
நாளை காலை பத்திரிக்கை படிப்போமா..பழக்கமில்லாமல் புதிதாய் உருப்படியாய் சிந்திப்போமா?
இவ்வளவும் பேச எனக்கு வாய் தான் இருக்கிறது, செயலில் இறங்க வசதியில்லை..இருப்போர் காதில் இது விழுமா என்று கூடத்தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டுத்தட்டுத்தடுமாறி..தட்டச்சு செய்கிறேன்..வக்கில்லாமல்தான்!

12 comments:

  1. -------------------------

    இவ்வளவும் பேச எனக்கு வாய் தான் இருக்கிறது, செயலில் இறங்க வசதியில்லை..இருப்போர் காதில் இது விழுமா என்று கூடத்தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டுத்தட்டுத்தடுமாறி..தட்டச்சு செய்கிறேன்..வக்கில்லாமல்தான்!

    ---------------------------------

    எனை உருக்கிய வரிகள்....வார்த்தைகள் வரவில்லை..

    :(

    ReplyDelete
  2. """"வக்கில்லாமல்தான்! """"

    lately i have been afflicted by this syndrome :-((

    ReplyDelete
  3. //அந்தக்குழந்தைகளின் கண்களில் ஒரு புரியாத வருங்காலம் வெறுமையாய் மின்னுகிறது..//

    கடந்த காலத்தை மறக்க நினைத்து, நிகழ்காலத்தை நொந்து, எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி உட்கார்ந்து இருக்கும் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன, எப்படி,எங்கே செய்வது என்றுதான் தெரியவில்லை. வலி நிறைந்த கட்டுரை.

    ReplyDelete
  4. இழப்பும் இயலாமையும் தரும் வலிகள் நிஜங்களை தெரிந்தே ஒதுக்கி வைப்பது மனித இயல்புதான். வலி குறைந்ததும் காலப்போக்கில் நிஜங்களை மனம் ஒப்புக்கொள்வதும் இயல்புதான்

    ReplyDelete
  5. எனக்கும் புரியல சார் ! அழுகையும் வர மாட்டேன்குது ............அடக்கவும் முடியல ! ......ஆனா உங்க கருத்துக்கள்தான் எங்க எல்லார் மனசுலேயும் ..........வலி நெஞ்சு பூராவும்....... பிரபாகரனுக்காக அல்ல ! எண்ட சகோதரர்களுக்காக ..............

    ReplyDelete
  6. வக்கில்லாமல்தான் ///

    சாட்டையடி தான் சார்,

    ஆனா என்ன செய்யறது??

    ReplyDelete
  7. என்ன பண்றது?-கவிதைகள்
    நவம்பர் 30, 2008


    என்ன பண்றது?
    ஒவ்வொரு முறையிலும்
    பதில்களுக்காய் என் கேள்விகள்
    ஆனால் கேள்விகளே உன்னிலிருந்து
    பதில்களாய்……

    வறுமையில் உழலும் விவசாயி
    வேலையிழ்ந்த தொழிலாளி
    பாலின் சுரப்பை நிறுத்திய
    மார்பகங்கள் அரைக்க
    மறந்த இரைப்பைகள்
    அடங்கிப்போன கூக்
    குரல்கள் எல்லாவற்றுக்கும்
    பதில் சொல்கின்றாய் “என்ன பண்றது?”

    போதைதலைக்கேறாது கண்டதையும்
    குடித்து புரள்கின்றன
    மெத்தைகள்….

    தெரியும் இடத்திலெல்லாம்
    மாட்டிக்கொண்டு திரிகிறார்கள்
    இலவசமாய்
    துரோகத்தனத்தையும் சேர்த்து…..


    எல்லாவற்றுக்கும் ரெடிமேடாய்
    பதில் சொல்கிறாய் “அதுக்கு
    என்னபண்றது?”,முதல்ல
    நம்ம வாழ்க்கையை பார்க்கணும்…..

    சரி பார்க்கலாம் உன்
    வாழ்க்கயை காலை முதல்
    மாலை வரை ஒவ்வொரு நொடியும்
    நீ விலை பேசப்படுகிறாயா இல்லையா?

    உலகமயம் ஆணையிட்டப்படி
    நுகர் பொருட்களால்
    நுகரப்படுகின்றாயா இல்லையா?

    நீ உண்ணும் உணவை
    உடுத்தும் ஆடையை,
    ஆபரணங்களை நெஞ்சில்
    கை வைத்துசொல் உனக்காகத்தான்
    மேற்கொள்கின்றாயா? இப்போதும்
    மவுனமாய் உதிர்க்கின்றாய் “என்னபண்றது?”

    நான் மவுனமாய் அல்ல
    உரக்கச்சொல்லுவேன்
    உன் “என்னபண்றது” என்பது
    தான் உன் பதில்
    தப்பித்தவறி எதுவுமே
    உனக்கு செய்து விடக்கூடாது
    என்பதில் பிறந்த
    பதில் அது…..

    தரகர்களின் சூறையாடலில்
    சிக்கி திணறுகின்றது உன்
    தேவைகள்
    நாளை கூட
    நாளையென்ன நாளை
    இக்கணமே கூட நீ
    எறியப்படலாம் சக்கையாய்……

    இப்பொழுதாவது உண்மையாய்
    கேள் ” என்ன பண்றது?”
    இருக்கின்றது அது தான்
    போர்
    உனக்கான , நமக்கான
    வாழ்வை
    தேர்ந்தெடுக்க
    நாமே போராளியாவோம்.
    இனியும் புலம்பிக்கொண்டிராதே
    “என்னபண்றது”என்று அது
    அடிமைகளின் ஆசை மொழி.







    http://kalagam.wordpress.com/

    ReplyDelete
  8. //அங்கே குழந்தைகள் காத்திருக்கிறார்கள்
    உங்கள் பதிவுகளுக்காக அல்ல, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உணவுப்பொட்டலங்களுக்காக அல்ல, உங்கள் முதலாளிகள் போடப்போகும் சாலைகளுக்காகவும் அவற்றின் ஓரம் உருவாகப்போகும் ஆலைகளுக்காகவும் அல்ல, நீங்கள் தருவதாகப்பாவனை காட்டும் மருத்துவ உதவிக்காகவும் அல்ல...
    அந்தக்குழந்தைகளின் கண்களில் ஒரு புரியாத வருங்காலம் வெறுமையாய் மின்னுகிறது..
    என்ன செய்யலாம்?//

    உணர்ச்சியோடும், தெளிவோடும் கவிதையாய் விரியும் வரிகள்...
    இது மாத்திரமே போதுமென்று தோன்றுகிறது. உரிமையோடு சொல்ல விரும்புகிறேன். இந்த தொடர்ச்சியான இயலாமை தொனிக்கும் சுயமதிப்பிடுதல்(self-evaluation) தேவைதானா?

    ReplyDelete
  9. சென்ற வருடம் இந்த காலங்களில் மனதின் நிலை.இன்றும் கூட ஏதாவது ஒளி தெரியுமா என்ற தேடல் மட்டுமே மிச்சம்.

    ReplyDelete
  10. நல்ல பயனுள்ள பதிவு

    ReplyDelete