ரேடியோபொட்டி என்று என் வீட்டில் 60களில் அழைக்கப்பட்ட சாதனம்
என் வாழ்வின் முக்கியமான அங்கம்.
இந்தப் படத்தில் உள்ளது தானா என்று நிச்சயமாய் இன்னும் சொல்லமுடியாவிட்டாலும்
இதே போலொரு ரேடியோ என் சிறுவன் வயதில் எனக்கு நிறைய சொல்லித்தந்தது.
அது ஒரு ஃபிலிப்ஸ் ரேடியோ, முன்னால் பியானோ மாதிரி
பட்டன் இருக்கும்..அதையெல்லாம் நான் அமுக்கி எதுவும் செய்ததில்லை, அப்படியொரு விளையாட்டை
என் தம்பி நடத்தி, மெக்கானிக் வந்து சரி செய்யும் வரை வீட்டிலும் அதில் உள்ளோரிடமும்
இறுக்கம்,
அப்படி ஆரம்பித்த என் ரேடியோ உறவுதான் இன்றெல்லாம் ”கௌஸல்யா
சுப்ரஜா” என்று தூக்கத்தில் தட்டி எழுப்பி,
“கமலாகுச சூசுச..” என்று முழுமையாய் விழிக்க வைத்து விடுகிறது. விழித்தெழுந்து வெளிவந்தால்
தூரத்து மசூதி அருகே ஒலிக்கிறது..இதெல்லாம் ப்ரொக்ராம்ட்..ஐந்து மணிக்கு நான் அங்கே
தூங்கவில்லை என்றாலும் இன்றைய ரேடியோ அந்த அலைவரிசையை இழுத்து வந்து என் படுக்கை அறையில்
ஒலிபரப்பும்…அன்றெல்லாம் அப்படியில்லை.
இந்த ரேடியோதான் “ உன்னையறிந்தால்..” பாட்டையும், “எங்களுக்கும்
காலம் வரும்” பாட்டையும், ‘தருமம் தலைகாக்கும் (டிஎமெஸ் அப்படித்தான் பாடியிருப்பார்)
பாட்டையும் மனத்துள் பதிய வைத்தது- இசையாய்த்தான் அர்த்தம் அறியும் வயதில்லை அப்போது.
அப்புறம்தான் வானொலி அண்ணா, ஜெயஸ்ரீயின் தேன்குரல் எல்லாம்.
Digression என்றாலும் அந்த ஜெயஸ்ரீ என் 1994 வானொலி தொடர்நிகழ்ச்சியின் தலைப்பிசையை
நான் எழுதிய பாடலாகப் பாடியபோது என் கண்ணின் ஈரம் நிஜம். Coming back, இந்த ரேடியோ
எனக்கு நிறைய கற்றுத்தந்தது. நேரடியாய் பாடம் எடுக்காமல் மனத்துள் பலவற்றையும் பதித்து
வைத்தது.
அந்த ரேடியோ வாங்கித்தந்த என் பணக்கார மாமா கர்நாடக சங்கீதம்
கேட்பார். முதலில் bore என்று ஒதுங்கிய என்னை கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இசையும் ஈர்த்த்து.
சௌடையா வயலின், மாலி குழல் என்றெல்லாம் பின்னாளில் அடையாளம் கண்டு தேடிச் சேகரித்த
இசைத்தட்டுகள், அந்த வயதின் அழுத்தமான பதிவுகளின் விளைவுகள்தான்.
என் Anglo-Indian பள்ளியின் தாக்கத்தால் அந்த ரேடியோ மூலம்தான்
JimReeves, Cliff Richards, Michael Holiday, beatles, அறிமுகம். இன்னும் அந்த இனிய
பாடல்கள் என் இறுக்கமான தருணங்களை இலகுவாக்குகின்றன.
ரேடியோ மூலம் கற்றுக்கொண்டேன், தெரிந்துகொண்டேன் என்றெல்லாம்
நான் சொன்னாலும் அப்படி கற்றவை அனைத்தும் இசை மூலமே. என்னைவிட (வயதில் மட்டுமே இளையவரான)
காயத்ரியும் எனக்கு ரேடியோ மூலமே பரிச்சயம், பின்னாளில் பழகுதற்கினிய நட்பாய் மாறியிருந்தாலும்.
ரேடியோ ரொம்பவும் மாறிவிட்டது. அந்தஸ்தின் அடையாளத்திலிருந்து
நடக்கும்போதும் பொழுது போக்க உதவும் உபகரணம் ஆகிவிட்ட்து. வடிவம் மட்டுமல்ல அடக்கமும்
மாறிவிட்டது. ஆனாலும் இன்னமும் அது எனக்குக் கற்றுத்தந்துகொண்டே இருக்கிறது.
கொசகொச என்று தொடந்து பேசும் இளைஞர்களிடமிருந்து இன்றைய மொழியைக்
கற்றுக்கொள்கிறேன், பாடல் வரிகளிலிருந்து இன்றைய ரசனையை அறிந்து கொள்கிறேன், இசைக்கோப்பின்
பரிமாணங்களை உணர்ந்து கொள்கிறேன், இவைமூலம் என்னை கேட்கும்போதெல்லாம் புதுப்பித்துக்கொள்கிறேன்.
இப்போதெல்லாம் வரும் சுருக்கிய/சுருக்கமான பேட்டிகளில், கேட்பவர்
சொல்பவர் இருவருடையதுமான மேலோட்டமான, அவசரமான, காலமே காசின் கணக்காயான நிலைகளையும்
கேட்டு மனத்துள் தேக்கிக்கொள்கிறேன் – என்னிடம் கேட்கும் போது என் பதில்களைச் சுருக்கிக்கொல்கிறேன்..(
தட்டச்சிடும்போது கொல்கிறேன் என்று விழுந்ததை மாற்றாமல் விடுகிறேன்…விரிவாக விளக்காமல்
புரிகிறதா என்று பார்க்காமல், நிமிடக் கணக்கையே நோக்கிப்பேசுவதால்).
இது “என்னன்னாலும் அந்த காலம் மாதிரியா” எனும் மாதிரி புலம்பல்
இல்லை. வந்திருக்கும் மாற்றங்களை உள்வாங்கி, வரப்போகும் மாற்றங்களுக்குத் தயாராயிருந்தாலும்,
இப்போதெல்லாம் என்னமோ குறைகிறது…அது ஒரு வேளை நேர்மையின்
நன்னெறியாகவும் இருக்கலாம்...அல்லது “இன்று வந்ததும் அதே நிலா..” என்பதை ஏற்கமுடியாத வயதின் வறட்டுத்தனமாகவும் இருக்கலாம்.
மனத்தின் நினைவுகளில் மறக்க முடியாத நினினைவுகளாக இன்றும் தொடர்ந்து வரும் இந்த அனுபவம் வாசிக்கும் போதுஎன்னையும் கடந்த காலத்திற்கே இழுத்துச் சென்று விட்டது .
ReplyDeleteமுகத்தார் வீடு ,ஒலியும் ஒளியும் ,நீங்கள்
கேட்டவை ,தமிழில் ஒலிபரப்பாகும் பிறந்த நாள் வாழ்த்தொலி ,இவைகளைப் போன்ற இனிய தொடரைக் கேட்க்கும் போதெல்லாம் மக்கர் பண்ணும் வானொலிப் பெட்டி மீது நாம் தட்டிய தட்டுக்கள்:) காலத்தால் என்றும் அழியாத கறுப்பு வெள்ளை நினைவுகளே .மிக்க நன்றி தங்களின் பகிர்வு கண்டு மனம் மகிழ்ந்தேன் .மேலும் தொடர வாழ்த்துக்கள் .
நான் ஜெனரேஷன்-Y. இருப்பினும், எனக்கும் வானொலி பெட்டியினோடு ஒரு இனிய உறவு உண்டு. 2௦௦௦-களில் பிறந்த மொட்டுக்களைத் தவிர மற்ற எல்லாவருக்கும் ஒரு ரேடியோக் கதை இருக்கும் என்பது என் எண்ணம். நினைவு அலைகளை எழுப்பிவிட்டீர்கள். உங்களுடைய 'பிலிப்ஸ்' போன்று எங்கள் வீட்டில் ஒரு 'நேஷனல் பானசோனிக்' நாள் முழுவதும் ஓயாமல் உழைத்த ஒரு ஜீவன்(அதை ஜீவன் என்று சொல்வது தவறல்லவே?!) எனக்குத் தம்பி தங்கையர் இல்லை. ஆகையினால் உங்கள் தம்பி-யின் கைங்கரியமும் நானே செய்தேன். இரண்டாய் பிளந்து எங்கிருந்து, எப்படி பாடல் வருகிறது என்று அறியும் ஒரு முயற்சியில், அதற்கு ஒரு நிரந்தர ஓய்வு அளித்துவிட்டேன். இன்றும் என் அம்மாவிற்கு என்மேல் வருத்தம் உண்டு, அவருடைய உயிர்த் தோழியை கொன்றதன் குற்றச்சாட்டோடு. :)
ReplyDelete'சுருங்கிங்கிவரும்' (எல்லா வகையிலும்) உலகத்தைப் பற்றிய இறுதிப் பத்தி அருமை. எழுத்துப் பிழை மாற்றாமல் விட்டதில் வஞ்சப் புகழ்ச்சிஅணியின் வாடை வீசுகிறதே! ;)
அன்று ரேடியோ-வில் வரும் நிகழ்சிகளை ஒரு நொடித் தவறி விடாமல் கேட்டு ரசித்த என் அதே காதுகள் இன்று வரும் பல நிகழ்சிகளையும் வடிகட்டியே உள்ளே தள்ளுகின்றன. ஏன் என்று தெரியவில்லை.வயோதிகமாய் இருக்கலாம்! :-P
எங்கள் வீட்டிலும் அப்படியொரு மர்ஃபி ரேடியோ இருந்தது. இரண்டுபுறமும் வளைவாக குட்டியாக பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். மரத்தால் ஆன பெட்டி. முன்புறம் நீங்கள் கூறியதுபோல் இல்லாமல் மெட்டலில் வட்ட வடிவில் நான்கு பொத்தான்கள். அதில் அப்போதெல்லாம் இலங்கை தமிழ் ஒலிபரப்பில் வெளியாகும் சினிமா பாட்டுக்கள்தான் பிரசித்தம். கால வேளைக்கு ஏற்றாற்போல் ஒளிபரப்புவதில் அந்த கால ரேடியோ ஜாக்கிகள் அழகான இலங்கை தமிழில் பேசும் அழகே தனி.
ReplyDeleteநீங்கள் சொல்வதுபோல் அவசர யுகத்தில் அவசரமாய் போடும் இசையுடன் வார்த்தைகளே புரியாமல் பாடுவதெல்லாம் ஒரு பாட்டா என்று பல வேளைகளில் நினைத்ததுண்டு. வச்சதும் பூக்கணும் என்று காலத்திற்கேற்றாற்போல் வரும் பாடல் வரிகளும் அவசரமாகத்தான் வந்து விழுகின்றன. இது என்ன பாடல் என்று நிதானிப்பதற்குள் பாட்டு முடிந்துவிடுகிறது.
மாலை வேளைகளில் கையில் பித்தளை தம்ளரில் கொழு கொழு பாலுடன் வெல்லக் காப்பி (எங்கள் ஊரில் அப்போதெல்லாம் கருப்பட்டி காப்பிதான்) யுடன் மாலை பொழுதின் மயக்கத்திலே என்று கேட்பதில் இருந்த அந்த ஆனந்தம்...ஹூம்... அது ஒரு காலம்... உங்களின் நினைவலைகள் என்னையும் பின்னோக்கி செல்ல வைத்துவிட்டது. நன்றி.
றேடியோக்களின் ஆளுமையும் இருப்பும் அலாதியானது. திருச்சி வானொலி, சிலோன் வானொலிகளை கேட்டே நான் வளர்ந்தவன். காலையில் ஒலிக்கப்படும் செய்திகள், குறிப்பாக சரோஜ் நாரணனசாமி, தென்கச்சி சுவாமினாதன் போன்றோரின் குரல்களும், அழகிய டிங் டாங் ஒலிக்குப் பின் விளம்பரங்களும், பாடல்களும் பேரானந்தம் ஊட்டுபவை. மாலை நேரங்களில் எப்போதும் சிலோன் வானொலி மற்றும் பிபிசி இரவுகளில் கேட்போம். அவை எல்லாம் இன்று மாறிவிட்டன, டிவி, பண்பலை, இணைய வானொலி என அனைத்தும் எதோ வெந்நீரை காலில் ஊற்றியது போல அவசர கெதியில்.. ம்ம்ம்.
ReplyDeleteஉங்கள் நினைவுகள் நிச்சயம் சில இழப்புக்களை ஞாபகப்படுத்துகிறது. அந்தக் கால ரேடியோ கற்றுத்தந்தவை மிக அதிகமே. உங்களின் பழைய ஞாபகங்கள் பல இன்னிசைகளை மீட்டுகின்றன.
ReplyDeleteசிலவற்றைச் சொல்லும்போது அதற்குப் புலம்பல் என்று பெயர் சூட்டத்தேவையில்லை. இதோ இப்போதுகூட ரேடியோ இருக்கிறது. எஃப்எம் என்ற பெயரில். அதனைத் தொடர்ந்து கேட்ட பலபேர் உங்களைத்தான் தேடிவர வேண்டும் சிகிச்சைக்காக.
நாம் நினைத்திருப்பதை விட குறைந்த வயதில் பிள்ளைகள் மனதில் ந்ல்லவைகள் பதிக்கப்படனும். ஆசிரியர்கள் இதை தவிர .......எனக்கு என் ஆசிரியர்கள் பலர் மேல் பெரும் ப்ற்று உண்டு.மாதம் ஒரு பள்ளி முக்கியமாக moral science p.t என ஒரு வகுப்பு நேரம் கூட ஒதுக்காத பெரும் பள்ளிகள் என போய் இள்ம் வயதில் நல்லதை செய்யக் கூடியவர்கள் பேசி அவ்ர்கள் மனதில் நல்லது எது தீயது எது என் பத்ய செய்யனும்.அவங்கவங்க பகுத்யில் உள்ள பள்ளிக்கூடத்தை தேர்ந்தெடுத்து செய்யலாம்.எனக்கு போதிக்கும் அளவு அறிவு இல்லை. இ தை சொல்ல MSW சென்று ஒரு மோசமான விளைவு ஏற்பட்டதுதான் மிச்சம்.வானொலி இப்பொது கொச கொதான் சினிமா பாடலகளும் ஒரேகட முடதான்.பட்டுக்கோட்டை என். எஸ் கே ,கண்ணதாசன் வாலியின் சில பல எல்லாம் தேடி வ்ந்து நல்லது பதிய வைத்து அந்தக் காலம்...........
ReplyDeleteபண்பலையின் அரட்டை பயனற்றதே
ReplyDeleteஆயினும் ஆங்காங்கே சில தகவல்கள்
அதன் வடிவம் உருவத்திலும் படைப்பிலும் மாறிதான் விட்டது
I can relate to this post. I grew up with a big hunk of radio that takes over a minute to warm up before we could tune any stations. As I grew, I grew up with the advancing technologies such as transistor radio, portable stereo radio, two-in-ones. Now, I listen to a constellation of world radio broadcasts through my mobile phone.
ReplyDeleteThe conversations and their styles on radio interviews is evolving faster than I can. Life is an interesting journey.