என் நண்பன் செத்துவிட்டான் எனும் செய்தி வந்தவுடன் நான் இடிந்து ஒடிந்து விடவில்லை, அழவில்லை, ஆர்ப்பரிக்கவில்லை. அவன் வீட்டு முகவரி மட்டுமே இன்னொரு நன்பனிடம் விசாரித்தேன். சாவுக்குப் போய் வந்தேன். இது நேற்று காலை.
பின்னர் நடந்தது, தினசரி யதார்த்த யந்திரத்தனம். இரவு அவன் ஞாபகம் வந்தது. அவனைப் பற்றி என் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தேன்....
அவன் பெயர் சேதுராமன். நாங்கள் இருவரும் சென்னை ஸெய்ண்ட்மேரீஸ் ஆங்கிலோயிந்தியப் பள்ளியில் ஒரே வகுப்பு மாணவர்கள் -1965 முதல்! பள்ளிப் படிப்புக்குப் பின், இருவரும் வெவ்வேறு கல்லூரி, வெவ்வேறு துறை. எப்போதாவது ஒரு பஸ் ஸ்டாண்டில், ட்ரைவின்னில்... என்று சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் எங்களுக்குள் தூரம் வராத ‘என்னடா’ தான்.
இருவருக்கும் வேறு தொழில், வேறு வாழ்க்கை. நாங்கள் ஒருவரை ஒருவர் தத்தம் திருமணத்திற்குக்கூட அழைக்கவில்லை. ஆனாலும் இருவருக்கும் தெரிந்தவர்களைப் பார்த்தால் ‘அவன் எப்படி இருக்கான்?’ என்று கேட்காமல் இருந்ததில்லை.
நான் டாக்டராகவும், அவன் ஒரு மருந்துக் கம்பெனியின் மேலாளராகவும் இருக்கும் போதுதான் பல நாள் கழித்துச் சந்தித்தோம். அவன் விற்க வேண்டிய மருந்தை, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுதும் மருத்துவர்கள் பரிந்துரைத்துக் கொண்டிருந்த காலம்.. “இதை ஏன் என் கிட்ட ப்ரமோட் பண்றே?” என்று நான் கேட்டதற்கு அவன் சொன்ன பதில், “ச்சே..ப்ரமோட் பண்ண வரலேடா, சும்மா உன்னைப் பார்க்க வந்தேன்..”
அதன் பிறகு அவ்வப்போது சந்தித்தோம், சிரித்தோம், பழங்கதை பேசினோம், சொந்தக்கதைகள் புலம்பினோம். தொடர்பு திடீரென்று ஆரம்பித்தமாதிரியே திடீரென்று காணாமல் போனது.
மனநல நிபுணத்துவ மேற்படிப்பு மாணவனாய் நான், திமிருடனோ தன்மானத்துடனோ ஒரு வாத்தியாரை அடிக்கப் போனதால், இரண்டு முறை ஃபெய்ல்! அப்போது அவன் ஒரு மருந்து கம்பெனியின் முக்கிய பொறுப்பில் இருந்தான், தற்செயலாகச் சந்தித்தோம். “இந்த மாதிரி எக்ஸாம் எல்லாம் வெட்டிடா..” என்றேன். அப்போதுதான் தேர்வு முடித்து நான் வீட்டுக்கு வந்திருந்தேன். அவன் பதில் சொல்லாமல் போனான். ஒரு மணி நேரத்தில் அவனிடமிருந்து ஒரு தொலைபேச்சு- “டேய் நீ பாஸாய்ட்டே”...”உனக்கு எப்படிடா தெரியும்?”… “உன் எக்ஸாமினர் சொன்னாங்கடா”. “ம்” என்று கூடச் சொல்லாமல் பேச்சை நான் வெட்டிய அரை மணி நேரத்தில் நேரில் வந்தான்.
அவன் மருந்துக் கம்பெனியின் முக்கிய பொறுப்பாளன் என்பதால் சென்னைக்கு வரும் வெளியூர் மருத்துவர்களைக் கவனித்துக் கொள்ளவேண்டியது தொழில் நிர்ப்பந்தம். நான் தேர்வுக்கு முன்னமேயே அவனிடம் சொல்லியிருந்தால் அந்தப் பேராசிரியையிடம் சிபாரிசு செய்திருக்கலாம். அவனுக்குத் தெரிந்ததே நான் தேர்வை முடித்தபின்! தன் உத்தியோக நிலை உதவியுடன் அந்தம்மாவை “என் ஃப்ரெண்ட் இன்னைக்கு எக்ஸாம் வந்திருக்கான்...ரிஸல்ட் என்ன மேடம்” என்று கேட்டதாகவும், அதற்கு அவர் “அவனை ஏம்ப்பா யாருக்கும் பிடிக்கலே, ஃபெய்ல் ஆக்கச் சொல்றாங்க? “ என்று கேட்டதாகவும் சொன்னான்.
அன்று ஏப்ரல் பதினெட்டு! மனநல மருத்துவனாய் ஆன நாள் என்று இப்போது சொல்லிக்கொண்டாலும், அன்று தான் மியாண்டாட் ஷர்மாவின் கடைசிப் பந்தில் ஸிக்ஸர் அடித்தது! ஓராண்டு கழித்து அதே பேராசிரியை தலைமையில் தான் தேசிய மனநல மருத்துவக் கருத்தரங்கில் நாடக உத்திகளைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தும் ஆய்வைச் சமர்ப்பித்தேன், அது வேறு கதை.
அதன் பின்... அவ்வப்போது பார்ப்போம், பேசுவோம் சிரிப்போம்... விடை பெறுவோம். அவன் என்னென்னவோ வியாபாரங்கள் முயன்றான், என்னிடம் எதையும் விற்க முயலவில்லை. என் நண்பனிடம் அவன் தம்பி வேலைக்குச் சேர்ந்தான் என்பதைத் தவிர அவனுக்கு நான் எதுவும் செய்ததில்லை... சாவுக்கு ஒரு மாலை கூட எடுத்துப் போகவில்லை.
என் நண்பன் செத்துவிட்டான் எனும் செய்தி வந்தவுடன் நான் இடிந்து ஒடிந்து விடவில்லை, அழவில்லை, ஆர்ப்பரிக்கவில்லை. சாவுக்குப் போய் வந்தேன். பல மாதங்களுக்குப்பின் குளிர்பெட்டியில் பிணமாய்த்தான் அவனைப் பார்த்தேன். தூங்குவது போலத் தெரிந்தது, அவன் தூங்கும் போது நான் அருகிருந்ததில்லை...ஆனாலும் அந்த்த் தூக்கம், துக்கம் குறைக்க என்று புரிந்தது, நெருக்கத்திற்கு அருகிருக்க வேண்டிய அவசியமில்லை என்று மீண்டும் எனக்குப் புரிந்தது.
நிறைய இறப்புகளை பார்த்தால் இந்த அமைதி வந்துவிடுமோ.
ReplyDeletesorry for writing in english.. i dont know how to write in tamil here...
ReplyDeletebut i feel like writing...
when i lost my dad on April 24th 2011..when he fell on my lap and died..i did not cry... i did not know to cry.. though i loved him so much..in 2009 when my mom died ..while i was feeding her the food with my hands... i assured the drs..that they can declare the death to me.. if she is no more...i promised i wont cry... nor show any emotions... as promised myself and my dad where outside in the ward... i went and told my dad...poor man ..he was'nt able to hold... i asked my driver to take him far off and take care of him.. until i finished the formalities..but Later... till today the moment she died...the moment my dad breathed the last... both these incidents are killing me... bringing tears in silence...as i dont have any brothers or sisters ...
//நெருக்கத்திற்கு அருகிருக்க வேண்டிய அவசியமில்லை// முற்றிலும் அன்பானது .
ReplyDeleteநெருக்கத்திற்கு அருகிருக்க வேண்டிய அவசியமில்லை
ReplyDeleteநீண்டநாள் தொடர்பில் இல்லாமல் இருந்த உங்கள் சேதுவைப் போல இப்போது நானும்... சி.முருகேஷ் பாபு. விகடன் நிருபராக இருந்தபோது உங்களைச் சந்தித்திருக்கிறேன். மீண்டும் தொடர்பு கொள்ள வாய்த்தமைக்கு மகிழ்கிறேன்
ReplyDelete“இவன் பிறப்பதுமில்லை. எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான். அனவரதன். பழையோன், உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்” - பாரதி மொழி பெயர்த்த கீதை வாக்கியம்
ReplyDelete\\ஆனாலும் அந்த்த் தூக்கம், துக்கம் குறைக்க என்று புரிந்தது,\\ இந்த வரிக்கு என்ன அர்த்தம்னு சத்தியமா எனக்குப் புரியல சார்!
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/06/4.html
ReplyDeleteதங்களை வலைச்சர்த்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.
ஐயா,
ReplyDeleteநண்பரின் பிரிவை நேர்மையுடன் எதிர்கொண்டு, நேர்மையுடன் பகிர்ந்து கொண்ட நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என்றால் ஒரு வரி.
//நெருக்கத்திற்கு அருகிருக்க வேண்டிய அவசியமில்லை என்று மீண்டும் எனக்குப் புரிந்தது. //
சென்னை பாஷையில் சொன்னால் "தூள் மாமே!"
மனசு வலிக்குது சார்.....
ReplyDeleteசாரே ....delete this after seeing
ReplyDeleteசென்னையில் சிறுவனை சுட்ட ராணுவ அதிகாரி அவனை வேண்டுமென்ற சுடவில்லை என்றும், பயமுறுத்துவதற்காக வேறு திசையில் சுட்டதாகவும் அது தவறிப் போய் அச்சிறுவன் மேல் குண்டு பட்டுவிட்டதாகவும் சொல்லியுள்ளார்.
நான் என் சிறுவயதில் மாங்காய் அடிக்க கல் எறிவேன். மாங்காயை குறி வைத்து எறிந்தால் மாங்காயே விழாது. ஆக, ஏதோ ஒரு திசையில் கல்லை எறிந்தால் அது போய் மாங்காய் மேல் பட்டு அது விழும். இதை வைத்து பார்க்கும் போது அந்த ராணுவ அதிகாரி சொல்வதில் உண்மை இருக்க வாய்ப்புண்டு என்பது புரிகிறது.
ஆகவே நீங்கள் யாரையாவது உண்மையிலேயே சுட விரும்பவில்லை எனில் அந்த குறிப்பிட்ட நபரை குறி வைத்து மட்டுமே சுடுங்கள். அப்போதுதான் குண்டு அவரை விட்டு விட்டு வேறு திசையில் போய் விழும். தப்பித்தவறி வேறு எங்கேயோ சகட்டுமேனிக்கு சுட்டு தொலைத்து மட்டும் விடாதீர்கள்.
(rudhran sir, இந்த அளவிற்கு எப்படி ஒருவன் சிறுவன் மீது ஈவுஇரக்கம் இல்லாமல் சுட முடியும்..ஒரு பதிவு எழுதலாமே நீங்கள்?)