Monday, July 12, 2010

சென்ற பதிவின் மீதி. (சுசப1.2)


முந்தைய பதிவின் தொடர்ச்சி.
 அப்போதும், அதாவது இப்போதும், எனக்கு பேனாக்கள் மீது ஒரு மோகம் உண்டு. மையூற்றிய பேனாக்களில் மட்டுமே எழுத முடியும் அந்தக்காலத்தில், அவளது கல்யாணத்துக்கு எனக்கு என்ன சட்டை வாங்கினார்கள் என்று நினைவில் இல்லை ஆனால் தங்கநிற மூடியுடன் ஒரு பைலட் பேனாவும் ஒரு ஹீரோ பேனாவும் கிடைத்தது நினைவிருக்கிறது. இவை இரண்டிலும் நிறைய மை நிரப்பினால் கூட பரீட்சைக்கு தாங்குமா என்ற பயத்தில் அப்போது பிரபலமாக இருந்த ரைட்டர் பேனாதான் கடைசியில் பள்ளி முடியும்வரை.
பேனாக்களைப் போலவே புத்தகங்கள் மீதும் எனக்கு இன்றும் தீராக்காதல் உண்டு. எழுதுகோல் தெய்வம் எழுத்தும் தெய்வம் என்பதை அப்போது நான் படித்திருக்கவில்லை. அன்று எனக்கு பாரதி தெரியாது, கண்ணதாசன்தான் கவிஞர். அருட்பா, திருப்புகழ், கம்பராமாயணம் என்று சில செய்யுட்கள் மனப்பாடமாக இருந்தும் அர்த்தம் புரியாததால் கவிதைக்கான ஒரு குளிர்ச்சாரலை மனத்துள் தெளிக்கவில்லை.
எழுத்தின் மீதும் எழுதுகோலின் மீதும் ஆசை அதிகரிக்க முக்கியமான காரணம் எனக்கு எந்த விளையாட்டிலும் ஈடுபாடு இல்லை என்பதுதான். அம்மா எனக்கு கிரிக்கெட் மற்றும் சதுரங்கம் ஆகியவற்றின் விதிமுறைகளைக் கற்றுத் தந்ததும் இந்தக் கட்டத்தில்தான் என்றாலும் எங்கள் பள்ளியில் அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. பள்ளியில் வருடந்தோறும் மேடை அமைத்து குத்துச்சண்டை போட்டி நடக்கும். வலிக்கும் என்பதைப் பார்த்தாலேயே தெரியும்!, அதில் நான் பார்வையாளனாகக் கூட முன்வரிசையில் இருந்த்ததில்லை. இந்தக் குறையை மறைக்கவோ என்னவோ படிப்பிலேயே கவனம் செலுத்தினேன். உணவு இடைவேளையில்கூட கையில் கதை புத்தகத்தோடு திரிய ஆரம்பித்தது அப்போதுதான்.
புத்தகங்கள் படிக்க மட்டுமல்ல பெருமையுடன் சேர்த்து வைக்கவும் என்பது இந்த வயதில் ஆரம்பித்த ஆசைதான். மூன்றாம் வகுப்பின் முடிவில் முதல் மாணவனாகத் தேர்வு பெற்றதும் என் அம்மா என்ன வேண்டும் என்று கேட்க, புத்தகம் என்று சொல்லி, பள்ளியருக்கே இருந்த கடையில் நான் பெருமையோடும் ஆசையோடும் வாங்கிய முதல் புத்தகம், Wizard of Oz. அந்த வயதுக்கும் வகுப்புக்கும் அப்பாற்பட்ட பல சொற்கள் அதில் இருக்க அப்போதுதான்அகராதியின் மீதும் ஆர்வம் வந்தது. வார்த்தைகளைச் சேகரிக்க மட்டும் செய்யாமல் முடிந்தவரை பயன்படுத்தியும் பார்க்க ஆரம்பித்தது இந்த கட்டம்தான். தவிர்க்க முடியாத Enid Blyton தவிர சிறுவர்களுக்கென்றே சுருக்கமாகவும் எளிமையாகவும் எழுதப்பட்ட பல நூல்களுடன் இந்த வயதில்தான் பரிச்சயம். தமிழ் படிக்க மட்டுமல்ல, அந்தக் கதைகளை அறிமுகம் செய்து கொள்ளவும் ராஜாஜியின் சக்ரவர்த்தி திருமகனும், வியாசர் விருந்தும் மிகவும் உதவின. பள்ளிச்சூழல் காரணமாக தமிழ்ச் செய்யுள் கூட ஆங்கிலத்தில் அர்த்தம் தெரிந்து கொள்ளும் பழக்கம் அப்போது ஆரம்பித்தது. கல்கி, விகடன் தயவால் தமிழும் எழுத வந்தாலும் அப்போதெல்லாம் சிந்திப்பதும் சொல்லாடுவதும் ஆங்கிலத்தில்தான். சாமி கும்பிடும்போது கூட ப்ளீஸ் என்றுதான் வரம் கேட்டிருக்கிறேன்.
அந்த வயதுகளில் இருந்தது ஒரு பயம் கலக்காத பக்தி. பயம் இல்லை என்பது போலவே தீவிர ஈர்ப்பும் இல்லாத பக்தி. அந்த பக்தி ஒரு நியமம். காலையில் பள்ளிக்குச் செல்லுமுன் கற்பூரம் காட்டிவிட்டு நெற்றியில் ஒரு திருநீற்றுக் கீற்று இடப்படும். பள்ளி பாரிமுனையில் அரண்மனைக்காரர் தெரு என்று மருவிய ஆர்மேனியன் தெரு. எங்கள் பள்ளியோடு இணைந்ததுதான் புனித அந்தோனியார் ஆலயம். அதனாலேயே பள்ளியில் நுழைந்தவுடன் சர்ச்சுக்குப் போவேன். அங்கே எனக்குப் பிடித்த சகாயமேரி படத்திடமும் பாத்திமா சிலையுடனும் தான் அந்த வயதுக்கான பக்தி-பேரம் ஆரம்பம். சரியாகப் பன்னிரண்டு மணிக்கு ஆலயமணி முழங்கும், அப்படிக் கற்றுக் கொண்டதுதான் சில பிரார்த்தனைகள். பரீட்சைக்கு முன்னாள் கண்டிப்பாகக் கண்டுகொள்ளப்பட வேண்டியவர்களாக பூக்கடை வாசலின் பிள்ளையாரும், சட்டக் கல்லூரி வாசலில் இருந்த பிள்ளையாரும் இருந்தார்கள். எல்லாமே ஒரே பிள்ளையார் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.
பக்தி என்பதும் ஒரு கொண்டாட்டமாகவே கண்டு வளர்ந்திருக்கிறேன். பிள்ளையாருக்கும் ஜீஸசுக்கும் பர்த்டே அதனால் விசேஷம், எனக்கு பர்த்டே கொண்டாடுவது போல என்று வளர்ந்த சூழல் அது. கிருஷ்ணன் பர்த்டேவுக்கு வீட்டில் அழகான குட்டிக்குட்டி பாதங்கள் வரையப்பட்டிருக்கும். இது தவிர நவராத்திரி, சிவராத்திரியில் எங்கள் குலதெய்வம் என்று கூறப்பட்ட அங்காளம்மன் கோவிலுக்குப் போவதும் ஒரு கொண்டாட்டம். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அந்த அங்காளம்மன் கோவில் இருக்கும் தெருவின் அகலம் இன்னும் அதேதான் என்றாலும், அந்த வயதில் அது இன்னும் அகலமாக கண்ணுக்குப் பட்டிருந்தது. எல்லாமே அந்த வயதில் வேறு மாதிரிதான் தெரிந்திருக்கின்றன. என் அப்பா உட்பட!

இதுவரை அம்மா அத்தை என்று தான் சொல்லி வந்திருக்கிறேன், அப்பா பற்றி எழுதவில்லை என்று இப்போது தெரிகிறது. அப்பாவுக்கும் எனக்கும் ஒத்துவரவில்லை என்று அவரைத் தவிர்க்க ஆரம்பித்தது பதினேழு வயதுக்கப்புறம்தான். நெருடலானவற்றை ஒதுக்குவது மனம் தன்வசம் வைத்திருக்கும் தந்திரங்களில் ஒன்று. பத்துவயதாகும் வரை அப்பாவின் அன்பும் தனியாகவே இருந்தது. மாதமொருமுறை மவுண்ட்ரோடில் சினிமா பார்க்கக் கூட்டிப் போவார். நிறைய முறை ஓடியன் தியேட்டரில் ஆங்கிலப் படங்கள்தான். படம் முடிந்து வரும் வழியில் புகாரியில் டீ குடிப்பதும் ஒரு சம்பிரதாயமாகவே இருந்தது.  அப்பாவின் மூலம் தான் ஓவியம் பரிச்சயம்.
அப்பா ஒரு சிறந்த ஓவியர். சிறந்த என்பதை சும்மா பெருமைக்காகச் சொல்லவில்லை. சென்னை கவின்கலைக் கல்லூரியில் முதல் மாணவனாகத் தேர்வானவர். ராய்சௌத்ரி என் அப்பாவுக்கு எழுதிய கடிதம் ரொம்ப காலம் என்னிடம் பத்திரமாக இருந்தது. வீட்டில் அப்பா வரைவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தச் சிறுவயதில்தான் தூரிகை எப்படிப் பிடிப்பது, கோடுகளை எப்படி வரைவது என்று பார்த்துப் பார்த்துக் கற்றிருக்கிறேன். நானும் ஓர் ஓவியனாக வேண்டும் என்று என்னுள் ஓர் ஆசையும் இருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு நான் படம் வரைவது பிடிக்காது. இந்த வேலையில் காசு பெரிதாக வராது என்பது அவரது கருத்து. அவர் சொல்லிக் கொடுக்காததாலேயே இன்னும் கூர்மையாகப் படம் வரையப்படுவதை கவனித்து வந்திருக்கிறேன். அவர் நினைத்த மாதிரியில்லாமல் எனக்கு ஓவியம் சோறும் போட்டு சுகமும் தந்தது!
எஃப் வார்த்தை கற்றுக்கொண்டதும் இந்த வயதில்தான். அர்த்தம் புரியாமல் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளவே அது பயன்பட்டது.அந்த வார்த்தையைப் பயன்படுத்தி இரண்டு மாணவர்கள் சண்டையிடும் போது கவனிக்காத மாதிரி ஆசிரியர்கள் போய்விடுவதைப் பார்த்திருக்கிறேன். அந்த தைரியத்தில் ஒருவனை பிளடிஃபூல் என்று திட்டியபோது மாட்டிக் கொண்டிருக்கிறேன். என்னை தனியே அழைத்து என் ஆசிரியை லாசரஸ், இந்த வார்த்தை தவறு என்று சொல்லிக் கொடுத்தார். ஜீசஸ் சிலுவையில் குருதி வழிய இருந்தபோது அவரை இப்படிச் சொல்லித்தான் கேலி செய்தார்கள் என்றும் இதைச் சொல்லும்போதெல்லாம் கடவுளைக் கேலி செய்வதாகும் என்று சொல்லிக் கொடுத்தார். அன்றிலிருந்து அந்தப் பதப் பிரயோகம் என்னிடம், சகல வசவுகளையும் சரளமாகப் பேசும் என்னிடமிருந்து வருவதில்லை. எந்த வயதில் எப்படி எதைச் சொல்லிக்கொடுப்பது என்பதெல்லாம் ஆசிரியர்கள் அனைவருக்கும் இயல்பு என்று என்னை நம்ப வைத்தவர்கள் என் பள்ளி ஆசிரியர்கள். கல்லூரிக் காலத்தில்தான் எல்லா ஆசிரியர்களும் அப்படி இல்லை என்பது தெரிந்தது.
பத்து வயதுக்குள் நடந்தவற்றைப் பட்டியலிடத்தான் முடிகிறது. அந்த வாழ்காலத்தை விமர்சனப் பார்வையோடு பார்க்க முடியவில்லை. என் சூழல் எனக்குச் சில சலுகைகளைத் தந்திருந்தது இப்போது புரிகிறது. வீட்டில் பக்தியோடு சாமி கும்பிடுவதும் படம் வரைவதும் இயல்பான வாழ்க்கையின் அங்கங்களாகவே இருந்திருக்கின்றன. மத்தியான வேளைகளில் அத்தையும் அம்மாவும் படுத்துக் கொண்டே புத்தகங்கள் படித்ததைப் பார்த்து, சும்மா இருக்கும்போது படிப்பது தான் யதார்த்தம் என்ற நினைப்பும் வளர்ந்திருக்கிறது.பொதுவாகவே பத்து வயதுக்குள் ஓரளவு வாழ்க்கை மனதுக்குப் பிடிபடும். சுற்றி இருப்பவையே உலகமாகவும் தோன்றும். குளிர்சாதனப் பெட்டி இல்லாத வீடு, அதனால்தான் பானையிலிருந்து குளிர்ந்த நீர் குடிக்கிறோம் என்று தெரியாது, எல்லா வீட்டிலும் பானையில் வைத்துத் தான் தண்ணீர் குடிப்பார்கள் என்பது அனுமானமாக இருந்தது. இப்படியே பல அனுமானங்கள்.வீடு, பள்ளி, பாடம் படிப்பு தவிரவும் வெளியே உலகம் இருக்கிறது, அங்கே வேறு மாதிரி வீடுகள் இருக்கும், வேறு மாதிரி மனிதர்கள் நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் மனதில் நெருடாத வாழ்காலம் அது. போய்வர உறவினர்கள் வீடு எதுவுமே இல்லை என்பது அப்போது ஒரு புதிராகக் கூட எனக்குப் பட்டதில்லை. கலப்பு மம் செய்துகொண்ட என் பெற்றோரால் உறவினர்கள் ஒதுங்கிவிட்டார்கள் என்பதையெல்லாம் எனக்கு யாருமே சொல்லவில்லை, அந்தச் சின்னக் குடும்பம் தனக்குத்தானே ஒரு சின்ன உறவு வட்டமாக வாழ்ந்ததும் எனக்கு ஒரு புதிராக இருக்க விடாமல் ஒரு பாதுகாப்பான போதுமென்றான சூழலை உருவாக்கி வைத்திருந்தார்கள். பத்து வயதுக்கப்புறம்தான் பல விஷயங்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.அப்புறம்தான் வருத்தம் என்றால் என்ன, என்பதெல்லாம் மனம் உணர ஆரம்பித்தது.

நேற்று மதராசப்பட்டினம் படம் பார்த்தவுடன் இன்று இந்தப் பகுதியயையும் போட்டு விடலாம் என்று தோன்றியது. படம் பார்ப்பது ஒரு தனி விஷயம். அதைப்பற்றி 3000 வார்த்தைகள் எழுதலாம். அந்த வயதில் பாசமாலர் படம் பார்த்து என் அத்தை ஏன் அழுதார் என்று புரியவில்லை, நேற்று படம் பார்க்கும் போது அவ்வப்போது நான் ஏன் புன்னகைத்தேன் என்று புரிகிறது!
இதுவரை எழுதி கைவசம் இருந்தவை தீர்ந்து விட , 
இனி எழுதுவது இன்ஷா அல்லாஹ்

12 comments:

  1. ம்ம்ம் அடுத்து அடுத்து... இந்தப் பகுதி வழுக்கிக் கொண்டு ஓடிவிட்டது :)

    ReplyDelete
  2. சாதி, மதம் என எந்த வித்தியாசமுமில்லாமல் வளர்த்த , வளர்ந்த விதம் அருமை . கொடுத்து வைத்தவர் நீங்கள் டாக்டர்.

    ReplyDelete
  3. இரண்டு மூன்று முறை படித்து விட்டேன்.
    பலவகையான உணர்ச்சிகள் படிக்கும் போது எழுந்தது. மறக்க முடியாத இடுகை.

    //வலிக்கும் என்பதைப் பார்த்தாலேயே தெரியும்!, அதில் நான் பார்வையாளனாகக் கூட முன்வரிசையில் இருந்த்ததில்லை.// :)))

    //பொதுவாகவே பத்து வயதுக்குள் ஓரளவு வாழ்க்கை மனதுக்குப் பிடிபடும். சுற்றி இருப்பவையே உலகமாகவும் தோன்றும்.//
    //அனுமானங்கள்.வீடு, பள்ளி, பாடம் படிப்பு தவிரவும் வெளியே உலகம் இருக்கிறது, அங்கே வேறு மாதிரி வீடுகள் இருக்கும், வேறு மாதிரி மனிதர்கள் நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் மனதில் நெருடாத வாழ்காலம் அது. //வெகு அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் டாக்டர். அப்படியே ரிலேட் செய்து கொள்ள முடிகிறது.

    தொடர்ச்சியை எதிர்பார்த்து...

    ReplyDelete
  4. மேலும் தங்கல் தொடர் ஐ எதிர்ப பர்த்து

    ReplyDelete
  5. படிக்கும் தருணத்தில் சுயத்தில் கரைந்து,பின்னோக்கி பயணிக்க வைக்கின்றீர்கள்.பழைய நினைவுகளை,அந்தந்த பருவத்து மனவளர்ச்சிப் புள்ளியில் நிறுத்தி அசை போடுவது மிக உவப்பான வேதனை ! தொடர்ச்சிக்கு காத்திருக்கிறேன் டாக்டர்
    மோகன்ஜி ,ஹைதராபாத்

    ReplyDelete
  6. வாசித்து ரசித்தேன்....நல்லப் பதிவு முடிந்துவிட்டதே என்ற சிறு வருத்தம்

    ReplyDelete
  7. ரொம்ப நல்ல இருக்குங்க டாக்டர்

    ReplyDelete
  8. Dear Doctor!
    It seems to be that you could have done a lot but shrinked yourself to the profession of pyschiatry. I mean, you could have become a great scientist in the field of psychiatry but you missed it.
    Thanks and regards,
    MUTHUVEL.

    ReplyDelete
  9. NICE NARRATIONS.. I LIKE EACH N EVERY WORD.. GOOD RUTHRAN.. :D

    ReplyDelete
  10. மிக அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    வாழ்கை என்பது ஒரு யாத்ரா, ஆனால் இதில் ஒவ்வொரு அனுபவமுமே அதை கடந்து வந்து பின் ஒரு சமயம் மனம் அந்த நினைவை அசை போடும் போது மட்டுமே இனிக்கிறது.

    ReplyDelete
  11. Doctor, I am not sure when I started reading books(may be fourth or fifth std) but I was library member from sixth std. when my friends are in play ground I will be in library. Still I have craze for Pens though not using much except for signatures. Just thought of sharing after reading your post.

    I agree with Muthuvel, I also think you have restricted yourself in field of research.

    ReplyDelete