Wednesday, May 19, 2010

செல்லக் குழந்தை பிறந்தநாள்.


நாளை எங்கள் வீட்டுச் செல்லக் குழந்தைக்குப் பிறந்தநாள். குழந்தைக்கு மூன்று வயதாகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும், அந்த வீட்டுக்குழந்தை செல்லம்தான். அதன் பிறந்தநாள் விசேஷம்தான். அப்படி எங்கள் வீட்டில் முதலில் பிறந்து தவழ்ந்த குழந்தை பற்றி யோசிக்கும்போது வேறு சில விஷயங்களும் தோன்றுவதால்தான் இந்தப்பதிவு.
நானும்கூட எங்கள் வீட்டுக்கு அந்த வயதில் ஒரு செல்லக் குழந்தைதான். அன்று ஒரே குழந்தை என்பதால் இதேபோல ரொம்பச்செல்லக் குழந்தைதான். ஆனால் அதே செல்லக்குழந்தையான நான், சிடுசிடுக்கும் விடலையாகவும், சுயமாய் முடிவெடுக்கும் இளைஞனாகவும், என் முந்தைய தலைமுறையின் கணிப்பின்படி சொல்பேச்சு கேட்காதவனாகவும் மாறும்போது செல்லமானவனாக இருந்திருப்பேனா?
எனக்கு அடுத்த தலைமுறையும் இந்தக்குழந்தைக்குத் தாயாகவும் இருக்கும் பெண்ணும் ஒரு காலத்தில் எனக்குச் செல்லமான குழந்தையாகவே இருந்தாள். அவள் பாடப்புத்தகத்தில் படம் வரைந்து கொடுக்கும்படி கேட்ட சிறுமியாகவும், என்னிடம் சண்டைபோடவே தயாராக இருந்த கல்லூரி மாணவியாகவும், வேலை பார்க்கும் போது சண்டையிட்டு உடனே சமாதானமாகிவிடும் இளம் பெண்ணாகவும், காதலுக்கு என் துணை தேவைப்பட்ட புத்திசாலியாகவும், குழந்தை பிறக்கும் முந்தைய இரவு பயத்துடன் என் கையைப் பிடித்துக் கொண்டிருந்த இன்னொரு குழந்தையாகவும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாய் ஆனால் குழந்தையாய்த்தான் இருந்திருக்கிறாள். ஆனாலும் ஆரம்பத்தில் அவளிடமிருந்த செல்லம் இப்போது இல்லை. வயதுதான் காரணமென்றால் யாருடைய வயது? குழந்தை வளர்வது செல்லமான சுகம், வளர்ந்துவிட்டால் ஏன் அதே குழந்தைதானே என்று விடுவதில்லை? குழந்தை என்பது பார்வையிலா மனத்திலா?  
நான் குழந்தையாக இருந்தபோது கிடைக்காத பல விளையாட்டுப் பொருட்கள் இப்போது கிடைக்கின்றன. இந்தக் குழந்தைக்கு நானும் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நான் வாங்குவதெல்லாம் எனக்காகவா இல்லை உண்மையிலேயே குழந்தைக்காகவா? தொடுதிரை வசதியுடன் ஒரு கணினி வாங்கிக் கொடுக்கலாம், ஆனால் அதைவிட ஒரு குப்பை லாரி பொம்மை குழந்தைக்கு மிகவும் பிடித்து விடுகிறது!
இப்படி விளையாட்டுப்பொருட்களில் ஆரம்பமாகும் நம் திணிப்பு, நம் ஆசைகளின் திரையோட்டம், குழந்தை வளர வளர அதன் கல்வி, அதன் நட்பு, அதன் தொழில் அதன் மணவாழ்வு என்று தொடர்ந்து கொண்டே போகிறது. குழந்தை வளரும், நாம்தான் பெரியவர்களாக வளர்வதில்லை.
இந்தக் குழந்தையும் நாளை தன் விருப்பத்தைச் சொல்லும். அது என்னுடைய தேர்வுக்கு மாறாகவும் இருக்கும். அன்று நான் பக்குவமாக இருந்தால் அதுதான் உண்மையான செல்லம்.
செல்லம் என்பது கொஞ்சல் மட்டுமல்ல, கூட இருப்பது. விழாமல் நடக்க அதன் கையைப் பிடித்துக்கொள்வதல்ல, அந்தப் பிடி இறுக்கமாய் ஆகாமல், வலி தருவதாய் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வதே.
இன்று இந்தக் குழந்தை செல்லம், நாளையும் என்றும் இப்படி நானும் இதனுடன் செல்லமாக இருக்கவே விரும்புகிறேன்- இன்ஷா அல்லாஹ்.
வலையில் சேமிக்க 




நாளை மூன்று வயதாகும் குழந்தை
மூன்று மாத வயதில்.

24 comments:

  1. நரேனுக்கு நல்வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  2. நாம் இழந்ததை அவர்கள் இன்னும் இழக்காத காரணம் தானோ?

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. பிறந்த நாள் பூங்கொத்து செல்லத்துக்கு!

    ReplyDelete
  5. நல்வாழ்த்துக்கள் சார். :)

    ReplyDelete
  6. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  7. செல்லக் குழந்தைக்கு எங்களின் வாழ்த்துகள்! :-)

    /குழந்தை வளர்வது செல்லமான சுகம், வளர்ந்துவிட்டால் ஏன் அதே குழந்தைதானே என்று விடுவதில்லை? /ஆமா, இதை எங்க அம்மாக்கிட்டேயும், பெரிம்மாக்கிட்டேயும் காட்டணும்! :-)

    /ஆனால் நான் வாங்குவதெல்லாம் எனக்காகவா இல்லை உண்மையிலேயே குழந்தைக்காகவா?/

    ம்...உண்மைதான்.. :-)

    ReplyDelete
  8. //குழந்தை வளரும், நாம்தான் பெரியவர்களாக வளர்வதில்லை.//

    //செல்லம் என்பது கொஞ்சல் மட்டுமல்ல, கூட இருப்பது. விழாமல் நடக்க அதன் கையைப் பிடித்துக்கொள்வதல்ல, அந்தப் பிடி இறுக்கமாய் ஆகாமல், வலி தருவதாய் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வதே.//

    செறிவான கருத்துக்கள் நிலவும் மனதிலிருந்து சில்லறை போல வார்த்தைகள் உதிருவதில்லை. சுருக்கமாகச் சொன்னாலும் சுருக்கென்று தைக்கிற எழுத்து... பகிர்வுக்கு நன்றி டாக்டர்.

    ReplyDelete
  9. எனது வாழ்த்துக்களும் நரேனுக்கு

    முத்தங்களுடன் ...

    ReplyDelete
  10. குட்டி குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  11. செல்லத்துக்கு
    ஓர் அழகு பொம்மை.
    செல்லத்துக்கான விளக்கம்
    அபாரம்.

    ReplyDelete
  12. இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  13. குழந்தை வளர்வது செல்லமான சுகம், வளர்ந்துவிட்டால் ஏன் அதே குழந்தைதானே என்று விடுவதில்லை? குழந்தை என்பது பார்வையிலா மனத்திலா? ...... I like this thought. :-)



    ......மூன்று வயது அழகு செல்லத்துக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் ...செல்லம் எப்போதும் செல்லம் தான் ..அதான் உண்மை

    ReplyDelete
  15. செல்லக்குழந்தை நரேனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. //செல்லம் என்பது கொஞ்சல் மட்டுமல்ல, கூட இருப்பது. விழாமல் நடக்க அதன் கையைப் பிடித்துக்கொள்வதல்ல, அந்தப் பிடி இறுக்கமாய் ஆகாமல், வலி தருவதாய் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வதே//

    சிந்திக்கவேண்டிய வரிகள். மூன்றாம் அகவையை எட்டிப்பிடிக்கும் செல்லத்துக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. வாழ்த்துகள்...

    ReplyDelete
  18. Best wishes to the little darling.
    //குழந்தை வளர்வது செல்லமான சுகம், வளர்ந்துவிட்டால் ஏன் அதே குழந்தைதானே என்று விடுவதில்லை? // athaane? :)

    ReplyDelete
  19. its very nice, could u please post this in English, I want to share it to my friend

    ReplyDelete
  20. அஸ்ஸலாமு அலைக்கும்,
    மருத்துவர் ருத்ரன் அவர்களுக்கு,
    இன்ஷா அல்லாஹ் உங்களின் அந்த குழந்தை செல்லம், நாளையும் என்றும் உங்களுடன் செல்லமாக இருக்க ஏக இறைவன் உதவி புரிவானாக.

    ReplyDelete
  21. எங்கள் வீட்டுக் குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்த அன்பர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  22. //செல்லம் என்பது கொஞ்சல் மட்டுமல்ல, கூட இருப்பது. விழாமல் நடக்க அதன் கையைப் பிடித்துக்கொள்வதல்ல, அந்தப் பிடி இறுக்கமாய் ஆகாமல், வலி தருவதாய் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வதே.//

    சத்தியமான வரிகள்.

    குட்டிச் செல்லத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள்!

    மழையால் ரெண்டு நாளா நெட்டு கட்டு!
    அதனால முன்கூட்டியே பார்க்க முடியல சார்!

    ReplyDelete