Wednesday, April 28, 2010

தோப்பில் தனியாய்



பழையன கழித்தல் எனும் முயற்சியில் அவ்வப்போது ஈடுபடும் நான், பழையன பாதுகாத்தல் என்றும், மீள் பரிசீலித்தல் என்றும் ஆகி, குப்பைகளை ஒழிக்காமல் ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறேன்.
அப்படி இன்று சாவகாசமாக ஆரம்பித்த்போது, பழைய அச்சிட்டக் காகிதங்களில் கண்ணில் பட்டது:
“உயர்ந்தவை, வளைந்தவை ஓட்டை விழுந்தவை, எத்தனையோ மரங்கள்/ ஒன்றுக்கொன்று கிளைகோர்த்து/ உல்லாச நிழல் பரப்பும்/ தோப்பில் நான் தனிமரம்.
நினைவுச் சூரியனின் நேற்றைய வெப்பம்/ எரித்து எரித்த/ ஏரியில் வெந்து/ எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட/ நிழல் இருந்தும்/ இந்தத் தோப்பில் நான் தனிமரம்.
தனியாய் நின்று/ தோப்பையே தராசுப் பார்வையுள் வைத்து/ தத்வ தரிசனம் கண்டிருந்த/ தனிமரக் கிளைகள் துளிர் விட்டு/ வெளிப்பாட்டுத் திமிர் கொண்டு/ பூத்துக் குலுங்கிய போதிலும்/ இந்தத் தோப்பில் நான் தனிமரம்.
தனிமரமே ஒரு தோப்பாக/ வந்து ஸ்வரம் மீட்டிய/ குயில் பாடலைக் கேட்பதிலும்/ கூடுகளில் அனுமதிப்பதிலும்/ தனிதான்.
தானே தோப்பாகி/ தோப்புள் தனியாய்/ வாழும் நான்.”
இதை எழுதிய ஆண்டு 1977! ஒரு தலைமுறை இடைவெளியில் இன்று படிக்கும்போது, இப்போது மட்டும்?’ என்றுதான் மனம் கேட்கிறது. இதை எழுதிய பின்னாட்களில் இதை ஒரு கவிதை என்று சொல்ல முடியாத இலக்கணங்கள் மனத்துள் படிந்து விட்டன. இது கவிதையா என்பதல்ல, இந்த உணர்வைப் பற்றியே இப்போது சிந்தனை.
இப்போதெல்லாம், நான் என் தங்கையின் மகளுடன் ஆர்குட்டில்தான் பேசிக்கொள்கிறேன். என் நண்பர்களின் பிள்ளைகள் என்னிடம் முகநூல் வழியாகத்தான் செய்தி பரிமாறுகிறார்கள். பத்தாண்டுகள் கழித்து என் சினேகிதி இணையம் மூலமாக உறவைப் புதுப்பிக்கிறாள். கல்லூரிக் காலத்திற்குப் பின் கண்ணில்படாத நண்பர்கள் பலர் “ஹை” என்று ஒரு சிறிய பெட்டியில் சப்தமிடுகிறார்கள். ஆனால் அடிக்கடிச் சந்த்தித்தவர்களைப் பார்ப்பதில்லை- சண்டையிட்டுப் புறக்கணித்தவர்களுக்கும், ஒன்று சேர்ந்து இயங்கியவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் வட்டத்திலிருந்து விலகல்.
இந்த விலகல் யதார்த்தம்; அதேபோல் இங்கே நெருக்கங்களும் யதார்த்தம். பழக்கமானவர்களைப் பதிவுலகில் பார்க்காவிட்டால் புருவங்கள் சுருங்குகின்றன. மின்னஞ்சல்கள் சில நேரங்களில் ஏமாற்றம் தருகின்றன. செல்பேசி தவிர்த்துவிட்ட நான், அதனாலேயே நண்பர்களுடன் பேசுவதையும் தொலைத்து விட்டேனோ என்று தோன்றுகிறது.
நேரமில்லைதான், புரிகிறது. நெருக்கம் குறையவில்லை என்றும் தெரிகிறது. மெய்நிகர் ஆசுவாசப் படுத்தினாலும், என்னவோ தோப்பில் ஒரு தனிமரம் போன்றே மனம் நினைத்துக்கொள்கிறது.
புதிய வட்டங்கள் உருவானாலும், மனது பழைய வட்டங்களை வட்டமிடுவதை நிறுத்த முடியவில்லை.
விரிவாய் பின்னர்..

22 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இதில் தெரியும் என் படம் நண்பர் கவிஞர் திரைப்படவியலாளர், ரவி சுப்ரமணியம், ஜேகே பிறந்த நாளில் எடுத்தது. குறிப்பிடாமல் இருந்தததற்கு மன்னிப்புடன் இந்தப் பின்னூட்டம்.

    ReplyDelete
  3. social sorting ஒரு வட்டத்திலிருந்து இன்னொரு வட்டத்திற்கு நம் விருப்பத்தினாலோ அல்லது
    மற்ற காரணங்களூக்காகவும் செல்லும்போது, இடைப்பட்ட இடைவெளியும் அல்லது புதிய வட்டமும் அன்னியமாக தெரிகிறது. அந்த புது விஷயங்களும் idea-வும் நமக்கு பழக்கமாகி second nature ஆகும் வரை மனது பழைய வட்டங்களை வட்டமிடுகிறது, அதுதானே சுலபமாகவும் effortless-ஆகவும் இருக்கிறது. எதோ ஒருமரமாய் ஒத்துக்கொண்டு அல்லது ஏற்றுக்கொண்டு அந்த வட்டத்திற்க்குள் ஐக்கியப்படுத்தி கொள்ளாமல் நகர்ந்து கொண்டேயிருந்தால் எப்போதும் தனியாய் இருப்பதுபோல் தோன்றும்.

    ReplyDelete
  4. நேரமில்லைதான், புரிகிறது. நெருக்கம் குறையவில்லை என்றும் தெரிகிறது. மெய்நிகர் ஆசுவாசப் படுத்தினாலும், என்னவோ தோப்பில் ஒரு தனிமரம் போன்றே மனம் நினைத்துக்கொள்கிறது.
    புதிய வட்டங்கள் உருவானாலும், மனது பழைய வட்டங்களை வட்டமிடுவதை நிறுத்த முடியவில்லை.




    ...... தோப்பில் தனி மரம் என்ற உணர்வு ஏன்? பழைய (நண்பர்கள்) தோப்பு - புது (நண்பர்கள்) தோப்பு என்று இருக்கும் போது, குருவியாக உங்களை நினைத்து பாருங்கள். ஓர்குட் - முநூல் எல்லாம் இயற்கையான மரக்கிளையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மின்கம்பங்களிலும் பறவைகள் இளைப்பாறுவது உண்டு...... இத்தனை நண்பர்கள் இருப்பதே, ஆசிர்வாதம் தானே...... :-)

    ReplyDelete
  5. /புதிய வட்டங்கள் உருவானாலும், மனது பழைய வட்டங்களை வட்டமிடுவதை நிறுத்த முடியவில்லை/
    யதார்த்தம்.

    ReplyDelete
  6. காலமும் மனிதனும் ஒன்றாகவே கடந்து வர பழகியாகிவிட்டது.. இனி இதை தவிர்த்தலும் தனி மரமாகிவிடுவோம்

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. ஐய்யா,

    உண்மையில் தற்போது உள்ள நிஜ நிலவரத்தை படம் பிடித்து காட்டி இருக்குறீர்கள்

    ReplyDelete
  9. அருமையான introspection

    ReplyDelete
  10. sorry i missed yesterday

    ReplyDelete
  11. நேரமில்லைதான், புரிகிறது. நெருக்கம் குறையவில்லை என்றும் தெரிகிறது. மெய்நிகர் ஆசுவாசப் படுத்தினாலும், என்னவோ தோப்பில் ஒரு தனிமரம் போன்றே மனம் நினைத்துக்கொள்கிறது.
    புதிய வட்டங்கள் உருவானாலும், மனது பழைய வட்டங்களை வட்டமிடுவதை நிறுத்த முடியவில்லை//அருமை..மிக அருமை உண்மையும் கூட...

    எத்தனை பேர் சேர்ந்த்தாலென்ன ஒவ்வொருவருக்கும் ஒரு தனி இடம் உண்டு...ஒரு ஸ்பெஷல் இடமும் கூட....ஒரு சிலருக்கு உண்டு...பேசாமல் பார்க்காமல் இருக்கலாம் மனதின் மொழி என்று பார்த்தாலும் புரிந்து கொள்ளுமே ருத்ரன்..பேச்சு எதற்கு ..? நீ அங்கிருக்கிறாய் நான் இங்கிருக்கிறேன் நினைவு பலமாய் இருந்தால் நாம் ஒருவரை ஒருவர் உணரலாம் ...எண்ண அலைகளில்

    ReplyDelete
  12. என்னைப் போன்று அயல்நாடுகளில் பணிபுரிபவர்களின் நிலமை இன்னும் கொடுமை ருத்ரன் சார்....நண்பர்கள் மட்டுமல்ல குடும்பதினரிடமிருந்தும் தனியனாய்...!
    காலமும், புதிய நட்புகளுமே மனதுக்கு மருந்து.
    தொடர்புகளில் இல்லாவிட்டால் என்ன...நட்பு என்றும் நட்புதான்...மனதில் இன்னும் பழைய நினைவுகள் இருப்பதால்தானோ என்னவோ நம்மனம்
    இன்றும் ஈரமாய் உள்ளது.
    அந்த ஈரம்தான் ''தோப்பில் தனியாய்''
    எழுத வைக்கிறது.

    ReplyDelete
  13. தோப்பில் தனியாய்

    எப்பொழுதும் உணரும் நிலையிது... கும்பலில் இருந்தாலும், தனியாக இருந்தாலும் :)

    ReplyDelete
  14. Chitra said... //தோப்பில் தனி மரம் என்ற உணர்வு ஏன்? பழைய (நண்பர்கள்) தோப்பு - புது (நண்பர்கள்) தோப்பு என்று இருக்கும் போது, குருவியாக உங்களை நினைத்து பாருங்கள். ஓர்குட் - முநூல் எல்லாம் இயற்கையான மரக்கிளையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மின்கம்பங்களிலும் பறவைகள் இளைப்பாறுவது உண்டு...... இத்தனை நண்பர்கள் இருப்பதே, ஆசிர்வாதம் தானே...... :-)//

    அழகா சொல்லி இருக்காங்க பாருங்க டாக்டர்!
    வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  15. ஐயா வணக்கம்.எப்போதும் உங்கள் பதிவுகள் வாசித்தாலும் பின்னூட்டம் தரும் தைரியம் இன்றுதான்.
    இன்றைய யதார்த்த வாழ்வை அப்படியே தந்திருக்கிறீர்கள்.

    நேரமில்லையென நெருக்கத்தைக் குறைத்துப் பின் அதுவே பழகி தனிமையே வாழ்வாகிறது.

    ReplyDelete
  16. ‘இப்போது மட்டும்?’ என்றுதான் மனம் கேட்கிறது.....

    மிகச் சரியான வார்த்தைகள் அய்யா!

    உங்களது எழுத்துகளை படித்தவுடன் மனம் உடனே சிந்திக்க தொடங்கி விடுகிறது! இந்த பதிவில் கூட ஒருவிதமான மென் சோகம் உள்ளது....

    நன்றி

    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  17. // தானே தோப்பாகி/ தோப்புள் தனியாய்/ வாழும் நான் //

    இது ஒரு அதிசய முரண்பாடு. ஒரு விதை காட்டை உருவாக்கமுடியும் என்றால், ஏன் ஒரு தனி மரம் தோப்பாக முடியாது.

    நான் தோப்பல்ல தனிமரம் என்பதுதான் தேடலின் தொடக்கமாக இருக்க முடியும். நானே தோப்பு என்பது தேடலின் முடிவாக இருக்கலாம். யார் கண்டார்?

    ReplyDelete
  18. தோப்பில் தனியாயின் நீட்சி தான் உங்களின் இந்த வரிகள் "நான் அர்ஜூனாக இருந்தால் கிருஷ்ணனை கூட அழைத்துச் சென்றிருக்கமாட்டேன்". நேற்று நான் CNN iReportல் இதை "The Child left behind" (http://www.ireport.com/docs/DOC-437684) படித்தேன். "Everywhere I am an outsider", "I am a stranger to myself"; இவை போன்ற உணர்வுகள் பல்வேறு தேசம்,மொழி,இனம்,பொருளாதார நிலை, மற்றும் கலாசாரம் சார்ந்த மக்களிடம் உள்ளது. இனி வரும் உங்களது பதிவுகளில் இது குறித்த உங்கள் எண்ணங்களை பகிர்வீர்களா?

    ReplyDelete
  19. நல்ல பதிவு. நேரடி தொடர்புகளை இழந்து கொண்டு தான் இருக்கிறோம் ரிந்தே. சூழ்நிலை கைதிகள்னு சொல்லி நாம் எல்லாரும் தப்பித்து கொள்கிறோம். இதுவும் கடந்து போகும் என்பது தான் நிஜம். பொறுப்புகள் குறையும் காலத்தில் உறவுகளை புதுபிப்போம். சற்று சுயநலமான எண்ண போக்கு என்ற போதும் இதுவே யதார்தம்

    ReplyDelete
  20. ஆம்.
    தனி மரம்
    தோப்பாவதில்லை.

    ReplyDelete
  21. //“அவளுக்கென்ன அழகிய முகம் ” என்று டி.எம்.எஸ். குரல் ஒலிக்கும்போதெல்லாம் எனக்கு காஞ்சி காமாக்ஷியின் முகம் தான் நினைவில் மோதும் //

    காஞ்சி காமாஷியை நீங்கள் எப்போது நேரில் பார்த்தீர்கள் என்று சொன்னால் நாங்களும் கண்டு நினைவில் வைத்துக்கொள்வோம்.

    ஏன் இந்தப் போலித்தனம் ? மனோதத்துவ நிபுனராகிய நீங்களே இப்படி இருந்தால், ஒரு சாதாரண தமிழன் பாவம் என்ன செய்வான் ? கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும் ஒரு பாமர சினிமா ரசிகனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
    சௌந்தர்ய லஹரியில் ஒரு இடத்தில்... காஞ்சி காமாஷியின் இடை சற்றே நிமிர்ந்து அவளுடைய மார்பகத்தை பார்த்தாம். அந்த மார்பகங்களின் அளவினைப் பார்த்து அஞ்சி நடுங்கி உடுக்கைபோல் அவளின் இடை சிறுத்துவிட்டதாம்....
    இதை அப்படியே பார்த்ததாக நம்ம ஆதிசங்கரர் டுபாகூர் விட்டிருக்கிறார். டி.எம்.எஸ் பாடிய சினிமா பாட்டு கேட்டால் கூட காமாஷி தெறிவதாக சொல்லி, அவரையே நீங்கள் தாண்டி விடுவீர்கள் போலிருக்கிறது.

    போலித்தனம்,போலித்தனம் போலித்தனம் ....


    //பத்து இட்லி பத்து வடை சுட்டாலும் இடையில் ஒரு பத்து நிமிடம் சமுதாயத்தையும் பார்க்கலாமே//
    இங்குதான் உங்களின் ஒளி வட்டம் மிக நேர்த்தியாக மிளிர்கிறது. அதாவது இட்லி சுடுவதும் வடை சுடுவதும் உங்களுக்கு படு கேவலமான விஷங்கள். திருவள்ளுவர் முதல் ருத்ரன் வரை பெண்கள் என்றால் ஒரு கேவலம்.
    ஏன் நீங்கள் மனோதத்தும் பற்றியே பெசிக்கொண்டு இருக்கின்றீர்கள். அவ்வப்போது பெரியாரின் சிந்தனைகளைப் பற்றியும், பக்தி என்ற பெயரில் பார்ப்பனியம் தமிழர்களை பல நூற்றாண்டுகளாய் மக்கட்டைகளாக ஆக்கி வைத்திருக்கும் அவலத்தை ஏன் பேசக்கூடாது. ஏன் என்றால் அது உங்களுக்கு தெறியாது. நீங்கள் தான் சினிமாப் பாட்டிற்கே காமாஷியை நினைத்து உருகுபராயிற்றே ! பாவம் தமிழ் மக்கள் மனோத்ததுவ பிரச்சனைகளுக்கு உங்களை நம்பி உள்ளார்கள். இப்போது சினிமாக்காரர்களும். கோபப்படாமல் மல்லாக்க படுத்துக்கொண்டு யோசியுங்கள்…. பழையன கழித்தல் என்பதை உண்மையாக்குங்கள் … யதார்த்தம் என்பது என்ன ? எதற்கு இந்த தாடி ? இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தனி மரமாய் ? மாயயை உடைத்துக்கொண்டு வெளியில் வாருங்கள்... இல்லையேல் தயவுசெய்து ஒரு நல்ல மனோ தத்துவ மருத்துவரை உடனே அணுகவும்...
    என்னவென்று புரியாமலேயே கூடிநின்று கைத்தட்டி ஜால்ராபோட்டு பின்னூட்டம் இடும் கூட்டம் மட்டுமே உலகம் என்று நீங்கள் நினைக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    No need to publish this comment. Its only meant for you Sir.

    ReplyDelete
  22. கவிதை மிகவும் அருமை....

    ReplyDelete