Thursday, December 3, 2009

ராதை




ராதையைப்பற்றி எழுதவேண்டும் போல் தோன்றியது..நாளை மற்றும் எல்லா நாட்களும் இணைந்தே இருக்கப்போகிறோம் என்னும் வழக்கமான எதிர்பார்ப்புகளின்றி ஒவ்வொரு நாளும் முழுதான வாழ்க்கையை வாழ்ந்த அந்தப்பெண் பற்றி கொஞ்ச‌ம் யோசிப்போம்.
அவள் அழகாகத்தான் இருந்திருக்கவேண்டும். மூக்கும் முழியும் சரியாக அமைந்து வெளிப்படும் அழகாய் அல்ல‌, அன்பும் ரசனையும் மிகுந்து ஒளிரும் அழகாய். காதலிசைவில் கண்கள் உள்ளேயே தேடிக்கொண்டிருக்கும் அழகாய். 
கதைப்படி, அவள் அவனை விட வயதில் மூத்து மனத்துள் இளையவள். அவன் ஆட்டுவித்தபடி ஆடிய அற்புத பொம்மை.கதைப்படி அவள் வேறொருவனுக்குத் திருமணமானவள், ஆனால் அவளைப்பற்றிய கவித்வ வர்ணனைகளில் அவள் ஒரு நித்யகன்னி. நாளும் கூடும் சௌந்தர்ய பொக்கிஷம்.
ராதையின் கதை காமத்தின் நிறைவேற்றல் மட்டுமல்ல,ஒரு காதலின் காத்திருத்தல். எதற்காகக் காத்திருந்தாள்? போகப்போகிறான் என்று தெரிந்தும், போய்விட்டான் என்று தெரிந்தும் எதற்காகக் காத்திருந்தாள்?
மைதிலி மொழியில், வித்யாபதி எழுதிய கவிதை ஒன்று:
"என் காதலன் நாளை வருவேன் என்று                                                                  சொல்லிவிட்டுத்தான்  போனான்                                                                                                     தினமும்                                                                  
சுவரெல்லாம் தரையெல்லாம்
நாளை நாளை                 
நாளை என்று எழுதிவைத்துக் காத்திருக்கிறேன்                   
        
நாளை நாளையாவது வருமா?"
காதலில் காமத்தின் பங்கு எவ்வள‌வு? காமத்தில் காதலெனும் ஏமாற்று எவ்வள‌வு? காதலிலா காமம் நேர்மையற்ற செயல்.
இப்போதெல்லாம் பல பெண்கள் (பல என்பதும் பெரும்பான்மை அல்ல) சுலபமாகக் காமவலைவீச்சுகளுக்கு இரையாகிறார்கள். உள்ளே அவர்களுக்கு இருப்பது ஒன்றும் தெய்வீகத்தின் தேடலோ, காதலின் மெய்மறத்தலோ அல்ல. அவர்களுக்கும் படித்த, கேட்ட, பார்த்த விவரிப்புகளின்பால் ஏற்படும் இயல்பான ஈர்ப்பும், பாலுணர்வின் ஆர்வமும்தான். தெரியாதவரையில் துரோகமில்லை, மாட்டிக்கொள்ளாதவரை தவறு இல்லை என்றுதான் பலரும் சமூகநியதிகளைப் புறம் தள்ளி காமத்தைத்தூண்டும் கயவர்களிடம் இசைவு காட்டுகிறார்கள். அவர்கள் ஏமாறவில்லை, முழுதாய் ஏமாற்றப்படவும் இல்லை. மோகச்சந்தையில் பாதுகாப்பானதாய்த் தோன்றும் பங்குகளை வாங்கிப்பார்க்கிறார்கள்.
பாலுணர்வு இயல்பு. வயதுக்கேற்ப அதன் வீரியம் இருக்கும்.ஆனால், பொறுப்புணர்வு என்பது பக்குவம், வயது கூடக்கூட அது மெருகேறும்.
ராதை கல்யாணமானபின்னும் க்ருஷ்ணனுடன் காதலும் கலவியும் கண்டிருந்தாள், அதுபோலத்தான் இதுவும்..ஒரு திவ்யபிரும்மானந்தத்தினை அடையும் பரிசோதனை முயற்சி என்றெல்லாம் கதைகள் கூறப்படுகின்றன..அப்படி இல்லையென்றால் ராதை ஏமாந்தவள். ஏமாற்றப்பட்டவள்..என்று கூறுவதும் பலருக்கு ஒரு சௌகரியமான சாக்காக இருக்கிறது.
க்ருஷ்ணனைப்போலவே ராதையும் அழகான கற்பனைதான். கதை அவர்களைவைத்து அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. கவிதைகள் அந்தக்கதையின் தன்மையிலிருந்து சுலபமாகப் பிறக்கின்றன..கதைகளின் கற்பனையை நிஜமென்று நம்பினால் அது பேதமை.கதைகளின் கற்பனையை நிஜமென்று வாதிட்டால் அது கயமை.(ராமன் பாலம் போல). ஆனால் நாம் பொதுவாகவே கதைகளை விரும்பும் ஒரு கலாச்சாரத்தில் வந்தவர்கள். கதைகள் பொய்சொன்னாலும் அந்தப்பொய்களின் அழகைமீறி சேதிகளையும் சொல்கின்றன.
இந்தக்கதையில் தெரியும் சேதி: தனக்கென்று ஒரு குடும்பம், கணவன் இருந்தாலும், அதில் திருப்தியே கண்டிருந்தாலும், ராதை தன் கண்ணுக்கு அழகானவனாக, கவர்ச்சியானவனாக, காதல் என்றும் சொல்லிக்கொள்கிறவனாகத் தெரியும் க்ருஷ்ணனை அடைய விரும்புகிறாள்.அவன் தன்னை மயக்க அனுமதிக்கிறாள். அவன் விட்டுப்போனபின், வருந்தியிருக்கலாம் ஆனால் வாழ்வை முடித்துக்கொள்ளவில்லை!
பரமனும் ஜீவனும் இணைந்தபின்பு பிரியுமா என்ன? அவன் நினைவுகளே போதுமல்லவா என்றெல்லாம் வியாக்கியானங்கள் கேட்டிருக்கிறேன்.எனக்கு அப்படித்தோன்றவில்லை. 
வேட்கை பிறந்தது, வாய்ப்பு அமைந்தது இருவரும் பயன்படுத்திக்கொண்டார்கள். காரியம் முடிந்ததும் அவரவர் தத்தம் வாழ்வின் காரியங்களைப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இதை ரகசிய காமிரா வைத்து எடுத்ததைப்போல் நம் கவிஞர்கள் எல்லாருக்கும் பரப்பி விட்டார்கள்!  
மாட்டிக்கொள்ளும் பெண் தான் விரும்பி திருட்டுக்காமத்தில் ஈடுபடவில்லை, ஒரு மயக்கத்தில் பயன்படுத்தப்பட்டேன் என்று கூறுவதைப்போல்தான் இந்தக் கள்ள உறவினை ஒரு தெய்வீகத்திருவிளையாடலாய் கதாபாத்திரங்களுக்கு வேண்டியவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். 
 ராதை பாவமா?
ராதை பக்கம் நியாயம் என்றும் க்ருஷ்ணன்தான் திருடன் என்றும் நான் சொல்லவரவில்லை, 
ஆனால் ராதை நல்லவளாக எனக்கு உதவியிருக்கிறாள்..சார்மினாருக்கான எழுத்துக்கள் பலவற்றுக்கு அவளது பங்களிப்பு மிகப்பெரியது. அந்த நன்றி கூறலாக 1975ன் சார்மினார் எழுத்து-
வானப்பூச் செவ்விதழ்கள்  விரிந்தொளிரும் வேளை                                                 
வண்டுகளை வண்ணமலர்  வரவேற்கும் மாலை                                                  
தேனுமினிதானகுரல்  தூக்கிக் குயில் பாடும்                                                                
தேவரதம்போல‌ முகில்  தோன்ற மயில் ஆடும்..
அந்நேரம்,
பட்டாடைச்ச‌ரிகையது   புல்விளைந்த‌பூவாய்                                                                           
பாதங்கள் மண்புரளும்
பொன்னிறத்து மீனாய்                                                                                    
கட்டாத குழல்சரிந்து
காற்றை அழகூட்ட‌                                                                                
காற்சதங்கை கலகலத்து
காதல்ஜதி கூட்ட‌
அவள் வந்தாள், காலம் அவளது அவசரத்தையும் மீறி அவசரமாகக் கரைந்தது.
வானில் மின்கூட்டம்,  
வட்டநிலா களியாட்டம்                                                         
வண்ணமலர்களுடன்
வண்டுகளின் உறவாட்டம்                                                  

தேனில் மயங்கிவிழும்
தும்பிகளின் சுரம் மீட்டும்                                                     
தாபமெல்லிசைக்கு 
தவளையெலாம் ஜதிசேர்க்கும்                                                                            
மோன ராகங்கள்;  
தோட்டத்தில் தென்றலது                                                                                          
மெல்ல இலையசைத்து 
பிறப்பிக்கும் தாளங்கள்
யாவும் அவள் மனத்தை நெருடவில்லை..அவன் எங்கே, எப்போது என்றே அவள் மனம் அலைந்துகொண்டிருக்க, துணைவன் வருவதற்குப் பதிலாக துயில் வருகிறது. அந்தக்கனவில்,
கண்ணனொரு குழலேந்தி   காதலெனும் நதிநீந்தி
கன்னிமனம் சேருகின்றான்
கையிலவள் கோலஎழில்   அள்ளிச்சுகமேற்க அலைக்
கூந்தலினைக் கோதுகின்றான்
எண்ணமெனும் யாழில்புது   ராகமென இன்பநிலை
ஏழுசுரம் ஆக்குகின்றான்
என்றுமவள் தந்த உடல்   தந்தசுகம் போதுமென‌
இன்ப உரை ஆற்றுகின்றான்
கண்ணையிமை மூடியதிய   லிந்தசுகம்தந்த அவன்
கண்திறந்தபோதிலில்லை
கண்ணனொரு கனவென்று  தெரிந்தாலும் ராதைமனம்
கண்திறக்க விரும்பவில்லை
கனவு நிஜத்தின் சூட்டில் கரைய,                                                                      தன்னிலை மறந்தாள்  தவித்தாள், கொதித்தாள்துடிதுடித்தாள்..அந்நேரம்

காற்றினிலே புதுராகம் மிதந்துவந்து
காதுகளில் மோதியது இன்பம் தந்து
தோற்றவர்க்குப் பெரும்பரிசு கிடைத்தல் போல‌
தேடியது கைத்தலத்தில் விழுதல் போல‌
பாட்டின் ஒலிகேட்டு அவள் புல்லரித்தாள்
புன்னகையில் துயரமெலாம் துடைத்துவிட்டாள்
ஏட்டினிலே எழுதாத கவிதைபோல‌
ஏகாந்த சுகம் காண எழுந்துவிட்டாள்.
கைவளைகள் சரிசெய்து கழுத்தின் ஆரம்
கலையாது மீண்டும் அலங்காரம்செய்து
மைவழியும் கண்துடைத்து, மலர்கள்கொண்டு
முடியவிழ்ந்த கூந்தலினை முடித்துக்கொண்டு
மையலினால் மன்னவனின் கீதம்கேட்டு
மனமேடை தனில் நடனம் ஆடிநின்றாள்
ஆனந்தமாநடம் ஆரம்பம்..      அவன் அவளை அருகிழுத்து..
விழிகள் இரண்டால்தன்  வாலிபத்து வேகத்தை
வரையறுத்த பேரழகின்  மோகத்தெளிவெதிரில்
மொழியின் தேவையிலாப் மௌனராகத்தில்
மெல்ல இசையமைத்து  மயங்கியமர்ந்திருந்தான்
கரம்நீட்டி மங்கை  கட்டழகைத் தொட்டவுடன்
காலம்,இடம் மறந்தான்  காதலனும் தீச்சுடரும்
கரம்தொட்ட கரத்தினிலே   குவிந்து கிடந்ததனால்
கையில்கைவைத்து   கற்சிலையாய் அமர்ந்திருந்தான்
அவளும் 
தொட்டவுடன் வெப்பம்   உடல்விட்டு நீங்கியதால்                                        வெட்கக்குளிர்வீச   வாழ்வை ரசிக்கின்றாள்
கைகளிலே மங்கையவள்  கவிதையெனும் கலையாக‌
கட்டழகுக் காதலனே  கவிதைக்குப்பரிசாக‌
மைவிழியின் ஓரத்தில்  மோகத்தீ ஒளிதோன்ற‌
மெல்லிடையும் மிதமிஞ்சி   நாணலென ஆடிவர‌
நெய்நீவி நன்றாக  முடித்தகுழல் அலைபாய‌
நல்லமலர்ச்சரமவிழ்ந்து   நாற்றிசையும் பறந்துவிட‌
பெய்கின்ற பெருமழையில்   மெய்மறக்கும் தாமரைபோல்
பாவை மல‌ர்ந்திருந்தாள்   புறம்யாவும் மறந்திருந்தாள்
உயரத்து வெண்ணிலவு   ஓரத்தில் சோர்ந்துவிழ‌
துயிலற்ற ஒருசேவல்   தூக்கிக் குரலெழுப்ப‌
வியப்புற்று இருவருமே   விடிந்ததென அறிந்தார்கள்
துயருற்று மனம்கெட்டு   தனித்தனியாய் அகன்றார்கள்
கைவிரல்கள் கன்னத்தில் வைத்தவாறு
காலிரண்டும் பின்னல்நடை போட்டவாறு
வைகறையின் வரவை மனம்நொந்தவாறு
வாட்டமுடன் தோட்டமதை விட்டகன்றாள்
மையலெனும் தத்துவத்தை முற்றுணர்ந்து
மைவிழியில் புதுமொழியை கற்றுணர்ந்து
கையிரண்டில் காமசுகக் கறைகளோடு
களித்திருந்த கண்ணனவன் தனித்திருந்தான்

உடனே
பொன்குழலை இதழோரம்  வைத்துவிட்டான்
பெருமூச்சை புதுராக  மாக்கிவிட்டான்
மென்மலரைப்போன்ற எழில்  ராதைகாதில்
மெல்ல இதுசேருமெனக்   காற்றில்விட்டான்.
தென்றலவன் சேதியினைச்   சுமந்துசென்று
தேவிசெவியோரம்  இசையானபின்பு.
                                                                                   

ன்னுமா இன்றுமா என்று பகலவன் அகலக் காத்திருந்தாள்..
யுகயுகமாய்.

க்ருஷ்ணன் அவதாரமென்றால் இன்றும் இருப்பான், இன்னும் அவனுக்கு ராதைகள் கிடைப்பார்கள். சரியான ராகத்தை இசைத்தால் போதும். அதுவும் தேவரகமென விளம்பரப்படுத்தினால் இன்னும் விசேஷம்! சாமியார்களும் பூஜாரிகளும் க்ருஷ்ணாவதார பூச்சுக்களோடு காத்திருக்கிறார்கள்..முட்டாள்கள் ராதையென்று ஏமாறாமல் நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்

10 comments:

  1. //வேட்கை பிறந்தது, வாய்ப்பு அமைந்தது இருவரும் பயன்படுத்திக்கொண்டார்கள். காரியம் முடிந்ததும் அவரவர் தத்தம் வாழ்வின் காரியங்களைப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இதை ரகசிய காமிரா வைத்து எடுத்ததைப்போல் நம் கவிஞர்கள் எல்லாருக்கும் பரப்பி விட்டார்கள்!//

    இதை நானும் இப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறேன். பலரும் இப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை அப்படியே அங்கீகரிப்பது கலாச்சாரத்துக்கு எதிரானது என்கிற பயம் எல்லாருக்கும் இருக்கிறது.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  2. இப்படியும் எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிந்துக்கொண்டேன்.இந்த வகைக் கதைகளை வெறுத்து வந்திருக்கிறேன்.புதுக் கண்ணோட்டம் மேலும் இன்றைய சூழலில் இதை பொருத்தி எழுதியதை பாராட்டியே ஆகனும்.திரும்ப திரும்ப சொல்வதாகவே இருப்பினும் உங்கள் சமூக அக்கறைக்கு ஒரு ஜே .

    ReplyDelete
  3. பிற நாடகங்களைப்பற்றியும் எழுதியிருக்கிறேன்..மாலை பதிவிடுகிறேன்

    ReplyDelete
  4. the previous comment for a comment on the previous post

    ReplyDelete
  5. என்ன சார் மகளிர் வாரமா இது,

    தொடர்ந்து நான்கு பதிவுகள் மகளிர் பெயரிலேயே. இருந்தாலும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், அலுப்பு தட்ட வில்லை படிக்க.

    எப்போது கிருஷ்ணன், பவித்ரன், அமுதன் பற்றி எழுத போகிறீர்கள்.

    ReplyDelete
  6. One of the perspectives....... from different angle.

    ReplyDelete
  7. அருமையான இடுகை. எனக்கு ராதை பற்றி இவ்வளவு தெரியாது ருத்ரன் சார். ஆனா நீங்க என் "ராதா கானம்" கவிதைக்கு இட்ட பின்னூட்டத்தின் முழு அர்த்தம் இன்னமும் புரியவில்லை. கொஞ்சம் தெளிவா அங்க வந்து சொல்றீங்களா ப்ளீஸ்.

    ReplyDelete
  8. இந்திராபார்த்தசாரதி க்ருஷ்ண க்ருஷ்ணா எனும் நாவலின் முடிவில், வயதானபின் ராதையைப்பார்க்க க்ருஷ்ணன் வருவான். தெருவில் குழந்தைகள் விளையாடிகொண்டிருக்கும்.."ராதா வீடு எது" என்று கேட்பான், ஒரு குழந்தை "ராதா பாட்டீ உன்னைபாக்கா யாரோ வந்திருக்கா" என்று கத்தும். ராதைகளுக்குத்தான் வயதாகிறதாம், க்ருஷ்ணனுக்கு இல்லையாம்!

    ReplyDelete
  9. என்னவோ தெரியவில்லை படித்துக் கொண்டே வரும் பொழுது கடைசி சில வரிகளில் சிரித்தே விட்டேன்... பிரிந்து செல்லும் சூழ்நிலையை நீங்கள் வரிகளாக கொடுத்த நேர்த்தி :)).

    சூப்பர்ப்!

    ReplyDelete
  10. //க்ருஷ்ணன் அவதாரமென்றால் இன்றும் இருப்பான், இன்னும் அவனுக்கு ராதைகள் கிடைப்பார்கள். சரியான ராகத்தை இசைத்தால் போதும். அதுவும் தேவரகமென விளம்பரப்படுத்தினால் இன்னும் விசேஷம்! சாமியார்களும் பூஜாரிகளும் க்ருஷ்ணாவதார பூச்சுக்களோடு காத்திருக்கிறார்கள்..முட்டாள்கள் ராதையென்று ஏமாறாமல் நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்//
    final touch super

    ReplyDelete