Friday, December 31, 2010

2010 முடிகையில் ஒரு வேண்டுகோள்




காமாக்ஷி கடாக்ஷி
உன்னை உபாசிக்கவில்லை ஸ்வாசிக்கிறேன், சத்தியமாய். நின்னைச்சரணடையவில்லை, நீயென்றே ஆகிவிட்டேன்.

சொல்லடி சிவசக்தி! எனக்கு மொழி கொடுத்தது மௌனமாய் இருக்கவா? 
சபிக்கவல்ல நான் கேட்கும் வரம்! (சிரிப்பதாய் நினைத்துக்கொள்ளும் உதடுகளைச் சிவப்பாக்கும்படியும் உன்னிடம் கேட்கவில்லை வரம்- அதற்கு எதற்கு வரம்?)

உன்னிடம் வல்லமை தாராயோ என்றும் கேட்க மாட்டேன்.. இல்லையென்றால்தானே கேட்க!


இதோ இங்கே இணையத்தில் நட்புகள் வருகின்றன, வெளுத்து வெளியேறுகின்றன. இதுவும் உன் செயல் என்றால் நாத்திக-முற்போக்கு நடிகர்கள் கோபித்துக் கொள்வார்கள்! இதெல்லாம் நானே என்று (பொய்) சொல்லும் துணிவும் எனக்கில்லை. என்னம்மா செய்ய?

செருப்பாலடிக்கச் செருப்பை மட்டுமல்ல, கடியாரக் காட்டலையும் நீ தான் நிர்ணயம் செய்கிறாய்! அப்புறம் எதற்கு நான்? எந்தக் கோட்பாட்டையும் உறுதிபடுத்தும் கருவியாகவா?

நடந்தவை போக நடப்பவை மீது நம்பிக்கை கொள்ள என்னிடம் கீதை இல்லை, மறுகன்னம் காட்டும் மாண்பும் இல்லை.
என் தொழிலாக நானேற்று செவ்வனே இயங்கும் மனநலமருத்துவம் உன் வரம்தான். அதுவே எனக்கு சுமை என்பதுபோல மூடர்கள் ஆக்குகிறார்கள். ஒரு மனநல மருத்துவனுக்குக் கோபம் வரக்கூடாதாம், கொஞ்சம் விட்டால் மலம்கூட வரக்கூடாது என்பார்கள். அவர்களைச் சகித்துக்கொள்ளும் மனதினை நல்ல வேளை நீ எனக்குத் தரவில்லை.

லாசரா போன்றோர் எழுத்தைப் படிக்கும்போது வாசகனாய், ஆதிமூலம்/மருது போன்றோரின் கோடுகளைப்பார்க்கும் போது ரசிகனாய், மருதையன் போன்றோர் பேசுவதைக் கேட்கும்போது மாணவனாய்த்தான் நான் இருக்க முடிகிறது. என் க்ளினிக்கில் மட்டுமே மனநலமருத்துவனாய் இருக்க முடிகிறது. மற்ற நேரங்களில் மனிதனாய் இருக்க முடிகிறதே, அதற்கு நன்றி எப்படிச் சொல்வேன்.

திசைதிருப்பிக் களவாடும் கயவர்களை என் கண்முன் காட்டாதே, உன்னைபோல் அழகுச்சிலையாய் உட்கார்ந்து சிரிப்புடன் வேடிக்கை பார்க்க என்னால் முடியாது. மருந்தாய் மட்டும் இருக்க வைத்துவிடாதே, கிருமிநாசினியாகவும் ஆக்கிவை.

எனக்கு ஆற்றவேண்டிய பணிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது, என்னைக் காரியமாற்ற விடு. எழுத்தாய் வெளிப்படு, எல்லார்க்கும் பயன்படு.

நல்லன எல்லாம் தா என்று உன்னிடம் வரவில்லை, அல்லனவெல்லாம் அகற்றவே இந்த என் வேண்டுதல்.
2011 முதல் என் சமூகத்திற்கு நான் இன்னும் பயன்படவேண்டும், இன்ஷா அல்லாஹ்.

Thursday, December 30, 2010

திரும்பிப்பார்த்தலும், பின்னிருப்பதைப் பார்த்தலும்!


திரும்பிப்பார்க்க கழுத்து திரும்பவேண்டும், கழுத்தும் சுளுக்கிக்கொள்ளலாம், எதிரே வந்து எருமை மாடும் மோதலாம். பின்னிருப்பதைப் பார்க்க விழியசைந்தால் போதும் நிற்காமல் தொடரும் பயணம்.
இங்கே நான் ஏதோ உருப்படியான மனவியல் கோட்பாடுகளை விளக்கப்போகிறேன் என்று எதிர்பார்க்கும் அன்பர்கள் இந்த வாக்கியத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். 2011 முதல் அவ்வாறு மட்டுமே எழுத முயல்கிறேன். இப்போது எழுதுவது என் மனத்தகிப்பின் தணிப்புக்காக. என் உளத்தீ சுற்றிச் சும்மா நிற்கும் ஊமைஜனங்களையும் எரித்து விடக்கூடாதே என்பதற்காக.

மறைந்திருந்து தாக்க நான் நாமம் போட்ட ராமன் இல்லை! குங்குமத்தைப் பெருமிதமாய் வைத்திருக்கும் சாக்தன்!
 உலகம் சுழல்வதைத்தானே காலம் என்று கணக்கு வைத்துக்கொள்கிறோம், மீண்டும் பழைய இடத்திற்கே வருகிறேன். நான் ஆரம்பத்தில் எழுதியது கார் ஓட்டும் போது ஏற்படும் அனுபவம். இப்படித்தான் பல வருடங்களுக்கு முன் கார் ஓட்டிக் காஞ்சிக்குச் சென்றேன். காமாக்ஷி எனக்குப் ப்ரத்யக்ஷமான பரவசம்- என் சிந்தை, சித்தம், செயல், ஸ்வாசம். அவளைப் பார்க்கும் ஆசை வந்தால் அதற்கு காரணம் தேடுவதில்லை, கிளம்பி விடுவேன். அப்படி அல்ல அன்று, பல ஆண்டுகளுக்கு முன்!


என்னுடன் காரில் உமா, உமா மற்றும் மாமல்லன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருக்கும் பிரபலமாகத் துடிக்கும் எழுத்தாளன். இரண்டு முறை உமா என்று எழுதி விடவில்லை, அவன் மனைவியின் பெயரும் உமா. நாங்கள் காஞ்சி நோக்கிக் காரில் என் வீட்டிலிருந்து பயணமானோம். (அவர்கள் என்னுடன் காஞ்சிக்கு வருவதற்காக என் வீட்டுக்கு வந்ததால், அவர்களை வீட்டுக்குப் போய் எழுப்பி உடனே என்னுடன் வா என்றெல்லாம் இம்சிக்கவில்லை).
ப்ளீஸ்டா...கார் ஓட்டத்தெரியாது, காஞ்சிக்கு வழி தெரியாது, கோவிலில் என்ன செய்யவேண்டும் என்று தெரியாது, ப்ளீஸ், ப்ளீஸ்..கூட வாயேன் என்று கெஞ்சிக் கொஞ்சிக் கூப்பிட்டுச் செல்லவில்லை! வரவேண்டும் என்று விரும்பிய தம்பதியரைத்தான் அழைத்துச் சென்றேன். இவன் தான் இப்போது ”ப்ளீஸ் ப்ளீஸ் நான் சிபாரிசு செய்கிறேனே” என்று  ஆசைப்பட்டதாகச் சொல்கிறான்.
தட்சிணை தராமலேயே கருவறை வாசல் வரை என்னை விடுவார்கள்- பழக்கம் காரணமாக. நான் போக ஆரம்பித்த காலத்திலிருந்து என்னை காசுக்காக அவர்கள் வரவேற்றதில்லை, நான் ஜெயேந்திரன் மீது மரியாதை இல்லாதவன் என்று தெரிந்தும்! இதைப்பற்றி எழுதுகிறானாம் மீண்டு வந்து முண்டியடிக்க முயலும் எழுத்தாளன்! 
நான் பாதி பார்ப்பானாம்! நான் உள்ளே சென்று சங்கரன் உட்கார்ந்த இடத்தில் உட்கார அலைந்தேனாம், அவன் மானமுடன் வெளியே (கோவிலுக்கு வெளியே அல்ல, அர்த்தமண்டபத்திற்கு வெளியே!) நின்று விட்டானாம். அவனது சுயாபிமான சுதர்ம ரோஷம் எல்லா மயிர்க் கால்களிலும் இன்னும் சிலிர்த்துக் கொண்டிருக்கிறதாம்.

நான் காமாக்ஷியையும் கம்யூனிஸத்தையும் மாறி மாறி நக்குகிறேனாம்!! காமாக்ஷியை நான் நக்கவேண்டியதில்லை, என் நாக்கே அவள்! கம்யூனிஸத்தையும் நான் நக்க வேண்டியதில்லை, நக்கிப் பிழைப்பவன் கம்யூனிஸ்ட் அல்ல!!
ஐயையோ..பின்னிருப்பதைப் பார்க்காமல் பின் திரும்பிப் பார்க்கிறேனே.. எருமை மாடு எதிர் வரப்போகிறது!!

நரசிம்மன் எனும் பெயருடைய Central Excise, Mugapairல் இப்போது வேலை செய்யும் விமலாதித்த மாமல்லன் எனும் பெயரில் உருப்படியாகவே ஒரு காலத்தில் எழுதியவனைப் பற்றித்தான் இங்கே எழுதுகிறேன். அவனை 1982 முதல் தெரியும்!
என் முதல் நாடக முயற்சியான அபிதாவின் அரங்கேற்ற நாளன்று (நாடகத்திலும்) எதுவுமே சரியாக நடக்காத எரிச்சலான ஒரு பகலில் ஓர் இளைஞனை மிரட்டியும் விரட்டியும் சிலர் நடந்துகொண்டபோது யாரென்று கேட்டதற்குச் சொல்லப்பட்ட பதில்..விமலாதித்த மாமல்லன்னு ஒரு நல்ல ரைட்டர்...பரீக்‌ஷாவிலிருந்து நான் விலகி மூன்றாண்டுகள் ஆகிவிட்டதால் அவனை அடையாளம் தெரியவில்லை. அப்புறம் எப்போதிலிருந்து என்னை இம்சிக்க ஆரம்பித்தான் என்று நினைவில்லை, அவன் அடிக்கடி என் வீட்டுக்கு (நண்பர்கள் சொன்னது போல்) நேரங்காலமில்லாமல் வருவது நிகழ்ந்தது.
அவனிடம் சில விஷயங்கள் எனக்குப் பிடித்தது. பெண்களிடம் இளிக்க மாட்டான், படிக்க ஆசைப்படுவான், டேய் ஒரு க்வார்ட்டர் வாங்கி வா என்று (அதட்டலாக அல்ல அன்புடன்தான்) சொன்னால் சைக்கிள் மிதித்து கோடம்பாக்கம் மேம்பாலம் தாண்டிச் சென்று வாங்கி வந்து கொடுப்பான். தமிழில் இருந்த இலக்கியப் பரிச்சயம் ஆங்கிலத்தில் இல்லையென்று அதற்காக உழைக்கத் துடிப்பான். அவ்வளவுதான்!!
அந்த காலகட்டத்தில் நான் பழகிய பேசிய அத்தனைபேரும் என்னிடம் சொன்ன விஷயம்- அவன் நல்ல எழுத்தாளன். எவருமே இன்றுவரை சொல்லாத விஷயம் ‘அவன் நல்லவன்’!!!!
எல்லாமே எச்சத்தால்தானே கணிக்கப்படும்?

இன்று என்னை தூஷிக்கிறான் (வெறுப்புமிழ்ந்து பேசுகிறான் என்பதை விடவும் இச் சொற்பிரயோகம் புரிபடுமே என்றுதான்!). ஏன்?
அவன் இணையத்திற்கு பதிவிலும் ட்விட்டிலும் பஸ்ஸிலும் வந்து சில மாதங்கள் தான் ஆயிற்று. விடுமுறையில் இருக்கிறேன் இங்கே வந்திருக்கிறேன் என்றான், வாழ்த்தினேன். இங்கே புதிய இணைப்புகள் தரும் போதை எல்லாருக்கும் தெரியும், முகம் தெரியாதவரின் ஹலோவின் முதுகுசொரிதலுக்கு இணையான சுகம் கடினம், அதில் அவன் மயங்கினான் ஈராண்டுக்கு முன் நானும் எனக்கு முன் பலரும் மயங்கியதைப்போல. அவனுக்குச் சில ஜால்ராக்கள் சேர்ந்தன. அந்த ஜால்ராக்களுக்கு ஒரு ரகசிய அட்டவணை (secret agenda என்பதை மொழி பெயர்க்கத் தெரியவில்லை) இருந்தது. அவர்களில் சிலர் ட்ராவிடர்களாகவும் ஒப்பனை போட்டுக் கொண்டு திரியும் காரியவாதிகள்!
ஆட்டை (என்று சாருவையும்) மாட்டை (என்று ஜெமோவையும்) கடித்து மனிதனைக் கடிக்க வினவு மீது பாய்ந்தான், இடையில் எஸ்ராவின் மீதும் வாந்தி எடுத்தான்! வினவு நண்பர்களும் தோழர்களும் சிலநேரம் அவசரப் பட்டாலும் எந்நேரமும் (இதுவரை) நேர்மையாகச் செயல்படுவதால் எனக்கு அவர்களிடம் உடன்பாடு! என் குங்குமப் பொட்டைச் சகித்துக்கொள்ளும் அவர்கள் கோணல்களையும் கோமாளிகளையும் சகித்துக்கொள்ளாமல் அவனையும் விமர்சித்தார்கள். வெகுண்டான்!
தூண்டிவிட ஆளிருந்தால்தானே பூணூல் வெளிவரும், வந்தது! வினவு என் பினாமி என்று கூட நம்ப ஆரம்பித்தான், ஆனால் அப்போதைக்கு விட்டுவிட்டான். மதார் என்ற ஒரு சின்னப் பெண்ணிற்காக தொலைபேசியில் ஆரம்பித்த தொல்லை, அதிஷா யுவக்ருஷ்ணா என்று நீண்டது! இந்த இம்சைக்காகத் தவிர்த்தால் அது நானே எதிரி என்று ஆகியது!!

இப்போது விக்கிலீக்ஸ் மாதிரி என்னைப் பற்றி எழுதுகிறானாம்! (நக்கின/நக்கப்பட்டலீக்ஸ் எழுதினால் என்னாவது?).

நான் பாதி பார்ப்பானாம்! என் மனைவி ஓர் ஐயர் குடும்பத்தில் பிறந்ததாலா இல்லை என் அம்மா ஓர் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்ததாலா!! பாவம் இவர்கள் பாப்பாத்திகள் என்றும் எழுதலாம் (சைக்கிள் வாசம்). பாப்பாத்திகளைப் பார்த்து நான் இளிப்பவனாம்- என் முன்னாள் மனைவியையும் சேர்த்துச் சொல்கிறானாம்! அந்த என் முன்னாள் மனைவிதான் ஒரு சிவப்பு லூனா ஓட்டிக்கொண்டு அவனது புண்யஸ்தலமான ட்ரைவினில் அவனை அடித்தவள்! இத்தனைக்கும் அடிப்பதற்கு முன் அடிப்பேன் என்று அவள் சொல்ல, அதற்கும் ‘சிபாரிசுக்காக இவன் என்னிடம் வர, என் நண்பர்களின் ரகசிய மகிழ்ச்சி எனக்கும் இருந்ததால் நான் சும்மா இருக்க- அந்த சுபமுகூர்த்தம் நடந்து முடிந்தது! ஐயையோ சொல்லக்கூடாத கதை சொல்லி விட்டேனா?
இதன் பிறகு என்னவெல்லாம் விக்கிலீக்ஸ் போல மாமல்லவொழுகலாகும்? கலாச்சாரக் காவலர்கள் கோபித்துக் கொள்ளும்படி நானும் உமாவும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்தோம்- எட்டு வருடங்கள்! அதன் பின் நான் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் உமா அமெரிக்கா போய் சம்பாதிக்க முடிவு செய்த போது நாங்கள் சட்டத்திற்காகச் செய்துகொண்ட்து ஒரு சுயமரியாதைத் திருமணம்- எங்கள் முதன்மை சாட்சிக் கையெழுத்து கவிஞர்.மு.மேத்தாவுடையது!
  

வேறென்ன ஒழுகல்கள் வரும்? தெரியவில்லை! அவன் லஞ்சம் வாங்குவதை முறைப்படுத்தி வைக்க லேப்டாப் வாங்கியது வராது. கனிமொழி எனக்கு ரொம்ப ரொம்ப முன்னால்தான் தெரியும் என்று நான் சொன்னதும் வராது. மருதுவை இம்சைப்படுத்தியது வெளித் தெரிந்துவிட்டதால் உடனே ஒரு சூப்பர் மருது போஸ்ட் மட்டும் வரும்!!
மாமல்லன் எனக்குப் பிடித்தவனில்லை, ஆனாலும் சகித்து வந்தேன் பல ஆண்டுகள்! இப்போது என்ன ஆயிற்று விட்டுவிடுங்கள் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். முதிராதவன் முச்சந்தியில் நின்று கூப்பாடு போட்டால் என்ன செய்யலாம்? சொல்லுங்களேன்!
அவன் கடைசியாகப் போட்டது-<மீண்ட> பிரச்சனையே இப்ப நானாவே மீண்டுட்ட காண்டுதான்:)) மீண்டுவிட்டானா? அர்த்தம் புரியாதவர்களுக்கு – வந்த போது அந்தக் கையைப் பிடித்து பேனாவிடம் நான் கொண்டு போனேனாம். இப்போது அதுவே விரலிலும் (முகத்திலும்) மசி தடவிக் கொண்டதாம்.

“தான் பெரிய வீரனென்று  தலைவிரித்துத் திரிபவரின்
 ஆணவத்தை ஒடுக்கிடுவாள் ஒருத்தி
 அந்த ஞானியின் பேர் உலகில் இறைவி”-  adapted from கண்ணதாசன்

Saturday, December 25, 2010

நட்புக்காக(வும்) நாசர்!


ஹை எனக்கு இந்தப் பிரபலம் தெரியுமே எனும் பதிவு அல்ல இது- ஒரு நண்பனைப்பற்றி ஒரு பத்திரிகையில் எழுதக் கிடைத்த வாய்ப்பின் பகிர்தல். நட்பு பகிர்தல்தானே.

 நாசர் பற்றி நேர்காணல்பத்திரிகைக்காக எழுதவேண்டுமென்று பௌத்த அய்யனார் கேட்டபோது சரியென்று சொல்லி, இரண்டு நாட்களில்  இன்னொரு நண்பனின் இல்லத்திருமண வரவேற்பில் நாசரைப் பார்க்க நேர்ந்தது.
“உன்னப்பத்தி எழுதணுமாமே..என்ன எழுத? “ என்றதற்கு, “நீ என்ன வேணும்னாலும் எழுதுஎன்றான். என்ன எழுத என்று யோசித்தால்... எழுதக்கூடியவை போலவே எழுதாமல் இருக்க வேண்டியவையும் நிறைய மனத்துள் தோன்றுகின்றன.
அவனது முதல் திரைப்படம் பார்த்த பின், பிரபலமாகிய படத்தைப் பார்த்தபின், ஒரு பிற்பகல் நடந்த அவனது திருமணத்தின் போது, ஒரு பின்னிரவு அவனுக்கு முதல் குழந்தை பிறந்த போது.. பிறகு அந்தக் குழந்தையின் முதல் பிறந்தநாள்.. அவதாரம் பிரத்யேகக்காட்சி... என்று நாசருடன் நிறைய நெருக்கமான நெகிழ்-மகிழ் தருணங்களும் நினைவில் வருகின்றன. ஆனால் என்னை பௌ.அ. எழுதச்சொன்னது நாசருடனான நாடக அனுபவங்கள் பற்றி!

1984- எங்கள் முத்ரா நாடகக் குழுவில் இந்திரா பார்த்தசாரதியின் ஔரங்கசீப் நாடகத்தைத் தயாரிக்க முடிவெடுத்தோம். பாலாசிங் அதற்கு முந்தைய நாடகத்தின் கதாநாயகனாக நடித்து விட்டதால் எங்கள் ஜனநாயக முட்டாள்தனம் இதற்கு வேறொரு கதாநாயக நடிகனைத் தேடிக் கொண்டிருந்தது. இன்றைய முன்னணி நவீன நாடகக்காரரான ப்ரீதம் ஔரங்கசீப்பில் நடிப்பதாக இருக்க அவளது கணவர் (சக்ஸ்) சக்கரவர்த்தியிடம் இந்த ஆளில்லா குறையைப் புலம்பிக் கொண்டிருந்தேன். சக்ஸ் தாடியும் வைத்துக்கொண்டு சிவப்பாகவும் இருந்ததால் மனுஷன் நான் நடிக்கிறேன் என்று சொல்ல மாட்டானா என்றுதான் கேட்டேன். எனக்கு ஒரு பையன் தெரியும் உன்னை வந்து பாக்கச் சொல்றேன்என்று சக்ஸ் என்னிடம் அனுப்பிய அந்த இளைஞன் தான் நாசர்.

1984
இன்று என்னை ‘நீஎன்றும் ‘டேய்என்றும் விளிக்கும் அவன் என்னிடம் முதலில் பேசியது “சார்..”!
“சக்ஸ் அனுபிச்சார்...நான் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்..என்று ஆளில்லாமல் அலையும் என்னிடம் வாய்ப்பு கேட்பவன் போல நின்றான். அன்று மாலை ஒத்திகையில் எல்லாரிடமும் “இவந்தான் ஔரங்கசீப்என்றேன். நாசருக்கே கூட தான் கதாநாயகன் என்பது அப்போதுதான் தெரியும்!

காலையிலிருந்தே நண்பர்கள் கூட ஆரம்பித்தாலும் நான் எல்லா பேஷண்ட்ஸையும் முடித்துவிட்டு, எல்லாரும் சாப்பிட்டுக் கிளம்ப மதியம் இரண்டு மணியாகிவிடும். பெரியார் ரோடு (தி.நகர்) என் கிளினிக்கிலிருந்து பெங்கால் அஸோஸியேஷனுக்கு நடந்து போவோம். நான்கு மணிக்கு மேல் அந்த இடம் எங்களுக்குக் கிடையாது என்பதால் மாலை திரும்ப வந்து விடுவோம். ஒருவழியாக எல்லாரும் வசனத்தை மனப்பாடம் செய்து விட்ட நேரத்தில் நாசருக்கு சென்னை தொலைக்காட்சிப் படமொன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஒரு வாரம் படப்பிடிப்பு என்று போனவன் வர இரண்டு வாரம் ஆனது. அதற்குள் வீம்புடன் தேதி முடிவு செய்து நடிகர் சங்க அரங்கத்தை முன்பதிவு செய்துவிட்டோம்.
நாடகத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்தான் அவனால் முழு ஒத்திகையிலும் எல்லாருடனும் பங்கேற்க முடிந்தது. 

நாடகத்தின் முதல் காட்சியிலேயே கோணல்! எங்கள் குழுவின் ஜனநாயக-மடமையும் ஆள் பற்றாக்குறையும் சேர்ந்து பின்மேடைப் பணிகளில் மட்டும் இருக்க முடியாமல் நான் ஷாஜஹானாய் நடிக்க வேண்டி வந்த அந்த முதல் காட்சியின் முடிவில், பாலாசிங்கும் ப்ரீதமும் அவர்களது வசனத்தைப் பேசிவிட்டுப் போனபின், விளக்குகள் அணையும்வரை நான் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கவேண்டும். ஒளியமைப்பின் பொறுப்பேற்ற சக்ஸ் விளக்கை அணைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலை..பாலாவும் அங்கே  இல்லை.. நாசர் தன் நுழைவுக் காட்சிக்காக இடப்புறம் காத்திருக்கிறான். ஒலிநாடாவின் இசையும் முடிந்துவிட்டது. மிகவும் தற்செயலாக நடந்த அந்த வெறுமையான காட்சி என் (ஷாஜஹானின்) தனிமையை மிகவும் சிறப்பாக முன்வைத்ததாக ஒரு நாடக ஆர்வலர் கூறியதிலிருந்து நிபுணர்களை நான் நம்புவதில்லை.
அந்த முதல் காட்சியில் நாசர் பிரமாதமாக நடிக்க, பின்னாலிருந்து வசனம் தூண்டி விட வேண்டியவன் சிகரெட் புகைக்க வெளியே போனான்... திரும்பி வருவதற்குள் இன்னும் சில காட்சிகள் முடிந்து விட்டன. நாசரும் பாலாசிங்கும் வாதம் புரிய வேண்டிய முக்கியமான காட்சி. வசனங்களும் அங்கே மிக முக்கியம்.
நாசருக்கு ஓரிடத்தில் வசனம் இடறியது. தாமதமாக வந்து ப்ராம்ப்ட் செய்தவன் இரண்டு பக்கங்களுக்குப் பின் இருந்த வார்த்தையைக் கிசுகிசுக்க, நாசரும் அங்கிருந்து வசனத்தைத் தொடர்ந்து விட்டான். பாலாசிங் பண்பட்ட நடிகன் என்பதால், தான் பேச வேண்டியதை விட்டுவிட்டுத் தொடர...நாடகம் முடியும் போது நாசர் ஒரு ஹீரோ! பிரபலமான வில்லனாகப் பின்னர் பரிமளித்தாலும்.

1989
அதன்பின் படிப்படியாக அவனுக்குத் திரைவாய்ப்புகள். எங்கள் நாடகக்குழுவும் இரண்டாண்டுகள் சும்மாயிருந்துவிட்டு, “இனிஎன்ற நாடகத்தை 1987-ல் அரங்கேற்றினோம். அதில் தானும் கலந்து கொள்வேன் என்று அடம் பிடித்ததால் அவனுக்கு டாக்டர் பாத்திரம். ஒத்திகை கூடத் தேவையில்லை, எதிரே இருப்பவரிடம் ஒரு ஃபைல் பார்த்துக் கேள்வி கேட்டால் மேடையின் பல இடங்களிலிருந்து பலர் பதில் தருவதாய் காட்சி!
அடுத்த ஆண்டு நாங்கள் ஈடிபஸ் போடும்போது அதில் நடிப்பேன் அன்று அடம் பிடித்தான்...அப்போதுதான் திரைப்படங்களில் நல்ல வாய்ப்புகள் வந்துகொண்டிருந்த நேரம், ஆகவே அவனுக்கு நாடகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது, அதற்கு அடுத்த ஆண்டு மேக்பெத் நாடகத்திலும் நடிப்பேன் என்றான், நான் விடவில்லை. நடிக்காவிட்டாலும் உடைகளையும் ஒப்பனையையும் நான்தான் செய்வேன் என்று தான் மிகவும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த திரைப்படங்களுக்கு இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு எங்களுடன் பணியாற்றினான். 1989க்குப் பிறகு நாங்கள் நாடகம் போடுவதும் குறைந்து விட்டது. ஆனால் நட்பு தொடர்ந்தது.

இன்னும் நட்பு இருக்கிறது, சந்தித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க நேரம் இல்லை. இரண்டு வாரங்களுக்கு முன் பார்த்த அந்த நிகழ்ச்சியில் மறுபடியும் நாடகம் போடலாமா என்று அவன் கேட்ட போது சபலம் வந்தது. ஆனால் புத்தி ஆசையை அடக்குகிறது. ஒரு நல்ல நடிகன் இருந்தும், வசதி இருந்தும் நாடகம் போட முடியாத வருத்தமும் இருக்கிறது....நாசர் நல்ல நடிகன்.
நல்ல நடிகனாக இருப்பது சிரமம், நல்ல நடிகன் நல்ல நண்பனாக இருப்பது அபூர்வம். பல நட்பு பாவனைகள் நாடகங்களாகப் பார்த்தவன் நான்.
அந்தக் காலக்கட்டத்தில் என் நண்பர்களை எல்லாம் நாடகத்தில் நடிக்க வைத்தேன், நாடக நடிகர்களையெல்லாம் நண்பர்களாகவும் ஆக்கிக்கொண்டேன். இன்று நடிப்பவர்களையெல்லாம் விலக்கி வைக்க நாடகமாடிக்கொண்டிருக்கிறேன்.

Sunday, December 19, 2010

சுளுக்கெடுத்தல் சுகம்!


நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை என்  கழுத்தைச் சுளுக்க,
திரும்பிப்பார்க்கிறேன், இன்னும் நேராகவும் திமிராகவும் மீதி பாதை பயணிக்க.
என் முன் வருபவர்க்கும் நிற்பவர்க்கும் என் விழியின் மேல்நோக்கிய கூர்மை வியப்பையும் ரசிப்பையும் உருவாக்கக்கூடும் என்றாலும், அது பின்னாலிருக்கும் வாசனையிலிருந்து வேகமாய் வெளியேறி வான்புகும் ஆசைதான்.
Small Memories by Jose Saramago படித்ததால் வந்த பதிவு இது!

கோடம்பாகம் நெடுஞ்சாலை..இப்போது அதுதான் எம்.ஜி.ஆர் சாலை என்று நினக்கிறேன். நாற்பத்தைந்து காலம் அதே சாலையில் அடையாளம் காணப்பட்டவன் நான். பிறந்தது முதல், வேறு விலாசம் மாறும் வரை. 

நான் பிறந்ததென்னவோ எழும்பூரில் என்றாலும் வாழ்ந்த்தும் வளர்ந்ததும் இதே கோடம்பாகம் நெடுஞ்சாலையில்தான்! எழும்பூர் ஒன்றும் மூதாதையர் வாழிடம் இல்லை- அங்கேதான் அரசு மகப்பேறு மருத்துவமனை- என் மயக்கநிலையில் நான் சொல்லத்துணியும் என் அவதாரஸ்தலம். 
தொட்டிலிடப்பட்ட்தும், கொஞ்சி வளர்க்கப்பட்டதும், கல்விச்சாலை சென்றதும், படித்ததும், திரிந்ததும், திமிருடன் இருந்ததும், உழைத்ததும்.. உயர்ந்ததும் இதே சாலையில்தான்.

அதே கோடம்பாகம் நெடுஞ்சாலையில் வெவ்வேறு இலக்கங்கள் என் விலாசமாயின. 1/10, 2/6, 163...பிறகு 43, கடைசியில் 73!

இன்று நின்று யோசித்தால் அந்த நெடுஞ்சாலை அன்று மிகமிக வேறாய் இருந்தது தெரிகிறது. இன்றைய வார்த்தைகள் அன்றைய ஞாபகங்களை மீட்க முயலும் போது..சில மிகையாகும், சில பிறழ்வாகும், சில பிழையாகவும் மாறும். வயதுகள் மட்டுமல்ல, வார்த்தைகள் வளர்ந்ததும் அந்த இடத்தில்தான்.

முதல் ஐந்து வருடங்கள் ரொம்பவும் மங்கலாகவே இருக்கின்றன. என் அப்பாவின் நண்பரின் மோட்டார்பைக்கில் வரும் பெட்ரோல் நெடி, வீட்டைக் கடந்து செக்யுலராகப் போகும் குட்டித்தேர் மாதா ஊர்வலம், ஹஸெந்ஹுஸென் என்று ஏதோ சொல்லிக்கொண்டு கை போல ஒரு விஷயத்தை ஊர்வலம் கொண்டு போகும் (எனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட) அல்லாசாமியின் ஊர்வலம், அப்புறம் அந்த இடத்தில் இருந்த தெருவீதி (திருவீதியாகவும் இருக்கலாம்) அம்மன் விழாவின் கரகம், அலங்கார ஊர்வலம், அப்புறம் தாத்தா எனும் மறையும் பழுப்பாய் ஓர் உருவம், மூன்று சாவுகள், ஒருமுறை எதற்கென்று தெரியாமல் எங்கள் வீட்டில் நடந்த குருபூஜை 
(இந்த குரு பற்றி யாரும் எதுவும் அதன் பிறகு என்னிடம் சொன்னதில்லை, பதினெட்டு வயதில் பழைய காகிதங்களை மேயும்போதுதான் தெரியும் அவர் பெயர் சாங்குசித்தசிவலிங்க நாயனார்இவரைப்பற்றி, கல்கி/ஜக்கி/ரவிஷங்கர் மாதிரி இல்லையென்றால் அன்புடன் எனக்குத் தகவல் சொல்லுங்கள்), வீட்டின் பின்னிருந்த கொய்யா, வேப்பமரங்கள், ஞாயிற்றுக்கிழமைகளுக்கே உரித்தான ஒரு அசைவ-நறுமணம்....
இன்னும் நிறைய, சின்னச்சின்ன ஞாபக மினுமினுப்புகள்...

இதையெல்லாம் இப்போது மீள்பரீசீலித்தாலும் பதிவிட முயன்றாலும் முன்னம் அப்படியே வந்து விடாது. இது ப்ளுமேட்/ பேக்ப்ரொஜெக்‌ஷன் சமாச்சாராம் இல்லை...... திரும்பவும் ரசிக்கவோ, ஐயையோ விட்டுட்டோமா என்று பதைத்தும், உண்மையில் என்னதான் நடந்த்து எனும் ஆர்வமோ முயலும் rewind தான்.

நான் போகிறேன் மேலே மேலே, பூலோகமே காலின்கீழே எனும் கனவில் மூழ்காதவரை இப்படியான பழங்கதை பேசுதல் உத்வேகமும் தரலாம்.

Thursday, December 16, 2010

சும்மாயிருப்பதும் சுகமல்ல


நான் சும்மாயிருக்கத்தான் நினைத்தேன்... ஆனால்
சமூக பிரச்சினைகளும், கூட்டுஉளவியல்கூறுகளும்  என்று பார்த்தவுடன்..

இன்றைய இளைய தலைமுறையின் பிரமை பற்றி ஒரு கவலை

சமூக பிரச்சினைகளும், கூட்டுஉளவியல்கூறுகளும் 
அறிவியல் என்ன அவலா வெறும்வாயர்கள் மெல்ல?முதலாவதாக இந்த உளவியல் பதம் பற்றி எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும். இது பற்றி இன்னொரு பதிவில், இப்பொழுது இங்கே கக்கியுள்ள திருவாய்மொழி குறித்து பார்ப்போம்.
எதையும் ஆழமாகப் புரிந்துகொள்ளாமல் ஒருவரியை பிடித்துக்கொண்டு பேச ஆரம்பிக்கும் ஒரு தரப்பு எப்போதும் காத்திருக்கிறது..
ஆம். அப்படி அவ்வப்போது ஒருவரி சொல்லிவிட்டு உபநிஷத் சொன்னமாதிரி நடித்து, அந்த மூட ஜால்ராக்களைப் பலர் வளர்த்துவிட்டார்கள். (ஒரு கட்டம் வரை நானும் செய்த அந்த பாவத்திற்கான பிராயச்சித்தமாய் இதை எடுத்துக்கொள்ளலாம்). அப்படி கூடும் கூட்டம் வீதிவரை கூட பிணத்துடன் வராது. சிலாகித்துச் சிலிர்த்துக்கொள்ளும் எத்தனைபேர் அந்த எழுத்தாளனை முழுதாய்ப் படித்தார்கள்? நான் உபாசிக்கும் லாசரா, ஜெயகாந்தன் கூட நான் முழுதாய்ப் படித்த்தில்லை.இத்தனைக்கும் அந்தக் காலத்தில் இணையம் இல்லை.
இவர்கள் என்ன சுயம்புவா? இவர்கள் ஜால்ராக்களாய் பத்திரமாய் வளர்க்கப்பட்டும் மலரமுடியாத கொடிகள். ஒட்டுண்ணி உறவு இருதரப்பு என்று ஏமாறும் கோமாளிகள். யாரும் யாரும் யாராயினரோ எனும் கேள்வியே இல்லை. இவர்கள் வளர்க்கப்படுகிறார்கள்- குண்டு கோழியாய், கொழுப்புடன் ஆடாய்- பலிபீடமே டைனிங் டேபிள் என்று தெரியாமல் மசாலா பூசிக்கொள்பவர்கள்.
இவர்கள் எப்படி வளர்ந்தார்கள்? ஆட்டோக்ராஃப் போடத்துடித்த அற்பர்களால்தானே!
இங்கேயும் இந்த ஒரு வரியைப் பிடித்துக்கொண்டுதான் பேசுகிறேன். நம் பழமொழிகள் உபநிஷத்களை விட உள்ளர்த்தம் உள்ளவை. இது ஒரு பருக்கை!

சாதாரணமாக நாளிதழ்களை வாசித்துவிட்டு கருத்துச்சொல்லும் பலரில் ஒருவனாகவும் நின்று இதை எழுதவில்லை..
சாதாரணமாக நாளிதழ் படிப்பவன்  தான் வெட்டியாய் டெல்லிசென்று சும்மா இருக்கும் எம்பிக்களைத் தேர்ந்தெடுக்கிறான். அவன் தான் முகம் கழுவிக்கொண்டு, தீவிர இலக்கிய வாசக முகப்பூச்சுடன் பேனா பிடித்த கையை முத்தமிட முண்டுகிறான்.
எழுத்தாளனாக மனித மனங்களை உய்த்துணரக்கூடியவன், வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பார்க்கும் கண் கொண்டவன் என்ற முறையில். அடுத்ததாக இந்திய வரலாற்றைத் தொடர்ந்து கற்றுவருபவன் என்ற முறையில்
இதையெல்லாம் படித்தும் நான் சும்மா இருக்க வேண்டுமாம்! Sylvia plath, Hemingway  இவர்களுக்கு மிகவும் நன்றாகவும் அவ்வப்போதும் தேவைப்படும் பெயர்கள். நான் குறிப்பிடும் இருவரை விடவும் விரிவாகவோ, துல்லியமாகவோ எழுதாத (என்னைப்பொருத்தவரை எழுத முடியாத) பேனா பிடித்துவிட்டதால் எழுத்தையும் பிடித்துவிட்டதாய் ட்ரம்பட் இல்லாமல் பொக்கைவாயால் ஊதுபவர்கள், வேறு என்ன சொல்வார்கள் என்று சலிக்கும்போதே இதை நம்பி ஒரு தலைமுறையின் ஒருவராவது வீணாவதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்.
வரலாறு எது? சொல்லப்பட்டதா விடுக்கப்பட்டதா மறைக்கப்பட்டதா?
விவாதங்களில் உள்ளடங்கி இருக்கும் ஒர் உளவியல்கூறு
நான் சாக்கடை சுத்தம் செய்பவரிடம் சும்மா இருப்பேன், மின்பழுது பார்ப்பவரிடமும் சும்மா இருப்பேன். “நான் பத்தாவதில் ஃபிஸிக்ஸில் நூறு மார்க்”  என்று அவர்களிடம் உளற மாட்டேன். தன்னடக்கம் அல்ல, தெளிவு.
உளவியல் என்று உளறப்படும் மனவியல் என்ன மௌண்ட் ரோட்டோரம் பேரம் பேசி வாங்கி முதல் பக்கம் மட்டும் முக்கிப்படித்து மூடிவைக்கும் புத்தகமா? இதன் பெயர் என்ன? அறிவா/ திமிரா- இவையிரண்டும் கூடப் பரவாயில்லை... இதன் பெயர் பொய் விற்கும் சாகசம்.
ந்த நிலையை மாற்ற ஏதும் செய்யும் மனநிலை கொண்டவர்கள் அல்ல. தங்களுக்குச் சிறிய இழப்பை அளிக்கும் ஒரு மாற்றத்தைக்கூட அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ரொம்பரொம்பச் சாதாரணமான E=MCsquared..
ஏற்றுக்கொளாதவர்கள் மாற்றத்தை விரும்பியதில்லை. “நிலை மாறினால் குணம் மாறுவான்” என்று கண்ணதாசன் சொன்னது மேல் நோக்கி, இங்கே யதார்த்தம் கீழ் நோக்கி.
எதை எவன் எப்போது ஏற்றான்?  ஏற்கும்படி விற்கத்தெரியாத பரிதாபமானவர்களா நீங்கள்?
இந்த இரட்டைநிலையை அவர்கள் ஒரு கருத்தியல்கழைக்கூத்து மூலம் கடந்து செல்கிறார்கள். அதை நாம் பீர்க்கோப்பை புரட்சி எனலாம்.  சாயங்காலம் கிளப்பில் ஒரு கோப்பை பீருடன் கூடி ஆவேசமாக ஏழை எளிய மக்கள் கிளர்ந்தெழுந்து வன்முறையில் ஈடுபடவேண்டியதன் அவசியம் பற்றி பேசும் அரசியல் இது.  ஓர் உக்கிரமான நிலைபாடு எடுப்பதன் வழியாக அன்றாட வாழ்க்கையின் மொண்ணைத்தன்மையில் இருந்து தப்பிவிடுவதாக ஒரு பிரமை இவர்களுக்கு.
குட்டிக்கரணம் எத்தனை போட்டாலும் குரங்கு திரும்பவும் வாழைப்பழம் இருக்கும் இடத்திற்கே வந்து நிற்கும்.
நடுத்தரத்தின் நடுக்கம் நாளையைப்பற்றியதே.அந்த அச்சத்தின் விடுபடுதல் ஸீரியலா ஸீரியஸா என்பது அந்தந்த மனத்தின் கலாச்சார-கல்வி-பார்வை-மற்றும் பல காரணிகள். எல்லாரும் ஒன்றென்றால் இந்த எழுத்தாளரைத்தவிர யார் விற்பனைக்கு உசிதமாவார்கள்!
பிரமை என்பது தொடர்ந்திருந்தால் தான் அது நோய். Gaslight படத்தில் இப்படி ஒரு பிரமை-உருவாக்குதல் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். அந்தப் படம் பார்த்தவுடன் Paranoia, Manipulation Inducement என்றெல்லாம் தாண்டி  Inception வரை போவதைக் கொண்டாடும் குறுகிய நோக்குடைய கூட்டத்திற்கு இவை சௌகரியமான, சுய அங்கீகரமான, செல்லுபடியாகும் வார்த்தைகள்!
ஓரு மாற்று ஆளுமையை இப்படி இவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். அதற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை. அந்தப் போலிபிம்பத்தை ஒரு சித்திரம் வரைவதுபோலத் துளித்துளியாக வரைந்துகொண்டே இருப்பதுதான் இவர்களின் அரசியல்.
இங்கே நடப்பது பிணத்துக்குப் போடும் நெற்றிக்காசு அல்ல! Anonymous proximity and  escape route are the convenience of an internet squabble. போலியான பிம்பம் இங்கே தெரிந்தே தேர்வு செய்யப்படுகிறது. தப்பிக்க மட்டுமல்ல- இங்கேயாவது எம்ஜியாராக இருக்க விரும்பித்தான். இது அரசியல் அல்ல, மனவியலின் ஆரம்பப்பாடம்.
இணையம் இத்தகையவர்களுக்கு ஒரு நல்ல ஊடகம். உண்மையான ஆளுமையை மறைத்துக்கொண்டு அந்த போலி ஆளுமையை இணையத்தில் திறமையாக உலாவரச்செய்ய முடியும். இணையத்தின் தமிழ் யதார்த்தத்துடன் சம்பந்தமே இல்லாத புரட்சிக்கொந்தளிப்புக்கு காரணம் இதுவே.
இங்கே எவனும் தப்பித்ததில்லை. எத்தனை கண்களில் படுகிறான் என்பதே கணக்கு.
இப்படி அடிப்படையிலேயே நேர்மையும் தைரியமும் இல்லாதவர்களும் வீரம் பேசுவதே இணைய சௌகரியம். ஆனால் படிப்பவரோ பார்ப்பவரோ முட்டாளில்லை.
இந்துவிலோ டைம்ஸ் ஆஃப் இண்டியாவிலோ அவுட்லுக்கிலோ ஒரு மாவோசஆதரவுக் கட்டுரையை வாசித்து ஆவேசமாக ஆதரித்து பேசிவிட்டால் தங்களை முற்போக்கினராக எண்ணி நிறைவுகொள்ளக்கூடியவர்கள் இவர்கள்.
இங்கே இன்னும் கோபம் வருகிறது.

ப்ளு கலர் ஜெமோவின் எழுத்து, சிவப்பு ’அவ’ர்களது மொழியாளுமை...மீதி நான், 
யாரும் யாரும் யாராகிடினும் நானும் நானும் வேறாகிடல் வேண்டாம்- (இதுவும் ஒரு பிரார்த்தனை)