Thursday, October 28, 2010

அஞ்சலி-மௌனத்தின் நீட்சியில்


                                                  
இதே போல் ஒரு அக்டோபர், 2007 லாசரா எனும் எழுத்துக்கலைஞர் மறைந்தார். அதே தேதியில் அதற்கு மூன்றாண்டுகளுக்கு முன், அவரது பிறந்த நாள்..
கடைசியாக அவருடன் நான் அதிக நேரம் செலவிட்டது  2004ல் தான். 
அவருடன் எனக்குஇருபத்தைந்தாண்டு பழக்கமும் நெருக்கமும். அந்த 25 ஆண்டுகளில் பத்து நாட்கள் என்னுடனே தங்கியிருந்திருக்கிறார். அதைத் தவிர 25 முறை தான் நாங்கள் சந்த்தித்திருப்போம். ஒவ்வொரு சந்திப்பின் இடைவெளியிலும் மௌனம் இருந்தது தொடர்ந்தது, இன்றும் போல. அவருடனான பிணைப்பு அவரது அலாதியான எழுத்துகளின் மீது வந்த மோகத்தினால் தான்.அது மௌனமாயும் மௌனத்திலும் தொடர்ந்து வந்தது.

அவரது எழுத்துகள் ஒரு மௌன ஸ்வரத்தை உள்ளடக்கியவை. 
ராகத்தின் பெயர் தெரியாவிட்டாலும் மயக்கக்கூடிய ஆலாபனை போல் அனிச்சையாக உள்நுழைந்து அதிர்வுகளை இசையாக்கிக் கொள்ளக்கூடியவை. வார்த்தைகளின் இடைவெளிகளில் அர்த்தங்கள் மேகங்களின் அசைவாக அமைந்திருப்பவை. கதைக்களம் என்று வெவ்வேறு தளங்களுக்கு அவர் சென்றதில்லை. சில கதைகளே..ஆனால் கல்பனாஸ்வர ஜாலத்தில் ஒவ்வொன்றுமே பலவாகியவை, ஒவ்வொரு வாசிப்பிலும் புதிதானவை.

லாசரா, “1948ல் நான் ஒரு கனவு கண்டேன்,” என்று ஆரம்பித்து, “.. கடைசி தருணத்தில் சடார்நூ அந்தச் சப்தமானது என்னுடைய தொண்டையிலேர்ந்து பிடுங்கிண்டு வர்ரதை நான் உணர்ந்தேன். உடனே விழிச்சுண்டேன்... இந்தக்குரல் இன்னும் அடுத்த நாள் விழித்துக் கொண்டதிலேர்ந்து என்னுடன் ஒரு புத்துணர்வு என்று கண்டு கொண்டேன்..
புதுவலிமை..எழுத்துக்கு ஒரு சக்தி வருவதை உணர்ந்தேன். அங்கேயிருந்துதான் ஜனனி’, புற்று’, பூர்வா..இடத் தொடர்புகள் எல்லாம் அந்தக் கதியினுடையது..எல்லாம் அந்தச் சங்கிலியிலிருந்து உருவானதுதான்....இப்பக்கூட அந்தக்குரலானது எனக்குக் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கு..ஏதோ ஒரு சமயத்திலே திடீர்னு ஜலஜலண்ணு சொல்லிட்டு ஒரு சங்கிலியினுடைய சப்தம், ஒரு பாத சலங்கையுடைய சப்தம்..ஒரு சாரங்கியுடைய சப்தம்...இது ஒரு சித்து வித்தை இல்லே..என்னுடைய பிரக்ஞையுடைய முதிர்ந்த நிலைன்னு நினைச்சுருக்கேன்...”  என்று தன் எழுத்தின் இசைத்தன்மையை ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

இதையே வேறு விதமாய் என்னிடம் இரவு ஒரு மணிக்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்..
கடைசியாக அவருடன் பேசிக்கொண்டிருந்த போது உத்தராயணம் பற்றி நிறைய பேசினார். அம்பாள் பற்றி சிலிர்த்தார். லலிதா ஸஹஸ்ரநாமம் படிக்கிறாயா என்று கண்ணில் மின்னலிடத் தூண்டிவிட்டார்...

சொல்லாமலேயே நிறைய என்னிடம் சொன்னவர் அவர்.
பேசாத போது தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தவர்கள் நாங்கள். அவரது நினைவு நாள் அக்டோபர் முப்பது அவரது உடலை அக்னி அணைத்துக்கொள்வதைப் பார்த்து நான் விதிர்விதித்து நின்ற நாள்..அவரது பிறந்த நாளும் அது தான்..
அந்த மௌனத்தின் மோனத்தின் நீட்சியாய், மீட்சியாய் அந்தத் தருணங்களின் படங்கள்-

Tuesday, October 26, 2010

நாத்திகமும் சுயமரியாதையும்


இது முதல் பகுதி அடுத்த பகுதி எழுதும் அவசியம் வரும்வரை.


நாத்திகமும் சுயமரியாதையும், நானும் என்றே இந்தத் தலைப்பு இருந்திருக்க வேண்டும். ஒரு நண்பரின் திருமணத்திற்குச் சென்று வாழ்த்திவிட்டு வந்தால், நான் மணமக்களை மட்டுமே பார்ப்பேன்- அங்கிருக்கும் புரோகிதனை அல்ல. தெரிந்தவர் தென்பட்டால் பேசுவேன். நண்பர்களுடன் சிரிப்பேன். என்னை எதிரியாக நினைத்துச் செயல்பட்டவர்களைத் தவிர்ப்பேன்- அச்சத்தினால் அல்ல, நாகரிகத்தினால். எதிர் கருத்து உள்ளவர்களுடனும் அம்மாதிரி நேரங்களில் விவாதம் தவிர்ப்பேன், அச்சத்தினால் அல்ல, நாகரிகத்தினால்.

நாகரிகம் தான் சுயமரியாதை- எனக்கு.

எனக்கு என் சுயமரியாதை மீது தீவிரமான ஈடுபாடு உண்டு. சுயமரியாதை என்பது உண்மை. அது இல்லாதவன் நடமாடினாலும் பிணம்தான். தன்னைத்தானே வெளிப்படுத்திகொள்வதுதான் சுயத்தின் மீது ஒருவனுக்கு இருக்கும் மரியாதை. நாகரிகத்திற்காகத் தன் விருப்பிற்கு மாறாக நடித்தாலும் அது சுயமரியாதை ஆகாது. இதை இப்போதைக்கு ஒப்புக்கொண்டே மேலும் எழுதத்துணிகிறேன்.
எது சுயம்? அது எப்போதிலிருந்து, எது வரை?
என் முகமும் விலாசமும் எல்லார்க்கும் தெரிவது போல என் அகமும் விகாரமும் தெரிவதில்லை- வெளிப்படுத்தாதலால். அப்படியெனில் எது சுயம்- இருப்பதா, இல்லை இருப்பதாய்க் காட்டுவதா? அதைப் பேணும் பொருட்டே சுயம் தனக்குத்தானே மதிப்பளித்துக்கொள்கிறது. (வள்ளலாருடன் எனக்கு உறவு வேண்டும்.)

சுயத்தை சமரசம் செய்து கொள்ளலாமா? செய்துகொண்டால் சௌகரியமாகக் கூட இருக்கலாம். சுகமாக இருக்க முடியாது. சௌகரியமும் சுகமும் ஒன்றா?

இது சமூகம். இங்கே என்னைத்தவிரவும் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒத்திசைவதே வாழ்க்கை. இது தான் கற்பிக்கப்பட்ட ஒன்று. இது தான் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கும் அடிப்படை விதி. இதை மாற்றுவதா இல்லை மாறுவதா என்பதே சுயமரியாதையின் அடிப்படைக் கேள்வி- எனக்கு.அந்தந்தநேரத்துகேற்ப என்பது சிக்கலான ஒன்று. அந்தந்த நேரங்கள் யாவும் ஒன்றாய் அமைவதில்லை. அப்படியென்றால் எந்த நேரத்தில் எது நான்?

என் கருத்தைத் திணிக்காமல், பிறர் மகிழ்ச்சியைக் கெடுக்காமல், ஆதிக்கம் காட்டாமல், லாபத்திற்காகவென்று மட்டும் செயல்படாமல், அன்பாக நடிக்காமல்,பண்பை மறக்காமல் செயல் படுவதே நான். முழுதாய்ச் சிரிப்பவனும், முழுதாய் ஆத்திரப்படுபவனுமே நான்.
எனக்கு உபநிஷத்களும் வேதமும் தெரியும்  ஆச்சாரியனாக நடிக்குமளவு- நான் பிராமணனை துவேஷிப்பதில்லை- பார்ப்பனர்களை மட்டுமே- இது புரியாவிட்டால் நாத்திகமும் சுயமரியாதையும் ஒன்றாகவே தெரியும்.    இன்னும் பின்.....

Friday, October 22, 2010

காஃப்காவின் பிம்பம்.



காலையில் எழுந்திருக்கும் போது ஒரு மனிதன் பூச்சியாக மாறிவிடுகிறான். இன்னொரு கதையில் நாயகன் எழுந்தவுடன் அவனை கைது செய்வதாக மூவர் சொல்கிறார்கள், ஆனால் வழக்கும் கைதும் இயல்பு வாழ்க்கையில் அவனைத் தொடரவைக்கிறது. இந்த இரண்டுமே காஃப்கா எழுதியவை. படித்தவுடன் பிரமித்து, ஒரு வெறியில் இரண்டையுமே நாடகமாகத் தமிழில் எழுதி அரங்கேற்றியிருக்கிறேன். அது 1989,1993. இந்த ஆண்டு அது நினைவுக்கு வரவும் இப்போது எழுதவும் காரணம் சமீபத்தில் நான் வாசித்த நூல்.


“Why you should read kafka before you waste your life” எனும் இந்நூலை எழுதியவர் James Hawes. 2008ல் வெளிவந்த நூலை 2010எல் தான் படிக்க நேர்ந்தது. மலிவு விலையிலும் தள்ளுபடியிலும் நடந்த ஒரு விற்பனையில் இதைப் பார்த்ததும் வாங்கினேன். இதைப் பற்றி அப்போது தெரியாது. விலை மலிவாகவும் இருக்கிறது, காஃப்காவைப் பற்றியும் இருக்கிறதே என்று தான் வாங்கினேன்.

விபரீதமான வித்தியாசத்தை Kafkaesque என்று சொல்வதுண்டு. இப்படி ஓர் எழுத்தாளனின் பெயரில் ஒரு விஷயம் வர்ணிக்கப்படுவது அபூர்வம். இத்தகைய வெற்றிதான் காஃப்காவினுடையது. அவனைப் பற்றிப் பல கதைகளை அங்குமிங்கும் படித்திருக்கிறேன். அவனது எல்லா எழுத்துகளையும் படித்திருக்கிறேன். அவனைப் பற்றி என் மனத்துள் ஒரு பிம்பமும் உருவாக்கி வைத்திருந்திருக்கிறேன்.

 Orson Welles எடுத்த The Trial படத்தில் Anthony Perkins பார்த்தவுடன் இது காஃப்காவேதான் என்றும் மயங்கியிருக்கிறேன். அந்த அளவுக்கு என்னுள் காஃப்கா பற்றிய ஒரு பிம்பம் இருந்திருக்கிறது. அவனை கூகுளில் தேடினால் கிடைக்கும் படமும் அந்த பிம்பத்திற்கு நன்றாகப் பொருந்தி வருகிறது.
காஃப்காவை நாடகமாக்கியபின் வேறெவரது எழுத்துக்கும் நான் காட்சியமைப்பும் வசனமும் எழுதியதில்லை என்று இப்போதுதான் உரைக்கிறது. நான் கடைசியாக எழுதிய ஆங்கில நாடகமும் காஃப்காவின் ப்ரொமேதியஸ் படித்துத் தான்! இது என் எழுத்து பற்றியல்ல, என்னை அவ்வளவு தூரம் பாதித்த ஓர் இலக்கிய ஆளுமை குறித்துதான்.

அவனது எழுத்துக்களில் ஒரு தீவிரம் இருக்கும், ஒரு தீர்க்கமான பார்வை இருக்கும்,விபரீதங்கள் இயல்பு போல் சித்தரிக்கப்படும். அவனைப் படித்ததெல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்புகளில்தான் என்பதால் அவனது மொழியாளுமை குறித்து நான் பேச முடியாது.இப்போது எழுத நினைப்பது அவனது பிம்பத்தைப் பற்றித்தான்.

எல்லாவற்றுக்கும் பிம்பங்கள் இருக்கின்றன. வார்த்தைகளைச் சுருக்கி, உணர்ச்சிகளைச் சுருக்கி, செய்திகளைச் சுருக்கி மனத்துள் பதித்துக்கொள்ள பிம்பங்கள் தேவைப்படுகின்றன. பிம்பங்கள் உருவாக்கப்பட்டவை- பல நேரங்களில் சமூகத்தின் அவசியத்தால், சில நேரங்களில் நம்முடைய அவசரத்தால்.

முண்டாசும் மீசையுமாய் பாரதியின் பிம்பம் அவன் பயத்தை மறைத்து வீரத்தை மட்டுமே காட்டுவது போல, பிம்பங்கள் தட்டையானவை. அவற்றின் பின்னே இருக்கும் பரிமாணம் தெரிய வருவதில்லை, தெரியப்பட விடுவதில்லை. ஜெயகாந்தனை ஒரு முசுடு முரடு என்று நான் உருவாக்கிக்கொண்ட பிம்பத்தால் தான் அவரை பல ஆண்டுகள் தவிர்த்திருக்கிறேன். நெருங்கிக் கூர்ந்து பார்த்தால் பிம்பங்கள் நிஜம் போல் இருப்பதில்லை. ஜெயகாந்தனைப் போல் அன்புடனும் வாஞ்சையுடனும் லாசரா கூட என்னிடம் பழகியதில்லை. இத்தனைக்கும் எனக்கும் அவருக்கும் ஒரு பிரத்யேகப் பிணைப்பு இருந்தது.


காஃப்காவின் பிம்பமாக என் மனத்துள்ளும் பலரது மனங்களிலும் இருந்த பிம்பம்- ஒரு மகிழ்ச்சியில்லாத இளைஞனின் பிம்பம்தான். மகிழ்ச்சி இல்லாமை மட்டுமல்ல அவனது படத்தில் அழக்கூடாத ஒரு வெறுமையின் வருத்தம் தெரியும். ஏதோ ஒரு மான்ஷனில் இருந்த பிர்மீள் போல வசதியில்லாத வாழ்முறையுடையவன் போலத் தோன்றும். அவனது ஒல்லிய தோற்றமும் அதற்கு கூடுதல் ஒப்பனை கலந்தது. 




தன் சாவுக்குப் பின் தன் எல்லா எழுத்துகளையும் அழித்துவிட வேண்டும் என்று தன் நண்பனிடம் சொல்லிய கதையும் (அது கதை தான் இல்லாவிட்டால் அந்த அற்புதமான இலக்கியம் நமக்குக் கிடைத்திருக்காது என்று இந்தப் புத்தகம் சொல்கிறது), அவன் தனிமையில் இருந்தது பற்றிய கதையும், காதலில் நிம்மதியும் வெற்றியும் பெற முடியாமல் எழுதிய கடிதங்களும், இன்னும் எவ்வளவோ செய்திருப்பானே என்று ஏங்க வைக்கும் அவனது நாட்குறிப்புகளும்...அவனை ஒரு சோகமான அறிவுஜீவியாகவே என்னுள் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

அவன் அப்படியல்ல, வசதியாகத்தான் இருந்தான், காதலிக்காமல் ஒரு பெண்ணை ஏமாற்றிக்கொண்டிருந்தான், எழுதிய கதைக்கு வாழ்நாளிலேயே பரிசு வாங்கினான்... அப்புறம் அவனது அரசியல் சந்தர்ப்பவாதம், பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் இருந்த ஒட்டுண்ணி உறவு இவை பற்றியெல்லாம் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. சே, காஃப்கா ஒரு ஃப்ராட் என்று நினைக்குமளவு சரளமாகவும் விரிவாகவும் எழுதப்பட்ட நூல் இது.

அவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தால் என்ன, அவனது எழுத்துதானே முக்கியம் என்பது அறிவு வைக்கும் வாதம். மனம் அந்த எழுத்துகளைப் படித்து உருவாக்கிக் கொண்ட பிம்பம் தகரும் போது வலிக்கும்- வெட்கமாக, கோபமாக, வேதனையாக.

அதனால் அவனை மீண்டும் படித்தேன். இந்தப் புத்தகத்தினால் அவன் இன்னும் உயர்ந்தவனாகினான்.தான் அனுபவிக்காத துயரை எழுதுவது இலக்கியத்தில் ஓர் அற்புத சாதனை. பிறகு ஏன் இந்தப் புத்தகம் பாதித்தது? நான் ஏமாறியதை எனக்கு உணர்த்தியதால்.
பிம்பங்கள் தேவைப்படுகின்றன. சிலவற்றைச் சொல்வதற்கு, சிலவற்றை ஏமாற்றி விற்பதற்கு.

Sunday, October 17, 2010

விஜயதசமி


 
 
 
 நவராத்திரி முடிந்தபின், நாயகி வருவாளா?  
கேட்கவும் பேசவும் நிறைய இருக்கிறது.

தவம் புரிந்தால், தானாய் வரம் கிடைக்கும்- இது பேரமல்ல, ஊதியம்.
தவம் ஒரு கவன ஈர்த்தலா? 
கவன ஈர்ப்புக்கு இன்னொரு பெயர் நினவூட்டல்!


யாருடைய கவனத்தை ஈர்க்க தவம்?
முன்பொரு முறை எழுதியது-
திருவளரும் தினம் வளரும்...
தவமமர வரம் கிடைக்கும் 
தானாக முயலாமலே.

இந்த ஒன்பது நாட்கள்தானா தவம்?
மீதி வாழ்க்கையின் மற்றைய நாட்கள்?
நீயில்லாமலா நான் என்று கேட்கக்கூட முனையாத வாழ்வில்
நீ இருப்பதை எப்படி நான் எனக்கே நிரூபிப்பது? நான் நீ என்று பேதமில்லாமல் நான் வாழ்வதாய் நம்பும் போது..
நீ?
நான் தவமியற்ற அருகதையற்றவன் எனும் மனுவின் பக்கமா நீ?

பதிவர்களுக்காகவும் பதிவிற்காகவும் எழுதி ஓய்ந்த பின்
இது பராசக்திக்கு எழுதும் பதிவு...
அவளுக்குத் தமிழும் தெரியும் என்பது-
என் பல நம்பிக்கைகளில் ஒன்று


இன்னும் கொஞசம் எழுதினால் நூறு வார்த்தைகளாவது தேறும்,
ஆனால் பொய்யாகி இந்த நிஜத்தை அசிங்கமாக்கும்.

Thursday, October 14, 2010

அறிமுக நூலுக்கு ஓர் அறிமுகம்.

பதினேழு வயதில்தான் முதன் முதலில் மாமல்லபுரம் பார்த்தேன்- முதலாமாண்டு மாணவர் சுற்றுலா. அன்று என்னிடம் ஒரு காமெரா இருந்தததால் பலருக்கும் என்னிடம் ஆக வேண்டிய காரியம் நிறைய இருந்தது. தங்களைச் சிலை அருகே, கோவிலருகே கடலருகே படம் எடுத்துத் தர மட்டும் நான் முக்கியம் இல்லை, தங்களுக்குப் பிடித்தவர்களைப் படம் எடுத்துத் தரவும் நான் தேவைப்பட்டேன். சக மாணவர்களிடையே கிடைத்த அங்கீகாரத்தைப் பெருமையாக எண்ணி, மல்லையை முழுதாய் என்ன மேலோட்டமாய்கூட ரசிக்கவில்லை

என் ஆசைக்கு கடற்கரை கோவிலைச் சுற்றிச் சுற்றி வெவ்வேறு கோணங்களில் படமெடுத்ததோடு சரி.அந்தப் படங்களின் நினைவுகளோடுதான் அடுத்த மூன்று வருடங்கள் பல்வேறு சித்திரங்களைத் தீட்டிக்கொண்டிருந்தேன். பிறகொரு நாள் மாமல்லபுரம் பார்க்க ஒரு மழை நாளில் கிளம்பி, அங்கங்கே நின்று ஒவ்வொன்றாய் ரசிக்க ஆரம்பித்த போது தான் அது என் வாழ்வின் ஓர் அங்கமாக மாறியது.

மாமல்லபுரம் சென்னைக்கு மிகவும் நெருக்கமான முக்கியமான இடம். சென்னைவாசி, சுற்றுலா வரும் விருந்தினர்களைக் கண்டிப்பாய் அழைத்துச்செல்ல வேண்டிய இடம். தன் இளமையில் காதலியுடன் செல்ல ஒரு சௌகரியமான இடம் என்பதால் நானும் அதே காரணங்களுக்காக அங்கே அடிக்கடி போக நேர்ந்தது. அங்கிருக்கும் ஒவ்வொரு சிற்பமும் எனக்குத்தெரியும் எனும் இறுமாப்பு கூட என்னிடம் இருந்தது.

பல்லவனுக்கும் சாளுக்கியனுக்கும் கட்டிடக்கலையில் இருந்த வித்தியாசங்களை எல்லாம் தெரிந்து கொள்ள பல வருடங்கள் ஆனது. காஞ்சியின் கைலாசநாதர் கோவில் சிற்ப அமைப்பும், மல்லையின் சிற்ப அமைப்புக்கும் இருந்த வித்தியாசம் புரிய இன்னும் சில ஆண்டுகள் ஆயின.

சென்ற ஆண்டு மாமல்லபுரம் சென்ற போது நிறைய படங்கள் எடுக்க முடியவில்லை, ஏனென்றால் பிடிக்கவில்லை. கடற்கரை கோவில் சிதைந்து கொண்டிருக்கிறது. சிற்பங்களின் முகங்களெல்லாம் தேய்ந்து கொண்டிருக்கின்றன. கைலாசநாதர் கோவிலின் சிற்பங்களை பழுதுபார்ப்பதாய் மேல் பூச்சில் ஒரு கொலு பொம்மைத்தனத்துடன் மாற்றி வரும் போது எனக்கு கோபம் வந்தது. ஒழுங்காய் இதைச் செய்யக்கூடாதா என்று ஆத்திரம் ஆதங்கம் எல்லாம் வந்தது. ஆனால் மல்லையின் சிற்பங்கள் கண்முன்னே காணாமல் போய்க் கொண்டிருப்பதையும் தாங்க முடியவில்லை. 
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னமேயே இதையெல்லாம் நான் ஒழுங்காகப் படம் எடுத்து வைத்திருந்திருக்கலாமே என்று என் மீதே வருத்தமும் வந்தது. இன்னும் இரண்டு தலைமுறைக்கப்புறம் இங்கே அழைத்துவந்து எதைக் காட்டுவார்கள் என்ற கவலையும் வந்தது- நடுத்தர மனப்பான்மையோடு அன்று ஒரு நாள் மட்டும்.

இந்த என் கவலையைத் தீர்க்கும் விதத்தில் இப்போது ஒரு புத்தகம் கிடைத்திருக்கிறது. நண்பர் அரவிந்த் அடிக்கடி என்னிடம் பேசும்போது குறிப்பிட்ட சுவாமிநாதன் எழுதிய நூல். அசோக் கிருஷ்ணசுவாமி எடுத்திருக்கும் மிகவும் அற்புதமான படங்களுடன் நூல் வந்திருக்கிறது. 

படங்களுக்காகவே அதைப் பாதுகாக்கலாம். கூடவே சுவாமிநாதன் எழுதியிருக்கும் விஷயமும் விதமும் மகாபலிபுரத்தின் மீது அவருக்கு இருக்கும் காதலையே காட்டுவதால், இது பார்க்க மட்டுமல்ல அவசியம் படிக்கவும் முக்கியமான நூலாகிறது.

பல்லவர்களின் கலை நயம், நுணுக்கம் குறித்தும், வரலாறு குறித்தும் எழுதிவிட்டு, ஒவ்வொரு சிற்ப அமைப்பையும் விவரமாக அவர் வர்ணிப்பதைப் படிக்கும் போது, மாமல்லபுரம் எனக்குப் புதியதோர் இடமாகவே தோன்றியது. மீண்டும் அங்கே சென்று ஒவ்வொரு சிற்பத்தையும் இன்னும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. அசோக் கிருஷ்ணசுவாமியின் படங்களைப் பார்த்தால் நாம் எதற்கு அங்கே ஒரு காமெரா கொண்டு போக வேண்டும், எல்லாம் எல்லா கோணங்களிலும் அழகாக இருக்கிறதே என்று தோன்றுகிறது- திருப்தியுடன் ஒரு பொறாமையில்.

பலமுறை அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துப் படம் எடுத்த எனக்கு புத்தகத்தின் பல பக்கங்களில் பல புதிய செய்திகள் இருந்தன. இனி அடுத்த தலைமுறைகளும் இப்படித்தான் இந்த இடம் இருந்தது என்று பெருமையாகப் பேசிப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. 

இந்தியாவில் தமிழ்நாட்டின் சிற்பக்கலையின் வெற்றிக்கு அடையாளமான மாமல்லபுரம் பற்றிய இந்நூல், பார்த்தவர்களை மீண்டும் போய்ப் பார்க்கத்தூண்டும், பார்க்காதவர்களைப் பார்க்க வைக்கும்.
சில உயர்வான படைப்புகளுக்கு விலை குறித்து விவாதிக்க முடியாது. மலிவான விலையில் வெளியிட்டிருக்கலாமே என்று எண்ணுவதைவிட இதை வாங்கவே கொஞ்சம் சேமித்து வைக்கலாம் என்று எண்ண வைக்கும் பதிப்பு.

http://www.poetryinstone.in/lang/en/2010/08/15/mahabalipuram-unifinshed-poetry-in-stone-prof-s-swaminathan-photographs-ashok-krishnaswamy.html

http://www.thehindu.com/life-and-style/metroplus/article764650.ece