Wednesday, April 28, 2010

தோப்பில் தனியாய்



பழையன கழித்தல் எனும் முயற்சியில் அவ்வப்போது ஈடுபடும் நான், பழையன பாதுகாத்தல் என்றும், மீள் பரிசீலித்தல் என்றும் ஆகி, குப்பைகளை ஒழிக்காமல் ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறேன்.
அப்படி இன்று சாவகாசமாக ஆரம்பித்த்போது, பழைய அச்சிட்டக் காகிதங்களில் கண்ணில் பட்டது:
“உயர்ந்தவை, வளைந்தவை ஓட்டை விழுந்தவை, எத்தனையோ மரங்கள்/ ஒன்றுக்கொன்று கிளைகோர்த்து/ உல்லாச நிழல் பரப்பும்/ தோப்பில் நான் தனிமரம்.
நினைவுச் சூரியனின் நேற்றைய வெப்பம்/ எரித்து எரித்த/ ஏரியில் வெந்து/ எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட/ நிழல் இருந்தும்/ இந்தத் தோப்பில் நான் தனிமரம்.
தனியாய் நின்று/ தோப்பையே தராசுப் பார்வையுள் வைத்து/ தத்வ தரிசனம் கண்டிருந்த/ தனிமரக் கிளைகள் துளிர் விட்டு/ வெளிப்பாட்டுத் திமிர் கொண்டு/ பூத்துக் குலுங்கிய போதிலும்/ இந்தத் தோப்பில் நான் தனிமரம்.
தனிமரமே ஒரு தோப்பாக/ வந்து ஸ்வரம் மீட்டிய/ குயில் பாடலைக் கேட்பதிலும்/ கூடுகளில் அனுமதிப்பதிலும்/ தனிதான்.
தானே தோப்பாகி/ தோப்புள் தனியாய்/ வாழும் நான்.”
இதை எழுதிய ஆண்டு 1977! ஒரு தலைமுறை இடைவெளியில் இன்று படிக்கும்போது, இப்போது மட்டும்?’ என்றுதான் மனம் கேட்கிறது. இதை எழுதிய பின்னாட்களில் இதை ஒரு கவிதை என்று சொல்ல முடியாத இலக்கணங்கள் மனத்துள் படிந்து விட்டன. இது கவிதையா என்பதல்ல, இந்த உணர்வைப் பற்றியே இப்போது சிந்தனை.
இப்போதெல்லாம், நான் என் தங்கையின் மகளுடன் ஆர்குட்டில்தான் பேசிக்கொள்கிறேன். என் நண்பர்களின் பிள்ளைகள் என்னிடம் முகநூல் வழியாகத்தான் செய்தி பரிமாறுகிறார்கள். பத்தாண்டுகள் கழித்து என் சினேகிதி இணையம் மூலமாக உறவைப் புதுப்பிக்கிறாள். கல்லூரிக் காலத்திற்குப் பின் கண்ணில்படாத நண்பர்கள் பலர் “ஹை” என்று ஒரு சிறிய பெட்டியில் சப்தமிடுகிறார்கள். ஆனால் அடிக்கடிச் சந்த்தித்தவர்களைப் பார்ப்பதில்லை- சண்டையிட்டுப் புறக்கணித்தவர்களுக்கும், ஒன்று சேர்ந்து இயங்கியவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் வட்டத்திலிருந்து விலகல்.
இந்த விலகல் யதார்த்தம்; அதேபோல் இங்கே நெருக்கங்களும் யதார்த்தம். பழக்கமானவர்களைப் பதிவுலகில் பார்க்காவிட்டால் புருவங்கள் சுருங்குகின்றன. மின்னஞ்சல்கள் சில நேரங்களில் ஏமாற்றம் தருகின்றன. செல்பேசி தவிர்த்துவிட்ட நான், அதனாலேயே நண்பர்களுடன் பேசுவதையும் தொலைத்து விட்டேனோ என்று தோன்றுகிறது.
நேரமில்லைதான், புரிகிறது. நெருக்கம் குறையவில்லை என்றும் தெரிகிறது. மெய்நிகர் ஆசுவாசப் படுத்தினாலும், என்னவோ தோப்பில் ஒரு தனிமரம் போன்றே மனம் நினைத்துக்கொள்கிறது.
புதிய வட்டங்கள் உருவானாலும், மனது பழைய வட்டங்களை வட்டமிடுவதை நிறுத்த முடியவில்லை.
விரிவாய் பின்னர்..

Sunday, April 25, 2010

நேற்று, 24 ஏப்ரல்

நேற்று 24 ஏப்ரல், மாலை நண்பர்கள் ஜெயகாந்தனின் பிறந்தநாளைக் கொண்டாடியதில் சில படங்கள். இணையத்தில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள.


 
 இந்த நிகழ்வில் ஜெயகாந்தனின் நண்பர்கள் 50 பேர் வந்திருந்தனர். இதற்கு ஏற்பாடு செய்தவர் அவரது நண்பர் கே.எஸ்.சுப்ரமணியம்.


இன்னும் நல்ல படங்களை நல்ல காமெராவில் பலர் எடுத்திருந்தனர்.

Friday, April 23, 2010

கொண்டாட இன்றும் நாளையும்


எல்லா நாட்களும் கொண்டாடப்படும் வாழ்க்கை சாத்தியம் இல்லை. கொண்டாடவே சில நாட்களை நிர்ணயிப்பதும் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும் சில நாட்கள் கொண்டாடாவிட்டாலும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதை மறுக்க முடியாத நாட்கள்..மே-1 , ஆகஸ்ட்-15, போல.
இன்று இதைக் கொண்டாட வேண்டும் என்று குறித்து வைத்துக்கொண்டு காதலுக்காக, நட்புக்காக, அன்னையர்க்காக, ஆசானுக்காக, என்று அந்தந்த நாட்களில் சம்பிரதாயமான மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு உடன்பாடில்லை. எனக்குப் பிரத்யேகமான தேதிகளை பகிரங்கமாக்கி, அன்பு கொண்டவர்களையும் பலவந்தமாகக் கொண்டாட்டத்தில் நிர்ப்பந்திப்பதிலும் விருப்பமில்லை. குழந்தையின் பிறந்த நாள், அன்புக்குரியவர்களின்  திருமண நாள் இவை தவிர கட்டாயமாகக் கொண்டாட நான் எங்கும் செல்வதில்லை. எந்த விதிக்கும் விலக்கு இருக்கும்போது நானே வைத்துக்கொள்ளும் விதிகளுக்கு மட்டும் எப்படி விலக்கு இல்லாது போகும்?
எனக்கு நெருக்கமான ஒருவரின் 89ஆம் பிறந்த நாளில் கலந்து கொண்டு கேக் சாப்பிடிருக்கிறேன்; மிக நெருக்கமானவரின் பிறந்த நாளில் வழக்கமாய் ஏற்காத காலைச் சிற்றுண்டியும் உண்டிருக்கிறேன். அப்படி ஒரு தேதிதான் இன்றும் நாளையும் எனக்குக் கொண்டாடப்பட வேண்டிய நாட்களாய் இருக்கின்றன.
இன்று உலக புத்தக நாளாகக் கொண்டாடப்படுகிறது, ஷேக்ஸ்பியர் நாளாக, இன்னும் பல எழுத்தாளர்களின் பிறந்த நாளாக.
நீங்களே கூகிலிட்டுத் தெரிந்து கொள்ளக்கூடிய விவரம்தான் என்றாலும் சொல்லவும் தோன்றுகிறது ( இல்லையென்றால் பதிவும் ரொம்பச் சின்னதாகி விடும்). இன்று புனித ஜார்ஜ் நாள்! இந்தப் புனித+தமிழ்ப்படுத்தப்பட்ட பெயர் ஒன்றை ஒரு முறை எழுதி என் நண்பருக்கு வழிதெரியாமல் போயிருக்கிறது- சென்னையில் புனித தோமையார் குன்று அருகே.. என்று விலாசம் எழுதியதால். ஜார்ஜ் என்ன செய்தார் என்றெல்லாம் தெரியாது ஆனால் படங்களில் அவர் ஒரு கோரமிருகத்தைக் கொல்வார்! அவரது படத்தை வைத்துக் கொள்வது ஒரு பாதுகாப்புக் கவசம் போல என்று உலகில் ஒரு நம்பிக்கை உள்ளது. வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு புனிதரின் நாளாகச் சொல்வார்கள், தவிரவும் அனைத்துப்புனிதர்கள் தினம் ஒன்றும் உண்டு. ஜார்ஜ் நாள் புத்தக நாளானது தான் இன்று- 23 ஏப்ரல். இதை 1925 முதல்  இப்படிக் கொண்டாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
புத்தகங்கள் புனிதமானவைதான் எனக்கு, இந்த நாட்டில் அவை சரஸ்வதியின் ரூபம் என்று நம்பவைத்து வளர்க்கப்பட்டவன் நான். புத்தகங்களும் ஒரு பாதுகாப்புக் கவசம்தான். நிஜத்திலிருந்து தப்பிக்க மட்டுமல்ல, மூடத்தனத்திலிருந்து தப்பிக்கவும். புத்தகங்கள் சூழ தினம் இருப்பவனுக்குத் தனியாக ஒரு புத்தக நாள் தேவைப்படாதுதான் என்றாலும், தினம் நம்முடன் இருப்பதாய்ச் சொல்லிக்கொள்ளும் கடவுளுக்கும் ஜெயந்தி கொண்டாடி மகிழும் கூட்டத்தில், ஜார்ஜுக்காக அன்றி புத்தகத்துக்காக இந்நாள் திருநாளாவதில் மகிழ்ச்சி.
ஷேக்ஸ்பியர் எப்போது படித்தாலும் இன்னும் படித்து முடிக்காத உணர்வு தரும் எழுத்தாளர். 1960களில் E.F.TODD என்பவர் அவரது கதைகளை ஐந்தாம் ஆறாம் வகுப்புச் சிறுவர்களுக்காக நிறைய எழுதியிருக்கிறார். அவரை மாக்மில்லன் அல்லது பிளாக்கி நிறுவனங்கள் பதிப்பித்தன என்று ஞாபகம். ( பழைய புத்தகக் கடைகளில் தேடினால் இன்றும் கிடைக்கும், 10 வயது குழந்தைகள் படிக்க உதவும்). நான் முழுதாய், ஆழமாய் படித்த முதல் ஷேக்ஸ்பியர், a Mdisummer night's dream . அதிலிருக்கும் பல வரிகள் இன்றும் நினைவில் இருக்கின்றன.
இந்த உலக புத்தக நாள் ஷேக்ஸ்பியர் பிறந்த நாள் என்பதால் குறிக்கப்பட்டது என்று ஒரு கதை உண்டு. இது தவிரவும் இதுதான் அவரது இறந்த நாள் என்றும் சொல்வார்கள். அவரது பிறப்பு, வாழ்க்கை இறப்பு எல்லாமே அனுமானங்கள். என்றாலும் அவரது பெயர் போற்றுதலுக்குரியதுதான். அவரது சிறப்பு: அவர் எழுதிய நூல்களை விடவும் அவரைப் பற்றி எழுதப்பட்ட நூல்களே அதிகம்!
இன்று எல்லாரும் கொண்டாடி முடித்தாலும் நான் நிறுத்திக் கொள்ள முடியாது. நாளை என் ஆசான் பிறந்த நாள். புத்தகம், எழுதியவரை மீறி நிறையச் சொல்லும். ஆனால் சில எழுத்தாளர்கள்தான், தம் மௌனத்திலும் சொல்லிக்கொடுப்பார்கள். இதை லாசராவிடம் அமர்ந்திருக்கும்போது உணர்ந்திருக்கிறேன், பிறகு ஜேகேவிடம்தான் அனுபவித்திருக்கிறேன்.
அவருடன் நான் இருந்த எல்லா நிமிடங்களும் எனக்கு புத்தகங்கள். அந்த புத்தகங்களின் விழாவாகவும் நான் 24 ஏப்ரல் கொண்டாடுவேன், நேரில் பார்த்தாலும் மௌனங்களின், புன்னகைகளின் நினைவுகளோடு.

Wednesday, April 21, 2010

மனோதர்க்கம் - கொஞ்சம் என்னுடன், நான்.


தானே தனக்குள்ளும் தன்னுடனும் பேசிக்கொள்வது பிரச்சினையில்லை. சில நேரங்களில் பயனுள்ளதாகவும் அமையும். இல்லாத ஒருவரிடம் பேசுவதாக நம்புவதும், இல்லாத நபர் நம்மிடம் பேசுவதாக நம்புவதும் நோய். இது மனச்சிதைவின் அடிப்படை அறிகுறி.
 இதனால் தான் நீ கடவுளிடம் பேசினால் அது பிராத்தனை, கடவுள் உன்னிடம் பேசினால் அது பிரமை (if you speak to god it is prayer, if god speaks to you it is hallucination) என்று சொல்லப்பட்டது. 
கடவுளை விடுவோம், தற்போதைக்கு, சக மனிதர்களிடம் பேசுவது என்ன? பிராத்தனையா, பகிர்தலா, பொருமலா பாசாங்கா? சக மனிதர்கள் பேசுவதைக் காதுகள் உள்வாங்கும் அளவு சிந்தனை உள்வாங்குகிறதா? அவர்கள் பேசாததைப் பேசியதாகவும், பேசியதைப் பேசாது விட்டதாகவும் நினைப்பது ஏன்? பெரும்பாலும் மனது தனக்கு விருப்பமானதை மட்டுமே அனுமதிப்பதால். இது அறிவின் சுயதணிக்கை அல்ல, ஆசையின் அச்சத்தின் பாதுகாப்புணர்வு.
பல விஷயங்களை நான் என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறேன், கோபமாக, வருத்தமாக, கேள்விகளாக... ஆனால் இவற்றில் என்னோடு நான் சந்தோஷமானவற்றைப் பேசிக்கொள்வது குறைவு. மகிழ எப்போதுமே மற்றவர் தேவை, வருத்தப்பட தனிமையே போதும். தனிமையே வருத்தமா என்பது இன்னொரு சிந்தனைத்தொடர். நான் என்னுடன் பேசிக்கொள்வதின் முக்கியமான சௌகரியம், நான் பேசுவதை நான் நிச்சயமாகக் கவனிப்பதுதான்.
வேறு யாரும் இல்லாததால்தான் நமக்குள்ளேயே பேசிக்கொள்கிறோமா? சில நேரங்களில் வேறொருவர் இருந்தாலும் நம்முடன் உரையாடிக் கொண்டிருந்தாலும் நாம் நமக்குள்ளே பேசிக்கொள்வோம். ஆனால் தொடர்ந்து சமூகத்தின் நாடகத்தில் பங்கேற்று வருவதால், முகத்தில் ஒரு புன்னகை ஓட்ட வைத்துக்கொண்டு உள்ளே எரிச்சலை நம்முடன் மட்டுமே பகிர்ந்து கொள்வோம். இந்த நடிப்பு அவசியம் என்பதால் இதை நாளும் செழுமையாக்கிக் கொள்வோம்.
நிஜத்திலேயே இதைச் செய்யும் நாம் மெய்நிகர் இணையத்தில் செய்ய மாட்டோமா! பிடிக்காத எத்தனை உரையாடல்களை, வேலை இருக்கிறது என்று தட்டி விடுகிறோம்! பிடித்த அத்தனை பேருடனும் நாம் ஒரு புன்னகைச் சின்னம் பரிமாறிக்கொள்கிறோம், அதில் எத்தனை வலியோ அவசரமோ வருத்தமோ இல்லாதவை? எத்தனை மனத்திலும் முகத்திலும் இல்லாமலேயே விரல்கள் தட்டி விடுபவை?
உங்களுக்குத் தெரிந்ததையே, நானும் இதுவரை சொல்லிக்கொண்டிருந்ததையே திரும்பவும் சொன்னால் நான் நல்லவன். என் மனத்தின் நிஜ உணர்வுகளை வார்த்த்தைகளாக்கினால், என்னிடம் முதலில் ஆச்சரியம், ஏமாற்றத்தினால் வருத்தம், தன்முகம் உரிக்கப்படுகிறதே என்று கோபம்..இதற்கெல்லாம் காரணம் நானும்தான் என்றாலும், மனம் அவ்வளவு சீக்கிரமா தன்னிடமே ஓர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விடும்?
பிம்பத்தை நான் தேர்ந்தெடுத்து முனையலாம், அதை அங்கீகரிப்பதும் அப்படியே எதிர்பார்ப்பதும் யார்? நான் நடித்தவுடன் என்னைக் கைதட்டி ஊக்குவித்தது யார்? எது ஆரம்பம்? எது விளைவு?
ஒன்றிலிருந்துதான் இன்னொன்று வருகிறது என்பது நான் நம்ப விரும்பும் அறிவியல்.

ஒன்றும் அதனிடத்திலிருந்து வந்த இன்னொன்றும் ஒன்று போலத் தோன்றினாலும் வேறுவேறானவை தான், ஒன்று இன்னொன்றை உருவாக்கும்போது தன்னை இழப்பதில்லை என்று தத்துவம் சொல்கிறது. (பூர்ணமத வாக்கியம், ஈஸோபநிஷத்).

இவ்விரண்டில் எது மனத்தோடும் நடைமுறையோடும் ஒத்துவருகிறது? 
நான் முழுமை என்னிலிருந்து வந்தது என் எச்சம்தான் என்றால் நான் வந்தேனே அது முழுமையா நான் முழுமையா? 

தர்க்கத்தின் முடிவு மௌனம் என்றால், மௌனம் முடிவா ஆரம்பமா?

Tuesday, April 20, 2010

வெற்றியின் விலை விமர்சனம்


வெற்றி விரும்பாத போர், மகிழ்ச்சி விரும்பாத வாழ்க்கை, சலனம் இல்லாத மனம்.. என்று தத்துவ வசீகரங்கள் எவ்வளவு சுகமாகவும், விளம்பரச் சுலபத்தோடு காணப்பட்டாலும் யதார்த்தம் வேறு தான். எல்லாமே வார்த்தைகள்தான், சிந்தனையே வார்த்தைதான், ஆனால் அர்த்தங்களே மனத்ததுள் எண்ணங்களாகின்றன. வெற்றி, மகிழ்ச்சி, சலனம் இல்லாத வாழ்க்கை ஒரு இதமான மிகையான கற்பனை.
வெற்றி மகிழ்ச்சி மட்டுமே தரும் என்பதில்லை! முக்காடு விலக்கி தெருவில் இறங்கிவிட்டால், பிறர் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. அந்தப் பார்வைகள் எல்லாமே அன்பின் புரிதலுடன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கக்கூடாது. 
எல்லா பார்வைகளுமே விமர்சனங்களை உள்ளடக்கியவைதான். விமர்சனங்கள் எல்லாமுமே வருத்தப்பட வைக்க மட்டுமல்ல, சிலவற்றில் அக்கறையும் இருக்கும், பலவற்றில் பொறாமையும் வெறுப்பும் இருந்தாலும். விமர்சனங்கள் சுவாரஸ்யமானவை; அவை நம்மை மட்டுமே நமக்குக் காட்டுவதில்லை- பிறரது பார்வைக்கும் பேச்சுக்கும் உள்ளிருக்கும் அவர்களின் பொய்களையும் காட்டுவதால்.
வெற்றி, மகிழ்ச்சி, சலனம் இவை கலந்த வாழ்க்கையில் எது வெற்றி, எது மகிழ்ச்சி என்று மட்டுமல்ல, எது சலனம் என்பதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அர்த்தமாகும். வெற்றி மகிழ்ச்சி இரண்டுமே உழைப்பும் முனைப்பும் இல்லாமல் கிடைக்காது. ஆனால் சலனம் சுலபம், கிட்டத்தட்ட இலவசம்.
சலனம் வெறும் கற்பனையோ கவனச்சிதறலோ மட்டும் அல்ல, அது உள்ளிருக்கும் அடிப்படை இயக்கம். ஒரு காரியத்தில் ஈடுபடும்போது- கண் பார்த்துக் குறி வைத்தாலும், வீட்டு வாசலில்  கோலமிட்டாலும், கல்லில் சிலை வடித்தாலும்- கவனம் சிதறாது சலனம் இல்லாது மனம் இருக்கும். ஆனால் அந்தக் காரியம் முடிந்தவுடன் இயல்பாகவே ஓர் ஆயாசத்தில் ஓய்வெடுத்து அடுத்த வேலை பார்க்க ஆயத்தமாகும். வாழ்க்கையில் இந்த இடைப்பட்ட தருணங்களே அதிகம். இங்கே தான் சலனங்களும் வரும். சலனம் என்பது அடுத்தவன் உடைமையை அபகரிக்கும் ஆசையோ தன் தகுதி மீறிய யோசனையோ மட்டும் அல்ல. அது ஒரு நிலை பிறழ்தல். நேர்க்கோட்டில் நடக்கும் போது ஓரம் பார்க்கும் தடுமாறல். அது விமர்சனங்களுக்கு நேரம் செலவிடுவதும் ஆகும்.
ஆனால் விமர்சனம் ஏற்றுக் கொள்ளும் கருத்துடையதாக இல்லாவிட்டாலும் ரசிக்கும் வகையில் அமைவது எப்போதாவது தான்.  
ஓர் உதாரணம்:ஜாக்சன் போலாக் Jackson Pollock  எனும் ஓவியர் வண்ணங்களை வீசியெறிந்து அவற்றின் மூலமே சித்திரங்களை உருவாக்கியவர். நார்மென் ராக்வெல் Norman Rockwell யதார்த்தமான ஓவியங்களையே வரைந்தவர். கீழே போலாக் ஓவியத்திற்கு ராக்வெல்லின் விமர்சனம்.
பொலாக்
ராக்வெல்







இது நாகரிகம். இது நயம். இது முதிர்ச்சியான மனத்தின் வெளிப்பாடு... இணையத்தில் இது என்றாவது நேரலாம் என்ற நம்பிக்கையோடு இதைப் பதிவிடுகிறேன்.

Saturday, April 17, 2010

இன்று நான்..


ஒரு கிழவியைக் கூட வைத்துக்கொண்டு வைத்தியம் பார்க்கத் துப்பில்லாத அரசு, ஸ்நேகிதிக்காக மொத்த நாட்டுடன் விளையாட்டில் விளையாடும் அமைச்சர், ஒரு முழு மலையை விழுங்குவதில் ஆர்வம் காட்டி அதற்காக அங்கிருக்கும் மக்களை விரட்ட அவர்களது ஆதரவாளர்களை வேட்டையாடும் ஒரு புத்திசாலி...

பட்டியல் எவ்வளவு நீளம்?

இங்கே இணையத்தில் இதை எழுதும் சௌகரியம் சிலருக்கு இருட்டு கொடுக்கும் சுதந்திரம், சிலருக்கு வடிகால், சிலருக்கு சிலர் மீதிருக்கும் தனிப்பட்ட வெறுப்பை உமிழ ஒரு வாய்ப்பு...

விளம்பரப்பிரியர்கள் ஒரு காலத்தில் நிறைய செய்ய வேண்டியிருந்தது; இப்போதெல்லாம் 15 நிமிடப்புகழ் போல ‘இன்றைய முன்னணி இடுகை’ ஆக்கிவிட்டால் போதும் என்று ஆகிறது!

இதில் ஹூஸைன்/லீனா இரண்டையும் புரிந்து கொள்ளாமலேயே அவர்களுக்கு விளம்பரம் தரவும் ஒரு கூட்டம்- தன்னையே விளம்பரப்படுத்திக்கொள்ள, அறிந்தே சிலர் அனிச்சையாகச் சிலர். பார்ப்பனீயம் எப்படி ஒரு குறிப்பிட்ட கூட்டத்தில் பிறந்தவர்களைக் குறிக்கவில்லையோ அப்படித்தான் தாலிபானீயமும் (இசம் தான் தமிழனுக்குப் பிடிக்காதே).

எனக்கு கூட்டமாய் எதிரியை அடிக்கப் பிடிக்காது. நான் அர்ஜூனாக இருந்தால் கிருஷ்ணனை கூட அழைத்துச் சென்றிருக்கமாட்டேன். என் வலியை என் கொள்கையை உரக்கச் சொல்லும் தைரியமும் அதை எதிர்ப்பவர்களை எதிர்க்கும் துணிவும் எனக்கு இல்லாவிட்டால் என் வாய் திறக்காது.

நிகழ்வுகளைப் பார்த்தால் வருத்தமாய் இருக்கிறது. ஆனால் அதைப் பகிர்ந்து கொள்ளத் தயக்கமாகவும் இருக்கிறது. இது வரை கூட்டம் கூட்டிக்கொண்டதில்லை என்றாலும் கூடிய எவரையும் விட்டுக்கொடுத்ததும் இல்லை; இன்று விலகி நிற்கவும் முடியவில்லை, வேடிக்கை பார்க்கவும் முடியவில்ல, வேதனையை வெளிப்படுத்தவும் முடியவில்லை.

இணையத்தில் நண்பர்கள் சிலர் கிடைத்தது சந்தோஷம். அதைவிட எதிரிகளை அடையாளம் கண்டு கொண்டதில்தான் மகிழ்ச்சி. ஆனால், நண்பர்களைப் பற்றி விமர்சிக்காமல் இருப்பது அவர்களை, அவர்களின் செயல்பாடுகளை அப்படியே ஏற்றுக்கொள்வதாய் ஆகாது எனும் அடிப்படை புரியாத விடலைகள், முட்டாள்கள், முரண்படவே வாதிடுபவர்களைப் பார்த்தால் எதற்கு எழுத வேண்டும் என்று தோன்றுவதைப்போலவே இன்னும் எழுதவேண்டும் என்றும் தோன்றுகிறது.

எது நடந்தாலும் இன்ஷா அல்லாஹ், நடந்தபின் மாஷா அல்லாஹ்.



நான் இந்தியன், தமிழன், கணினியின் விசைப்பலகையுடன் பரிச்சயமானவன். என் மொழியைக் கூட இன்னொரு மொழி மூலமே தட்டச்சுபவன். கூகிலுடுவதே ஆராய்ச்சி என்று நினைத்துக் கொள்பவன்...

ஆனால் என் வலியைக் கூட மௌனமாக வெளிப்படுத்துபவன். என் முதுகைச் சொரிந்து கொள்ளுமளவுக்கு மட்டும்  என் நகங்களை வளர்த்துக்கொண்டவன். நான் உங்களின் பலரைப் போலத்தான், ஒளிவட்டத்தைக் கூச்சத்துடன் நிராகரிப்பவன்; ஒளிவட்டம் மேலிருந்து வரும்போது அதில் மூக்கையும் நுழைப்பவன்!

Thursday, April 15, 2010

ஒளிவட்டம்


 ஒளிவட்டம் யாருக்கு இல்லை, யாருக்குத் தேவையில்லை?
ஒளிவட்டம் என்ன கொண்டையாராஜூவும் அவரது சிஷ்யர்களும் வரைந்ததுதானா? சாமி படங்களில் தலைக்குப் பின்னால் அந்தந்த ஓவியரின் மனதுக்கேற்ற நிறத்தில் வரையப்படும் வட்டம்தானா? ஒளிவட்டம் என்பது ஒரு மரியாதையின் வெளிப்பாடு. வணக்கத்துக்குரியவர் என்பதை மீறி வணங்கப்படவேண்டியவராக ஒருவரைக் காட்டும் முயற்சி.
ஏசுவை எடுத்துக்கொள்வோம். அவருக்கு ஒளிவட்டம் எதற்கு வந்தது- மரித்ததற்கா, உயிர்த்தெழுந்ததற்கா? யாருக்கு நாம் ஒளிவட்டம் வரைகிறோம்? வீரனுக்கா, தியாகிக்கா? இன்றைய வாழ்வின் இறுக்கத்தில், வீரமும் தியாகமும் வேறு யாராவது செய்யும்போது பாராட்ட நன்றாக இருப்பதுபோல நாமே செய்வதற்கு மனம் முனைவதில்லை. இது பயமுமல்ல, பாதுகாப்பு உணர்வும் அல்ல. இது வேடிக்கை பார்த்துவிட்டு வேலையைப்பார்ப்போம் எனும் தற்கால மனநிலை. அதனால்தான் ஒளிவட்டங்களை யாரும் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ள முயல்வதில்லை- சில அரசியல் அநாகரிகக் கோமாளிகளைத் தவிர. அரசியல் கோமாளிகளும் அவர்களது அடிவருடிகளும் உருவாக்குபவை ஒளிவட்டங்களும் அல்ல.
காலண்டர் கடவுள்களுக்கு வரையப்படுவது போல இல்லாவிட்டாலும் நாம் எல்லோருமே உள்ளே ஒரு சின்ன அளவிலாவது ஒளிவட்டத்தைச் சூடிக்கொண்டிருக்கிறோம். இது தற்பெருமையோ திமிரோ அல்ல, தன்னை உயர்வாக நினைத்துக்கொள்வதன் மூலம் தன் இயலாமையை மறைக்க முற்படும் மனத்தின் உத்தி, பொன்குஞ்சு பார்க்கும் காக்கைப் பார்வை. சிலநேரங்களில் இது அவசியமாகவும் ஆகி, தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும் வழிவகுக்கிறது.
வணங்கப்பட வேண்டிய அளவுக்கு மனம் தன்னையே விரும்பாவிட்டாலும், எப்போதுமே மதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த மதிப்பின் ஒளிவட்டத்தைப் பெறவே மனம் துடிக்கிறது. இது சமூகத்தை ஆட்டிவைக்கும் ஆணவம் அல்ல, சுயத்திற்கு ஓர் அடையாளம். இந்த மிதிப்பு குறையும் போதோ அல்லது இதற்கு குந்தகம் விளையும் போதோ மனம் பதைக்கிறது. 
இந்தப் பதட்டத்தை மனவியல் anxiety என்று கூறுகிறது. இம்மாதிரி பதட்டம் இரு வகையில் உள்ளது. ஒன்று status anxiety அதாவது ஒரு நிகழ்வைச் சார்ந்த பதட்டம், மற்றது trait anxiety எனும் எல்லாவற்றிற்கும் பதட்டமாகவே இருக்கும் ஒரு குணம். இதில் status anxiety என்பதில் உள்ள status என்பதை Allain De Botton ஒரு சுவையான நூலாக்கியுள்ளார்.
இதுதான் ஒளிவட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் இயல்பான முனைப்பு. தன் நிலையிலிருந்து கீழிறங்காது சமூகத்தில் இயங்க ஒவ்வொருவரும் அறிந்தோ அனிச்சையாகவோ  எடுத்துக்கொள்ளும் முயற்சி. இந்த ஒளிவட்டம் நிஜம். இது வரையப்படாது.
பாட்டன் நூலில் இதற்கான சமூகவியல் காரணங்களும் இலக்கிய மேற்கோள்களும் நிறைய அலசப்பட்டிருக்கும். ஒளிவட்டம் என்று நான் இதை எடுத்துக்கொள்வது, நம் ஒளிவட்டம் நிஜமில்லை என்று நாம் உணரும்போது நமக்கே ஏற்படும் கூச்சமும், எல்லாருக்கும் தெரிந்து விடுமோ என்ற பதைப்பும் ஒரு பரபரப்பை உருவாக்கி நாம் செயல்திறனையும் பாதிக்கும் என்ற நோக்கில். ஒளி பிரகாசம் மட்டுமல்ல, இருளையும் உள்ளடக்கியது.
யதேச்சையாகத்தான் இந்த ஆசிரியரின் புத்தகம் ஒன்றைப்படித்தேன். யதேச்சையான நிகழ்வினால் நலம் விளைந்தால் அதற்கு serendipity என்று ஒரு வார்த்தை சொல்லப்படும். இது அப்படித்தான். அந்த முதல் நூலைப் படித்துவிட்டு அவரின் பிற நூல்களைத் தேடியபோது consolations of philosophy என்ற புத்தகத்தை வாங்க இணைய வழியில் முயன்றபோது அந்தக் கடை தவறுதலாக அதே தலைப்புள்ள இன்னொரு நூலை அனுப்ப, Boethius என்பவரின் எழுத்தும் அறிமுகமாகியது. இந்த  நூலும் படிக்க எளிதாகவும் அதே நேரம் ஆழமானதாகவும் இருக்கும். தொடர்ந்து இவரது எல்லா நூல்களையும் படிக்க, கடைசியாகப் படித்த Architecture of Happiness ரொம்பச் சுமார். அதிர்ஷ்டவசமாக இவரது எழுத்தின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது என்று சொல்லும் போதே போத்யஸ் சொன்னது நினைவுக்கு வருகிறது: அதிர்ஷ்டம் என்பது ஒரு பரத்தை. எளிதில் எதிர்பாராமல் வந்துவிடும், ஆனால் தக்க வைத்துக்கொள்வது கடினம். சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்வது போலவே சாதிக்க தகுதிகளைடிஎச் தக்க வைத்துக் கொள்ளவும் வேண்டும், வளர்த்துக் கொள்ளவும் வேண்டும் என்ற அர்த்தத்தில் இதைப் புரிந்து கொண்டேன்.
நன்னூலாசிரியர்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இப்போது ஆலன் டி பாட்டன் பற்றி இங்கே எழுதியிருக்கிறேன்.  

நன்னூல்


“ஒரு நாள் நான் படித்த ஒரு புத்தகம் என் வாழ்க்கையையே மாற்றி விட்டது.முதல் பக்கத்திலேயே அதன் தீவிரம் அந்த மேசை நாற்காலி ஆகியவற்றிலிருந்து என்னைப் பிய்த்து எறிவது போலத் தோன்றியது.புத்தகம் என் உடலை மட்டுமல்ல மனதையும் என்னென்னவோ செய்தாகத் தோன்றியது. அந்தப் புத்தகத்தின் பக்கங்களிலிருந்து ஒரு நுண்ணொளி என் முகத்தில் பரவுவதாகவும் என் சிந்தையின் இருட்டுகளையெல்லாமும் நீக்கி புத்தியைத் தெளிவடைய வைத்துக் கொண்டிருப்பதாகவும் தோன்றியது. அந்த ஒளி என் இருட்டுகளை நீக்கும் போதே ஒரு பெருவெளியின் நிழல்களையும் எனக்குக் காட்டுவதாய்த் தோன்றியது...”

இப்படித்தான் ஆரம்பிக்கிறது ஒரம்பாமுக் (என் உச்சரிப்பு பிழையாகக்கூட இருக்கலாம் Orham Pamuk) எழுதிய The new life எனும் நூல். இந்நூலின் ஆரம்ப சுவாரஸ்யத்தில் பல பக்கங்களைப் படித்துக் கொண்டே இருந்த போது என் வாழ்க்கையை எந்த நூலாவது மாற்றியிருக்கிறதா என்று மனம் தேட ஆரம்பித்தது.
பல நூல்கள் அந்தப் படிக்கும் நேரத்தில் மனத்துள் சலனங்களை உருவாக்கும், இன்னும் சில, சில நாட்களுக்கு மனத்துள் வளைய வந்து கொண்டேயிருக்கும். சிலவற்றின் வரிகள் வேறு எதையோ படிக்கும்/பேசும்/எழுதும் போது திடீரென்று வெளிவரும். சில கருத்துக்கள் காலத்துக்கும் ஒரு பாடமாக நிலைத்திருக்கும். ஆனால் ஒரு புத்தகம் என் வாழ்க்கையை மாற்றியது என்றால்...அப்படி ஒன்றும் நினைவுக்கு வரவில்லை.
மணத்திலும் நினைவிலும் எப்போதும் உலவிக்கொண்டிருக்கும் நூல்களில் சிலவற்றைப் பற்றித் தொடர்ந்து எழுதலாம் என்று இப்போதைக்கு ஒரு திட்டம் மனத்தில் உருவாகியிருக்கிறது. அப்படி ஒரு வரிசையில் முதல் பத்து நூல்கள்- Ayn Rand எழுதிய Fountainhead, Camus எழுதிய Outsider, Dostoevsky எழுதிய Crime and Punishment, Herman Hesse எழுதிய Siddhartha, Kafka எழுதிய Trial,  mமுதல் ஐந்தைப் பட்டியலிடும் போதே வெறும் ஆங்கிலத்தில் படித்த நாவல்களாக வருகிறதே என்று ஒரு தயக்கமும் வருகிறது. நாவல் அல்லாத நூல்கள் என்றால் Henry Miller எழுதிய The Rosy Crucifixion, Camus எழுதிய Myth of Sisyphus, Campbell எழுதிய A Hero with a thousand faces, ஓஷோவின்  the heartbeat of the absolute, விவேகானந்தரின் Practical Vedanta.. மீண்டும் தமிழில் எதுவும் தோன்றவில்லையா என்று ஒரு தயக்கம் வருகிறது.
மனத்துள் கருத்தாய் எழுத்தின் எழுச்சியாய்ப் பதிந்தவை படித்த உடன் தங்கள் மொழிமீறி படித்தவன் மனத்துள் பேசும் மொழியாகவே மாறுவதால்.. இவை எனக்கு அந்நிய மொழியாகப் படவில்லை.
இனி அடுத்த பதிவில் என்னைக் கவர்ந்த அதிகம் பிரபலமாகாத சில நூல்களைப் பற்றி எழுதுகிறேன்.
இது சில நூல்களைச் சிலருக்கு அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி, அவ்வளவுதான்.

Monday, April 12, 2010

பார்ப்பனீயப் பிள்ளை


மதராசப்பட்டின காலம். ராயபுரம் பகுதியில் மிகப் பெரிய செல்வந்தர் ஒருவர். அவரது மகனுக்கு தமிழார்வம் உண்டு. தமிழ் படித்தான். தமிழை மட்டுமல்ல, வாழ்வின் தெளிவையும் தேர்ந்தான். இலக்கியமும் வாழ்வும் வேறல்ல என்று காதலும் கொண்டான். பொதுவாகவே அவனது காலத்தில் காதல் மறுக்கப்படும். ஆனால் அவன் காதலித்ததோ அவர்களது வீட்டில் வேலை செய்து வந்த தாழ்த்தப்பட்ட இனம் சார்ந்த முருகம்மை என்ற பெண்ணை. அவனுக்கு முருகு என்றால் அழகு. அவனுக்கு முருகன் தான் தெய்வம். வீட்டில் கண்டித்தார்கள். மிரட்டினார்கள். ஒருநாள், முருகம்மையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.
இனம் அவனை ஒதுக்கியது. பணம் அவனிடம் இல்லை. கற்ற தமிழ் உற்ற துணையாய் இருந்தது. சம காலத்துப் பண்டிதர்களோடு தேர்ச்சி பெற்ற தமிழ் வித்துவான் ரத்தினம் பிள்ளை என்று தான் பெயரை ஆக்கிக் கொண்டான். ஏழு குழந்தைகள் பிறந்தன. அதில் ந்து பெண்கள். திருமணம் செய்து வைத்தான், படிக்க வைத்தான். அவன் மகனுக்கும் காதல் பிறந்தது. மாமியாரைப் போலவே அவளும் வீட்டை விட்டு வெளியே வந்தாள். அந்தத் திருமணத்தையும் முன்னின்று நடத்தி வைத்தான். இந்தக் குடும்பத்தின் ஒரே விசேஷம் ரத்தினம் பிள்ளையின் குழந்தைகளைத் தவிர வேறு எந்த உறவினரையும் தெரியாது -கிடையாது என்பதனால் அல்ல!.
அவனை பற்றிய விவரங்கள் எல்லாம் என்னுடைய ஆசிரியர், அவனுடைய மாணாக்கர் பண்டித நடேசனார் சொல்லக் கேட்டிருக்கிறேன். திரு.வி.க. போன்றோர் கூட அவனிடம் சில தமிழ் விளக்கங்கள் கேட்ப்பார்களாம். தமிழை மட்டுமே நம்பித் தன் வாழ்வை ட்டிக் கொண்டவனுக்கு, காதலுக்கு சாதியில்லை என்று கூறத் துணிந்தவனுக்கு தன்னோடு மட்டுமல்லாமல், வள்ளலாரையும் கூட ராமலிங்கம் பிள்ளை என்றே சொல்ல முடிந்தது. அவனுக்கும் ஒரு குடுமி இருந்தது.
முந்தைய பதிவில் வடகலை ஐயங்காரின் பார்ப்பனீயத்தை எழுதும் போதே இந்தப் பிள்ளைவாளின் பார்ப்பனீயத்தையும் எழுத வேண்டுமென்றுதான் முடிவு செய்தேன். ஏனென்றால் பார்ப்பனீயம் பிறப்பல்ல. அது ஓரூ கீழ்மை குணம். பிள்ளையோ,ள்ளரோ, ஐயரோ, பறையரோ ஆதிக்க மனப்பான்மை உடைய அனைவரும் பார்ப்பானீயவாதிகள்தான். பார்ப்பனீயம் என்பது பிறப்பால் வருவது அல்ல. அது வாழ்வின் கீழ்மையான திமிர், திருட்டுத்தனம், தன்மானமற்ற தன்னலம் ஆகியவற்றின் வெளிப்பாடு. சிலருக்கு எதிலும் எப்போதும், சிலருக்கு எதிலாவது எப்போதாவது! ரத்தினத்திற்குப் பெயரளவில், பலருக்கு மனத்தளவில்!
அடையாளப் படுத்திக் கொள்ள ஒரு ஜாதி. அதை வைத்து இயங்க ஒரு சமூக வசதி. அவன்–நான் வேறு-வேறு என்று எப்போதும் உள்ளே ஒரு பிரிவினை - இவை இருப்பவன் தன் பெயரின் பின்னால் எதையும் குறிப்பிடாமலேயே அவன் பார்ப்பனீயவாதி, அற்பவாதி!

வடகலை ஐயங்கார் வீட்டில்..


ஐயங்கார் வீட்டுப் பெண் ஒருத்தியின் கதை இது. ஐஸ்வர்யா, தீபிகா போல அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, ஆனால் அவள் வாழ்க்கை அழகு.
தாதெகிங் கூறுவது போல பள்ளம்தான் உயரத்தை தீர்மானிக்கும். அவளது அழகை அவளது தாத்தாவின் குணமும் செயலுமே தீர்மானிக்கின்றன. இது அவள் கதை என்பது போல அவளது தாத்தாவின் கதையும்தான்.
கமலா படிப்பில் ஆர்வமுள்ள பெண். சிறு வயதில் தெருவில் சிறுவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது கில்லித் தண்டு கண்ணில் பட்டு ஒரு கண்ணில் பார்வை இழந்தாள். என்னென்னவோ வைத்தியங்கள் செய்தும் சரியாகாததால், மாற்றுக் கண் வைத்துப் பார்க்கலாம் என்று மருத்துவர்கள் முடிவெடுத்தார்கள்.
கண்ணில் இப்போதெல்லாம் நுண்ணிய கருவிகள் மூலம் உள்பார்த்து, கணினியில் படமாக நிபுணர்கள் பார்வையிடுவது போல அந்தக் காலத்தில் இல்லை. அவளது கண்ணுக்குள் எப்படி இருக்கிறது, மருந்துகள் என்னென்ன மாற்றங்களை விளைவிக்கின்றன என்பதையெல்லாம் ஒரு தேர்ந்த ஓவியன் பார்த்து வரைய வேண்டும். அந்தப் படங்களின் அடிப்படையில்தான் மருத்துவக் குறிப்புகள் விவாதிக்கப்படும்.
அப்படி கண்ணோடு கண்ணோக்கிய ஓவியனுக்கும் கமலாவிற்கும் காதல் பிறந்தது. அந்தக் காதலுக்கு வழக்கம் போல வீட்டில் எதிர்ப்பு இருந்தது. அவளது குடும்பம் அப்படி. இதைப் புரிந்து கொள்ள அவளது தாத்தாவைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த தாத்தாவின் பெயர் கிருஷ்ணமாச்சாரி.
மதராஸ் வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தின் தலைவர், அன்றைய (1924-1930) சட்டமன்ற உறுப்பினர், எம். கிருஷ்ணமாச்சாரி ஒரு வடகலை ஐயங்கார். அவர் ஜாதி நமக்கு இப்போது முக்கியமில்லாததாய்ப் படலாம், ஆனால் அவருக்கு அது மிகவும் முக்கியமாகப் பட்ட ஒன்று. சாதிப் பற்று மட்டுமின்றி, மதப்பற்றும் அவருக்கு அதிகம். இதை அவர் எழுதிய நூல்களில் ஒன்றான –India’s Higher Call (1934) என்பதில் பார்க்கலாம். அவர் பல விஷயங்களில் தீர்மானமாக இருந்தார். அம்பேத்கர், காந்தி ஆகியோரை எல்லாம் எதிர்த்தார்.
அவரது கொள்கைகளில் சில-
1. பெண்களுக்குத் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைத்தர முடியாது. அவர்களைச் சின்ன வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட வேண்டும், இதுதான் அவர்களுக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நல்லது. (அப்படிச் செய்யாவிட்டால் ஒரு பெண் தன் விருப்பப்படி எவனையாவது திருமணம் செய்து கொண்டு விடுவாள்!).
2.எல்லாரும் சமம் என்பது எல்லாம் சுவையான கட்டுக்கதை. காந்தி மட்டுமல்ல, பலரும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசி நாட்டின் தர்மத்தைக் குலைக்கிறார்கள். ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேசம் குறித்து காந்தி காட்டும் அக்கறை நாட்டுக்கு நல்லதல்ல, இதனால் உயர் பண்புகளைக் கடைபிடிக்கும் ஸநாதனவாதிகள் எல்லாரும் ஒன்று திரண்டு கொதித்தெழுவார்கள்.(!)
3.எல்லாருக்கும் வாக்குரிமை என்பது சரியல்ல. படிக்காதவர்கள் சரியான முறையில் தேர்தலில் பங்கேற்கத் தகுதியில்லாதவர்கள்; வாக்களிக்க அருகதையற்றவர்கள் .
4. தாழ்த்தப்பட்டவர்கள் அழுக்கானவர்கள் மட்டுமல்ல, பாப காரியங்களில் ஈடுபடுபவர்கள். (பக்கம் 110, மேலே குறிப்பிட்ட அவரது புத்தகத்தில்). பக்தி, பிரபத்தி, கைங்கரியம் போன்ற உயர்குணங்கள் புரியாமல் காந்தி சாதுர்யமான வார்த்தைகளால் மக்களைத் திசை திருப்புகிறார்! (பக்கம் 111)
5. அம்பேத்கரிடம் அவர் வாதிட்டதை வைத்துப் பார்த்தால், மதத்தின் தலைவர்கள் சொற்படி கேட்டுத்தான் அடிப்படை உரிமைகள் குறித்த விஷயங்களில் அரசு முடிவெடுக்க வேண்டும்.
ஜகத்குரு சங்கராச்சாரியர் முன்னிலையில் கல்கத்தாவில் 1933 நடந்த சனாதன தர்ம மாநாட்டின் தலைவராக இந்த கிருஷ்ணமாச்சார்யா, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கு எதிரான சட்டத்தையும், காந்தியின் ஆலயப் பிரவேசப் போராட்டத்தையும் அசுரத்தனமானவை என்றும் குறிப்பிட்டு உரையாற்றினார்.
ஆனால் இதே கிருஷ்ணமாச்சாரிதான் இந்தியாவின் முதல் (Moral Science) நீதிநெறி போதனைக்கான பாட நூலை 1911 ஆண்டில் எழுதியவர். (The handbook of Morals).

சாதிப்பற்றும் மதப்பற்றும் மிகுந்து, இவற்றுக்காக ஓயாமல் பேசியும் எழுதியும் வந்த அவருக்கு வரதாச்சாரி என்றொரு மகன். இந்த வரதாச்சாரி கோவில் யானைக்கு நாமம் U போடுவதா Y  போடுவதா என்ற வழக்கில் ஆஜரானவர். இந்த வரதாச்சாரியின் மகள் கமலா.
அவள் சாதியை விடவும் காதலுக்கு முக்கியத்துவம் தந்தாள்.
வீட்டாரின் எதிர்ப்பை மீறி, ஜாதியை, சம்பிரதாயத்தைப் புறக்கணித்துத் தன் காதலன் வீட்டுக்கு வந்தாள். அந்தக் காதலர்கள் திருமணம் செய்து கொண்டு ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.
அவளுக்கு கோவிலுக்குப் போவதில் நம்பிக்கை கிடையாது. இன-மத வேறுபாட்டுடன் யாரையும் பார்க்கவும் தெரியாது. தன் 80வது வயதில் 23 வயது பெண் ஒருத்தி, “பாட்டி, எங்கப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டார்” என்று சொன்ன போது, சொல்லிப்பாரு, கேட்டுப்பாரு, ஒத்துவரலென்னா வீட்டை விட்டு வெளியிலே வந்துடு. இந்தப் பையனை லவ் பண்றே இல்லே, அவனை நம்பினா டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ” என்று அறிவுரை(!) வழங்கியவள்.
அவளுக்கு சாதி கிடையாது, இனம் கிடையாது, மத நம்பிக்கையும் கிடையாது, போலிச் சடங்குகளிலும் ஈடுபாடு கிடையாது. தன் காதல் கணவன் இறந்த போது கூட வெட்டியாய் காரியமெல்லாம் வேண்டாம் என்று சொன்னவள்.
அவள் தாத்தா சொன்னது போல் நடந்திருந்தால் மிகச் சிறிய வயதில் பால்ய விவாகம் நடந்திருக்கும். வசதியாகக் கூட வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவளைப் பற்றிப் பேச ஒன்றும் இருந்திருக்காது. அவளது தாத்தா சொன்னபடி நாடு கேட்டிருந்தால், இன்னும் ஜாதி பேதம் தீவிரமாக இருந்திருக்கும்.
60 ஆண்டுகளுக்கு முன்னர் இவளைப் போன்றோரும் இருந்தார்கள், இவளது தாத்தாவைப் போன்றவர்களும் இருந்தார்கள். இன்னமும் இப்படி இரண்டு வகை மக்களும் இருப்பதுதான் கேவலம். இன்னமும் ஜாதி வெறியுடன் மக்கள் இருப்பதுதான் அநாகரீகம். இதை இணையத்திலும் காட்டிக்கொள்வது தான் அதிகேவலம்.
கண்பார்வை சரியில்லாததால் அவள் படிக்கவில்லை. படித்தும் கோணலாகவே பார்ப்பவர்களைவிடவும் அவளது பார்வை கூர்மையானது, தெளிவானது.
அவளது சிறப்பு பிறந்த இனத்தால் அல்ல, வாழ்ந்த விதத்தால். 
சில குறிப்புகள்: