Thursday, February 25, 2010

ஜெய்ஹிந்த்.

ஹூஸைன் ஒரு கலைஞன். வர்த்தக நிர்ப்பந்தங்களுக்காகவும் வரைந்தாலும், தனித்திறமை உள்ள ஓவியன். இந்தியன். உலகில் இந்தியக் கலையின் நவீனத்துவம் பற்றிப் பேசப்படும்போதெல்லாம் தவிர்க்கமுடியாதவன். வயது மூத்தவன். விளம்பரப்பிரியன் என்று சொல்லப்பட்டாலும் தனித்தன்மையுள்ள கலைஞன்.

அவனுக்கு அவனது சொந்த நாட்டில் இடமில்லை. எந்த மண்ணில் பிறந்து வண்ணம் குழைக்கக் கற்றுக்கொண்டானோ, எந்த மண்ணிலிருந்து தன் ஓவியங்களால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தானோ அவனுக்கு, அந்த மண்ணை மிதிக்கக்கூட இப்போது சாத்தியமில்லை.

அரசு அவனை வெளியேற்றவில்லை. அவன் இந்திய ‘இறையாண்மை’க்கு எதிராக எதுவும் செய்து விடவில்லை. லால்கர் தொடர்பாகக் கைது செய்யப்பட்டாளே எழுதப்படிக்கத்தெரியாத, சொந்த ஊருக்குத் திரும்பிப்போக வழிதெரியாத கிழவி, அவளைப் போல் அவன் மீது எந்த குற்றமும் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதில்லை. அவன் செய்தது எல்லாம் சில ஓவியங்கள் வரைந்ததுதான்; அது குற்றமாகப் பார்க்கப்படுவது அவன் ஒரு முஸ்லிம் என்பதால்தான்!

இன்று காலை ஹிண்டுவில் ராம் எழுதியிருந்ததைப் படித்தேன். ராம் எழுதுவதெல்லாமும் சரியல்ல என்றாலும், எப்போதாவது சரியாகவும் எழுதக்கூடும் என்பதற்கு இது ஓர் உதாரணம்! அப்போதும்கூட இதைப்பற்றி என்ன எழுதுவது என்று விட்டு விட்டுவிட்டேன், ஆனால், பதிவுகளைப்படிக்கும் போது இது கண்ணில் பட்டது. செய்திதான். ஆனால் அது எப்படிச் சொல்லப்படுகிறது என்று பார்க்கவும் வேண்டும்.

  இந்த மானங்கெட்ட அரசு, தன் நாட்டின் கலைஞனைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, வெறி பிடித்த முட்டாள்களுக்குப் பயந்து அவன் உள்ளே வந்தால் பாதுகாப்போம் என்று சொல்லப் பயப்படுகிறது. அவனோ ஓவிய நுணுக்கத்தில் மட்டுமே புரட்சி செய்யத்துணிந்தவன், சமூகப்புரட்சியாளனோ வீரனோ அல்ல, மேலும் கிழவன்.

அவனுக்கு என்ன எதிர்ப்பு? அவன் ஒரு மதத்தினரின் மனத்தைப் புண்படுத்திவிட்டானாம்! அதனால் அவன் இந்தியாவிற்குள்ளே வரக்கூடாதாம்! ஒரு மசூதியை இடித்து, அதன் மூலம் பல முஸ்லிம் மனங்களை நொறுக்கியவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள், ஒரு முழு மலையை விற்பதற்காக வீரவசனமும் வியாபாரத் தந்திரமும் நிறைத்துப் பேசுபவர்கள் துணை நிற்கிறார்கள்! தூ என்று துப்பினால் இந்தியனான என்மீது தான் விழும்!

அவனை இன்று ஒரு நாடு பிரஜையாக ஏற்றுக் கௌரவித்துள்ளது. அதையும் செய்தியாக வெளியிடுபவர்கள், ஒரு மதத்தின் கடவுள்களை “கேவலமாக” வரைந்த ஓவியன் பற்றிய செய்திக்குறிப்பாக நமக்குத் தெரிவிக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை ஆதிமூலம், ஸூர்யப்ரகாஷ் போன்றோரின் ஓவியநுட்பம் ஹூஸைனுக்குக் கிடையாது. ஆனால் இது அவனது ஓவியம் குறித்து அல்ல, அந்த ஓவியத்தின் கரு குறித்து! அவன் என்ன அப்படிக் கேவலமாக வரைந்தான்? சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தான் என்பதே குற்றச்சாட்டு! சீதையும் அனுமனும் நெருக்கமாக இருப்பதாய் வரைந்தான் என்று ஒரு குற்றச்சாட்டு!! நெருக்கமாய் இருந்ததால்தானே தூதுவனிடம் தன் மோதிரம் தந்தாள்? நிர்வாணமான சரஸ்வதிக்கு ரவிவர்மா ஜாக்கெட் போட்ட படம் எந்தக் காலத்தில்?

நாட்டின் கணிம வளங்களை விற்பதற்காகக்  காடுகளிலிருந்து ஆதிவாசிகளை வெளியேற்றத் துடிக்கும் அரசு, ஒரு கலைஞனை நாட்டிற்குள், அதுவும் எதிர்க்கட்சி வேண்டாம் என்று சொல்வதற்காக விடாமல்  சும்மா இருக்கும் நிலையில்,, நாம் எல்லாரும் பதிவு எழுதி, பார்ப்பவர் எண்ணிக்கைப் பார்த்து, கடமையாற்றிக் கொண்டேயிருப்போம். ஜெய்ஹிந்த்.

வருத்தம் தரும் கேள்வி


தனிமனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கமும் ஒன்றா?
மனிதன் சமுதாயத்தின் ஒரு பகுதியா விகுதியா? ஒழுக்கம் என்பது சத்தியமா சம்பிரதாயமா? நியாயம் என்பதற்கு வெவ்வேறு அளவுகோல்கள் சாத்தியமா?
பல கேள்விகள் என்னுள் எழுகின்றன, காரணத்தோடு.
வரதராஜன் இறந்ததைவிடவும், அவருக்கு மரணம் நிகழ்ந்த விதம்தான் வருத்தம் தருகிறது. சமுதாய நோக்கில் உயர்நிலை வகித்த தோழமை உணர்வுள்ள ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்வு விமர்சனத்திற்கும், கண்டனத்திற்கும் உள்ளாவது எப்படி? இதன் நியாயம் என்ன?
தனிமனிதனின் உணர்வுகளும் வாழ்க்கைமுறைகளும், சமுதாயத்தின் வரைமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்றால் தனித்தன்மை என்பது என்ன?
திருமணம் என்பது சமுதாய அங்கீகாரம் பெற்ற ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தில் இருவர், வாழ்வின் இன்பதுன்பங்களைப் பகிர்ந்து, பொறுப்புணர்வோடும் நேர்மையோடும் தங்கள் குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி. பொறுப்பணர்வுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பல நேரங்களில் நேர்மைக்குக் கொடுக்கப்படுவதில்லை. இதனால்தான், பொறுப்பாய்த் தம் குடும்பத்தாருக்குச் சௌகரியங்களைச் செய்துவிட்டு, சுயசுகத்திற்காகப் பிற வழிகளில் மனத்தை அலைய விடுவது நடக்கிறது. இது சரியா, தர்மமா, நியாயமா என்பதெல்லாம் பாதிக்கப்படாதவரை எழும்பாத கேள்விகள். இது தனிமனிதனின் உரிமையா? இதில் சமூகம் தலையிடலாமா?
சமுதாயம் என்பது என்ன? யார் அந்த நாலு பேர்? உறவினரா, உற்றாரா, ஊரில் பழக்கமானவர்களா, உழைக்கும் தளத்தில் உடன் இருப்பவர்களா? காணாதும் வாழ்வில் அறியாதும் சுற்றி இருக்கும் அநாமதேயங்களா? யார்தான் அந்த முக்கியமான நாலு பேர்? அவர்கள் சொல்படித்தான் நடக்கிறோமா அல்லது அவர்கள் ஏதும் சொல்லிவிடக்கூடாதே என்று நடந்துகொள்கிறோமா?
வரதராஜனுக்கு வேறு உறவு இருந்ததா என்பதைவிடவும் முக்கியம் வேறு குறைகள் இருந்தனவா என்பதே. குற்றம் சாட்டியவர்களே கூட அப்படி குறை சொல்லாதபோதுதான் என்னுள் கேள்வி எழுகிறது. மக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம் மனைவியை மட்டும் ஏமாற்றக்கூடாது என்பது தான் முக்கியமோ?

Thursday, February 18, 2010

நான்?


எல்லாருமே எல்லாரைப்பற்றியும் மனத்தில் பிம்பங்கள் வைத்திருக்கிறார்கள். அவை நிஜத்தில் நினைத்தவாறு இருக்கும்போது மகிழ்வதும் இல்லாதபோது வெறுப்பதும் கூட இயல்புதான்.
மீண்டும் நான் புரிந்துகொள்ளப்படுவதில்லை என்று ஒரு புலம்பல் ஆரம்பிப்பதாய் இல்லை. ஆனாலும் என்னைப்பற்றி சிலர் கொண்டுள்ள பிம்பங்களுக்கு ஏற்ற வகையில் நான் இல்லை எனும்போது அவர்கள் என்மீது வெறுப்பை உமிழ்வதே இதைப்பற்றி நான் இப்போது சிந்திக்க காரணம்.
கடவுள் நம்பிக்கை உள்ளது என்று சொன்னால் நான் ஒரு RSS-BJP வெறியன், வினவுக்கு ஆதரவு தெரிவித்தால் நான் ஒரு தீவிரவாதி, சாதீய ஆதிக்கத்தை எதிர்த்தால் நான் ஒரு பெரியாரிஸ்ட், எப்போதாவது ஜோதிபாஸுவைப் பாராட்டினால் நான் ஒரு போலி கம்யூனிஸ்ட், லீனாவைப் பாராட்டாவிட்டால் ஒரு பெண்ணிய எதிரி, பெண் எழுத்தாளர்களை ஊக்குவித்தால் ஒரு பெண்ணியவாதி, கண்ணதாசனைப் பற்றி உருகினால் நான் கவிதை தெரியாதவன், பாரதியை நேசித்தால் நான் ஒரு பார்ப்பன ஆதரவாளன், கருணாநிதியைக் கண்டித்தால் ஆரியன், பார்ப்பனீயத்தை விமர்சித்தால் திராவிட வெறியன் இந்தப் பட்டியல் மிகமிக நீளம். இதில் எது நான்?
இப்படி வரையறுக்கப்படும்போதும் வர்ணிக்கப்படும்போதும் சிலவற்றை என் மனம் புன்னகையோடு ஏற்றுக்கொள்கிறது, சிலவற்றை முறைப்போடு நிராகரிக்கிறது. சிலவற்றை நான் பாராட்டாகக் கொள்ளும்போது எவ்வளவு தூரம் தகுதி உள்ளதோ அதே அளவுக்குச் சில விமர்சனங்களிலும் உண்மை உள்ளது. மனம் தனக்கு வேண்டியதை மட்டும்தானே உடனே ஏற்றுக்கொள்ளும்!
இரண்டையும் காலமும் அனுபவமும், வேடமோ போலித்தனமோ இல்லாத சுய விமர்சனமுமே சீர்தூக்கிப் பார்த்து, நீ இப்படித்தான் என்று மனத்துள் என்னைப்பற்றிய  உண்மையின் பிரதிபலிப்பான ஒரு பிம்பம் உருவாகும். அதுவரை முரண்கள் இருக்கும். சமூக லாபம் தரும் பிம்பங்களே மனத்துள் விலைபோகும். அதுவரை நான் யார் என்பது அனுமானமே தவிர தீர்மானம் ஆகாது.
நான் யார் என்று தெரியாத நீ எப்படி நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கலாம்? அதுவும் நான் யாரென்று எனக்கே கொஞ்சம் கொஞ்சமாய் தினந்தினம் தான் தெரிய வரும்போது?
பிம்பங்கள் பற்றி பிறகு..

Monday, February 15, 2010

வெறுப்பாக

இன்று என்னிடம் பேட்டி வேண்டும் ஒரு தொலைக்காட்சியிலிருந்து வந்தார்கள். ஒரு பெண்ணின் வாயிலிருந்து விசித்திரமான பொருட்கள் விழுவதாகவும் அது சாத்தியமா என்றும் கேட்டார்கள். இல்லை என்று சொன்னேன்.
அந்தப் பதில் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை, உடனே வந்த இளைஞர், நிறைய பேர் அதை ஒப்புக்கொள்கிறார்களே என்றார், நான் பார்த்தால்தான் சொல்ல முடியும் என்றேன். ஏன் இப்படி அந்தப் பெண் சொல்கிறார் என்று கேட்டதற்கு, பிரமையாக இருக்கலாம் அல்லது பித்தலாட்டமாக இருக்கலாம் என்று சொன்னேன்.
அப்போதும் அவர்கள் எதிர்பார்த்த ஐந்து நிமிடப் பெட்டி கிடைக்கவில்லை, மெதுவாக அவர், அந்தப் பெண்ணுக்கு முன்பு வலிப்பு நோய் இருந்ததாம், இதைச் சரிசெய்ய சாமியர்கள் மந்திரவாதிகளிடமெல்லாம் போனார்களாம் என்று சொல்ல ஆரம்பித்தபோது, எனக்குக் கோபம் வந்தது.

ஒரு விஷயத்தைப்பற்றி எதற்காகப் பேட்டி? உண்மைகளையும், மறுப்புகளையும் மக்களிடம் கொண்டு செல்லத்தான் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் கேள்விகள் தெளிவாகவும் இருக்க வேண்டும். பரபரப்புக்காக மட்டுமே ஊடகம் என்றால், பொய்கள் மலிவாக விலைபோகும். எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டு ஒரு கேள்வி கேட்டால்தான் சரியான விடை கிடைக்கும்.
“ விவரம் தெரியாமல் நீ ஏன் உடனே பதில் சொன்னாய்” என்று என்னைக் கேட்கலாம். எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லலாம், பதில் குறித்து கேள்வி வந்தால் அப்போது விளக்கம் சொல்லலாம் என்பதே என் அணுகுமுறை. ஆனால் இந்த நபரிடம், இவ்வளவுதான் கேள்வியா என்றதும் ஆம் என்றார். அடுத்த கேள்விக்கும் பதில் சொன்ன பிறகு இன்னொரு தகவல் சொன்னார். எல்லாவற்றையும் ஏன் என்னிடம் முதலில் சொல்லவில்லை என்றால், “ நாங்கள் XXX டீவியின் ZZZ நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறோம் என்று பதில் வந்தது. அது தகவல் அல்ல, அங்கிருந்துதான் வந்தார்கள் என்று எனக்குத் தெரியும். அப்படிச் சொன்னது எனக்கு அவர்களின் வீச்சை நினைவுறுத்த! அப்போதுதான் கோபமும் வந்தது.

தொலைக்காட்சி என்றால் மக்களிடம் எளிதாகப் பரவும் ஊடகம் என்பது உண்மைதான், ஆனால் எல்லாருமே அதில் முகம் தெரிந்தால் போதும் என்று இளித்துக்கொண்டு காத்திருப்பவர்கள் அல்ல. புதிதாய் இப்போதெல்லாம் பணி புரிய வரும் இளைஞர்களிடம் இப்படியொரு கருத்து தென்படுகிறது. வாய்வார்த்தையாக இல்லாவிட்டாலும், செயல்பாடுகளில். கையில் மைக்கும் தோளில் காமேராவும் இருந்தால் யாரையும் எளிதில் மடக்கி சில நேரம் அசட்டையாகக்கூட நடத்தலாம் என்பது ஒரு மோசமான எண்ணம்.

சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் நான் திமிராக பதில் சொன்னேன் என்று என்மீது பலர் குறைபட்டார்கள், கோபப்பட்டார்கள். ஆனால் நிகழ்ச்சியில் அன்று பதிவான எல்லாமும் வரவில்லை. வெட்டி ஒட்டி அவர்கள் காட்டும் போது நான் ஆணவமாகத்தெரிந்தேன், என் ஆத்திரம் தெரியவில்லை!
கண்முன்னே வெற்றுப் பரபரப்புக்காக பொய்களையும் கற்பனைகளையும் உண்மை போல் சிலர் பேசுவதும் அதற்கு, சுவைக்கூட்ட என்றே தொகுப்பாளர் தூண்டிவிடுவதும் எனக்கு எரிச்சல் வரவழைத்தது. மனத்தின் வெறுப்பு வார்த்தைகளில்தான் வரவேண்டும் என்பதில்லை, உடல்மொழியாகவும் வெளிவரும். அப்படித்தான் அன்று நடந்தது. ஆனால் நான் பேசும் போது, நாகரிகமில்லாமல் பேசியதாகத்தோன்றியது அவர்கள் செய்த தொகுப்பினால்தான். இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம் என்று பொறுமையோடு (திமிரோடு?) இருந்துவிட்டேன்.

இன்று இந்தப் பேட்டி. இதிலும் நான் பேசிய ஓரிரு நிமிடங்களுக்கு வேறு விதமான கேள்விகளைத்தொகுத்து என்னை முட்டாளாகக் காட்ட முடியும்.
இதற்கு என்ன செய்யலாம். இனி எந்த ஊடகவியலாளரையும் அணுக விடாமல் இருந்து விடலாமா? அப்படிச் செய்வதும் சரியல்ல, சில நேரங்களில் பொய்களைக் கண்டிக்கவாவது பேச வேண்டிவரும்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஊடகங்களுடன் தொடர்பு கொண்டவன் என்ற முறையில் தற்போது ஒரு தரச்சரிவு தெரிகிறது.
சிரத்தையின்மையா, அனுபவமின்மையா இல்லை தங்கள் சக்தியின்மீது வளர்த்துக் கொண்டுள்ள அதீதமான கற்பனையா என்று தெரியவில்லை. வெறுப்பாக இருக்கிறது.வருத்தமாகவும் இருக்கிறது.
எல்லாருமே அப்படியில்லை என்று நம்பவும் மனம் விரும்புகிறது.

Sunday, February 14, 2010

பதின் வயது, தொடர்

விழுந்தால் பொறுக்கிக் கொள்ளலாம், உடைந்தால் ஒட்டிக்கொள்ளலாம், தொலைத்தால் வேறு பார்த்துக்கொள்ளலாம் என்று ஓடிய வயதுகளைப் பற்றி, எதையும் சிந்திவிடாமல், இருப்பதைக் கெடுத்துவிடாமல் என்ற பத்திர உணர்வோடு வேகத்தைக் குறைத்துக்கொண்ட வயதில் நினைத்துப் பார்ப்பது, இனிய அனுபவமாகத்தான் இருக்கிறது. பின்னோக்கிப்பார்த்தால், அன்று வலித்தவை இன்று வேடிக்கையாகக்கூட இருக்கின்றன; அன்று பெருமிதமாய் இருந்தவை இன்று வெட்கம் வரச் செய்கின்றன.

என்னவெல்லாம் நடந்தது என்று ஒரு பட்டியல் போட ஆரம்பித்தாலேயே அது நீளமாக இருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது! செயிண்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் ஆரம்பித்த பதின்வயதுகள், சென்னை மருத்துவக்கல்லூரியில் முடிந்த அந்த ஏழு ஆண்டுகள் தான் வாழ்க்கையின் ஆரம்பம்!

என் பதின்வயதில்தான் கீழ்வெண்மணி நிகழ்ந்தது. அந்த ஆண்டுதான் சென்னை மாநிலம் தமிழ்நாடு என்றும் பெயர்சூட்டிக்கொண்டது.


இன்று இதை நினைவுகூறும் நான், அன்று எந்த அரசியல்-சமூகத் தாக்கமும் உள்புகாதவாறு படிப்பு மட்டுமே குறியாகக் கொண்ட ஒரு சாதாரண பள்ளி மாணவன். ஆனால் என் பள்ளி சாதாரணமானது அல்ல. ஆண்டுதோறும் குத்துச்சண்டை தான் பள்ளியின் முக்கிய நிகழ்வு- நான் கலந்து கொள்ளாவிட்டாலும்! திமுக அரசு இருந்தாலும் தமிழ் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல, ஆங்கிலம் தான் எல்லாமும். தமிழ் வகுப்பிலும் ஆங்கிலம் மூலமாய்த்தான் விளக்குவார்கள்! அன்று லகுவாகத் தெரிந்தது இன்று வேடிக்கையாக விமர்சிக்கப்படுகிறது!

Daffodils, Ozymandias, Lady of Shallot எல்லாம் அப்போது தான் அறிமுகம்! Wren and Martin தலைகீழ் பாடம்! எதற்காகவென்று தெரியாமலேயே அல்ஜீப்ரா திரிக்நாமெட்ரி என்றெல்லாம் இம்சைகளை ஏற்றுக்கொண்ட காலம். Perry Mason படிக்க ஆரம்பித்த காலம்! அடுத்த ஆண்டே தொடர்ந்து இரண்டு வருடப்பாடமாக Shakespeare . Midsummer Night’s Dream அதன் ஒவ்வொரு வரியும் உள்பதிந்துள்ள கவிதையும் இலக்கியமும் மிக மிக விரிவாய் ஆழமாய்... மொழி, இலக்கியம் ஆகியவற்றினை அங்கு தான் பரிச்சயம் செய்துகொண்டோம். பள்ளியின் முடிவில் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் முதன்மையாகத் தேர்வானபோதுதான் என் வாழ்வின் சுவாரஸ்யங்களே ஆரம்பம்!

ஆண்சிறுவர்களுக்கான பள்ளி என்பதால் பெண்களுடன் பழக்கம் இல்லை. ஆனால் பள்ளியின் வாசகமான viriliter age என்பதைத் தமிழில் சொல்லவேண்டுமென்றால், ‘ஆண்மை தவறேல்’ என்று சொல்லலாம். அந்த வயதுக்கான ஆண்மை விசித்திரமானது. “ஸ்மோக் பண்ணாத, கேர்ள் பிரெண்ட் இல்லாத” வெறும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திய நான் அந்தப் பள்ளியின் ஆண்மைத்தனத்தில் சற்றுக் குறைவாகவே எடைபோடப்பட்டவன்! பள்ளியை விட்டுப்போவதற்குள் இந்த இரண்டு தகுதிகளையும் அடைந்து விட வேண்டும் என்ற முனைப்பும் இருந்தது; முனைப்பு இருந்ததால் முடிந்தது!

பள்ளி நாட்களின் கடைசி மாதங்களில், ஒரு சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு, நண்பர்களுடன் பஸ் நிறுத்தத்தில், “ நினைச்சா என்னாலே ஈசியா ஒரு பொண்ணோட பிரெண்ட் ஆய்ட முடியும்” என்று நான் வெட்டியாய்ப் பீற்ற, அதோ அங்கே நிற்கும் பெண்ணிடம் பிரெண்ட் ஆகிக்காட்டு என்று அவர்கள் சவால் விட, அவளருகே சென்று, “11டி இங்கே நிற்குமா” என்று கேட்டேன். அவள் மேலே எழுதி இருந்த பலகையைக் காட்டினாள். அசட்டுச்சிரிப்புடன், அவள் ஏறிய பஸ்ஸில் நானும் ஏறி தப்பிக்கலாம் என்று பார்த்தால், நண்பர்களும் ஏறிவிட்டார்கள்! அவளிடம் போய், சாரி, உன் கூட பேசுவேன்னு  பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டேன், கொஞ்சம் ஹெல்ப் பண்ணு, உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன், என்று கெஞ்சியது அவளுக்குப்பிடித்துப் போய், சிரிக்க.. என் நண்பர்கள் நடுவே நான் படிப்பையும் மீறி ஒரு நாயகன் ஆனேன்.

பதினைந்து வயதில் விளையாட்டாய் ஆரம்பித்த அந்த உறவு இன்னும் இருக்கிறது! நாற்பது ஆண்டுகளாக நாங்கள் நண்பர்கள். இத்தனை வருடங்களில் எந்த ஒரு கணத்திலும் எதிர்பாலின கவர்ச்சியாக, பாலுணர்வு தூண்டக்கூடிய நெருக்கமாக அது அமையவில்லை. என் நண்பர்கள் பட்டியலில், எங்கள் வீட்டிற்கு எப்போது வேண்டுமானாலும் வரக்கூடியவர்களின் பட்டியலில் முதல் பத்து பெயர்களில் அந்த கீதாவின் பெயர் இன்றும் உண்டு. இருவரும் வெவ்வேறு நபர்களால் ஈர்க்கப்பட்டபின் அந்த ஈர்ப்புகள் குறித்தும் பேசித்தெளிய ஒருவருக்கொருவர் உதவினோம்.

பள்ளி முடிந்து சீருடை இல்லாமல் படிக்கப்போன இடம் லயோலா. நான் சேர்ந்த ஆண்டுதான் அங்கே ஒரு மாணவர் போராட்டம் நடந்தது. போராட்டம் பிடித்தது. காரணங்களைப் பிடிப்பதாய்ச் சொல்லவும் பிடித்தது. கொஞ்சம் கம்யூனிஸ்டோ என்று பிறர் சந்தேகிக்கும் ஒரு பூர்ஷ்வாவாகவே இருந்தேன். அங்கே தான் முதலில் என் ஓவியத்திறமைக்கு அங்கீகாரம். போராட்டப் போஸ்டர்களில் ஆரம்பித்து, கல்லூரி சார்பாய் போட்டிகளில் கலந்து வெல்லும் அளவுக்கு மாற்றம். லயோலாவில் இருந்தது ஓர் ஆண்டு தான், ஆனால், நான் மருத்துவக்கல்லூரி சேர்ந்த பின்னும், பதினேழு வயதானவனைத் தன் புத்தகத்திற்கு முன்னட்டை ஓவியம் வரையச் சொல்லி ஊக்குவித்தவர், அன்றைய லயோலா தமிழ்த்துறையில் இருந்த பேராசிரியர் சுந்தரராசன் எனும் அழகரசன். வேங்கையின் வேந்தன் எனும் அவரது கவிதை நாடகம் தான் நான் முதன் முதலில் அட்டைப்படம் வரைந்த நூல்.

அடுத்து சென்னை மருத்துவக் கல்லூரி! நான் உருவானதே இங்கேதான்.

காதல் என்று நினைத்ததைப் பற்றி, கவிதை என்று நினைத்துக் கொண்டதை எழுதியதும், பள்ளியில் கற்றுக்கொண்ட நெஞ்சுறுதியுடன் எவராக இருந்தாலும் சரியென்று பட்டால் எதிர்க்கலாம் என்று நடந்து கொண்டதும், அதற்காக தண்டிக்கப்பட்டதும், எவ்வளவு விழுந்தாலும் எழும் அளவு மனத்திலோர் உறுதி வளர்ந்ததும் இங்கே தான்.

1972 ஆரம்பித்த நட்பு வட்டம் இன்னும் இருக்கிறது. பெயரளவில் மட்டும் அல்ல. பகிர்தலில், பார்த்துக்கொள்வதில், பேசுவதில், முன்போலவே இன்னும் சிரிக்க முடிவதில்!

சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது தான் அதுவரை என் வீட்டில் இருந்த வசதிகள் யாவும் மாயை என்று தெரிந்தது. கடனில் காட்டப்பட்ட ஆடம்பரமா இல்லை எனக்குத் தெரிய வேண்டாம் என்று கஷ்டம் தெரியாமல் வளர்த்தார்களா என்று இன்னும் தெரியாது. ஒரு நாள், வசதியிலிருந்து வறுமை தெரிந்தது. உணவுக்கும் போக்குவரத்துக்கும் கூட காசில்லை என்ற போதுதான் சம்பாதிக்க ஆரம்பித்தேன். எனக்குத்தெரிந்த ஒரே வேலை படம் வரைவதுதான். வரைந்து சம்பாதித்த பணத்தில்தான் MBBS பட்டம்! பதினெட்டு வயதில் சுயசம்பாத்தியதில் சுதந்திரம் தெரிந்தது. தன்னம்பிக்கை திமிரளவும் வளர்ந்தது.

பத்தொன்பதுவயதில்.. இலக்கியம் அறிமுகம் ஆனது. விமர்சனப்பார்வை வந்தது. வீரமும் வளர்ந்தது, வீம்பும் வளர்ந்தது. உறவுகள் புரிந்தது, உலகம் தெரிந்தது.

பதின்வயது தொடர் எழுத தீபா அழைத்த போது தயங்கியே எழுத ஆரம்பித்த பிறகு, இதைப் பற்றியெல்லாம், ஒரு மீள்பரிசீலனை செய்யவும் மனவியல் கோணத்தில் பார்க்கவும் ஆசை வருகிறது.

அனுபவங்களின் பரிசுத்தம் பகுப்பாய்வில் பழுதுபட்டுப் போகலாம்.

இன்ஷா அல்லாஹ்.

Tuesday, February 9, 2010

ஓராண்டு ஓடி விட்டது!

ஓராண்டு ஓடி விட்டது!
தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் நிறையவே இருந்தும் அதற்கான முயற்சி, பயிற்சி, பக்குவம் பொறுமை இல்லாததால் இத்தனை மாதங்களாக தயக்கம் இருந்தது. இப்போதும் ஒன்றும் பெரிதாக வேகம் வந்துவிடவில்லை. வேகமாக எழுதிப்பழகிவிட்டதால் மெதுவாக தட்டச்சு செய்வதில் பல சிந்தனைகள் வார்த்தைகளாவதற்குள் காணாமல் போய் விடுகின்றன. இருந்தும் முயற்சிக்கிறேன்.
posted by Dr.Rudhran at 10:07 AM on 8 Feb, 2009 

ஓராண்டு ஓடி விட்டது!
இடையில் எவ்வளவு மாற்றங்கள். 
ஆர்வம் தாகமாகியதும், கணக்குகள் முக்கியமாகியதும், 
அங்கீகாரம் அத்தியாவசியமானதும், 
எழுத்தும்கூட ஒப்பனை கூட்டிக்கொண்டதும், 

புதிய முகங்களின் புன்சிரிப்பும், 
பதுங்கிய முகங்களின் நச்சுச்சீண்டலும், 
நாகரிகத்தின் மௌனங்களும், 
சலிப்பும், வெறுப்பும், கோபமும், 
உள்சிலிர்ப்பும், உத்வேகமும், 
 பரிச்சயமும் நெருக்கமும் பகையும், 

மீறி எழுதுவது, 
இதுவரையும் இனியும் 
வருடும் கண்களுக்காக மட்டுமின்றி மனங்களுக்காகவும் 
அந்த மனக்கூட்டத்தில்  என் மனமே முண்டியடிக்கும் 

ஹூம்.

Wednesday, February 3, 2010

இனி இனிதாக


மௌனம் இல்லாத சப்தம் இல்லை, சப்தம் இல்லாத மௌனம் உண்டு.
சொல்லித்தான் ஆக வேண்டுமா எல்லாமும்?
கோலமிடுதல் ஒரு வரவேற்பு. ஓர் ஆசையின் வெளிப்பாடு. அழகுணர்ச்சியின் ஆதங்கம். 
வருபவர் மீது உள்ள மரியாதை மட்டுமல்ல, 
வருகையின் நாகரிகத்தின் மீதுமுள்ள நம்பிக்கை.