Thursday, December 31, 2009

புத்தகத்திருவிழாவும் சில நினைவுகளும்



 வாசித்து முடிக்காத பல புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்தும் புதிதாய்ப் பார்க்கும்போதெல்லாம் வாங்குகிறேன். அவற்றுள் வாசிக்கவே போவதில்லை என்பவையும் அடக்கம். தகவல் களஞ்சியங்கள் அகராதிகள் மட்டுமல்ல, சில நவீனங்களும் சில பக்கங்களிலேயே படிக்க முடியாதவற்றின் அடுக்குள் சேர்க்கின்றன. இப்போது புத்தக விழா ஆரம்பம், இன்னும் பல வாங்கப்படும், சில அன்புடன் கொடுக்கப்படும், வேறு சில பரிந்துரைக்கப்படும். புத்தகவிழா என்னுள் பல நினைவலைகளைக் கிளப்புகிறது.
33வது புத்தகவிழா! இதுவரை இரண்டு ஆண்டுகள்தான் செல்லத்தவறியிருக்கிறேன். ஒருமுறை இன்னும் கொஞ்சம் காசு சேரட்டும் இரண்டு நாள் கழித்துப்போகலாம் என்று இருந்தபோது அங்கே தீபப்பிடித்து விழா நின்றுபோனதால்,அடுத்தது நான் அமெரிக்காவில் இருக்க நேர்ந்ததால்.ஆரம்பத்தில் பார்க்க மட்டுமே செல்வேன், வாங்க முடியாது என்று தெரிந்தும். பிறகு வாங்கும் வசதி வந்ததும் வாங்க ஆரம்பித்தேன். முன்பு பணமில்லாமல் வாங்காது விட்டவற்றை மட்டுமல்ல, பணம் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாதவைகளையும் வாங்கினேன். ஆயிரக்கணக்கில் சேர்ந்து விட்ட புத்தகங்களை வைத்துப் பராமரிப்பது சிரமமாக இருக்கிறது, என்றாலும், இந்த ஆண்டும் வாங்காது இருக்க முடியாது. ஒரு போதைப்பழக்கம் போல் இது ஆகிவிட்டது. பல விஷயங்களில் ஆடம்பரத்தைத் தவிர்க்கும் எனக்கு இதில் ஆடம்பரம் ஓர் ஆணவநிலைக்கே போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆணவம் ஏன் வருகிறது?
கையில் காசு இல்லாதபோது கனவுகளே போதும்; கைச்செலவுக்குக் காசு சேர்ந்துவிட்டால் நிஜங்களும் போதுவதில்லை. இது புத்தகங்களில் மட்டுமல்ல, அனைத்திலும் தொனிக்கிறது. படிக்க ஆட்கள் கிடைப்பார்களா என்ற ஏக்கம் இருந்தவரை எழுத்துக்கள் கனவிலும் கவிதை கொட்டின; பதிப்பிக்கவும் ஆட்கள் வந்துவிட்டபின், எழுத்துக்கள் போதுமானதாய்த் தோன்றுவதில்லை. கிடைக்கும் வரைதான் எல்லாமும் சுவை என்றால் எதை வைத்துக்கொள்வது? வசதியிருப்பதால் வாங்குவது என்றால் வாங்குவதை நிறுத்துவது எப்போது?
புத்தகங்களும் இப்போதெல்லாம் பார்க்கவும் அழகாய் இருக்கின்றன. கையில் எடுக்கும்போதே மனத்துள் ஒரு இனிய எதிர்பார்ப்பினைத் தூண்டுகின்றன. அச்சுநேர்த்தியும் அதற்கு ஈடான வடிவமைப்பு நேர்த்தியும் மயங்க வைக்கின்றன. நுகர்வு கலாச்சாரத்தில் இப்படித்தானே விற்கப்பட வேண்டும். அதன் வீச்சாகத்தானே அவசியம் இல்லாதபோதும் வாங்க மனம் அலைகிறது! பயன்படப்போவதையும் பயன்படுத்தப் போவதையும் மட்டுமே வாங்குவதென்றால் வீட்டில் எவ்வளவு இடம் காலியாக இருக்கும்!
மனத்திலும் தான். வாங்கும் சக்தி இருப்பது போலத்தானே நினைக்கும் சக்தியும் (affordable என்ற அர்த்தத்தில்). அதுவும் கனவுகள் இலவசம் எனும்போது குப்பையாகச் சேராமலா இருக்கும்.....
வாங்காத போதும் சரி, வாங்கும் போதும் சரி, எழுத்துக்களைத்தாண்டி எழுத்தாளர்களின் மீதும் ஒரு மோகம் ஏற்பட்டதுண்டு. ஆனால் அவர்களில் பலரைச் சந்திக்காமலேயே இருந்திருக்கலாம், கனவுகள் மிச்சமிருந்திருக்கும்.
எழுத எவ்வளவோ விஷயங்கள் இருந்தும் மனம் இப்போது புத்தகங்கள் பற்றியும் புத்தக விழா பற்றியுமே சுற்றிச்சுற்றி வருகிறது. டாஸ்மாக் கடை திறக்குமுன் காத்திருக்கும் அடிமை போல. இதனால்தான் இந்தப்போதை பயமுறுத்துகிறது. புத்தகங்கள் மீதும் போதை குறைந்துவிட்டால் என்பது மதுப்பழக்கத்தை விட்டுவிட்டால் எப்படி சமாளிப்பது என்று குழம்புவோர் போலத்தான் இது என்று தோன்றுகிறது. ஒரு போதையிலிருந்து மீண்டால் நேரம் கூடுதலாய்க்கிடைக்கும், அப்போது வாழ்க்கை புதிய அறிமுகங்களையும் அனுமதிக்கும். போதையிலிருந்துதான் மீள முடியும், காதலிலிருந்து அல்ல.
எழுத்து ஒரு காதலாய், ஒரு தவமாய், ஒரு யக்ஞமாய் இருந்தது. ஆனாலும் டைரிகள் நிறைந்ததில்லை. மனத்துள்ளேயே பல வார்த்தைகள் வாக்கியங்களாகி அழகான வடிவமைப்பு கூடிய புத்தகங்களாகி மறுநாள் விடிவதற்குள் காணாமல் போயிருக்கின்றன. இதனால்தான் எழுத்தைக் கனவுக்கணினியில் தட்டச்சுச்செய்து அழித்துவிடாமல், காகிதங்களில் காலத்திற்கும் பதிவு செய்வோர் மீது ஒரு மரியாதை வருகிறது.
இதோ இந்த ஆண்டு முடியப்போகிறது. கண்முன்னம் பிரிக்கப்படாத புதுவாசனையுடனும் புதிய சங்கல்பங்களுடனும் டைரி. முந்தைய ஆண்டுகளின் டைரிகளும் இப்படித்தான் ஒரு வரி கூட எழுதப்படாமல், உபயோகப்படுத்துவோர்க்குக் கொடுக்கப்படாமல் அழுக்கு சேர்ந்து அடுக்கிக் கிடக்கின்றன. எண்ணங்கள் டைரிகளின் எழுத்துக்களை நம்பி இல்லை. அவற்றுக்குக் காலக்கணக்கான வரிசைக்கிரமமும் இல்லை.
சனிக்கிழமை மாலை என்னை அங்கே பேச அழைத்திருக்கிறார்கள்! இதற்கு முன் 1996 ல் என்னைப்பேச அழைத்திருந்தார்கள். அன்று நான் பேசும் நேரம் தள்ளிப்போனது, காரணம், மடாதிபதி ஜெயேந்திரன் வருகை! விழா நிர்வாகிகள் அந்த மனிதனின் கால்கள் தரையில் பட்டுவிடுமோ என்று பயந்ததுபோல மண்ணில் புரளாத குறையாகச் சுற்றி வணங்கிக்கொண்டு நடந்தார்கள். சில கடைகளுக்குள் அழைத்துச் சென்றார்கள். ஆசி வாங்கிக்கொண்டார்கள், வாங்கிக்கொடுத்தார்கள். வயிற்றெரிச்சலா அருவெறுப்பா என்று புரியாத உணர்ச்சியோடு நான் ஒரு இஸ்லாமிய புத்தகக்கடையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். உள்ளே அந்த “மகான்” வந்தால் ஒரு குர்ஆன் வாங்கிக்கொடுக்கலாம் என்று காத்திருந்தேன். ம்ம்ஹூம், “புனித விழிகள்” கடையையும் பார்த்தன, ஆனால் பக்தசேவகர்களான நிர்வாகிகள் அப்படியே வேறு பக்கமாக அழைத்துக்கொண்டு போய் விட்டார்கள்! நான் வாங்கிய நூல் தகுதியான ஒருவர் கைகளில் கொடுத்துவிட்டு, பிறகு கூட்டத்தில் பேசும் போது இதைக்குறிப்பிட்டுக் கண்டித்தேன். அதன் பின் அப்படி பேச வாய்ப்பு தரப்படவில்லை. 

 சாமியார்கள் இப்போதும் வந்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களுக்கு தனி ஸ்டால்களும் உள்ளன. சிஷ்யகூட்டத்தின் அலம்பலும் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. இம்முறை பார்ப்போம்! நாம் காசு கொடுத்து உள்ளே போகிறோம், காசு செலவழித்து நூல்கள் வாங்கப்போகிறோம், நமக்கு இடையூறாகச் சிலரின் பக்தி இருப்பதை எவ்வளவு சகித்துக் கொள்கிறோம் என்று பார்ப்போம்.


பதிவுக்குச் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, நான் நெருக்கமாகப் பழகிய இரு எழுத்தாளர்களின் வெளியே தெரியாத படம் ஒன்றை இங்கே இணைக்கிறேன். என் அன்பின் இன்னொரு வெளிப்பாடாக! ஜெயகாந்தன் அப்போது தாடி வளர்த்திருந்தார்!!செப்டெம்பர் 2005!


உடல்மொழி, உரைமொழி



இது நான் எழுத ஆரம்பித்த நூலின் அறிமுகப்பகுதியின் ஒரு பகுதி. இன்றைய பதிவு இனிதான் எழுதவேண்டும் என்பதால் இதைப் பதிவேற்றம் செய்கிறேன்.
  
எனக்கு தார்மீகக்கோபம் என்று தோன்றுவது சிலருக்குத் திமிர் என்றும் தோன்றலாம். நான் அமைதி காப்பது சிலருக்கு அடிபணிந்துவிட்டதுபோல் தோன்றலாம். இப்படித்தான் உள்ளத்தின் மொழி உடல்வழி பலநேரங்களில் வேறாக அர்த்தம் காட்டுகிறது. 

சிலநேரங்களில் சாமர்த்தியமான நடிப்பின் மூலம் நான் கோபத்தை மறைத்துக்கொண்டு புன்னகைத்திருக்கிறேன். சில நேரங்களில் நடிக்கமுயன்றும் என் உணர்ச்சிகள் வெளித்தெரிந்திருக்கின்றன.
உலகில் இசைவோடு வாழ்வது உத்தமம். ஆனால் உள் ஒன்று இருக்கும்போது புறத்தே அதைக்காட்டாமல் வாழ்வது ஒரு கயமை இல்லையா? சத்தியமும் சாமர்த்தியமும் இயல்பு வாழ்வில் ஒன்றாக வெளிப்படுவது எவ்வளவு தூரம் சாத்தியம்? 
இங்கேதான் மனவியலின் ஒரு பகுதியான உடல்மொழி குறித்தும் உரையிடை மொழி குறித்தும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

உடல் மொழி ஒன்றும் புதிய மனவியல் கண்டுபிடிப்போ கோட்பாடோ அல்ல. அது பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே இந்தியாவின் இரு பெரும் நூல்களில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவ்விரு இந்திய நூல்களும் மனவியல் கற்பிக்க எழுதப்படவில்லை!
நடன முறைப்பாட்டிற்காக பரதமுனிவர் எழுதிய நாட்டியஸாஸ்திரமும் தொல்காப்பியர் எழுதிய  இலக்கண நூலான தொல்காப்பியமும்தான் அவ்விரு நூல்கள். தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் மட்டுமல்ல, அதன் மூலம் அந்த காலகட்டத்தின் வாழ்க்கைமுறை, அன்று நிலவிய வாழ்வு மற்றும் நீதிநெறி குறித்தும் நாம் தெரிந்துகொள்ளலாம்.


உணர்ச்சிகள் இயல்பானவைதான். ஆனால் அவற்றின் வெளிப்பாடுகள் சூழல் சார்ந்தவை. இந்த அடிப்படையைக்கொண்டே பரதமுனிவரின் நாட்டியஸாஸ்திரம் அங்கங்களின் மூலம், அசைவுகள்மூலம்,முகபாவங்களின்மூலம் எப்படி உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் விவரிக்கிறது. தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் எனும் அதிகாரத்தில் இதையே வேறு கோணத்தில் விளக்குகிறது. இலக்கியநுணுக்கத்திலோ நாட்டியச்செறிவிலோ நாட்டம் இல்லாவிட்டாலும் இவற்றைப் பரிச்சயம் செய்துகொள்வதன் மூலம், வாழ்வில் தினசரி சந்திக்கநேரும் சூழ்நிலைகளில், அவரவர் உடல்மொழிமூலம் அவர்களின் உள்ளத்தில் ஒலிக்கவிரும்பும் மொழி குறித்து புரிந்துகொள்ளலாம். 

இதன்மூலம் ஒரு சுயபரிசீலனையும் மேற்கொள்ளலாம். நாம் நினைத்ததைத்தான் பேசுகிறோமா என்று பார்த்துக்கொள்ளலாம், அதைவிட, எதிர் உள்ளவர் பேச நினைப்பதைத்தான் பேசுகிறாரா என்றும் ஒரளவிற்குக் கணிக்கலாம். அதைக்கொண்டு நாம் எதிர்வினை குறித்தும் தெளிவாக இருக்கலாம்.


நம் தொல்காப்பியரையும் பரதமுனிவரையும் படிக்காமலேயே டார்வின் இதை எழுதியிருக்கிறார். அவரைப் பொருத்தவரை அடிப்படை உணர்ச்சிகள் ஆறு தான். தொல்காப்பியத்திலும், நாட்டியஸாஸ்திரத்திலும் அவை எட்டு. நவரசம் என்பது, பரதமுனியின் நூலுக்கு விளக்கம் எழுதிய அபிநவகுப்தரின் தீர்மானம். அவரது கூற்றுப்படி, எட்டு அடிப்படை உணர்ச்சிகளையும் கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடிந்தால் ஒன்பதாவது நிலையான சாந்தி தோன்றும்.
உணர்ச்சிகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ளவேண்டும். உணர்ச்சிகளின் தன்மை குறித்து ஓர் அறிவார்ந்த தெரிதல் இருப்பது கூட உதவும். தினசரி வாழ்வில் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டினை உணர்ந்து தெளிவாக இருப்பது, நம் செயல்திறனையும் மேம்படுத்தும்.
பல நேரங்களில் என் உரைமொழியின் கனிவு என் உடல் மொழியின் வேறுபாட்டைத்தாங்கி வெளிவரும். அப்போது இருவேறு செய்திகள் எதிர் இருப்பவருக்குச் சொல்லப்படும். எது அவரது மனநிலைக்கும், நம்மைப்பற்றிய அவரது முன்கணிப்பிற்கும் ஒத்து உள்ளதோ அதையே அவர் எடுத்துக்கொள்வார்.

வெறும் உடல்மொழியின் வெளிப்பாடுகளை அறிவது மட்டும் உதவாது, ஏனெனில் நாம் எல்லாருமே எதைப்பார்த்தாலும் நாம் மனத்தில் ஏற்கனவே வைத்துக்கொண்டிருக்கும் கோணங்களின் ஊடாகத்தான் பார்க்கிறோம். முதலில் நம் மனதில் என்னென்ன முன்கணிப்புகள் உள்ளன என்பதை ஆராய்ந்தறிய வேண்டும்.
உடல்மொழி குறித்து தொடர்ந்து எழுதலாம் என்று ஓர் எண்ணம்; அதற்கு முன் நாம் செய்துகொள்ளும் முன்மதிப்பீடுகளின் பின்னணி பற்றியும் சிந்திக்கவேண்டும்.

பொதுவாகவே ஒருவரது முகத்தைப்பார்த்தவுடன் அவரது உணர்ச்சி என்ன, மனநிலை என்று நாம் அனிச்சையாகக் கணிக்கிறோம். இது எவ்வளவு தூரம் சரியாக அமைகிறது? ஒரு பரிசோதனை செய்ய நடிகர் பாலாசிங் சில உணர்ச்சிகளைக் காட்டுவதைப்படம் பிடித்தோம். அதைப் பார்த்தவர்களில் எத்தனை பேர் உணர்ச்சிகளை முகபாவங்களின் மூலம் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே எங்கள் சோதனையின் குறிக்கோள். சில நேரங்களில் இம்மாதிரி பரிசோதனைகளில், நான் ஒரு முகபாவம் சரியாக இருப்பதாய் ஓகே சொன்னால், பார்ப்பவர்களில் சிலர் நான் ஓகே செய்யாத படத்தில்தான் உணர்ச்சி சரியாக அமைந்ததாய்க் கூறுவார்கள். மேலைநாடுகளில் இம்மாதிரி ஆய்வுகள் நிறைய உண்டு, இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இம்மாதிரி சோதனைகள் குறைவு. எடுத்த எல்லா படங்களையும் பரிசோதனைக்குப் பயன்படுத்த விரும்பும் மனவியல் மாணவர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டால் அனுப்பி வைக்கிறேன்.  இது ஒரு பரிசோதனையின் ஆரம்பக்கட்டம்தான். நாடக உத்திகளைக்கொண்டு மனவியல் பயிற்சி தர முடியுமா எனும் வேறொரு சோதனையின் நீட்சி.
உங்கள் எதிர் இருப்பவர் அல்லது பத்திரிகைகளில் இருப்பவரின் படத்தை வைத்துக்கொண்டு அவரது மனநிலை குறித்துச் சிந்தித்துப் பார்த்தால் இது இன்னும் விளங்கும்.


இங்கே உதாரணத்திற்காக படங்கள்:

படங்களை எடுத்தவர் அண்ணாதுரை, ஆண்டு 2005



                       


Wednesday, December 30, 2009

கருணையும் கொலையும்


அருணா என்ற பெண் உடலா உயிரா? 1973 முதல் இன்றுவரை அவள் எவ்வித உணர்வுமின்றி படுக்கையில் கிடக்கிறாள். உயிர் போகவில்லை; உணவு உடலுள் செல்கிறது. தனியாய் ஒரு மருத்துவமனையின் மூலையறையில் தனியாய் இருக்கிறோம் என்று தெரிந்துதான் அந்த உயிர் இன்னும் உடலை விட்டுப் பிரியாமல் இருக்கிறதா? அந்த உடல் இனி எழுந்து நடக்காது, வாய் பேசாது, சிரித்துத் தவழ்ந்து ஒரு குழந்தை எதிர் வந்தால் தூக்கிக்கொஞ்ச கை நீளாது. ஆனால் அவளுக்கு ஒரு படுக்கை இருக்கிறது, சரியான நேரத்துக்கு உணவு கிடைக்கிறது, உடல் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. 

அவள் மூச்சுத்திணறி நினைவு இழக்கும்போது, வயது 25. அவள் கடைசியாகச் சிரித்தது அன்றுதான், கடைசியாகக் கதறியதும் அன்றுதான். 60 வயது என்பது வெறும் ஆண்டுகளின் கணக்கு மட்டுமே. அவள் மனதுக்கு என்ன வயதிருக்கும்? கண்களில் காணாதுபோன 36 வருடங்கள், அவளது மூளையில் என்ன விதத்தில் பதிவாகியிருக்கும்? அவள் காதுகள் வழியே ஒலிகள் உட்புகுந்தாலும் என்னென்ன அர்த்தங்க்களை அமைத்துக்கொள்ளும்? பர்மனின் இசைக்கும் ரஹ்மானின் இசைக்கும் ஏற்பட்டுள்ள மாறுதல்களை உள் அமையும் ரசனை எவ்வாறு புரிந்துகொள்ளும்? எதை இன்று தேர்ந்தெடுத்துக் கேட்க விரும்பும்? 

செயலற்று இருக்கும் அந்த உடல்தான் அருணாவா? அவள் சிதைந்தபின் சில ஆண்டுகள் காத்திருந்த காதலனுக்கும், அவளை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்த கயவனுக்கும் காலம் வாழ்க்கையின் வேறுவேறு அவசியங்களை அமைத்துக் கொடுத்துவிட்டது. சட்டத்தின் சல்லடைவழியே அந்தக் கயவன் ஒரு குறிப்பிட்ட தண்டனையின் குறிப்பிட்ட காலம் முடிந்ததால் வேறு ஊரில் குற்றவாளியாகக்கூடக் கருதப்படாமல் வாழ்ந்து கொண்டிருப்பான். 
அவள் செத்துக்கொண்டிருக்கிறாள், மிகமிக மெதுவாக. 
இப்படியொரு வாழ்வு தேவையில்லை, அவளைக்கொன்று விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள், ஒருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.கொல்வதென்றால் எப்படி என்று யாரும் சொல்லவில்லை. சில நினைவிழந்த நிலையில் இருக்கும் தீவிரநோயாளிகளைப்போல் அவளது மூச்சையும் இதயத்தையும் யந்திரங்கள் இயக்கிக்கொண்டிருக்கவில்லை; அப்படி இருந்தால் அந்த யந்திரத்தின் ஓட்டத்தை நிறுத்தி அவளது உயிரையும் அழித்துவிடலாம். இவள் சும்மா கிடக்கிறாள். சில ஆயாக்களும் சில செவிலியர்களும் அவளுக்கு உணவு ஊட்டி, உடலைப் பராமரிக்கிறார்கள். 36 ஆண்டுகளாக இப்படிக்கிடக்கிறாள். அவளைக் கொல்வது கருணையா? 


அவளைப்பற்றிப் படிக்கும்போது ஒரு பரிதாப உணர்வு மனத்துள் எழுவது இயல்பு. அவள் படிக்கும் நமக்கெல்லாம் ஒரு பெயர். சில பத்திரிகைகள் வெளியிட்ட அவளது படம் 1973க்கு முந்தையது.வெறும் ஒரு பெயராக, எப்போதோ எடுக்கப்பட்ட படம்வழி ஒரு பிம்பமாக அவள் நம்முள் ஏற்படுத்தும் அந்தக் ‘கருணை’ உணர்வு நிஜமாகவே நமக்குள் இருக்கிறதா? இல்லை இதற்கெல்லாம் பரிதாபப்பட வேண்டும் எனும் சமூக நியதியை நாமே நமக்குக் கற்பித்துக்கொள்கிறோமா? 

கருணையின் பெயரால் அவளைக் கொள்ளவேண்டும் என்று வாதிடுவோருக்கும் ஒரு நியாயம் இருக்கும் வாதிட. என் இப்பதிவின் அக்கறை அவர்களின் நியாயத்தைப் பற்றியல்ல, நம் கருணையின் வீச்சு பற்றி, அதன் போக்கு பற்றி. 

அன்னியமானதால்தான் அவள் மீது நமக்குக் கருணை வருகிறதா? அவளே நமக்கு நெருக்கமானவளாக, நாம் பழகிய ஒருவளாக இருந்தால் இதே கருணை வருமா? கருணை என்பது அன்பின் வெளிப்பாடு. அன்பு என்பதும் ஒரு பிரதிபலிப்பில்லாமல் தொடர்வதில்லை. 

நண்பராக இருந்தாலும், நாயாக இருந்தாலும், நெருங்கிய உறவினராக இருந்தாலும் நாம் அன்பு காட்டி அது ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான எதிர்வினை இல்லாவிட்டால், எவ்வளவு காலம் அதே அளவில் அதே அன்பு தொடரும்? வெறுப்பு வராவிட்டாலும் சலிப்பு வரும். அந்தச் சலிப்பு ஒருநாள் அக்கறையின்மையாக மாறும். முன்பு நாம் அன்பு காட்டியவர் அந்த நேரத்தில் என்ன ஆனாலும் நமக்குள் எந்த உணர்வுமீட்டலும் இருக்காது. 

வாழ அன்பு அவசியம். அன்பு வாழ அது பிரதிபலிக்கப்படுவதும் அவசியம். நாம் அன்பு கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்களிடம் அன்பு காட்டுகிறோமா? அதற்கு நேரம் இருக்கிறதா? நெருக்கம் என்பது அன்பின் வெளிப்பாட்டிற்கு விலக்கு அளிக்கிறதா? நெருங்கிவிட்டபின் விலகப்போவதில்லை என்று தீர்மானமானபின் அன்பு மனத்துக்குள் இருந்தால் போதும் என்றால், அது அன்பு தானா? ஆரம்பத்தில் இருந்த அளவு குறைகிறது என்றால் அது முதலிலேயே அன்பு தானா இல்லை நெருக்கமாவதற்கான ஒரு யுத்தியா? உறவுகளில் சிக்கல் உள்ளவர்கள் மனத்துள் அடிக்கடி ஏற்படும் குழப்பங்களின் கேள்விகள் இவை.அன்பு காட்டுவது என்றால் எப்படி? அதுதான் இருக்கிறதே தெரியவில்லையா..என்பதே பலரது சமாதானம். 

அன்பைக் காட்டுவது புன்னகையால், புரிதலால், பகிர்தலால், நம்பிக்கையுடன் நிஜமாய் இருப்பதால்.. மிகவும் எளிது. ஆனால் இன்றைய நகரக்கலாச்சாரத்தில் நேரமின்மையே அன்பு காட்டப்படுவதைக் குறைக்கிறது. தொலைக்காட்சியில் காட்டப்படும் குடும்பக்கதைகளில் மூழ்குவோருக்கு, சொந்த குடும்பத்தின் கதையுடன் தொடர்பு குறைந்து வருகிறது. 
நுகர்வு கலாச்சாரம் ஆசைகளைத் தேவைகளாக மாற்றிவருவதால், உழைக்கவும் பணம் சேர்க்கவுமே மனம் அலைபாய்கிறது. நேரம் குறைவதால் நெருக்கமும் குறைகிறது. நெருக்கம் குறைவதால் அன்பு வெளிப்படாமல் உள்ளேயே காய்ந்து விடுகிறது. யந்திரத்தனத்தில் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் சிரிக்கக்கூட திரைக்கோமாளிகள் தேவைப்படுகிறார்கள். 

ஒவ்வொரு வீட்டிலும் இப்படி உணர்வுகள் கொல்லப்படுகின்றன, உறவுகள் நசுக்கப்படுகின்றன. இது குறித்து அக்கறை வந்தால், நேரத்தை உருவாக்கிக்கொள்ளலாம். நம் மீது நமக்கே கருணை இருந்தால் நாம் உறவுகளை நம் சூழலை அன்பு மிகுந்த அமைதியுடன் அமைத்துக்கொள்ளலாம். அவசரங்கள் என்று ஓடிக்கொண்டே இருந்தால், எப்போதாவது பத்திரிகையில் யாரைப்பற்றியாவது படித்துவிட்டு, அந்தச்சில நிமிடங்கள் மட்டுமே அன்பும் கருணையும் பொங்கும்.

கொல்வது கருணையா எனும் கேள்வியை மீண்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.உயிர் என்பது வெறும் உடலின் இயக்கம் மட்டுமல்ல, உணர்ச்சிகளின் இயக்கமும் என்று புரிந்தால், எத்தனை உயிர்களை நாம் உதாசீனப்படுத்துகிறோம் என்பது புரியும். உதாசீனப்படுத்துவதும் கொலைதான், அதில் எந்தக் கருணையும் கிடையாது.

வன்புணர்ச்சி எனும் வக்கிரம்


வன்புணர்ச்சி எனும் வக்கிரம் சிலரது மனவிகாரத்தின் வெளிப்பாடுதான். சக மனித உயிரை மதிக்காமல், உணர்வை மதிக்காமல் தன் பொருந்தா அடங்கா இச்சையைப் பூர்த்தி செய்துகொள்ளும் வெறியர்களின் விகாரம் தான் இச்செயல். அந்த நேரம் அவர்களது மனத்தில் காமவெறி மட்டுமே மேலோங்கி இருக்கும். அவ்வாறு ஒரு வெறித்தனம் சிலருக்கு போதையின் உச்சத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படுவதிலும் நியாயம் இல்லை. போதை அதிகரிக்கும்போது சமூக நாணம் குறையுமே தவிர சுயநெறியாக உள்வார்த்துள்ள சமூக மதிப்பீடுகள் காணாது போய்விடுவதில்லை. உள்ளே அப்படியொரு கேவலமான எண்ணம் ஒளிந்திருந்தால்தான் போதை அதைக் கட்டவிழ்த்துவிடும்.

எப்படி ஒருவனுக்குள் இத்தகைய எண்ணம் உருவாகிறது. தனக்குத் தகுதியில்லை எனும் கணிப்போடு, தகுதியைமீறி ஒரு பென்மீது மோகம் அவனுள் மேலோங்கினால் நேர்மையாக அடையமுடியாத அவளை வன்மத்துடன் வன்முறையாலாவது அடையும் வெறி சிலருக்கு வரும். இப்படிப்பட்டவனும், அப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தாலும், அவள்மீது உண்மையான அன்பு கலந்த ஈர்ப்பு இருந்தால் இம்மாதிரி வன்செயலில் ஈடுபடமாட்டான். காதலி என்னை நிராகரித்ததால்தான் அவளைப் பலாத்காரம் செய்தேன் என்று கூறுபவன் அவளைக் காதலிக்கவேயில்லை என்றுதான் அர்த்தம். குடிபோதையில், காதல் வெறியில் என்று அவன் பின்னர் விளக்கம் கொடுப்பதெல்லாம் குற்றத்திலிருந்து தப்பிக்க மட்டுமல்ல, உள்ளே ஒரு குற்ற உணர்வு குறுகுறுப்பதாலும்தான்.
குற்ற உணர்வு எப்போது வரும்? சமூகம் தவறு என்று சொல்லும் பல விஷயங்களை நாம் சாதாரணமாகச் செய்துவிட்டு குற்ற உணர்வுடன் இருக்கிறோம். உதாரணமாக தவறாக வண்டியோட்டி, காவலரிடம் பிடிபட்டால் லஞ்சம் கொடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப்போவது. இது சாதாரண விஷயம் என்றே பலருக்கும் தோன்றும். பொது மன்றத்தில் எழுதும்போதோ பேசும்போதோ இதைத் தவறு என்று முழங்குவோர் கூட நண்பர்களிடம் இதை ஒரு நகைச்சுவை நிகழ்வாகப் பேசுவதும் மிகவும் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான். செய்த காரியம் குறித்து நாம் குற்றவுணர்வுடன் வெட்குவது ஒரு சில விஷயங்களுக்காக மட்டுமே. அவை நம்மையே நம் மனம் கேவலமாக நடந்து கொண்டாயே என்று கேட்கும் நிலைகளில் மட்டுமே.
எது கேவலம்? பொய் சொல்வது கேவலம், என்று நமக்குத்தெரியும், ஆனாலும் சின்னச்சின்ன பொய்கள் பரவாயில்லை என்று சமாதானப்படுத்திக்கொள்வோம். அதை புரை தீர்க்கும் என்றும் அதனால் நன்மை பயக்கும் என்றும் ஏமாற்ற முயல்வோம்- பிறரை மட்டுமல்ல நம்மையுமே. கேவலம் என்றால் மாட்டிக்கொள்ளாவிட்டாலும் அந்தச்செயல் நம் மதிப்பீட்டில் இழிவானதாக இருக்க வேண்டும். அப்படி இழிசெயல் என்று நாம் கருதுவது நம்மைப் பற்றி நமக்கே இருக்கும் சுயமதிப்பீட்டின் உயர் பண்புகள் உடையும் போதுதான். எது கேவலம் என்பது அவரவர் வைத்துக்கொள்ளும் தனிப்பட்ட கணக்கு. ஆனால் இக்கணக்கு உள்ளே கொஞ்சம் கொஞ்சமாய் நாம் கற்றுக்கொள்ளும் நெறிகுறித்த கருத்துக்களின் கூட்டாகவே அமையும். இக்கருத்துகள் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக்கொள்ளப்படுபவை. இவற்றுள் சில சொல்லிக்கொடுக்கப்படும், சில நம் ஆளுமையின் வீச்சிற்கேற்ப உள்ளமையும்.


இப்படிக்கற்றுக்கொள்வது தான் பிற உயிர்களைத் துன்புறுத்தக்கூடாது என்பது. குழந்தைப்பருவத்தில் இது உள்பதியவில்லை என்றால் அடிப்பதும் கொல்வதும் எந்த குறுகுறுப்பையும் உருவாக்காது. இப்போது குழந்தைகளின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. ஊடகங்களின் வளர்ச்சியால் அவர்களுள் படியும் செய்திகளும் அதிகமாக இருக்கிறது. ஒரு சமுதாய அக்கறையின்மையும் இவர்களிடையே உருவாவதும் சாத்தியம்.  நுகர்வுபோதையின் வீச்சான சுயாராதனை இவர்களிடையே சுலபமாக ஒரு குணாதிசயமாக அமையும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் இதைவிட ஆபத்தானது இவர்களிடம் பாலுணர்வு என்பது இயல்பாக உருவாகி வெளிப்படுவதற்குப் பதிலாக ஒரு வெறியாக சமூக நிர்ப்பந்தமாக ஆகிவருவதுதான். இதன் இன்றைய நிலையில் மிகவும்
மோசமான வெளிப்பாடுதான் வன்புணர்ச்சியை ஒரு விளையாட்டாகப் பார்ப்பது.

ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து  தனியான இடம் தேர்ந்தெடுத்து, அவளைப் பல்விதங்களிலும் பலாத்காரம் செய்து வன்புணர்வில் ஈடுபடுவது ஒரு விளையாட்டாய் இப்போது சிறுவர்ளிடையே பிரபலமாகி வருகிறதாம். ஒரு பள்ளியில் ஒரு சிறுவன் இதை விளையாடி மற்றவர்களிடம் கூறினால் எல்லாரும் ஒருமுறையாவது இதை ஆடிப்பார்க்கலாமே என்றுதான் நினைப்பார்கள். எந்த விளையாட்டும் சுலபமாக வெறியாக மாறும். இந்த விளையாட்டில் இன்னும் விபரீதம் உண்டு. ஒரு பெண் போகப் பொருளாகவே, வேட்டையாடப்படவேண்டிய ஒரு விலங்காகவே அவர்கள் மனதில் ஒரு கருத்து படியும். பெண்கள் மீது மதிப்பு இருக்காது, அவர்கள் ஒரு விளையாடும் பொருளாகவே தோன்றுவார்கள். ஏற்கனவே விளம்பரங்களின் மூலம் பெண் என்பவள் அழகைப் பயன்படுத்தி ஆண்களைக் கவரவே இருக்கிறாள் எனும் தவறான கருத்தோடு இதுவும் சேர்ந்து ஒரு விகாரமான மனநிலை உருவாகும். வன்புணர்ச்சி என்பது விளையாட்டு என்று மனம் கற்றுக்கொண்டுவிட்டால், பிறகு, அது குறித்து குற்ற உணர்ச்சியும் போய்விடும்.
வியாபார நோக்கு மட்டுமே உடையவர்களும், குரூரத்தை ரசிப்பவர்களும் இத்தகைய விளையாட்டுகளை உருவாகி விற்பதை நம்மால் தடுத்துவிட முடியாது. நம்மால் முடிந்தது எல்லாம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் நம் குழந்தைகளிடம் சகமனிதநேயம் குறித்தும், வக்கிரம் ஒரு விகாரம் என்பது குறித்தும் கொஞ்சம்கொஞ்சமாய்ப் பேசுவதுதான்; நம் வீட்டின் குழந்தைகள் என்ன விளையாடுகிறார்கள் என்பது கூடத் தெரிந்துகொள்ளமுடியாத அவசரங்களிலிருந்து நேரத்தை உருவாக்கிக்கொள்வதுதான்.
பேசிக்கொள்வது பல குடும்பங்களில் வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய கலாச்சாரத்தில் இது குறித்துச் சிந்தித்து முதலில் குடும்பத்தினர் ஒருவரோடு ஒருவர் தயக்கமில்லாமல், நடிப்பு இல்லாமல் பேசிக்கொள்வதைப் பழகிக்கொள்வது தான் வரும் தலைமுறையினருக்கு நாம் செய்யக்கூடிய கடமை.



Tuesday, December 29, 2009

வேறு –ஒரு நாடகம் பற்றி



காஃப்கா எழுதிய எல்லாமும் என்னை உலுக்கும், அவனது நாட்குறிப்புகள் உட்பட.

 அவன் எழுதிய TRIAL எனும் முடியாத நாவல் என்னுள் கிளப்பிய அதிர்வுகள் தான் என் விசாரணை எனும் நாடகம்.

அதேபோல் என்னுள் அதிர்ந்த அவனது சிறுகதை தான் METAMORPHOSIS.
கதை இதுதான். 
அவன் ஒரு நடுத்தட்டு வர்க்கத்து, குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆள். ஓய்வு பெற்று வெட்டியாய் வீட்டில் இருக்கும் அப்பா, காசநோயாலோ கவலையினாலோ இருமிக்கொண்டே இருக்கும் அம்மா, கனவுகள் நிகழக்காத்திருக்கும் ஒரு தங்கை.. இதுதான் அவன் குடும்பம், வாழ்க்கை. பணியிடத்தில் அவன் அடிமை, பணம் தருவதற்கென்றே வீட்டின் இயந்திரம். ஓர் இரவு வீட்டிற்கு வெகுநேரம் கழித்து வந்து அவன் தூங்கிப்போகிறான்.மறுநாள் விடிகிறது.

காலையில் வழக்கம்போல் அப்பா தினசரியில் மூழ்கிக்கிடக்க, தங்கை ரேடியோவில் மூழ்கிக்கிடக்க, அம்மா வழக்கம்போல் இருமலுடன் சமையலில் மூழ்கிக்கிடக்க அவன் தூக்கத்திலிருந்து இன்னும் எழவில்லை என்பதையே அந்தக்குடும்பம் அவன் வேலைக்குப்போகும் நேரம் வரும்போதுதான் தெரிந்துகொள்கிறது.


வீட்டுக்கு வருமானம் ஈட்டும் ஒரே ஆள் என்றாலும் அவனை சோம்பேறி என்று அவர்கள் திட்டிக்கொண்டிருக்கும்போது, அவனது அலுவலக மேலாளர் வருகிறார். அவனது தந்தையிடம் ‘ இப்போதெல்லாம் அவன் ஒழுங்காக வேலை செய்வதில்லை, இப்படியே இருந்தால் வேலை போய் விடும் என்று சொல்ல, எல்லாரும் அவனைத் திட்டிக்கொண்டே எழுப்ப முயல்கிறார்கள். கதவை ஒருவழியாகத் திறக்கும்போது, அவன் ஒரு மனிதனாக இல்லாமல் ஒரு பூச்சியாக மாறியிருக்கிறான்.

ஆரம்ப அதிர்ச்சி, அச்சம், அருவெறுப்பு மெதுவாகக் கறைந்தபின், அம்மா வழக்கம்போல் இருமிக்கொண்டிருக்க, அப்பா ஒரு பகுதிநேர வேலைக்குப் போகிறார், தங்கையும் ஒரு வேலை பார்த்துக்கொள்கிறாள்.
பூச்சி அந்த அறையில் கிடக்கிறது, வேளாவேளைக்கு உணவுமட்டும் பெற்றுக்கொண்டு. அன்போ அக்கறையோ இல்லாமல் ஒரு நியமமாகவே அந்தப்பூச்சி அந்த வீட்டில் கிடக்கிறது.

தங்கை ஒருநாள் தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவனை வீட்டிற்கு அழைத்துவருகிறாள். அவர்களிடையே ஒரு வருங்காலத்தின் சாத்தியமும் தென்படுகிறது.
பூச்சி வெளியே வருகிறது. வந்தவன் ஓடிவிடுகிறான். எல்லாரும் அந்தப் பூச்சியை அடித்து அந்த அறைக்குள் தள்ளுகிறார்கள். இரவு. வெகு நேரமாக அந்தப்பூச்சியிடமிருந்து வழக்கமாக வரும் சத்தங்கள் கேட்காததால் கதவைதிறந்து பார்க்க, பூச்சி செத்துக்கிடக்கிறது. அதை எடுத்துக்கொண்டு போய் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, குப்பை லாரி வருவதை எதிர்பார்த்து அவர்கள் ஜன்னலில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

கதை இவ்வளவுதான். நாடகமாக நான் ஆக்கியதில்.
இதை காஃப்கா காச நோய்க்காக எழுதியதாய் ஒரு குறிப்பு எங்கோ படித்திருக்கிறேன். இதை ஒரு மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் கதையாக மாற்றி எங்கள் முத்ரா நாடகக்குழு போட்ட கடைசி நாடகத்தின் தலைப்பு “வேறு”.

யாரை நம்பி வாழ்வு இருப்பதாய் ஒரு குடும்பம் இருக்கிறதோ, அவன் செயலற்றுபோனால், அதே குடும்பம் தன் வாழ்வை வேறு விதமாக ஒட்டிக்கொள்ளப் பழகிவிடும். அவனிடம் அன்பும் இருக்காது, அனுதாபமும் இருக்காது. அக்கறையும் தங்கள் சௌகரியத்தின் எல்லைகளில் அத்துமீறாதவரை மட்டுமே இருக்கும்.

இதில் முக்கியமான படிமம், ஒருவன் நம் வழக்கமான இயல்பிலிருந்து நோயினால் மாறுபட்டு செயல்பட்டால், அவனது அறிவும் மனதும் நமக்கிருக்கும் உணர்ச்சிகளைப்போல் இருக்காது என்னும் ஒரு கணிப்புடனேயே அணுகுகிறோம். அவன் ஆசையுடன், பாசத்துடன், அன்புடன் நம்மை அணுகுவதையெல்லாம் புறம் தள்ளுகிறோம். இந்நிலை மாறினால்தான் அவர்களிடம் நாம் அன்பின் வெளிப்பாடு அக்கறையாக அமையும், இல்லையென்றால் அது சலிப்பு நிறைந்த ஒரு சகிப்புத்தன்மையாகவே இருந்துவிடும்.

மனநோய்க்கு ஒருகாலத்தில் மருத்துவம் சிக்கல்களைக் கட்டுப்படுத்தவே இருந்தது. இன்று, முறையாக உடனடியாக மருத்துவ உதவி கிடைத்தால், தீவிர மனநோயால் பாதிக்கப்படிருந்தாலும், மீண்டும் வேலைக்குப்போய் சமூகத்தில் சிக்கலின்றி செயல்படமுடியும் நிலை உள்ளது.

இப்படி ஒரு சிந்தனையைத் தூண்டவே இந்தக்கதை நாடகமாக அரங்கேற்றப்பட்டது. அதில் என்னிடம் பயிலவந்த மாணவியர் இருவர் நடித்து அந்தக்காலத்தில் பெண் நடிகர்கள் இல்லாத குறையை ஈடுசெய்தனர்.

இன்று இதைத்தட்டச்சு செய்யும்போது, இக்கதைக்குள் இன்னும் பல படிமங்கள் இருப்பது புரிகிறது. இதைப்பற்றி நாம் பகிர்ந்துகொள்ளலாமே!





இது தான் எங்கள் முத்ரா நாடகக்குழு அரங்கேற்றிய கடைசி நாடகம், 1994ல். 

அந்தக்கடைசி நாடகத்தின் கடைசியில் எடுக்கப்பட்ட படம் இது.